செவ்வாய், 19 மே, 2020

ஆதிபராசக்தி அகிலம் தழைக்கவும் அகிலத்தில் வாழும் மக்களைக் காப்பதற்கும் ஆயிரமாயிரம் வடிவங்களோடும் ஆயிரமாயிரம் நாமங்களோடும் மண்ணுலகில் அவதாரம் எடுத்தார்கள்.

மண்ணுலகில் தோன்றியபோது, தமக்கு உறுதுணையாகவும் உதவி செய்வதற்கும் தம் சக்தியில் இருந்து ஏழு சக்திகளை தோற்றுவித்தார்கள். அவர்களையே சப்த மாதாக்கள் என்றும் சப்த கன்னியர்கள் என்றும் சப்த தேவிமார்கள் என்றும் அழைக்கிறோம்.

சப்தம் என்றால் ஏழு, மாதாக்கள் என்றால் தாய்க்கு சமமான தேவியர்கள், தம் சக்தியால் எழு அம்சங்களாக, ஏழு தேவியர்களை தோற்றுவித்தார்கள்.

மகேசனின் அம்சமான மகேஸ்வரி; விஷ்ணுவின் அம்சமான வைஷ்ணவி; பிரம்மனின் அம்சமான பிராமி; இந்திரனின் அம்சமான இந்திராணி; முருகனின் அம்சமான கௌமாரி; வராக வடிவான வராகி; காளி வடிவான சாமுண்டி ஆகியோர் சப்த மாதாக்களாக திகழ்கிறார்கள் என்று தேவி பாகவதமும் சக்தி புராணமும் கூறுகிறது.

சப்த மாதாக்கள் எழுவருள், இம்மை, மறுமை ஆகிய பயன்களை அருள்பவள்  மகேஸ்வரி, சுமங்கலி வரத்தையும் செல்வத்தையும் தருபவள் வைஷ்ணவி. கல்வி ஞானத்தை அளிப்பவள் பிராமி. வீரத்தையும் ஞானத்தையும் அளிப்பவள் கௌமாரி. பெரும் பதவி, புகழ், திருமணப்பேறு அருள்பவள் இந்திராணி. வீரத்தை அளித்து பகைவரை அழிப்பவள் வராகி. நீதியை காப்பாற்றி வழக்குகளில் நியாயமான வெற்றிகளை வழங்குபவள் சாமுண்டி. இப்படி, ஒவ்வொரு விதமான செயல்பாட்டையும் ஏற்று அனைவருக்கும் அருள்பாலித்திடுவாள் ஆதிபராசக்தி.

தமிழகத்தின் கிராமங்களில் கிராமங்கள்தோறும் கிராம தேவதை, கிராம காவல் தெய்வம், கிராம எல்லையம்மன், கிராம குலதெய்வம் என்று அம்மனை வழிபடுகிறார்கள். அம்மனோடு சப்த மாதாக்களும் இருப்பார்கள் அல்லது தனி சந்நிதியிலும் இருப்பார்கள். சப்த மாதாக்கள் இல்லாத கோயில்களில் ஏழு கற்களை நட்டு அலங்காரம் ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.

சப்த மாதாக்களை ஏழு கற்களை நாட்டி வழிபடுவதோடு மேலும் ஏழு கற்களை நட்டு பூஜைகள் செய்து அண்ணன்மார்களாக வழிபடுகிறார்கள். சப்த மாதாக்களின் துணைவர்களே அண்ணன்மார்களாகச் சொல்லப்படுகிறது. இந்த தேவியரை வழிபடுவதால் உலகமும் மக்களும் சுபிட்சமாக வாழலாம்.

சப்த மாதாக்கள் வழிபாடு என்பது மிகவும் தொன்மையானது. பல்லவர் காலத்திற்கு முன்னதாகவே சக்தி வழிபாட்டில் சப்தமாதர் வழிபாடு மிக சிறப்பாக இடம் பெற்று இருந்ததை "சக்தி வழிபாடு' என்னும் அரிய நூல் சிறப்பாக தெரிவிக்கிறது. அந்த வகையில் பல்லவ பேரரசனான
நந்திவர்மனால் கட்டப்பெற்ற பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் அற்புதமானது.

கருவறையில் அம்மனோடு சப்த மாதாக்களும் அமர்ந்து அருள்புரிகின்றனர். அம்மன் கோயிலுக்குள்ளே சிறிய சந்நிதியில் சப்த மாதாக்கள் துணைவர்களான சப்த அண்ணன்மார்கள் எழுவரும் காட்சி அளிக்கின்றனர். அண்ணன்மார்கள் எழுவரும் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.

தேவாரத் தலமான கருவூர் குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானோடு கருவறையில் சப்த கன்னியர்கள் சிவலிங்கத்திற்கு பின்புறத்தில் அமர்ந்து காட்சி அளிக்கின்றனர்.

அற்புதமான கடம்பவனேஸ்வரரை வணங்கி வழிபட்டால் கடலளவு துன்பத்தையும் போக்கி சுபிட்சத்தை தந்து அருளுகிறார். இதுபோன்ற அமைப்புள்ள கோயில் தமிழகத்தில் வேறெங்கும் இல்லை. மேலும் அம்மன் கோயிலான பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயத்தில் இந்த அமைப்பைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டு காலமாக வரலாற்று தடையங்களைச் சுமந்து நிற்கும் பாடலாத்திரி சீயாத்தம்மன் ஆலயம் கொரட்டூர் அக்ரகாரம் ஏரிக்கரை ஓரத்தில் இயற்கை எழியோடும் அமைதியான சூழலில் ஏகாந்த நிலையில் அமைந்துள்ளது.

கோயில் செல்ல: சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கம் கொரட்டூர் ரயிலடியில் இருந்தும் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்தும் 11/2 கி.மீ. தொலைவில் உள்ளது. கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் செல்லும் 100 அடி சாலையில் கொரட்டூர் அக்ரகாரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 11/2 கி.மீ. தொலைவில் கோயிலைச் சென்றடையலாம்.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 10.30 மணி வரை. மீண்டும் 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

சப்த மாதாக்கள் காயத்ரி.

1) வாராஹி காயத்ரி

ஒம்சியாமளாயை வித்மஹே

ஹலஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்

2) இந்த்ராணி காயத்ரி

ஒம்ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்த்ரி ப்ரசோதயாத்

3) சாமுண்டா காயத்ரி

ஒம் க்ருஷ்ண வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்

4) பிரம்மீ காயத்ரி (நம் வாக்கில் வாசம் செய்பவள்)

ஒம் ப்ரம்ஹ சக்த்யை வித்மஹே

பீத வர்ணாயை தீமஹி

தன்னோ: ப்ராஹ்மீ ப்ரசோத்யாத்

5) மஹேஸ்வரி காயத்ரி (மங்களம் பெருகும்)

ஒம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மாஹேஸ்வரி ப்ரசோதயாத்

6) கெளமாரி ( ரத்தத்திற்கு தலைவி )

ஒம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ கெளமாரி ப்ரசோதயாத்

7) வைஷ்ணவி காயத்ரி ( ஈம் பீஜமந்திரம் )

ஒம் ச்யாம வர்ணாயை வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

த்ன்னோ வைஷ்ணவீ ப்ரசோத்யாத் !!

கருத்துகள் இல்லை: