வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 49: புராரி ஸ்தாபன விதி

49வது படலத்தில் புராரிஸ்தாபன விதி கூறப்படுகிறது. முதலில் அமைப்பு செயல்முறை பூர்வமாக புராரிஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை. பிறகு சூத்ரபாதம் குறிப்பிடும் முறையாக புராரிமூர்த்தி லக்ஷணம் வர்ணிக்கப்படுகிறது. அங்கு நான்கு கை, மூன்று கண், ஜடாமகுடம், சமமாக வளைந்த உடல், மான் மழுவு இவைகளை பக்கவாட்டில் உள்ள கைகளிலும், அம்பு, வில் இவைகளை வலது இடது ஆகிய கைகளில் உடையவராக புராரியை அமைக்கவும். சுவாமியின் இடது பாகத்தில் நல்ல லக்ஷணத்துடன் கூடிய பார்வதியை அமைக்கலாம் அல்லது செய்யாமலும் இருக்கலாம் என்று அம்பாள் விஷயத்தில் வேறுபாடு கூறப்படுகிறது. இவ்வாறு புராரிமூர்த்தி லக்ஷணம் கூறப்பட்டது. புராரி மூர்த்தி பிரதிஷ்டா முறை கூறப்படுகிறது. சுபமுகூர்த்தத்தில் நல்ல லக்னவேளையில் அங்குரார்ப்பணம் செய்து ரத்ன நியாஸம், நயனோன்மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம் இவைகளை செய்யவும் என்று ஜலாதி வாசம் வரையிலான காரியங்களின் வரிசை முறை கூறப்படுகிறது. பிறகு பிம்பத்தை ஜலத்திலிருந்து எடுத்து வந்து ஸ்நபனம் ரக்ஷõபந்தனம் செய்யவும் என்று கூறப்படுகிறது. பிறகு யாக மண்டபத்தில் குண்டங்களையும் ஸ்தண்டிலத்தையும் அமைத்து ஸ்தண்டிலத்தை முறைப்படி சயனம் அமைத்து ரக்ஷõபந்தனம் செய்விக்கப்பட்ட மகேஸ்வரனை சயனாதி வாசம் செய்வித்து அந்த பிம்பத்தின் சிரோதேசத்தில் சிவகும்பம் வர்த்தனியில் தேவியை ஸ்தாபித்து ரூபதியான முறைப்படி தியானித்து கும்பத்தையும் வர்த்தனியையும் பூஜிக்கவும். சிவகும்பத்தை சுற்றிலும் வித்யேஸ்வர கும்பம் 8 ஸ்தாபித்து அவைகளில் 8 வித்யேஸ்வரர்களை பூஜிக்கவும், தத்வ மூர்த்தி தத்வேஸ்வர மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும் என்று சயனாதி வாச கும்பாதிவாச முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு ஹோம முறையும் நிரூபன விளக்கத்துடன் சுருக்கமாக கூறப்படுகிறது. இரண்டாம் நாள் ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி சுவாமி கும்பம், அக்னி இவைகளை பூஜித்து தட்சிணை பெற்று கொண்டவனாக நல்ல முகூர்த்த சமயத்தில் மந்திர நியாஸம் செய்ய வேண்டும் என மந்திர நியாஸ விதி கூறப்படுகிறது. இங்கு தேவி ஒரு பீடமாக இருந்தால் தேவியின் ஹ்ருதயத்தில் மந்திர நியாஸம் செய்யவும் தனிமையான பீடமாக இருந்தால் தனி மண்டபத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கல்யாண உத்ஸவம் செய்ய வேண்டும். அதன் முடிவில் ஸ்நபநம், உத்ஸவம் அதிகமான நைய்வேத்தியம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. இங்கு கூறப்படாததை சாமான்ய பிரதிஷ்டையில் சொல்லப்பட்டபடி ஏற்று கொள்ளவும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டா முறை சுருக்கமாக கூறப்பட்டது. புராரி பிரதிஷ்டையை பக்தி பூர்வமாக செய்யும் யஜமான் இந்த லோகத்தால் அனேகமான சவுக்யங்களை அனுபவித்து முடிவில் சிவத் தன்மையை அடைகிறான் என்ற பலச்ருதி சொல்லப்படுகிறது. இவ்வாறு 49வது படல கருத்து சுருக்கமாகும்.

1. புராரி பிரதிஷ்டையை பற்றியும் முதலாவதாக அவருடைய லக்ஷணத்தையும் கூறுகின்றேன். ஜடாமகுடம், நான்கு கைகள், மூன்று கண்களோடு கூடியவர்

2. ஸ்தாபகரோடு கூடியவராய் நன்கு ஸமபாகத்தோடு கூடியவராய் இடது காதில் மகர குண்டலத்தோடு கூடியவராய்

3. மேல் கைகள் இரண்டிலும் மான் மழுவும் இடது கைகளில் வில்லும், அம்பும் கூடியவராயும்

4. தோள் உயரத்திலிருந்து பின் கைகள் உயர்ந்த நிலையில் இருக்க கூடியதாயும், பாணமானது குஹ்யம் வரை இருப்பதாயும் நாபியிலிருந்து மணிக்கட்டு வரையில் முடிவுபர்யந்தம் பத்தொன்பது அங்குல அளவு உள்ளதாயும்

5. இருபக்கங்களிலுள்ள கைகளுக்கும் மத்ய பிரதேசமானது ஐந்து அங்குலமும் கக்ஷ பாகத்திலிருந்து பின்கைகள் வரையில் பதினாறு அங்குல அளவு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

6. திரிபுரஸம்ஹார மூர்த்தியானவர் பின்கைகளை இரண்டும் உயர்ந்ததாகவும் தலையானது இடது பாகம் சற்று திரும்பிய நிலையிலும் கருவிழிப் பார்வை வலது பக்கம் சாய்ந்த பார்வையாகும்.

7. இடது பாக மூக்கிலிருந்து இடது பாக சூத்ரமாகவும், வலதுகால் சூத்ரமானது இடது மூக்கின் நுனியின் பாகத்திலும்

8. ஹ்ருதயம், தொப்பூழ், குஹ்யம், இடதுகால் நுனி, முழங்கால்களுடைய நடுவிலும், இடது பாகம் மூன்று அம்சம் தள்ளி நிற்பதாக சமபாக நிலையோடு நிற்பவராயும்

9. அந்த கால் கட்டைவிரல், குதிகால் இவைகளின் இடைவெளி பத்தில் ஒரு பங்காகவும் செய்ய வேண்டும். பிறகு இடது பக்கத்தில் நல்ல அமைப்புடன் கூடிய பார்வதியை செய்ய வேண்டும்.

10. மேற்கூறிய முறைப்படி த்ரிபுரஸம்ஹார மூர்த்தியின் அமைப்பை செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும். நல்ல முஹூர்த்த நல்ல லக்னத்தில் அங்குரார்ப்பணத்தை செய்து பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

11. ரத்னந்யாஸம், நயநோந்மீலனம், பிம்பசுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதிவாஸம் இவைகளைச் செய்து பிறகு ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

12. மண்டபத்தில் வேதிகையின்மேல் ஸ்தண்டிலம் அமைத்து, ஒன்பது, ஐந்து, ஒன்று என்பதான எண்ணிக்கையால் நாற்கோணம், வட்ட வடிவம், எண் கோணம் என்பதான அமைப்புள்ள ஏதாவது ஓர்வகை குண்டங்களை அமைத்து

13. சயனங்களை தயாரித்து ஜலாதிவாஸத்திலிருந்து பிம்பத்தை சயனத்தில் ஆரோஹித்து, ஈச்வரனின் தலைபாகத்தில் சிவகும்பத்தையும் வர்த்தனியையும் வைத்து

14. திரிபுர ஸம்ஹார மூர்த்தியின் உருவ அமைப்பை தியானித்து கும்பத்தில் பூஜிக்கவும். கும்பத்தை சுற்றிலும் வித்யேச்வரர்களுக்காக எட்டு கடங்களை வைத்து பூஜிக்க வேண்டும்.

15. ஆசார்யன் சந்தனம் முதலியவைகளால் நைவேத்ய பூஜை வரை செய்வதனாய் தத்வ தத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்து, ஹோமம் செய்ய வேண்டும்.

16. குண்ட ஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து ஸமித், நெய், அன்னம், எள் இவைகளாலும் புரசு, அத்தி, ஆல் அரசு ஸமித்துக்களை கிழக்கு முதலான திசைகளிலும்

17. வன்னி, நாயுருவி, பில்வம் மயிற்கொன்னை ஆகிய ஸமித்துக்களை தென்கிழக்கு முதலிய திசைகளிலும், பிரதான குண்டத்தில் புரசு ஸமித்தையுமோ அல்லது புரசு ஸமித்தையே எல்லா குண்டலத்திலுமோ ஹோமம் செய்ய வேண்டும்.

18. முன்பு கூறப்பட்ட பொருள்களை ஒவ்வொரு குண்டத்திலும் ஹோமம் செய்து, பூர்ணாஹூதி செய்யவும். பிறகு இரண்டாவது தினத்தில் ஈச்வரன், கும்பம், அக்னி இவைகளில் பூஜை செய்ய வேண்டும்.

19. ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி பூஜிக்கப்பட்டவனாயும் முன்பு கூறப்பட்ட தட்சிணையைப் பெற்றுக் கொண்டவனாயும் நல்ல முஹூர்த்த ஸமயத்தில் மந்திரந்யாஸம் செய்ய வேண்டும்.

20. கும்பத்திலிருந்து பீஜமந்திரத்தை எடுத்து சிவனுடைய ஹ்ருதயத்தில் சேர்க்கவும். வர்தநீகும்பத்தில் பீஜமந்திரத்தை எடுத்து பிம்ப பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

21. தேவி ஈச்வர பிம்பத்துடன் ஒரே இருக்கையில் இருந்தால் வர்த்தநீ பீஜத்தை தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். தேவி தனிமையான பீடத்தில் அமர்ந்திருந்தால் தனியாக மண்டபம் அமைத்து பூஜையை செய்ய வேண்டும்.

22. பிறகு திருக்கல்யாணம் செய்து, முடிவில் மஹாபிஷேகமும் செய்யவும். திருவிழாவும் அதிகமான நிவேதனம் என்ற பாவாடை நிவேதனம் செய்தோ செய்யாமலோ இருக்கலாம்.

23. இங்கு கூறப்படாததை பொதுவாக பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி செய்யவும். திரிபுரிஸம் ஸம்ஹாரமூர்த்தியின் பிரதிஷ்டையானது விருப்பத்தை கொடுக்கக் கூடியதாக கூறப்பட்டுள்ளது.

24. இவ்வாறாக எவன் ஒருவன் மிகவும் பக்தியுடன் பிரதிஷ்டையை செய்கிறானோ, அவன் பலவித போகானுபவங்களை இந்த உலகில் அனுபவித்து முடிவில் சிவபதத்தை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் புராரி ஸ்தாபன விதியாகிற நாற்பத்தியொன்பதாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: