ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

திருமுருக கிருபானந்தவாரியார்!

சொல்லால், செயலதனால், சொற்பொழிவால், கீதத்தால்
வல்ல அணிப்பூசை மாண்பதனால் - எல்லார்க்கும்
இல்லாச் சிறப்பை இசை வாரியார் சாமி
வல்லாண்மை மேலாகு மால்  - தவத்திரு சுந்தரசுவாமிகள்

1933 - ஆம் ஆண்டு. வயலூர் கோயிலின் அறங்காவலர், திருச்சியில் வசித்து வந்தார். அன்றிரவு அவரது கனவில் வயலூர் முருகன் தோன்றி, எட்டணா பெற்றுக் கொண்டாயே! அதனால், திருக்கோயில் ராஜகோபுரத் திருப்பணி முடித்துவிடுவாயா? என்று கேட்டார். செட்டியாருக்கு எதுவும் புரியவில்லை. பயத்தால் உடல் வெலவெலத்தது. பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார். காலையில் வண்டியைக் கட்டிக் கொண்டு நேராக வயலூர் சென்றார். கோயிலில், அர்ச்சகர் ஜம்புநாதன் என்னும் பதினெட்டு வயது இளைஞர் இருந்தார். நேற்று யார் தரிசனத்துக்கு வந்து எட்டணா கொடுத்தார்? என்று கேட்டார் செட்டியார்.


காங்கேய நல்லூரிலிருந்து மல்லையதாஸ் பாகவதர் குமாரர் கிருபானந்தவாரி என்பவர் எட்டணா கொடுத்தார். வெள்ளி கவசம் சாத்தி தரிசனம் செய்து வைத்தேன். இதோ பதிவுப் புத்தகத்தில் அவருடைய விலாசம் உள்ளது என்றார் அர்ச்சகர்.

அந்த எட்டணாவை என்னிடம் கொடு என்றார் செட்டியார். மணியார்டர் கூப்பனில் ஆண்டவன் கட்டளைப்படி தாங்கள் செலுத்திய எட்டணாவை திரும்ப அனுப்பியுள்ளேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்று எழுதி வாரியார் முகவரிக்கு மணியார்டர் செய்து விட்டார். திருப்பணி செய்யும் பொறுப்பையே ஏற்று முடிக்கத் தக்கவரிடம் இந்த எட்டணாவை வாங்கிக்கொண்டு திருப்தி அடையலாமா? என்ற குறிப்பை வயலூர் முருகன் தெரிவித்ததாக செட்டியார் எண்ணினார்.

தல யாத்திரை முடித்துக்கொண்டு காங்கேயநல்லூர் திரும்பிய வாரியாருக்கு மணியார்டர் காத்திருந்தது. அதனைப் பெற்றுக் கொண்டு கூப்பனைப் படித்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர், திருச்சியில் உபன்யாசத்துக்குச் சென்ற வாரியாரை செட்டியார் சந்தித்தார். கனவில் நடந்ததைச் சொல்லி, வயலூர் ராஜகோபுரத் திருப்பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து திருச்சியில் சொற்பொழிவு ஆரம்பித்து, அதன் மூலம் பணம் வசூல் செய்து ராஜ கோபுரத் திருப்பணியை 1935ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு வாரியாரின் கனவில், காங்கேயநல்லூர் முருகன் கோயில் காட்சி தெரிகிறது. அங்கு கோயிலில் முருகப் பெருமான் உலா வந்துகொண்டிருந்தார். வாரியார், அருணகிரிநாதர் சன்னதி முன்பு நின்று தொழுது நிற்கிறார். அருணகிரியாரது சிலை சற்றே சாய்ந்திருக்கிறது. அண்மையில்தானே அஷ்டபந்தனம் சாத்தி எழுந்தருளச் செய்திருந்தோம். இத்தனை விரைவில் சிலை சாய்ந்து விட்டதே என்று வருந்தினார்.

அப்போது காவியணிந்த சந்நியாசி கோலத்தில் காட்சி அளித்த ஒருவர், அன்பனே! எனக்கு மிகவும் பசி. ஏதேனும் உணவு கிடைக்குமா? என்கிறார். மாலை மூன்று மணியாகிவிட்டதே! அதனால் எதுவும் ஆயத்தமாக இல்லை என்று இவர் பதில் சொல்ல, ஏதாவது செய்து கொடு என்கிறார் சந்நியாசி. சரி சுவாமி, அரிசி நொய்யில் உப்புமா செய்து தரட்டுமா? என்று இவர் கேட்க, அப்படியே ஏதாவது கொடு என்று கூறிய வண்ணம் சந்நியாசி கோலத்தில் வந்தவர் மறைந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, சாய்ந்திருந்த அருணகிரியாரது சிலை நிமிர்ந்திருக்கக் கண்டார் வாரியார்.

உடனே, கண் விழிப்புற்றார் வாரியார். காங்கேயநல்லூரில் எழுந்தருளியிருக்கும் குருநாதருக்கு அறக்கட்டளை நிறுவ அடியேனுக்கு இட்ட கட்டளை இதுபோலும் என முடிவு செய்து தந்தைக்குக் கடிதம் எழுதினார். தினமும் ஒர் படி அரிசி சமைத்து நிவேதனம் செய்து, அதை தேசாந்திரிகளாக வரும் ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். இக்கட்டளை நிரந்தரமாக நிகழ்ந்து வர வேண்டி, அதற்கான நிலத்தையும் வாங்கினார். இன்றளவும் தினமும் ஏழைகள் உண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

வயலூர் திருப்பணிக்கு முப்பதாயிரம் வசூலித்து கும்பாபிஷேகமும் நன்கு நடத்தினார். இந்தச் செய்தி ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளிவந்தது. ஆனால், வயலூர் என்பதற்குப் பதிலாக வடலூர் என்று அச்சிட்டுவிட்டனர். ஒரே எழுத்துதான் மாறுதல். அதுவே, இன்னொரு திருப்பணிக்கு அச்சாரமாகிவிட்டது. வயலூர் திருப்பணிக்குப் பிறகு வடலூர் சித்திவளாகத் திருப்பணிக்கு உத்தரவாகிறது என்றனர் அன்பர்கள்.

வடலூர் திருப்பணியை வாரியார் மிகவும் கஷ்டப்பட்டே செய்தார். திருப்பணி செலவுக்குப் பணமில்லாதபோது, தமது தங்க ருத்ராட்ச கண்டிகையை அடகு வைத்துப் பணம் வாங்கிச் செலவு செய்தார். இப்படி வயலூர், வடலூர், வள்ளிமலை ஆகிய தலங்களின் திருப்பணிகள் வாரியார் வாழ்வில் குறிப்பிடத்தக்கவை. இன்னும் எத்தனையோ பலநூறு கோயில்கள்.. அவர் செய்த திருப்பணி செலவுத் தொகையை கூட்டினால் பல கோடிக்கு மேல் ஆகும். கோடி ரூபாய் சேர்த்தவர் கோடீஸ்வரர் அல்லர்; கோடி ரூபாய் தர்மம் செய்தவர், திருப்பணி செய்தவரே கோடீஸ்வரர். அந்நிலையில் வாரியார் பலகோடி புண்ணியத்தைச் சேர்த்தவர்.

1933-ல் கதிர்காமக் கந்தன் கோயிலில் ஆடி வேல்விழாவில் கலந்துகொண்டு தல யாத்திரையாகத் திரும்பி வரும் வழியில் வயலூரைத் தரிசித்தார். அப்போது வயலூர் முருகன் இவரை ஆட்கொண்டு, இவரது பெருமையை உலகறியச் செய்தான்.

வேலூர் அருகிலுள்ள காங்கேய நல்லூரில் 1906-ஆம் ஆண்டு (25.8.1906) மல்லையதாஸ் பாகவதர் - கனக வல்லியம்மையாரின் புதல்வராக அவதரித்தார் கிருபானந்த வாரியார். சோதிடத்தில் வல்லவரான அவரது தந்தை அவர் பிறந்த நட்சத்திரமாகிய சுவாதிக்கு ஏற்றபடி இந்தத் திருப்பெயரைச் சூட்டினார். ஐந்து வயதில் வீரசைவ குலநெறிப்படி திருவண்ணாமலை பாணிபாத்ர மடத்தில் சிவலிங்க தாரணம் நடந்தது. தந்தையார் இவருக்கு சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மதுரை திருப்புகழ்ச் சாமி ஐயா அவர்களிடம் சூட்சும சடாஷர மந்திர உபதேசம் பெற்றார். ஒருமுறை திருக்காரையூரில் வாரியாரது கனவில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருளினார்.

வாரியாருக்கு மூன்று வயதில் தகப்பனாரிடம் எழுத்தறிவு தொடங்கியது. ஐந்து வயதிலே ஏடு படித்தார். எட்டு வயதில் வெண்பா பாடினார். பத்து பன்னிரண்டு வயதில் பன்னீராயிரம் பாடல்களை மனனம் செய்யும் ஆற்றலைப் பெற்றார். தகப்பனார் மிகச்சிறந்த பவுராணிகர். அவருக்குப் பின், தமது 19-வது வயதில், பாட்டுப் பாடிக்கொண்டே சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். பள்ளிக்குப் போகாமலேயே தந்தையையே ஆசானாகக் கொண்டு பலப் பல கற்றார்; நடமாடும் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார். சங்கீதத்தைத் தந்தையாரிடம் கற்றார். இல்லறம் நல்லறமாகத் திகழ அவரது தாய்மாமன் மகள் அமிர்தலட்சுமி அம்மாளை மணந்துகொண்டார். சென்னையில் மிகுதியாக இசைச் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டியிருந்ததால், சென்னையிலேயே குடியேறினார். அப்போது தென்மடம் வரதாசாரியாரிடம் வீணை பயின்றார். சென்னையில் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளைத் தரிசித்து ஆசி பெற்றார்.

காசி, கேதாரம், அமர்நாத், பத்ரிநாத், நேபாளம், கோகர்ணம், ஸ்ரீசைலம் மற்றும் பல தலங்களையும் தரிசித்து, எல்லா முக்கிய நகரங்களிலும் சொற்பொழிவாற்றிய பெருமை வாரியாருக்கு உண்டு. தமிழகத்தில் அவர் கால் படாத ஊரே இருக்காது. இதைத் தவிர, உலகின் பல நாடுகளுக்கும் சென்று அரும்பெரும் இந்து சமயப் பணிகளை ஆற்றி மேருவனைய புகழ் கொண்ட மேதகை, வாரியார்.

மெய்யன்பர்களே! ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய வள்ளலின் தனிப்பெருங் கருணையினாலே.. என்று சொற்பொழிவைத் தொடங்கினால் பட்டிதொட்டிகளில் வாழும் பாமரர் முதல் பட்டணத்தில் படித்தவர் வரை அனைவரும் தன்னை மறந்து அவர் பேச்சை ரசிப்பர். வாரி என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள். கிருபானந்த வாரி ஒரு நடமாடும் கடல். தமிழ்க் கடவுளாகிய முருகன் அவரது தனிக் கடவுள். அருணகிரிநாதரே அவரது மானசீக குரு, சங்க நூல்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம், சைவத் திருமுறைகள், திவ்யப் பிரபந்தம், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று இப்படி எத்தனை இலக்கியங்கள் உள்ளனவோ அத்தனையும் கற்றறிந்தவர். அருணகிரிநாதரின் அருள் நூல்களான திருப்புகழ், அலங்காரம், அநுபூதி, அந்தாதி, வகுப்பு என எல்லாவற்றையும் முற்றும் பருகி எழுத்தெண்ணி, நயம் காட்டி, தங்குதடையின்றி சந்த பிரவாகத்தை கொட்டும் அதி அற்புத ஞானவாரி.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களைப் பற்றி தமிழ் நாட்டில் அறியாதார் இல்லை. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர். நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேயச் செல்வர்களும் இருக்கிறார்கள்.

திருப்புகழ் அமிர்தம் என்ற  மாத இதழை 1936-ஆம் ஆண்டு சித்திரை மாதம் தொடங்கி 37 ஆண்டுகள் நடத்தினார். பல நூறு திருப்புகழ்ப் பாடல்களுக்கு உரை விளக்கம் எழுதி வெளியிட்டார். பல ஆன்மிக இலக்கிய நூல்கள், கதைகளை, கட்டுரைகளை எழுதி சமுதாயத்தில் ஒழுக்க நெறியை வளர்த்தவர்.

காலையானால் ஜபம், தியானம், பின்பு ஸ்நானம், பூஜை, ஓய்வு ஒழிவின்றி கட்டுரைகள் வரைதல், மாலையில் சந்தியாவந்தனம், பிறகு சொற்பொழிவு செய்யும் அறநெறி வாழ்க்கை. சூரியன் உதிக்காத நாள் இல்லை; அதுபோல், மாலையானால் மாலையும் கழுத்துமாக வாரியார் சொற்பொழிவு ஆற்றாத நாளே கிடையாது.

பலகோயில் திருப்பணிகள், அறப்பணிகள், கல்விக் கூடங்கள் முதலியன அவரால் செழித்தன. காந்திஜி, ராஜாஜி போன்று இம் மூதறிஞரும் தமக்கு வரும் கடிதங்களுக்கு விடாது பதில் எழுதும் பழக்கமுடையவர். மாதம்தோறும், படிக்கும் பல குழந்தைகளுக்கு உதவித்தொகை அனுப்புவதை கடமையாகக் கொண்டிருந்தவர்.

பள்ளிக்கூடத்தை மிதியாதவர் வாரியார். ஆனால் பெரிய கல்லூரிகளும் செய்ய இயலாத அளவுக்கு அறிவு தானம் செய்தவர். காஞ்சி மாமுனிவர் அவருக்கு சரஸ்வதி கடாக்ஷமிர்தம் என்று பட்டம் வழங்கினார். மேலும் ஷட்பதநாதர், அமுதமொழி அரசு, பிரவசன சாம்ராட்... இப்படி 30-க்கும் மேற்பட்ட பட்டங்களும் பாராட்டுக்களும் பெற்ற பெருந்தகையாளர்.

லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் விரிவுரை செய்ய வாரியார் சென்றார். அப்போது உடல் நலம் குன்றியதால் தாயகம் திரும்ப வேண்டியதாயிற்று. வரும் வழியில் வான் வெளியில் முருகன் திருவடிகளில் கலந்தார். 8.11.1993 அன்று காங்கேய நல்லூர் முருகன் கோயிலுக்கு எதிரிலுள்ள சரவணப்பொய்கை அருகில், அவரது திருவுடலுக்கு சமாதி கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற திருமுருகன் திருத்தொண்டர், திருமுருக கிருபானந்த வாரியார். ஒளவையின் பாடல் ஒன்றின்படி, சபை ஏறுவதால் நூற்றில் ஒருவர்; நல்ல புலவர் ஆதலின் ஆயிரத்தில் ஒருவர்; பேச்சு வன்மையால் பதினாயிரத்தில் ஒருவர். வாரி வாரி வழங்குவதனால் கோடியில் ஒருவர்!

கருத்துகள் இல்லை: