வியாழன், 10 அக்டோபர், 2013

படலம் 43: ஸதாசிவ ஸ்தாபன விதி

43வது படலத்தில் ஸதாசிவ ஸ்தாபனமுறை கூறப்படுகிறது. முதலில் அமைப்பு முறைப்படி ஸதாசிவ ஸ்தாபனம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை, பிறகு முன்பு கூறப்பட்ட முறைப்படி கற்ச்சிலை முதலான திரவ்யங்களால் பிம்பம் அமைக்கவும் என கூறப்படுகிறது, பிறகு ஸதாசிவ மூர்த்தியின் அமைப்பு முறை விளக்கப்படுகிறது, இங்கு ஸதாசிவன் வலது கை ஜந்துகளால் அபயம் வரதம் சக்தி திரிசூலம் கட்வாங்கம் இவைகளையும் இடது பாக ஐந்துகைளால் ஸர்ப்பம், அக்ஷமாலை, உடுக்கை நீலோத்பலம், மாதுளம் பழம் இவைகளையும் தரித்து கொண்டும், ஐந்து முகத்துடனும் மூன்று கண்ணும் சுப்ரஸன்னராயும் ஜடாசூடராயும் ஸ்வேதவர்ணராயும் பத்தபத்மாஸனத்தில் அமர்ந்தவராயும் ஞானசந்திரகலையுடன் கூடியவாராயும் பதினாறு வயது சமானமாக இருப்பவரும், மனோன்மணியுடன் கூடியவராக ஸதாசிவன் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு அர்ச்சனாங்க விதி படலத்தில் கூறியபடியோ வேறுவிதியான முறைபடியோ ஸதாசிவரை அமைக்கவும் என்று கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டா விதி கூறப்படுகிறது, பின்பு முன்பு கூறப்பட்டுள்ளபடி திதி வாரகாலங்களை பரிசித்து அங்குரார்பணம் செய்து அதன் முடிவில் ரத்னநியாசம் நயனோன்மீலனம் பிம்பசுத்தி செய்து கிராமபிரதட்சிண பூர்வமாக பிம்பத்தை ஜலதீர்த்தங்களுக்கு அழைத்து சென்று ஜலாதிவாசம் செய்யவும். பிறகு சயனாதிவாசத்திற்காக வேதிகை குண்டஸஹித மாக மண்டபம் அமைத்து, சில்பியை திருப்தி செய்து சில்பிவிஸர்சனம், பிராமணபோஜனம் புண்யாஹ பிரோக்ஷணம், வாஸ்துஹோமம் முறையாக பூ பரிக்ரஹம் என்ற கிரியையை செய்யவும், இங்கு வேதிகைக்கு மேல் ஸ்தண்டிலம் அமைத்து முன்புபோல் சயனமுறை செய்யவும், பிறகு பிம்பத்தை ஜலத்தில் இருந்து எடுத்து மண்டபத்திற்கு அழைத்து சென்று சுத்தி செய்து, ரக்ஷõபந்தனம் செய்து ஸ்வாமியை கிழக்கு தலைவைத்து ஊர்த்துவ முகமாக சயனாதிவாசம் செய்யவும்.

ஸ்வாமியின் தலைபாகத்தில் ஸதாசிவகும்பம் வைத்து அதில் அவரை பூஜிக்கவும், ஸ்வாமி கும்பத்திற்கு வடக்கில் வர்த்தனியை வைத்து அதில் மனோன்மணியை பூஜிக்கவும். சுற்றிலும் எட்டு கடங்கள் ஸ்தாபித்து அவைகளில் வித்யேஸ்வரர்களை பூஜிக்கவும், பிறகு கும்பங்களில் தத்வ தத்வேஸ்வர மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்யவும். பிறகு குண்டத்தையும் வஹ்நியையும் ஸம்ஸ்காரம் செய்து ஹோமம் செய்யவும் எனக்கூறி ஹோம திரவ்ய நிரூபண முதன்மையானதாக ஹோமமுறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு இரண்டாம்நாள் ஆசார்யன் சுத்தி செய்து கொண்டு முன்பு போல் கும்பத்தையும் அக்னியையும் பூஜித்து ஹோமம் செய்யவும் என்று கூறி யஜமானனால் ஆசார்யன் முதலானவர்களுக்கு கொடுக்கப்பட்ட தட்சிணையை பெற்றுக் கொண்டு பிம்பத்தை எடுத்து ஸ்தாபித்து நல்ல முகூர்த்தத்தில் ஸதாசிவகும்பத்திலிருந்து மந்திரங்களை எடுத்து ஸதாசிவ ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும், பிறகு வர்த்தனி பீஜமந்திரத்தை ஸதாசிவரின் பீடத்தில் ஸ்தாபிக்கவும். அம்பாள் சேர்ந்த பீடமாக இருந்தால் அந்த வர்தனிபீஜத்தை அம்பாளின் ஹ்ருதயத்தில் ஸ்தாபிக்கவும் மற்ற கும்பங்களிலிருந்து மந்திரத்தை எடுத்து பீடத்தை சுற்றிலும் ஸ்தாபிக்கவும். அந்தந்த கடதீர்த்தங்களால் அந்தந்த ஸ்தானத்தில் அபிஷேகம் செய்யவும். பிறகு ஸ்நபநம், அதிகமான நைவேத்தியம், விசேஷபூஜை, உத்ஸவமும் செய்யவும். தேவிக்கும் ஸ்நபனம் செய்யவும். இங்கு கூறப்படாததை சாமான்ய ஸ்தாபனத்தில் சொல்லப்பட்டபடி செய்யவும் என்று பிரதிஷ்டாமுறையுடன் கிரியை வரிசைகள் மிகவும் சருக்கமாக அந்தந்த கிரியையை எப்படி செய்யவேண்டும் என்று கூறப்படாமல் குறிப்பிடப்படுகிறது. பிறகு நித்தியார்ச்சனை முதலியவைகள் முன்பு போல செய்யவும் என கூறப்படுகிறது. இவ்வாறு யார் ஸதா சிவபிரதிஷ்டை செய்கிறானோ அவன் இங்கு போகங்களை அனுபவித்து முடிவில் சிவஸாயுஜ்ய பதவி அடைகிறான் என்று பல ஸ்ருதி கூறப்படுகிறது. இவ்வாறு 43 வது படலத்தில் ஸதாசிவபிரதிஷ்டை முறை கூறப்படுகிறது! என்று கருத்து சுருக்கமாகும்!!

1. நன்கு லக்ஷணத்துடன் கூடிய ஸதாசிவ ஸ்தாபனத்தை கூறுகிறேன். முன்பு கூறியபடி சிலை முதலிய திரவியங்களை கொண்டு நல்ல முறையில் ஸதாசிவரை செய்ய வேண்டும்.

2. ஐந்து முகத்தோடு வெண்மையாய் கட்டப்பட்ட பத்மாஸனத்துடன் பிங்கள வர்ணமான சடையுடன் பத்துகைகளோடு கூடியவராக

3. அபயம், வரதம், சக்தியாயுதம், த்ரிசூலம் கத்தி, இந்த ஆயுதங்களை வலது பக்க கைகளிலும்

4. நல்ல பாம்பு, அக்ஷமாலை, உடுக்கை, நீலோத்பல புஷ்பம், மாதுளம் பழம் இவைகளை இடது கைகளில் சுப்ரஸன்னமாக தரித்து இருப்பவரும்

5. அர்ச்சனாவிதியில் கூறியுள்ள ரூபதியானம் உடையவராகவோ இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி மூன்று சக்திகளின் வடிவமான கண்களை உடையவரும்

6. க்ஞானமயமான சந்திரகலையோடு கூடியவரும் 16 வயதையுடையவராக அழகானவருமாக உள்ளவரை, சுகாசன மூர்த்தியைப்போல் ப்ரும்மசூத்ரம் முதலியவைகளுடன் கூடியதாக ப்ரதிமை கூறப்பட்டுள்ளது.

7. மனோன்மனியுடன் கூடியவராக இந்த பிரகாரம் ஸதாசிவன் செய்ய வேண்டியது. இது மாதிரியாக லக்ஷணம் கூறப்பட்டது. பிரதிஷ்டையை கூறுகின்றேன்.

8. முன்போல் நாள் முதலியனவைகளை கிரஹித்து அங்குரார்ப்பணம், அதன் முடிவில் ரத்ன நியாஸத்தையும், கண் திறப்பதையும் செய்ய வேண்டும்.

9. பிம்ப சுத்தி, கிராம பிரதக்ஷணம், ஜலாதி வாஸம் செய்து பிறகு மண்டபத்தை முன் போல் செய்ய வேண்டும்.

10. மண்டபத்தில் ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற முறையில் குண்டங்கள் நிர்ணயமாகும். அந்த குண்டங்களை வட்டமாகவோ எண்கோணமாகவோ செய்யலாம்.

11. பிறகு சில்பியை விடுவித்து பிராமண போஜனம், புண்யகவாசனம், வாஸ்த்து சாந்தி செய்து பூமியை கிரஹித்து சுத்தி செய்ய வேண்டும்.

12. வேதியின் மேல் ஸ்தண்டிலம் செய்து படுக்கையை முன்போல செய்யவும். பிறகு பிம்ப சுத்தி செய்து ரக்ஷõபந்தனம் செய்ய வேண்டும்.

13. படுக்கையில் ஈசனை மேல் நோக்கிய முகத்துடன் கிழக்கு பக்கம் தலையை வைத்து படுக்க வைக்க வேண்டும். ஈசனுடைய தலைப் பக்கத்தில் ஸதாசிவ கும்பத்தை வைக்க வேண்டும்.

14. எல்லா விதமான லக்ஷணத்தோடு கூடியவரான ஸதாசிவனை கும்பத்தில் பூஜிக்க வேண்டும், கும்பத்திற்கு வடக்கு பக்கத்தில் வர்த்தினியை வைத்து அதில் மனோன்ணியை பூஜிக்க வேண்டும்.

15. சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அவைகளில் அஷ்டவித்யேச்வரர்களை பூஜிக்க வேண்டும். தத்வ, தத்வேச்வர, மூர்த்தி, மூர்த்தீச்வரர்களை நியஸித்து ஹோமம் செய்ய வேண்டும்.

16. குண்டம், அக்னியை ஸம்ஸ்காரம் செய்து ஸமித், நெய், அன்னம், எள்ளு, யவை, பொறி இவைகளை ஹோமம் செய்து முடிவில் வெண்கடுகு பால் ஹோமம் செய்ய வேண்டும்.

17. அரசு, அத்தி, இச்சி, ஆல், கிழக்கு முதலிய திசை குண்டங்களிலும் வன்னி, கருங்காலி, நாயுருவி, வில்வஸமித்து முதலியன ஆக்னேயம் முதலான கோணங்களில் உள்ள குண்டங்களிலும்

18. பிரதான குண்டத்தில் புரச ஸமித்தும் எல்லா குண்டங்களுக்கும் புரச ஸமித்தையோ ஹோமம் செய்யலாம். தனித்தனியாக முன்போல் ஹோமம் செய்து இரண்டாவது தினம் ஆசார்யன் சுத்தி உள்ளவனாக

19. பிம்பத்தை சயனத்திலிருந்து எடுத்து முன்போல் அக்னியையும் கும்பத்தையும் பூசை செய்து தேசிகர் முதலானவர்களுக்கு பிறகு தட்சிணையை கொடுக்க வேண்டும்.

20. பிறகு நல்ல முகூர்த்த வேளை வந்தவுடன் கும்பத்திலிருந்து மூல மந்திரத்தை தியானம் செய்ய வேண்டும். கும்பத்திலிருந்து மூலத்தை எடுத்து ஈசன் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.

21. வர்த்தனியிலிருந்து மூலத்தை எடுத்து பீடத்தில் சேர்க்க வேண்டும். தேவீ கூட இருந்தால் அவளது ஹ்ருதயத்தில் மூலத்தை சேர்க்க வேண்டும்.

22. மற்ற கும்ப பீஜங்களை எடுத்து பீடத்தை சுற்றிலும் நியஸிக்க வேண்டும். அந்தந்த இடத்தில் அபி÷ஷேகம் செய்ய வேண்டும்.

23. ஸ்நபனம் நிறைய நைவேத்யம் பூஜை உத்ஸவம் செய்ய வேண்டும். தேவிக்கு ஸ்நபனம் செய்து பிறகு கல்யாண உத்ஸவம் செய்ய வேண்டும்.

24. இதில் கூறப்படாதகைகளை ஸாமான்ய ஸ்தாபனத்தில் கூறியபடி செய்யவும். நித்ய பூஜைகள் எல்லாம் முன்பு கூறியுள்ளபடி அனுஷ்டிக்க வேண்டும்.

25. எந்த மனிதன் ஸதாசிவ பிரதிஷ்டையை இது மாதிரி செய்கின்றானோ அவன் இங்கு போகங்களை அனுபவித்து முடிவில் பரமசிவனை அடைகிறான்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் சதாசிவஸ்தாபன முறையாகிய நாற்பத்தி மூன்றாவது படலமாகும்.

கருத்துகள் இல்லை: