ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில், குரண்டி புண்ணியம் தேடி ஒரு பயணம்

கன்னியாகுமரியில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்  பிறந்த இடம் இருக்குன்னு அங்க போகலாம் ன்னு பிளான் பண்ணி போகும் போது பச்சை பசேல்ன்னு வயல் சூழ்ந்து பார்க்கவே ரம்மியமா இருந்தது. கொஞ்சம் ஓய்வு எடுக்களாம் வண்டியை விட்டு இறங்கி அக்கம் பக்கம் நோட்டம் விட்ட போது தூரத்தில் இயற்கை கொஞ்சும் இடத்துல  சின்னதா ஒரு கோவில் தெரிஞ்சுது. சுத்தி முத்தியும் ஒரு ஈ, காக்காவை காணோம். துணைக்கு கூப்பிட்டா யாரும் வரலை. இருந்தாலும் பதிவருக்குண்டான கடமை நம்மை வரவேற்க.., கொஞ்சம் உதறலா இருந்தாலும் பயத்தை மனசுலயும், சிரிப்பை உதட்டுலயும் வச்சுக்கிட்டு கோவிலுக்கு போனேன்......ஆளே இல்லாத கோவிலில இந்து அறநிலைய துறை சார்பா ஒரு அறிவிப்பு பலகை இருக்கு. அதை பார்த்துதான் சகலமும் தெரிந்து கொள்ளவேண்டியதா இருக்கு.  இந்த கோவிலோட பேரு ”அருள்மிகு கோரிக்க நாதர் திருக்கோவில் குரண்டி இந்த ஊர் தேரூர் பக்கத்தில இருக்கு. போகும் வழியெங்கும் புதர் மண்டி கிடக்கிறது கவனமா தான் போகனும். சரி வாங்க கோவிலுக்கு கிட்டக்க போய் பார்க்கலாம். முழு கோவிலும் இடிந்த நிலையில் இருக்கும் இந்த கோவிலில் தென்பக்கமா காலபைரவர் அருள் புரிகிறார்.  அவரை வணங்கிட்டு கோவிலை வலம் வர தொடங்கினோம். யாரோ ஒரு சிலர் பூஜைகள் செய்வது போல தான் தெரியுது. கோவிலின் முன்னே பலி பீடங்களும் வரிசையா அடுத்தடுத்து காணபடுது. அங்க பாதம் போன்ற ஒரு அமைப்பு காணப்படுது.   ஒவ்வொரு பலிபீடங்களிலும் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்ததற்கான தடங்கள் இருக்கு. கொஞ்சம் பயத்தோடுதான் கோவிலை சுத்தி பார்த்தேன். உள்ள போலாமா?  வேணாமா!?ன்னு மனசுக்குள் ஒரு பயம். ஏன்னா. மேற் கூரைகள் இடிந்து விழும் நிலைல பாழடைந்து இருக்கு இக்கோவில். கட்டிட கலை அமைப்பு கூட பல்லவக்காலதது அமைப்புல இருக்கு. ஆனா,  குமரி மாவட்டத்தில் சேர, சோழ,பாண்டியர்கள் தான் ஆட்சி செய்திருக்காங்க. சில நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செஞ்சிருக்காங்க. இதெல்லாம் யோசித்து கொண்டே கோவிலை சுத்தி வந்தேன். கற்கள் எல்லாம் பெயர்ந்த நிலையில் விரிசல்களுடன் இருக்கு.  கற்சுவர்கள் உள்ளே பாசிப்படர்ந்தும், சுவர்கள்லாம் மரங்களின் வேர்களால் உடைந்து காணப்படுது.  வரிகற்கள்,  மேற்கூரையே இல்லாத கருவறை இதெல்லாம் பார்த்துக்கிட்டே சிவனே நீயே துணைன்னு கோவிலுக்கு போனேன். இரண்டாம் நிலையில் சக்கரம் போன்ற அமைப்பும் அபிஷேகம் செய்யும் நீர் வடிந்து செல்லும் அமைப்பும் காணபடுகிறது. அதைத்தாண்டி போனா கருவறை உள்ள சில நாக சிலைகளும், ஒரு சிவலிங்கமும் அதன் அருகில் கைகூப்பிய நிலையில் ஒரு மன்னருடைய சிலையும் காணப்படுகிறது. இடப்பக்கமும் ஒரு மன்னர் கும்பிட்ட நிலையிலும் ஒரு சிலையும் நடுவே கொன்னை மரமும் வளர்ந்து காணபடுகிறது. கோவிலின்  வரலாறை தெரிந்து கொள்ளலாம்ன்னு அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் கேட்டா யாருக்கும் சரியா சொல்ல தெரியவில்லை. ஒரே ஒரு வயதான பெண்மணி மட்டும் கோவிலுக்குள்ளயா போனே!?ன்னு ஆச்சர்யமா கேக்க ஏன் போனா என்னம்மான்னு நான் கேக்க!? கோவிலுக்குள்ள அங்க பெரிய நாகம் ஒண்ணு இருக்கு இந்த ஊர்க்காரங்க பார்த்திருக்காங்கன்னு சந்திரமுகி படத்துல சொல்லுற மாதிரி சொல்ல என்னமோ என் மேலயே பாம்பு ஏறி இறங்குன மாதிரி ஒரு எஃபெக்ட் உடம்புக்குள்ள.. கம்ப்யூட்டர் பொட்டிக்குள்ள நெட்டோ!? போல்டோ இருக்காமே! அதுல இது கோரக்கரருடைய சமாதி ன்னு யாரோ சொல்லி பலர் வந்து இங்க பூஜை பண்ணிட்டு போறங்கன்னு அந்த அம்மா சொன்னாங்க. இந்த கோவில் பத்தி தெரிஞ்சே ஆகனும்ன்னு மண்டை குடைச்சல் எடுக்க இந்த கோவிலில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யும் யோகிஸ்வரர் குடும்பதினருக்குதான் இதைபத்தி முழு விவரமும் தெரியும் என்பதால் அவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களுக்கும் முழு விவரம் தெரியவில்லை. வருடத்துக்கு சிலமுறை பூஜை செய்வதற்கு போகும் முன் ஆட்களை கொண்டு அங்க இருக்குற புதர்களைலாம் வெட்டிட்டு 2 நாள் கம்பு வச்சி சத்தம் எழுப்பி பின் தான் அங்கேபோவாங்களாம். ஏன்னா பாம்பு பயம் அதனால யாரும் இதனுள்ளே பாதுகாப்பு இல்லாம போக வேணாம்ன்னு சொன்னார் ஆனாலும் சிலர் இங்க வந்து பூஜை செய்துட்டு போறாங்களாம்.  இந்த கோவிலை இந்து அறநிலைய துறை புதுப்பித்து கட்ரி தருவதா சொல்லி இருக்காங்களாம். இங்கே18 சித்தர்களில் ஒருவரான கோரக்கர் என்னும் சித்தர் வரும் போது எதிரிகள் அவரை தாக்க வந்ததாகவும் அப்ப கால் காட்டி மறையும் வித்தைகாட்டி தன்னுடைய பாதங்கள் மட்டும் காட்சியாக விட்டு சென்ற இடம் இத்திருத்தலம் எனபது மட்டும் அவர்களுக்கு தெரிந்த வரலாறு. அதுக்கு சாட்சியா இரண்டு பாதங்கள் மட்டும் இங்க காணப்படுது. பூஜையோ வழிபாடோ இல்லைன்னாலும் அதன் அழகு பார்பதற்கு மனதை கொள்ளை கொள்கிறது.


கருத்துகள் இல்லை: