ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

திவ்ய தேசங்கள் -46

அருள் மிகு திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில்
 
மூலவர்    :     திருவிக்கிரமர் (உலகளந்த பெருமாள்)
 உற்சவர்    :     ஆயனார், கோவலன்
 தாயார்    :     பூங்கோவல் நாச்சியார்
 ஸ்தல விருட்சம்    :     புன்னைமரம்
தீர்த்தம்    :     பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம்,ஸ்ரீசக்ரதீர்த்தம்
பழமை    :     2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்    :     திருக்கோவலூர்
ஊர்    :     திருக்கோவிலூர்
மாவட்டம்    :     விழுப்புரம்
மாநிலம்    :     தமிழ்நாடு
பாடியவர்கள் :     பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின்மேல் ஓரிளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை துஞ்சாநீர்வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் தூயநான்மறையாளர் சோமுச் செய்ய செஞ்சாலி விளைவயலுள் திகழந்து தோன்றும் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே..

விழா : பங்குனி மாதம்  பிரம்மோற்ஸவம் 15 நாட்கள் நடைபெறும். பஞ்சபர்வ உற்ஸவமும் ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் வெள்ளிக் கிழமை ஊஞ்சல் உற்ஸவமும் நடைபெறும். இத்திருவிழா இத்தலத்தின் மிக சிறப்பான விழா ஆகும். இத்திரு விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் வந்து பெருமாளை வழிபடுவர். மாசி மாதம் - மாசி மக உற்சவம் - இவ்விழாவின் போது பெருமாள் கடலூருக்கு தோளிலேயே செல்வார் என்பது சிறப்பு. புரட்டாசி - பவித்திர உற்சவம் - நவராத்திரி உற்சவம் சித்திரை - ஸ்ரீ ராமநவமி உற்சவம், ஸ்ரீ ராமனுஜர் ஜெயந்தி , வசந்த உற்சவம் வைகாசி - விசாக கருட சேவை, நம்மாழ்வார் சாற்றுமுறை ஆனி- பெரியாழ்வார் சாற்று முறை ஆடி- திருவாடிப்பூரம், ஆண்டாள் உற்சவம் ஆவணி - ஸ்ரீ ஜெயந்தி, உறியடி உற்சவம் ஐப்பசி - முதலாழ்வார் சாற்றுமுறை , ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாட்கள் உற்சவம் கார்த்திகை - கைசிக ஏகாதசி உற்சவம், திருக்கார்த்திகை தீப உற்சவம் மார்கழி பகல் பத்து, இராப்பத்து (வைகுண்ட ஏகாதசி) இவை தவிர வருடத்தின் விசேஷ நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோயிலில் பெருமாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பெருமாளை வணங்குவார்கள்.      
             
சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.      
             
திறக்கும் நேரம் : காலை 06.30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி :    அருள்மிகு திருவிக்கிரமசுவாமி(உலகளந்த பெருமாள்)திருக்கோயில், திருக்கோவிலூர் - 605757, விழுப்புரம் மாவட்டம்.     போன்:+91- 94862 79990     
            
தகவல் : பெருமாள் ஸ்ரீ சக்கரம் விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார்.வேணுகோபாலர் க்ஷேத்திர பாலகராக அருளுகிறார்.கோயில் சுற்றுப்பிரகாரத்தில் வேணுகோபாலன், லட்சுமிநாராயணன், வீர ஆஞ்சநேயர், லட்சுமி ராகவன், லட்சுமி நரசிம்மர், ராமர், ஆண்டாள், அசுரகுல குரு சுக்ராச்சாரியார் ஆகியோர் அருள் செய்கின்றனர்.
தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 192 அடி உயரம் கொண்டது. 11 நிலைகள் கொண்டது. இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் ஆகும். (முதல் இடம் ஸ்ரீரங்கம், இரண்டாம் இடம் ஸ்ரீவில்லிபுத்தூர்) கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்ற பின்னரும், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளைக் காணலாம். இத்தலத்தை நடு நாட்டு திருப்பதி என கூறுகிறார்கள். கேரளா திருக்காக்கரையில் வாமனருக்கென மிகப்பெரிய கோயில் உள்ளது. இத்தலத்தில் மூலவருக்கு பின்னால் வாமனர் அருளுகிறார்.      
             
பிரார்த்தனை : நல்ல பதவிகளை அடைய விரும்புவர்கள், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோயிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக  இருப்பதால்  சத்ருக்கள் (எதிரிகள் ) தொல்லை நீங்கும்.
     
ஸ்தல பெருமை :    மூலவர் சிறப்பு அரசன் ஒருவனின் ஆணவத்தை அடக்க குள்ளமாக வந்து பின் விசுவரூபமெடுத்து வலது காலில் ஆகாயத்தை அளந்த படியும், இடது காலில் பூமியில் நின்ற படியும் அருள் பாலிக்கிறார். வழக்கமாக அனைத்து பெருமாள் கோயிலிலும் விஷ்ணு வலக்கையில் சக்கரமும், இடக்கையில் சங்கும் வைத்திருப்பார். இங்குள்ள பகவான் மகாபலியை தன்னுடன் இணைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். இப்படி காட்சி தருவது பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குவதாக ஐதீகம். தனது வலது கையில் ஒன்று, மூன்றாவது அடி எங்கே என கேட்பது போல அமைந்திருக்கும். தூக்கியிருக்கும் விஷ்ணுவின் வலது காலை பிரம்மா ஆராதனை செய்கிறார். மூலவரின் திருமேனி தாருவால்(மரம்) ஆனது.மகாபலி மன்னனை ஆட்கொள்ள குள்ள வடிவமுள்ள வாமனராக வந்த பெருமாள், விஸ்வரூபம் எடுத்தார். இந்த விஸ்வரூப காட்சியைக் காண மிருகண்டு என்னும் முனிவருக்கு விருப்பம் ஏற்பட்டது. அவர் பிரம்மாவிடம் இதுபற்றி ஆலோசனை கேட்டார். பூவுலகில் கிருஷ்ணபத்ரா நதிக்கரையில் உள்ள கிருஷ்ண க்ஷேத்திரத்தில் (தற்போதைய திருக்கோவிலூர்) தவம் செய்தால், அந்த தரிசனம் கிடைக்கும் என்றார் பிரம்மா. அதன்படி முனிவர் தன் மனைவி மித்ராவதியுடன் பல காலம் இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். அத்தலத்துக்கு வருவோருக்கு அன்னதானத்தையும் அந்த தம்பதியர் அளித்து வந்தனர். ஒருநாள் விஷ்ணு இவரை சோதிக்க வயோதிக அந்தணர் வடிவில் வந்து அன்னம் கேட்டார். அன்று அவர்களிடம் உணவு ஏதும் மிச்சமில்லை. மிருகண்டு முனிவர் தன் மனைவியிடம் வந்தவருக்கு இல்லை என சொல்லாமல் ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கூறினார். வீட்டிலோ ஒரு பொட்டு நெல்மணி கூட இல்லை. எனவே கணவருக்குத் தவிர வேறு சேவை செய்தே அறியாத கற்பில் சிறந்த அப்பெண்மணி நாராயணனை நினைத்து ஒரு பாத்திரத்தை கையில் எடுத்தாள். ""நான் கற்பில் சிறந்தவள் என்பது உண்மையானால் இந்த பாத்திரம் நிரம்பட்டும்,'' என்றாள். உடனடியாக அதில் அன்னம் நிரம்பியது. அப்போது அந்தணர் வடிவில் வந்த பெருமாள் அவர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தை காட்டியருளினார். 

முதல் ஆழ்வார்கள் மூவர் : பெருமாளை புகழ்ந்து பாடிய முதலாழ்வார்களான பொய் கையாழ்வார்,பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் இத்தலத்து பெருமாளைத்தான் முதன் முதலாகப் பாடினர். ஒரு முறை இம்மூவரும் பல தலங்களை தரிசித்து விட்டு திருக்கோவிலூரை அடைந்தனர். இவர்களை ஒன்று சேர்க்க நினைத்த பெருமாள், பெரும் மழையை பெய்விக்கச் செய்தார். முதலில் இத்தலம் வந்த பொய்கையாழ்வார், மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்து, அங்கே தங்குவதற்கு இடமுண்டா என கேட்டார். அதற்கு முனிவர் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம் என கூறி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த பூதத்தாழ்வார், தாம் தங்குவதற்கும் இடமுண்டா என வினவினார். அதற்கு பொய்கையாழ்வார் ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம் என்று கூறி அழைத்துக் கொண்டார். இன்னும் சிறிது நேரம் கழித்து பேயாழ்வார் அங்கு வந்தார். தனக்கும் உள்ளே இடம் வேண்டும் என கேட்க, ஒருவர் படுக்கலாம். இருவர் அமரலாம். மூவர் நிற்கலாம் எனக் கூறி அவரையும் உள்ளே இழுத்துக் கொண்டனர். இப்படியாக மூவரும் நின்று கொண்டிருக்கையில், நாலாவதாக ஒருவர் வந்து மூவரையும் நெருக்குவது போன்ற உணர்வு ஏற்பட்டது. "இதென்ன விந்தை!' என அவர்கள் ஆச்சரியப்பட்ட போது, பேரொளியாக தோன்றிய பெருமாள் தன் திருமேனியை மூவருக்கும் காட்டியருளினார். மூன்று ஆழ்வார்களும் இத்தலத்தில் தான் முக்தி பெற்றனர். மூன்றடி மண் கேட்ட பெருமாள் என்பதால் இங்கு உலகளந்த பெருமாள் என்று போற்றப்படுகிறார். இங்கு ஷேத்திராபதி வேணுகோபால் ஆவார். மூலவர் திருமேனி தாருவால்(மரம்)ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. வழக்கத்துக்கு மாறாக பெருமாள் வலக்கையில் சங்கும் இடக்கையில் சக்கரமும் ஏந்தி காட்சி தருவது சிறப்பு. 108 வைணவத் தலங்களில் இங்கு மட்டும் தான் சுயம்பு விஷ்ணு துர்க்கை உள்ளது. இது நடுநாட்டுத் திவ்ய தேசங்களில் முக்கியமானது ஆகும். 192 அடியில் அமைந்த தமிழ் நாட்டின் மூன்றாவது கோபுரம் இங்கு அமைந்துள்ளது. அசுர குரு சுக்கிராச்சாரியாருக்கு இங்கு உருவம் இருக்கிறது. நாலாயிர திவ்ய பிரபந்தம் முதன்முதலில் பாடப்பட்டது என்பது மிக குறிப்பிடத்தக்க சிறப்பு.

அண்ணன் அருகில் தங்கை பொதுவாக சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் தான் விஷ்ணு துர்க்கையைக் காண முடியும். ஆனால் 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை  அருள்பாலிக்கிறாள். இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.பெருமாளை மட்டுமே பாடும்  திருமங்கையாழ்வார், இத்தலத்தில் துர்க்கையையும் (மாயை) சேர்த்து "விந்தம் மேவிய கற்புடை மடக்கன்னி காவல் பூண்டகடி பொழில்' என்று புகழ்ந்து பாடுகிறார். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பூஜை செய்தால் நவக்கிரக தோஷம் விலகும் என்பதும், சகோதர சகோதரிகள் உறவு பலப்படும் என்பதும் நம்பிக்கை. பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு.

ஸ்தல வரலாறு :    மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தர விடாது தடுக்கிறார். ஆனாலும் குருவின் பேச்சை மீறி தானம் தர மகாபலி ஒப்புக் கொள்கிறான். அப்போது மகாவிஷ்ணு விசுவரூபம் எடுத்து தன் பாதத்தின் ஒரு அடியை பூமியிலும், ஒரு அடியை ஆகாயத்திலும் வைத்துவிட்டு மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்கிறார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்றுணர்ந்த மகா பலி தன் தலையை தாழ்த்தி தன் தலையை தவிர வேறு இடம் என்னிடம் இல்லை என்கிறான். விஷ்ணுவும் விடாது மகாபலியின் தலைமீது தன் பாதத்தை அழுத்தி மூன்றாவது அடியை தாரை வார்த்து தா என்று சொல்ல மகாபலி கெண்டியை எடுத்து தானமாக தர முயல சுக்கராச்சாரியார் வண்டு உருவம் எடுத்து கெண்டியை அடைத்து தண்ணீர் வர விடாமல் தடுக்க விஷ்ணு தர்ப்பை புல்லால் குத்திவிடுகிறார். இதனால் குருடாகி சுக்கிராச்சாரியார் வெளியேறிப் போய் விடுகிறார்.மகாபலி கெண்டியை எடுத்து மூன்றாவது அடியை தானம் செய்து மண்ணில் புதையுண்டு போனான். அவனது ஆணவத்தை இவ்வாறு அடக்கிய பின்பு மகாபலியை விஷ்ணு தன்னோடு சேர்த்து கொண்டார் என்று தலவரலாறு கூறுகிறது.

கருத்துகள் இல்லை: