சனி, 27 ஜூலை, 2019

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார்?

தண்டம் உள்ள, தண்டம் இல்லாத ஸந்யாஸிகள், ஸ்வாமிகள் என்பவர் யார் என்பதை பற்றி நண்பர்கள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

க்ரமமாக  வைதீக முறைப்படி விரஜா ஹோமம் செய்து குரு முகமாக உபதேசம் பெற்று ஸ்வீகரிப்பதே க்ரம ஸந்யாஸம். இது ஸ்மார்த்த, வைஷ்ணவ, மத்வ ஸம்ப்ரதாய ஸந்யாஸிகளுக்கு பொதுவானது.

ஸ்மார்த்த முறையில் ஸந்யாஸிகள் 10 வகையில் பிரிக்கப்படுகிறார்கள். இது ஆதிசங்கரர் உருவாக்கிய வகைப்படுத்தல். தசநாமி என்பார்கள். தீர்த்த, ஆசிரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, ஸாகர, புரி, பாரதி, ஸரஸ்வதி எனும் பத்து பெயர்கள் கொண்ட சந்நியாசிகள். (உதாரணம் : ஞானானந்த கிரி, சந்த்ரசேகர ஸரஸ்வதி, பாரதி தீர்த்தர், தோதாபுரி, சந்த்ரசேகர பாரதி - போன்றவை). இவர்கள் எல்லோருமே ஏக தண்டம் கொண்டவர்கள்.

இதே போல மத்வ ஸம்ப்ரதாயத்திலும் ஸந்யாஸ தீக்ஷை உண்டு. அவர்களும் ஏக தண்டம் கொண்டவர்களே ! அவர்களுக்கு பெரும்பாலும் “தீர்த்தர்” என்ற பட்டமே அமைந்திருக்க காண்கிறோம். (உதாரணம் : ராகவேந்த்ர தீர்த்தர், வ்யாஸராஜ தீர்த்தர் போன்றவை)

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் த்ரிதண்டம் கொண்ட பீடாதிபதிகளைப் பார்க்கிறோம். இவர்கள் பொதுவாக ஜீயர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

மத்வ, வைஷ்ணவ, ஸ்மார்த்த ஸந்யாஸிகள் அத்தனை பேருக்குமே (அதாவது குருமுகமாக உபதேசம் பெற்றவர்கள்) பீடாதிபதியாக இருந்தாலும் இல்லா விட்டாலும் இவர்களுக்கு தண்டம் கட்டாயம் உண்டு. தண்ட வந்தனம், தண்ட நமஸ்காரம் எல்லாமே உண்டு.

சுருக்கமாக சொல்லப்போனால், தண்டம் இல்லாதவர் (technically) ஸந்யாஸி இல்லை.

எளிய பாஷையில் சொல்வதானால், சந்யாஸி வேறு சாமியார் வேறு

நான் அறிந்த வரை வைஷ்ணவத்தில் பீடாதிபதிகள் மட்டுமே தண்டம் தரித்த சந்யாஸிகளாக பார்த்து இருக்கிறேன். மடாதிபதி அல்லாத தனி சந்யாஸிகள் ஸ்ரீ வைஷ்ணவத்தில் உண்டா என்பதை அந்த ஸப்ரதாயத்தை அனுசரிப்பவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

மத்வ ஸம்ப்ரதாயத்தில் ஸந்யாஸிகள் எக்காலத்திலும் தண்டத்தை விட்டுப் பிரிவதில்லை. பூஜாகாலத்திலும், ஆராதனை காலத்திலும் தண்டம் கட்டாயம் கையில் இருக்கத்தான் செய்கிறது. வந்தன காலத்தில் அருகே இருக்கும் சிஷ்யரிடம் கொடுப்பது வழக்கம். ச்ருங்கேரி போன்ற மடங்களில் பூஜா காலங்களிலும் யாத்ரையின் போதும் ஆசார்யாள் தண்டத்தை கையில் வைத்தும் மற்ற நேரங்கள் அறையில் வைத்து விட்டு தரிசனம் தரும் வழக்கமும் காணப்படுகிறது.

அதேசமயம் ஸ்மார்த்த ஸம்ப்ரதாயத்தில் இதற்கு இன்னும் அடுத்த படி நிலை என்று ஒன்று உண்டு. அவதூத பரமஹம்ஸ நிலை. இந்த நிலையை அடைந்தவர்கள் தண்ட கமண்டலங்களையும் மந்த்ரபூர்வமாக திரஸ்கரணம் செய்து விடுவது வழக்கம். முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இவர்கள் சந்யாஸம் பெற்று, சந்யாஸ ஆச்ரமத்தை அனுசரித்து, அதன் பின்னரே தண்டத்தை திரஸ்கரணம் செய்திருக்கிறார்கள்.

ஞானானந்தர், சேஷாத்ரி ஸ்வாமிகள், ஜட்ச் ஸ்வாமிகள், சதாசிவ ப்ரம்மேந்த்ரர், சேந்தமங்கலம் ஸ்வாமிகள், சாந்தானந்தர் எல்லோரும் எல்லோரும் இந்த வரிசையில் வந்தவர்களே. இவர்கள் அத்தனை பேருக்கும் தண்ட கமண்டலம் உண்டு. ஆனால் அவர்கள் அதை எப்போதும் கையில் எடுத்துக் கொண்டு நடப்பது இல்லை.

ஸதாசிவ ப்ரம்மேந்த்ரர், காஞ்சி மடத்தின் 57வது பீடாதிபதி பரசிவேந்த்ர ஸரஸ்வதியின் சிஷ்யர். அவரிடம் முறையாக சந்யாஸம் பெற்றவர். காஞ்சி மடத்து பீடாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். தன் உடம்பு எனும் ப்ரக்ஞையை மறந்து அவதூத நிலையை எட்டிய பின் தண்ட கமண்டலங்களை திரஸ்க்ரணம் செய்து விட்டார்.

ஞானானந்தரின் குரு சிவரத்ன கிரி ஸ்வாமிகள் - ஜோஷி மடத்தின் சங்கராசார்யாராக இருந்தவர். அவரிடம் க்ரம சந்யாஸம் பெற்றவர் ஞானாந்தர். ஒரு முறை ஞானானந்தரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர் "தண்டம் இல்லாத சன்யாசியை வணங்காதே" என்று சாஸ்திரம் சொல்லுகிறதே இவரை வணங்குவதா வேண்டாமா என்று யோசித்தார்.

அடுத்த நொடி ஞானானந்தர் "தன்னைத் தான் கண்டவர்க்கு கோல்தடியும் ஏதுக்கடி" என்ரு வேடிக்கையாக பாடினார். வந்த பக்தரும் தன் தவறை உணர்ந்தார். ஞானாந்தரின் சந்யாஸ தண்டம் அவரது அறையில் இருக்கும். குருபூர்ணிமை போன்ற நாட்களில் ஞானானந்தரும் கூட தண்டம் கமண்டலம் ஏந்தி விதிவத்தாக தரிசனம் கொடுப்பதுண்டு.

அதே போல குருநாதர் ஸ்ரீ  சேஷாத்ரி ஸ்வாமிகள், ஹரித்வாரத்தைச் சேர்ந்த ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற கௌட தேசத்து ஸந்யாஸியிடம் ஸந்யாஸ தீக்ஷை பெற்றவர். காஞ்சிபுரத்து ஸர்வதீர்த்தக் கரையிலேயே சேஷாத்ரி ஸ்வாமிகள் ஸந்யாஸம் பெற்றார். பரமஹம்ஸ நிலையை அடைந்த காரணத்தால் குருநாதரி உத்தரவின் பேரில் தண்ட கமண்டலங்களை "பூ ஸ்வாஹா" என்று ஜலத்தில் விட்டு ஜாதரூபனாக ஸஞ்சரிக்கத் துவங்கினார்.

ஜட்ஜ் ஸ்வாமிகளின் தீக்ஷா நாமமும் ஸதாசிவ ப்ரம்மேந்த்ர ஸரஸ்வதி தான். அவரும் முறையாக சந்யாஸம் பெற்றவர் தான். (ராமக்ருஷ்ண அவதூத மஹராஜ் என்று குரு காஸஹஸ்தியில் அவருக்கு ஸந்யாஸம் கொடுத்தார்.)  ஜட்ஜ் ஸ்வாமிகளின் நேரடி சிஷ்யர் தான் ஸ்வயம்ப்ரகாச அவதூத ஸ்வாமிகள்(சேந்தமங்கலம் ஸ்வாமிகள்) அவர் சிஷ்யர் சாந்தானந்தர். இவர்கள் எல்லோருமே சந்யாஸத்திலிருந்து அவதூத நிலைக்கு சென்றவர்கள். அதனால் தண்டத்தை ஸ்வீகரித்து, பின்னர் விட்டவர்கள்.

ரமண மஹரிஷி க்ரமமாக சந்யாஸம் பெறவே இல்லை ! அதனால் தான் அவர் காவி கட்டவே இல்லை அவர் ஜீவன்முக்த ஞானி ! சந்யாஸியல்ல.

சின்மயானந்தா, தயானந்த ஸரஸ்வதி, விவேகானந்தர் போன்றவர்கள் துறவு வாழ்கை மேற்கொண்டவர்களேயன்றி வைதீக ஸந்யாஸ விதி என்ற கணக்கில் வருவதில்லை.

அதே போல் மிஷனரியைச் சேர்ந்தவர்கள், வைதீகமான, விதிவத்தான க்ரம ஸந்யாஸம் என்ற கணக்கில் வருவதில்லை. அதனால் அவர்களுக்கும் தண்டம் கிடையாது.

அதனால் திடீர் அம்மாக்கள், அப்பாக்கள், அண்ணாக்கள், தம்பிகள், ஸ்ரீ, ராம்ரஹீம் போன்றோர் இந்த வரிசையிலேயே கிடையாது.

முறையான குரும்பரம்பரையை சேர்ந்தவர்களே வணங்கத்தக்கவர்கள்.

அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

கருத்துகள் இல்லை: