சனி, 27 ஜூலை, 2019

நமது தர்மம் நான்கு வித புருஷார்த்தத்தில்(சதுர் விதபுருஷாரத்தம்) ஊன்றியது.

தர்மம் அதாவது அறம், அர்த்தம் அதாவது பொருள், காமம் அதாவது இன்பம், மோக்ஷம் என நான்கு வித புருஷார்த்தத்தை அறிந்து கொள்ளுதல் ஆகும். அறத்து வழியில் பொருள் ஈட்டி, மற்றவரிடம் (பொருள் இல்லாதவர்கள்) பகிரந்து இன்பம் அடைவது, கடைசியில் ஆசையை துறப்பது மோக்‌ஷத்திற்கு வழி என்கிற உண்மையை உணரந்தவர்களே நாலும் தெரிந்தவர்கள்.

சிலர் நான்கு வேதங்களையும் கற்றவர்களை நான்கும் தெரிந்தவர்கள் என்று கூறுவர். ஆனால் எல்லோராலும் எல்லா வேதங்களையும் பயில முடியாது. அது ஒரு சில சாராருக்கே சாத்தியமாகும். பெரும்பாலோருக்கு சாத்தியமாகாது. ஒருவன் வேதம் பயிலாவிட்டாலும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினாலும் நான்கும் தெரிந்தவன் என்று கொள்ளவேண்டும் என்பது என் அபிப்பிராயம்.
--------------------------------------------------------------------------------------------------------------
அஷ்ட வசுக்கள்

இந்திரனின் எட்டு ஏவலர்களே அஷ்ட வசுக்கள் எனப்படுகின்றனர். வசு என்ற சொல்லுக்கு வெளி என்று பொருள். இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள் இவர்கள். இவர்களில் தரா புவியையும்; அனலன் நெருப்பையும்; ஆப் நீரையும்; அனிலன் காற்றையும்; துருவன் துருவ நட்சத்திரத்தையும்; சோமன் சந்திரனையும்; பிரபாசன் வைகறையையும்; பிரத்யூஷன் ஒளியையும் குறிப்பவர்கள் ஆவர்.
--------------------------------------------------------------------------------------------------------------
குரு & சிஷ்ய உறவின் பெருமை

அன்னை-தந்தை, கணவன்-மனைவி, அண்ணன்-தங்கை, மாமன்-மாமி, போன்ற மனித உறவுகள் யாவும் ஒரு பிறவியோடு முடிந்து போகிறவை. மாறாக குரு, சிஷ்யனுக்கு இடையேயான உறவு பிறவிகள் தோறும் தொடரும் களங்கமில்லாத உறவாகும். குருவானவர் சிஷ்யனுக்கு அனைத்துமாகி, இறுதியில் பிரம்மமாகவும் ஆகிறார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் குரு-சிஷ்ய உறவு மட்டும் மாறுவதேயில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
மூன்றாம் பிறை

முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்

மூன்றாம் பிறையைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் நான்காம் பிறையைப் பார்க்கக் கூடாது என்றும் சாஸ்திரம் சொல்கிறது. எதைப் பார்க்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறதோ அது கட்டாயம் கண்ணுக்குத் தெரியும்! அதைப் பார்த்து விட்டு ‘பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டு வா’ என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை! கண்ணுக்குத் தெரிந்து விட்டால் அது நாலாம் பிறை தான்!

மூன்றாம் பிறை என்பது மிக மெல்லிய கோடு போட்டது மாதிரி இருக்கும். சிரமப்பட்டுத்தான் பார்க்க வேண்டும் அதை. சாஸ்திரம் சொல்கிறதையெல்லாம் சுலபமாகச் செய்து விட முடியுமா? அதனால் மூன்றாம் பிறைச் சந்திரன் அவ்வளவு சுலபமாகக் காணக் கிடைக்காது.

ஆகையினாலேதான் சீதாபிராட்டியை வால்மீகி வர்ணிக்கிற போது ரொம்ப மெலிந்திருக்கிறாள் அவள் ராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையினாலே துவண்டிருக்கிறாள் மூன்றாம் பிறைச் சந்திரனைப் போல் அவ்வளவு மெல்லிய திருமேனியை உடையவளாக இருக்கிறாள்’ என்கிறார்.

நான்காம் பிறை நன்கு தெரியும். ஆனால் அதைப் பார்த்தால் அபவாதம் வந்து சேரும். பண்ணாத குற்றம் வந்து சேரும்! பகவான் வாசுதேவன்  கிருஷ்ணன் நான்காம் பிறையைப் பார்த்து விட்டான். அதனால் ஸ்யமந்தக மணியை வாசுதேவன் திருடியதாக அபக்யாதி வந்து விட்டது. அதைப் போக்கிக் கொள்ள காட்டுக்குப் போய் ஜாம்பவனோடு போராடி அதைக் கொண்டு வந்தான். ஸ்யமந்தக மணியை பகவான் மீட்டு வந்தான்.
ஒருவேளை நாம் நான்காம் பிறையைப் பார்த்து விட்டோமேயானால் அப்போது அவனை தியானம் பண்ணிக் கொள்ளலாம். பண்ணினால் அந்த தோஷம் போய் விடும். அந்த சரித்திரத்தை விருத்தாந்தத்தை நினைத்தால் அந்த தோஷம் போய் விடும். இந்த மாதிரி மூன்றாம் பிறையைப் பார்த்தால் நல்லது என்று சின்ன வயதிலே ஒரு பெண் கேட்டாள். இப்போது அந்தப் பெண்ணுக்கு 90 வயது! அப்படியும் அந்த தர்மத்தை அவள் விடவில்லை.
இப்போது வயதான பிறகு ஆகாசத்தில் பார்த்தால் சந்திரன் தெரிய வில்லை. சின்ன வயதில் பளிச்சென்று தெரிந்த மூன்றாம் பிறைச் சந்திரன் வயதான பிறகு பார்த்தால் தெரியவில்லை.

பேர குழந்தை கோவிந்தன் என்பவனைக் கூப்பிட்டுக் பாட்டி கேட்கிறாள்.

“சந்திரன் தெரியலைடா! நீ கொஞ்சம் காட்டேன்” என்கிறாள்.

“அதோ தெரிகிறதே பாரேன்..”

“தெரியலையேடா”

பேரன் ரொம்ப கெட்டிக்காரன். பாட்டிக்குப் பேரனல்லவா!

“கோடி வீட்டு பாதாம் மரம் உனக்குத் தெரிகிறதா பாட்டி? என்று கேட்கிறான்.

‘நன்றாகத் தெரிகிறதே!” என்கிறாள் பாட்டி.

“அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருக்கிறதே சந்திரன்!”

இப்படிச் சொன்னதும் பாட்டி சந்திரனைப் பார்த்து விட்டாள். பரம சந்தோஷம் அவளுக்கு. பேரனைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுத்தாள்.

குழந்தை என்ன சொல்கிறது..?

‘கிளை நுனியிலே சந்திரன்!’

கேட்டுக் கொண்டிருக்கிற நாமெல்லாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். கோடி வீட்டு பாதாம் மரக்கிளையிலே ஒட்டிக் கொண்டிருக்கிற சந்திரனுக்கும் சந்திரலோகத்திலே பிரகாசிக்கிற சந்திரனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரு சம்பந்தமும் இல்லை! அப்படியிருந்தும் இந்தக் குழந்தை காட்டினான்; அதை அவளும் பார்த்தாள். இது எப்படி சம்பவித்தது என்றால் இங்கேயிருந்து பார்க்கிற பொழுது அந்தக் கிளை நுனியிலே ஒட்டிக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது. அதைப் பார்த்து அதோ இருக்கிறதே’ என்று காட்டப்படுகிறதேயொழிய இதை வைத்து அது இல்லை என்பதை நாம் நன்கு உணர வேண்டும். அதைப் போன்று பகவான் சர்வ வியாபியாக இருந்தாலும் எதனுடனும் சம்பந்தமில்லாமல் அவன் இருக்கிறான் என்பதை நாம் உணரவேண்டும். அவனுக்குக் கிலேசாதிகள், கஷ்டங்கள், ஆனந்தாதிகள் எதுவும் கிடையாது. தனித்து நிற்கக் கூடியவன்.
--------------------------------------------------------------------------------------------------------------
அனுமன் மகிமை!

அனுமன் சன்னதிக்கு மேல் கூரை கிடையாது. இங்கே என்றில்லை... பெரும்பாலான இடங்களில்  அனுமன் சிரத்துக்குமேல் கோபுரக்கூரைக்கு இடமில்லை. அதற்கு அவன் அனுமதி அளிக்கவில்லை என்று கூறுவார்கள். என்ன காரணம் என்று சிந்தித்துப்பார்த்தால், அங்கெல்லாம் அவன் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------------------------------------------------------------
யக்ஞரின் தோற்றம்!

யக்ஞரின் தோற்றம் குறித்து ஒன்றுக்கு மேற்பட்ட ஐதீகங்கள் நிலவுகின்றன. ருசி-ஆகுதி ஆகியோருக்குப் பிறந்தவரே யக்ஞேசுவரர் என்றும்; வராக அவதாரமெடுத்துவந்த நாராயணனே யக்ஞவராகமூர்த்தி என்றும் நம்பப்படுகிறது. வேத காலத்து வேள்வியே யக்ஞனாக உருவெடுத்து வந்ததாகவும் கூறுவர். இயற்கை நிகழ்ச்சிகள் யாவுமே யாகமாகவும், யக்ஞேசுவரர் அதன் அதிபதியாகவும் கூறப்படுகிறார். இரண்டு முகங்கள், ஏழு கைகள், மூன்று கால்கள், தலையில் நான்கு கொம்புகள் கொண்டவர். கைகளில் வேள்விக்கு வேண்டிய யக்ஞ பாத்திரங்கள், நெய் ஊற்றுவதற்கான சிறிய கரண்டி, சங்கு, சக்கரம் ஆகியவற்றுடன் காட்சி தருபவர்.
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: