சனி, 27 ஜூலை, 2019

பெரியவாளின் நகைச்சுவை.

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம் "மஹா விஷ்ணுவும்
கொசுவும் ஒண்ணு உனக்குத் தெரியுமா?" என்றார் பெரியவா.
வழக்கம் போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

"விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு கொசுவும் சக்கரமாய் சுற்றிக்கொண்டு தான் இருக்கு. கெட்டவர்கள்
விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.
கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி
விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர் விஷ்ணு.
[ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு
விளையாடும் கொசு [ச்ருதி=காது]!"
இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு
அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.
"அனந்தசயனம் பண்ணும் பெருமாள் தான் கொசுன்னு
நினைச்சுண்டேன்னா பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!"
என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம். இப்படி
எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்து விடும்
அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.
ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும்
கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது. உடனே பெரியவா
"சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?"
என்றார்? "நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே...
அந்த சாக்கைச் சொன்னேன்!" என்று தமாஷ் பண்ணினாராம்.


கருத்துகள் இல்லை: