வெள்ளி, 4 அக்டோபர், 2019

விழிப்புணர்வு...

சமையலறையில் எப்போதும் ஒரு பை கோதுமை மாவு வைத்திருங்கள். அது எங்குள்ளது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

#தயவு செய்து படிக்காமல் இருக்க வேண்டாம். நான் சோளம் கொதிக்கவைத்தேன். சோளம் தயாரா என்று பார்க்க சிறிது குளிர்ந்த நீரை கொதிக்கும் நீரில் ஊற்றினேன். தவறுதலாக நான் கையை கொதிக்கும் நீரில் பட்டுவிட்டது... வியட்நாமிய கால் நடை மருத்துவராக இருந்த எனது நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் வேதனையுடன் அலறும் போது, ​​என்னிடம் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா என்று கேட்டார். நான் கொஞ்சம் கொடுத்தேன். அவர் என் கையை மாவில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்.

வியட்நாமில் ஒரு பையன் ஒரு முறை தீயில் ஒரு விபத்தில் எரிந்ததாக அவர் என்னிடம் கூறினார். அவர் மீது நெருப்பு மற்றும் பீதியுடன் யாரோ ஒருவர் தனது உடலெங்கும் ஒரு சாக்கு கோதுமை மாவு ஊற்றி தீயை அணைக்க முயன்றார். தீ அணைக்கப்பட்டது மட்டுமல்ல, சிறுவன் மீது தீக்காயங்கள் எதுவும் இல்லை !!!!

என் சொந்த விஷயத்தில், நான் பத்து நிமிடங்கள் மாவுப் பையில் என் கையை வைத்தேன். பின்னர் அதை அகற்றி விட்டேன். அதன் பிறகு எரிந்த எந்த சிவப்பு அடையாளத்தையும் நான் பார்க்க முடிய வில்லை. இன்று நான் ஒரு பை கோதுமை மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறேன். நான் தீ படும் ஒவ்வொரு முறையும் மாவைப் பயன் படுத்துகிறேன். உண்மையில் குளிர்ந்த மாவு அறை வெப்பநிலையில் இருப்பது மிகவும் சிறந்தது. ஒரு முறை என் நாக்கை சுட்டு கொண்டேன். அதன் மீது சுமார் பத்து நிமிடங்கள் மாவு வைத்தேன். வலி நின்று விட்டது. எனவே எப்போதும் உங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்த பட்சம் ஒரு கோதுமை மாவு பாக்கெட் வைத்திருங்கள். மாவு வெப்பத்தை உறிஞ்சும் திறனைக் கொண்டுள்ளது. இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் எரிந்த நோயாளிக்கு பதினைந்து நிமிடங்களுக்குள் பயன் படுத்தினால் அது உதவுகிறது.

உங்களுக்கு நன்மை பயக்கும் மதிப்பை யாராவது பகிர்ந்து கொள்ளும் போது ​​அதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு தார்மீகக் கடமை இருக்கிறது. எனவே இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பித்ருக்கள் பூஜை
{நம் மன்னர்களுக்கு செய்ய வேண்டிய பூஜை}

1:ஒவ்வொரு மனிதனும் இயற்ற வேண்டிய மிக முக்கியமான கடமை பித்ருக்கள் பூஜை ஆகும்.

2:பித்ருக்களைப் பூஜிப்பதற்குத் தினமும் சில நேரங்கள் மற்றும் திதி, காலம்,ஆகியவை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலூம் ஒவ்வொரு தினமும் அவர்களை நன்றியுடன் நினைத்து வணங்கி வரவேண்டியது அவசியமாகும்.

3:பித்ருக்கள் கருனையே வடிவானவர்கள் முக்கியமாக நமது பெற்றோர்கள்  மறைந்த தினம்,அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய,சந்திர கிரகண காலங்கள் ஆகியவற்றின் போது பூஜை செய்ய வேண்டியது அவசியம்.

4:சுவரின் மேல் எறியும் பந்து மீண்டும் நம்மையே வந்து அடைவது போல் நாம் பக்தியுடன் செய்யும் பித்ரு பூஜையின் பலன்கள் நம்மையே மீண்டும் வந்து அடையும் பித்ருக்களின் ஆசியாக இந்த ஆதியின் சக்தி அளவிடற்கரியது.

5:குடும்பத்தில் தொடர்ந்து வரும் கடன் பிரச்சனைகளும், நோய்களும்,நிம்மதிகுறைவும், விவாஹங்கள் தடைபடுவதும் பித்ருக்களை உள்ளன்புடன் பூஜிப்பதனால் உடனடியாக நீங்கும்.

6:பித்ரு பூஜையை அதிகபணம் செலவு செய்து தான் செய்ய வேண்டும் என்பதில்லை. அவரவர்கள் சக்திக்கு ஏற்ப செய்தாலே பித்ருக்கள் திருப்தி அடைந்து உள்ளம் பூரித்து மகிழ்வார்கள்.

7:கையில் மருந்து இருக்க அதனை உண்ணாமல் உடல் உபாதைகளுடன் போராடும் நோயாளியைப் போல் பித்ரு பூஜை என்ற அளவற்ற சக்தி நம் கையில் இருக்க அதனை விடுத்து வேறு பரிகாரங்களை தேடி ஓடுவது கண் இருந்தும் குருடனைப் போல நடந்தது கொள்வதற்குச் சமமாகும்.

8:பித்ருக்களை பூஜிப்பதும் புண்ணிய காலங்களில் திதி, தர்பணம்,ஆகியவை செய்வதும் வாழ்வின் இருதி  காலம் வரை அனைத்து நன்மைகளையும் அளிக்கும். பித்ருக்களை மறப்பவன் மஹாபாபி ஆகிறான்.

9:குடும்பத்தில் விவாஹம் போன்ற காரியங்கள் நிகழும் போது முதலில் பபித்ருக்களை வழிபடுவது அவசியமாகும். அவர்களை பூஜித்து அவர்களது ஆசியையும் அனுமதியையும் பெற்ற பின்னரே விவாஹத்தை நடத்த வேண்டும்.

10:இந்த ஆசீர்வாதம் கிரக தங்களையும் செய்வினை போன்ற கொடிய அனுபவங்களையும் உடனடியாக நீக்கக் கூடிய சக்தி வாய்ந்தது ஆகும்.

11:திதியின் போது பசு,நெய், தயிர், பால், தேன்,முப்பழங்கள் {மாம்பழம்,பலாப்பழம், வாழைப்பழம்}ஆகியவற்றினால் பித்ருக்கள் அளவற்ற திருப்தியும் மகிழ்சியும் அடைகிறார்கள்.

12:சிராத்த தினத்தன்று அதற்கு முன் தினமும் ஸ்தீரி சேர்க்கை பிறர் விடுகளில் புசிப்பது க்ஷவரம் செய்து கொள்வது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். முடிந்தமட்டில் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களையே பித்ரு பூஜைக்கு அழைக்க வேண்டும்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி :52 ॐ
           ஆதிரைச் சிறப்பு

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும் சோதிடத்திலும் பேசப் படும் 6 வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை ஓரியன் குழுவில் சொல்லப்படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப்படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும் மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆட வல்லான் தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப்பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி அம்பா ஆடல் என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர் சிவகாமி பிள்ளையார் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப்படுகின்றது. மிக ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்று காலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர். இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப்படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். கிழே காணப்படும் ககன கந்தர்வ கனக விமானம். மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 51 ॐ
சித்தம் போக்கு சிவன் போக்கு!

திருவாரூரில் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுவது இல்லை. அதற்குப் பதிலாக ஆரூரா தியாகராஜா என்றே சொல்லப்படுகிறது. மேலும் வன்மீகம் என்னும் புற்றில் இருந்து ஈசன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியமையால் இது ப்ருத்வித் தலம் என அழைக்கப்படுவதாயும் அறிகிறோம். திருமாலால் பாற்கடலில் வழிபடப்பட்டு பின்னர் அவரிடமிருந்து இந்திரன் பெற்று இந்திரனிடமிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தியை வந்து அடைந்து ஆரூரில் கோயில் கொண்ட தியாகராஜருக்கே இங்கே முதல் மரியாதை! தில்லையில் ஆனந்தத் தாண்டவம் ஆடும் நடராஜரின் அழகை இப்போது சற்று பார்ப்போம். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே! என்றார் நாவுக்கு அரசர். இறைவனின் திரு அழகில் மயங்கிய அவர் இம்மாதிரி வர்ணிப்பது மிகை அன்று என்றாலும் அவர் தம் வர்ணனையில் மறைந்திருக்கும் பொருள் என்ன வென்றால் குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக்களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் = தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும் பனித்த சடையும் = சிவ நெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் = நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன் தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களை தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் = இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால் இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

இறையவன் ஆடல் தெற்கு நோக்கியே இருக்கிறது. தென் திசை யமதர்மனின் திசை என்பர். அந்த யமபயத்தை நீக்கி நம்மைப் பேரருட்கடலில் ஆழ்த்தி நம்மை உய்விக்கவும் தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுமந்து வரும் தென் தமிழின் மகத்துவத்துக்கும் மணத்துக்காகவும் கூட இருக்கலாம். சித்தம் போக்கு சிவன் போக்கு என்பர். இவன் போக்கை யாரோ கண்டார்? தன் கையில் உள்ள உடுக்கையைக் கொட்டிக் கொண்டு இவ்வுலக ஆன்மாக்களின் மாயையை உதறுகிறான். ஏந்திய நெருப்பால் கன்ம மலத்தைச் சுட்டுப் பொசுக்குகிறான். ஊன்றிய திருவடியால் ஆணவத்தை அகற்றுகிறான். தூக்கிய திருவடியால் பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கிறான். அபய ஹஸ்தம் காட்டி உயிர்களுக்கு "அஞ்சேல்" என அபயம் அளிக்கின்றான். தண்ணொளி வீசும் திருமுகத்தினால் அனைவருக்கும் அனைத்துக்கும் நானே தலைவன் எனத் தெரியப் படுத்துகிறான். திருமுடியில் சுமந்திருக்கும் கங்கையின் மூலம் அவன் பேராற்றலையும் உயிர்களைத் தடுத்தாட்கொள்ளும் வேகத்தையும் வெளிக்காட்டுகின்றான். பித்தனாகிய அவன் பிறையைத் தன் தலையில் சூடியதின் மூலம் தன்னைச் சரண் என வந்தடைந்தவர்களைக் கைவிடாமல் காப்பான் எனவும் தெரிவிக்கின்றான். ஆடலரசனே
சரணம் அவன் திருவடிகளே போற்றி போற்றி

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ

வியாழன், 3 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 50 ॐ
    தியாகராஜரும் நடராஜரும்

தில்லையில் நடராஜர் எப்படி முக்கியத்துவமோ மூலவரோ அப்படியே திருவாரூரில் தியாகராஜர் முக்கியத்துவம் வாய்ந்தவரும் மூலவரும் ஆவார். தில்லை நடராஜ சபை பொன்னம்பலம் என்றால் திருவாரூர் தியாகராஜ சபையைப் பூ அம்பலம் என்று குறிப்பிடுவார்கள். இங்கே தான் சுந்தரரைத் தியாகராஜர் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று துவங்கச் செய்யும் முதலடியை வைத்துத் திருத்தொண்டத் தொகையை எழுதச் செய்து அருளினார். பஞ்சபூதத் தலங்களில் உலகைக் குறிப்பிடும் திருவாரூரை மனதில் இருத்தியே சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தை ஆரம்பிக்கும் போது நடராஜர் உலகெலாம் என்று எடுத்துக் கொடுத்திருக்கிறார். பொன்னம்பலத்தில் ஆனந்தக் கூத்து ஆடும் அம்பலவாணன் முதலில் ஆடியது என்னமோ அறைக்குள்ளே தான். உமையவள் மட்டுமே காணுமாறு அறைக்குள் அவன் ஆடிய ஆட்டம் திரு உத்தரகோச மங்கை என்னும் ஊரில் என்று சொல்லுவார்கள். அன்னையானவள் பரத குலத்தில் பிறந்து ஐயனை மணந்து பின்னர் இங்கே ஐயன் அன்னைக்கு வேதப் பொருளை உபதேசித்து பின்னர் தன் நாட்டியத்தையும் காட்டி அருளியதாய்ச் சொல்லுவார்கள். தேவிக்கு உபதேசத்தை ரகசியமாய்க் கொடுத்து அருளியதால் உத்தர கோச மங்கை எனப் பெயர் பெற்றதாயும் சொல்லுவார்கள். உத்தரம்=உபதேசம், கோசம்=ரகசியம், மங்கை=இங்கே பார்வதியைக் குறிக்கும். இந்த நாட்டிய நடராஜரை ஆதி சிதம்பரேசர் என அழைக்கப் படுவதோடு இங்கே உள்ள மரகத நடராஜர் இருக்கும் இடத்தை ரத்தின சபை என்றும் அழைக்கப்படுகிறது. அக்கினியின் மத்தியில் அன்னை காண மகேசன் இங்கே அறையில் ஆடிய ஆட்டமே சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஆடப்பட்டதாயும் சொல்லப்படுகிறது. இதைத் தான் அறையில் இருந்தாலும் அம்பலத்துக்கு வரத்தானே வேண்டும் என்ற சொல் வழக்கும் சொல்லுவதாய்க் கூறுவார்கள். ஐந்தரை அடி உயர நடராஜரை உள்ளே வைத்தே சன்னதி எழுப்பப்பட்டிருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். இந்த ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் சன்னதி தனிக்கோயிலாக கோயிலுக்கு உள்ளேயே குளத்துக்கு எதிரில் இருப்பதாயும் சொல்கின்றனர். இவர் வெளியே வருவதில்லை. ஆண்டுக்கு ஒரு முறை இவரின் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகங்கள் நடந்து திரும்பச் சந்தனக் காப்புக்குள் நுழைந்து விடுவார். அந்த நாள் மார்கழித் திருவாதிரை நன்னாள்.

ஆனால் திருவாரூரிலோ என்றால் அவன் ஆடிய ஆட்டத்தை அஜபா நடனம் என்று சொல்கிறார்கள். வாயால் சொல்லாமல் சூட்சுமமாய் ஒலிப்பதால் இதற்கு அஜபா=ஜபிக்கப்படாதது என்று பொருள். இதை விளக்குவதே தியாகராஜரின் அஜபா, ஹம்ஸ நடனத் தத்துவம். இவர் திருமேனியே இங்கே திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்று சொல்வார்கள். இவர் திருமேனியில் ஸ்ரீ சக்ரம் அலங்கரிப்பதால் திருமேனி காணக் கிடைக்காத ஒன்று. தியாகராஜரும் உற்சவ காலங்களில் வெளியே வந்து தன் நடனத்தை ஆடுகிறார். அது போல் நடராஜரும் உற்சவ காலங்களில் மட்டுமே வெளியே வருவார். ஒரு வருஷத்தில் ஆறு முறைகளில் மகா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகிறது. அவை நம் மானிடக் கணக்கில் கொள்ளாமல் தேவர்களின் கணக்கிலே கணக்கிடப்படுகிறது. தேவர்களின் காலம் நமக்கு மார்கழி மாதம் அவர்களுக்கு உஷத் காலம் என்று கணக்கிடப்படுவதால் மார்கழித் திருவாதிரையின் அபிஷேகம் உஷத் காலப் பூஜையாகக் கணக்கிடப்படுகிறது. மாசி பங்குனியில் செய்யப்படுவது காலசந்தி அல்லது பகலின் ஆரம்பம் எனக் கொண்டால் சித்திரையில் செய்யப்படுவது உச்சிக்காலம் அல்லது நடுப்பகல் என்றும் ஆனி மாதம் நடப்பது பிரதோஷ காலம் அல்லது மாலைப் பூஜை எனவும் ஆவணி மாதம் நடப்பது இரண்டாம் காலம் அல்லது முன் இரவு பூஜையாகவும் புரட்டாசி மாதம் நடப்பது அர்த்தஜாமம் அல்லது நடு இரவு எனவும் அழைக்கப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம்  ॐ

புதன், 2 அக்டோபர், 2019

18:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                18:ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                              (கி.பி.375-கி.பி.385 வரை)

ஸ்ரீ சுரேந்திரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மஹாராஷ்டிர அந்தணர்.தந்தை பெயர் மதுரா நாதர்.பெற்றோர் இவருக்கு இட்ட நாமதேயம் மாதவர்.இவருடைய யோக வல்லமை காரணமாக'ஸ்ரீயோகி திலகர்'என்று மக்களாள் கொண்டாடப்பட்டவர்.இவர் காலத்தில் நரேந்திராதித்யன் காஷ்மீர் மன்னனாக இருந்தான்.இவருடைய மருமகன் சுரேந்திரனும் ஒரு சிற்றரசனே.சுரேந்திரனின் சபையில்'துர்தீதிவி'என்ற நாஸ்திகன்,ஆஸ்தான வித்வானாக புகழ் பெற்றிருந்தான்.ஸ்ரீ யோகி திலகர் பலரை வாதில் வென்ற அனுபவம் இருந்ததால் இவனையும் வாதில் வென்றார்.இதை அறிந்த நரேந்திர ஆதித்யன் பெரும் வியப்போடு இவர் காலடியில் விழுந்து வணங்கி"இன்று முதல் இந்தகாஷ்மீர் அரசுரிமை உங்களுடையது.உங்கள் ஆணைப்படி செயல்படுவேன்"எனக் கூறினான்.அப்பேற்பட்ட பெருமை வாய்ந்த இந்த குருரத்தினம் பத்தாண்டு காலமே குருபீடத்தை அலங்கரித்தார்.கி.பி.385-ஆம் ஆண்டு,தாருண வருடம்,மார்கழி மாதம்,வளர்பிறை பிரதமை அன்று உஜ்ஜயனி அருகில் சித்தியடைந்தார்.

செவ்வாய், 1 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 49 ॐ
   ஆகமம் ஒரு முற்றுப் புள்ளி!

தில்லைக் கூத்தன் ஆனந்த நடனம் ஆடிய இடம் தில்லையம் பதி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆகாசத்திலே பரந்து விரிந்த வெளியிலே அவர் நடனம் தான் நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறது. இத்தகைய நடனத்தைத் தில்லையிலே ஆடும் போது இறைவன் அப்படியே தன் அம்சத்தோடும் தன் இறைசக்தியோடும் உறைந்த இடம் தான் தில்லைச் சிற்றம்பலம். தானே அங்கு தன் முழு சக்தியோடு உறைந்த இடத்திலே கோயில் கொள்ள நினைத்த இறைவன் தனக்குத் தானே அங்கே கோயில் கட்டிக் கொண்டதாயும் சொல்லுவார்கள். இப்படி முதலில் இறை சக்தி இருந்து. அதன் பின்னர் மூலஸ்தான விமானம் கட்டிய பின்னர் பிராகாரங்கள், பரிவார தேவதை சன்னதிகள், வெளிப்பிரகாரம், சுற்று மண்டபங்கள், ராஜ கோபுரம் என்று கோயில் கட்டுவது ஒரு மரபு. இம்முறையில் அமைக்கப்பட்ட கோயில்கள் மகுடாகமம் என்னும் முறையில் வந்ததாய்ச் சொல்கின்றனர். முதலில் கோயிலுக்குத் தேவையான அனைத்து அமைப்புக்களையும் கட்டுமானங்களையும் கட்டி முடித்து விட்டுப் பின்னர் விக்ரஹப் பிரதிஷ்டை செய்து அதில் இறை சக்தியை ஆவாஹனம் செய்து வழிபடுவது இன்னொரு மரபு. இவை பின்னர் வந்த கோயில்கள் என்று சொல்லப்படுகிறது. முதலில் சொன்ன முறைப்படியான கோயில்கள் மிகவும் குறைவு. இவற்றில் முதலில் சொல்லப் பட்ட இறைவன் தானாகவே உறைந்து சக்தியுடன் இருக்கும் இடங்கள் மிக மிகச் சக்தி வாய்ந்த ஸ்தலங்களாய்ச் சொல்லப்படுகிறது. சிதம்பரம் அத்தகைய ஸ்தலங்களில் முதன்மையானது. இறை சக்தியின் அற்புதம் பூரண வீரியத்துடன் வெளிப்படும் இடம் அது. ஆகவே இம்முறையில் குடி கொண்ட கோயில்களில் வழிபடும் முறையை மகுடாகமம் என்று சொல்லி இருக்க வேண்டும். இங்கு வழிபடும் முறையும் மகுடாகம முறை என்று சொல்லி வந்திருக்கலாம். அப்போது தில்லையம்பதியிலே வழிபட்டு வந்த இறையாளர்கள் மேற்கொண்ட வழிமுறையைப் பின்னால் வந்த தில்லை வாழ் அந்தணர்கள் பின்பற்றவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
திருக்கைலையிலே இறைவனைக் காணாமல் அவரைத் தேடிவந்த அவர்தம் சிவகணங்கள் காசியிலேயும் இறைவன் இல்லாமல் அவர் தம் ஆனந்தத் தாண்டவத்தையும் காண முடியாமல் பரிதவித்த வேளையிலே இறைவனே அவர்களைத் தில்லைச் சிற்றம்பலம் நாடி வரச் சொன்னதாயும் இந்தச் சிவகணங்கள் வந்ததும் பூஜை வழிபாட்டு உரிமைகளை இவர்களிடமே இறைவன் ஒப்படைத்ததாயும் அது முதல் தில்லை வாழ் அந்தணர்களே வைதீக முறைப்படி பூஜை வழிபாடுகளைப் பதஞ்சலி தொகுத்துக் கொடுத்த பதஞ்சலி பத்ததியில் மாற்றியதாயும் ஒரு கூற்று இருக்கிறது. முன்னர் செய்து வந்த மகுடாகம முறை வழிபாடு தமிழா வடமொழியா என்பது குறித்து எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை. இருப்பவர்கள் சொன்னால் தெரிந்து கொள்கிறேன். இனி இந்த ஆகமம் பற்றிய கட்டுரைகளை இத்தோடு முடித்துக் கொண்டு சிதம்பரம் கோயிலுக்குத் திரும்பவும் செல்லலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பார்த்து அருள் புரியும் ஆறுமுகநயினார் சன்னதி பற்றிய சில அரிய தகவல்கள் அடங்கிய பதிவு!

பெரும்பாலான கோவில்களில், ஆறுமுகங்கள் கொண்ட முருகன் சிலை முன்னால் தெரியும் வகையில் ஐந்து முகங்களும் ஆறாவது முகம், பின்புறமும் அமைக்கபட்டிருக்கும்.

 பின்புறம் உள்ள ஆறாவது  முகம், “அதோ முகம்"என அழைக்கப்படும்.

இந்த ஆறாவது முகத்தை நேரடியாக பார்க்கக் கூடாது என்பதால், கண்ணாடியில் மட்டுமே பார்க்கும் வகையில் அமைக்க பட்டிருக்கும்.

ஆனால் அருள்மிகு காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோவிலில்  ஆறுமுகங்கள் கொண்ட சக்தி மிக்க ஆறுமுகநயினார் சிலை  தனி சன்னிதியாக தெற்கு நோக்கி அமைக்கபட்டுள்ளது மிக அபூர்வமான ஒன்றாகும்.

இந்த ஆறுமுக நயினார் சன்னிதியில் ஆறுமுகங்கள் கொண்ட சக்தி மிக்க இந்த ஆறுமுகநயினார் சிலை அபூர்வமான முறையில் அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கும்படி அமைக்கபட்டுள்ளது மிக விசேஷமான அமைப்பாகும்.

மேலும் இந்த  ஆறுமுகநயினார் சிலையை சுற்றிவந்து வழிபடும் வகையிலும் அமைக்கபட்டுள்ளது.

இப்படியொரு வடிவமைப்பு,வேறு எந்தக் கோவிலிலும் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆறுமுகங்கள் கொண்ட  சக்திமிக்க இந்த ஆறுமுகநயினார் தன்னை அண்டிவரும் பக்தர்களைக் காப்பாற்ற வல்லவர்.

ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு பார்த்து அமர்ந்திருப்பது போல,இந்த ஆறுமுகநயினாரும் தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார்.

இது மிக மிக விசேஷமான அமைப்பாகும்.

உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான‌  சக்தி இருப்பதை உணரலாம்.

அந்த வகையில் தெற்கு நோக்கி ஆறுமுகநயினார் சுவாமி இங்கு மட்டுமே மூலவராக  அமர்ந்திருப்பது  வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு!

மனிதனின் மனதில் தோன்றும் ஆறு தீய குணங்களான காமம் (இச்சை), க்ரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தனம்), மோஹம் (ஆசை), மதம் (செருக்கு), மாஷர்யம் (பொறாமை) ஆகிய 6 தீய குணங்களை ஆறுமுக கடவுளாக இங்கு காட்சி தரும் முருகன் தீர்த்து வைக்கிறார்.

சில நூறாண்டுகளுக்கு முன்பு மலையாள நம்பூதிரிகள் சிலரது சதியால் இப்படிபட்ட  சக்தி மிக்க ஆறுமுகநயினார் சன்னிதியில் தெற்கு பார்த்த மூலவர் முருகனின் அதீதமான, அற்புதமான‌ சக்திகளை முடக்கி பூட்டபட்டுவிட்டது.

நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி மீண்டும் திறக்கப்பட்டதற்கு  குளத்தூர் ஜமீன்தார் வழியில் வந்த தில்லைத் தாண்டவராயர் மற்றும் அமாவாசை சித்தர் ஆகியோரதான் காரணம் என்பது ஆன்மிக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத உண்மை சம்பவமாகும்.

இதைப்பற்றி விரிவாக பார்ப்போமா!

நெல்லை மாநகரில் மிகவும் அற்புதமான தெய்வக் காரியங்களை குளத்தூர் ஜமீன்தார் வழியில் வந்த தில்லைத் தாண்டவராயர்  என்பவர் திறம்படச் செய்து வந்துள்ளார்.

இவரால் நெல்லைக்கு அழைத்து வரப்பட்ட அமாவாசை சித்தர் என்பவரால்தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை சம்பவமாகும்.

குளத்தூர் ஜமீன்தார் வழி வந்த தில்லைத் தாண்டவராயர் என்பவர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண்மனை போன்ற வீட்டை கட்டி வசித்து வந்தவர்.

தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள்.

தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார்.மேலும் இவர் கார்காத்த வெள்ளாளர் குலத்தை சேர்ந்தவர்.

இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்கும் பழக்கமுடையவர்.

தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே என்பதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வாராம்

 அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள்.

இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்துள்ளார்

இவர் அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு முறை காசி சென்றபோது அங்கு அமாவாசை சித்தரை என்பவரை சந்தித்துள்ளார்..

நாகர்கோவிலைச் சேர்ந்த அமாவாசை சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு,பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர்.

தன் கால் போன போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார்.

இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது.

எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.

அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டு படுத்து கிடப்பாராம்.

இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம்.

இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது.

ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர்.

இவர் பகல் வேளையில் கடை தெருக்களில் சுற்றி வருவார்.

கடை வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார்.

அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார்.

மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான்.

எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ என காரணப்பெயர்.

ஒரு நாள் அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும்  நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

கண்ட ராம பாண்டியன் என்பவரால்  பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை முழுவதுமாக மனமுருக வேண்டி நின்றுள்ளனர்.

பின் பிரகாரம் சுற்றி வந்தபோது  நெல்லையப்பர் கோவில் வெளிபிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தததை கண்டு மனம் நொந்து போனார்கள்.

ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்துள்ளார்.

அவர் எப்போதும் ஆறுமுகநயினார் சன்னிதி நினைவாகவே இருந்துள்ளார்.

தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார்.

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது.

கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான்.

சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை.

இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும்.

எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது.

அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.

கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம்.

காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்களாம்.

அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்களாம்.

இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார்.

எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியை எப்படியாவது திறந்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்ற நினைவுகளுடன்  குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர் இருப்பதை கண்டவுடன், போகர் மாயாசித்தர் மற்றும்  வல்லநாட்டு சாது சிதம்பர சித்தர் ஆகியோரிடம்  ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்துள்ளார் அமாவாசை சித்தர்.

சிலரது சதியால் பூட்டப்பட்ட ஆறுமுக நயினார் சுவாமி சன்னிதியை திறப்பதற்கு எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள், அதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்ததால்  மாயாசித்தர் மற்றும்  வல்லநாட்டு சாது சிதம்பர சித்தர் ஆகிய சித்தர்களுடன், அமாவாசை சித்தர் ஆலோசித்துள்ளார்.

இதற்காக மூன்று சித்தர் பெருமக்களும்  கூடினர். போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஒரு ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர்.

இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எல்லாவிதமான தீய சக்திகளும் ஒழிந்து போகும்.

குறிப்பிட்ட நாளில் இந்த  ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.

தொடர்ந்து குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் அவர்கள் உதவியால் பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம்!மலையாள நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது.

ஆறுமுக நயினார் கோவில் சன்னிதி திறக்கப்பட்டது.

அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது.

பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரையிலும் இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

காலங்கள் கடந்தது.தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர்.

அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர்.

இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர்.

சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார்.

சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார். அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும்.

ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார்.

ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்துள்ளார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார்.

போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது.

உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது.

அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார்.

அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி.

அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார்.

அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.

அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.

சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு.

சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.

அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

போகர் மாயா சித்தர், மிகவும் விசேஷமானவர். இவரது காலடிப் படாத இடமே மகேந்திர கிரி மலையில் இல்லை எனக் கூறலாம்.

இந்த மலையில் சிவன் பாதம், தாயார் பாதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது.

மனிதர்கள் செல்ல முடியாத, தேவர்கள் மட்டுமே வாழும் தேவபூமியும் இங்குண்டு. அவ்விடங்களில் எல்லாம் அமர்ந்து போகர் மாயா சித்தர்.தியானம் செய்வாராம்.

மகேந்திரகிரி மலையில் தியானம் செய்வது சாதாரணமான விஷயம் அல்ல. அங்கு செல்ல வேண்டும் என்றால், 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதை மிகச் சுலபமாகக் கையாண்டுள்ளார் போகர் மாயா சித்தர்.

அதுபோலவே வல்லநாடு சித்தரும். தனது உடலை எட்டு துண்டாகப் பிரித்து நவக் கண்ட யோகம் செய்யக் கூடியவர்.

ஒரே நேரத்தில் பல இடத்தில் இருப்பவர். இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர்.

பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர்.

செண்பகாதேவி அருவி அருகே உள்ள கசாயக் குகையில் அமர்ந்து தவம் புரிந்தவர்.

ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது.

இவரை வள்ளலாரின் வழித்தோன்றல் எனவும் கூறுவர். இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.

நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம்.

இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது.

ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்குகிறது. மேலும் திருமணத் தடை அகன்று குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

முக்கிய குறிப்பு:நான் பிறந்து வளர்ந்தது,கல்வி கற்றது எல்லாமே திருநெல்வேலியில்தான்.

நானும் பெருமைக்குரிய கார்குலத்தில் பிறந்தவன்தான்.

பெருமைக்குரிய குளத்தூர் ஜமீன்தார்  தில்லைத்தாண்டவர் வழித்தோன்றலான திரு.இரத்தின சபாபதி பிள்ளை அவர்களின் மூத்த புதல்வருக்கு எனது பெரியப்பா மகளை திருமணம் செய்து கொடுத்த வகையில்  குளத்தூர் ஜமீன்தாருக்கு உறவினராவேன்.

எனது பால்ய காலத்தில்
நெல்லையப்பர் கோவிலில் உள்ள இந்த ஆறுமுக நயினார் சன்னிதிக்கு பலமுறை சென்ற வழிபட்டுள்ளேன்.
அப்போதெல்லாம் இந்த ஆறுமுக நயினார் சன்னதியில் இப்படி பட்ட அரிய நிகழ்வுகளை நடந்துள்ளதை அறிந்திலேன்.

அதுவும் பெருமைக்குரிய குளத்தூர் ஜமீன்தார் தில்லை தாண்டவராயர் பற்றியும் தெரியாமல்
இருந்துள்ளேன்.

பலமுறை கருப்பந்துறைக்கு சென்றிருந்தாலும் அமாவாசை சித்தர் பற்றியும் அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏதும் தெரியாதவனாக இருந்துள்ளேன்

இறைவனின் அருளாசியால் ஆன்மீக செய்திகள் தொடர்பாக இணைய தளத்தில் தற்செயலாக
மேற்கண்ட நிகழ்வுகளை படித்தவுடன்
இந்த அரிய நிகழ்வுகளை தொகுத்து பதிவிட்டுள்ளேன்.

இந்த பதிவினை படிக்கும் ஆன்மீக அன்பர்கள்,நெல்லையிலுள்ள எனது உறவினர்கள்,நண்பர்கள் ஒரு முறையாவது நெல்லையப்பர் கோவிலிலுள்ள ஆறுமுகநயினார் சன்னிதி,அமாவாசை சித்தர் சமாதி வல்லநாடு சித்தர் சமாதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்டுவர கேட்டு கொள்கிறேன்.

🙏
காமாட்சி அம்மன்,

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.
காஞ்சிபுரம்
சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும்.
( "பரிஷேசனம்” புஸ்தகத்திலிருந்து ஒரு பக்கம்)

பலர் பரிஷேசனம் செய்வதே இல்லை அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை (அல்லது தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது. அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் பரிஷேசனம் முடிந்துவிட்டது.

சாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். அன்னம் வைத்து நெய் விட்டதும் ப்ரணவம் வியாஹ்ருத்தியால் சாப்பாட்டை ஸ்வாகதம் செய்து காயத்ரி மந்திரத்தால் சுத்தப்படுத்தி ‘ஸத்யம் த்வா ருதேன ( ராத்திரியில் ’ருதம் த்வா ஸத்யேன’) என இலையை (அல்லது தட்டை) பரிஷேசனம் செய்ய வேண்டும்.

ஆபோசனம்:
பிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி ‘அம்ருதோபஸ்தரண மஸி’ என்று மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜலம் விட்டு பருக வேண்டும்.

ப்ராணாஹுதி:
தொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல், பவித்ர விரல்) கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி ’பிராணாய ஸ்வாஹா, அபாணாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதாணாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா, ப்ரஹ்மனே ஸ்வாஹா’ முதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். ப்ராணஹுதிக்கான அன்னத்தை பற்களால் மென்று சாப்பிடக்கூடாது. அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும்.

நமது உடலில் பிராணன், அபாணன், வியாணன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள் ஆகும். உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம் செய்யப்படுகிறது.

பிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து ‘ப்ரம்மனிம ஆத்மா அம்ருதத்வாய’ என்று பகவானை தியானம் செய்ய வேண்டும். அப்படி வலிவான இந்த ஜீவனை அழியாநிலை பெருவதற்காக பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே ‘ப்ரும்மணிம ஆத்மா’ என்ற மந்திரத்தின் அர்த்தம்.

உத்தராபோசனம்:
சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்ய வேண்டும். அதாவது வலது உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு ‘அம்ருதாபிதான மஸி’ என்று பருகி மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.

இதுதான் பரிஷேசனம் செய்ய பொதுவான விதி.

மேலும் இரண்டு அம்சங்கள் (options):

1. ஆபோசனத்திகு முன்பு செய்ய வேண்டியது:
உண்கலனின் வலது புறத்தில் பரிஷேசன ஜலத்திற்கு வெளியே “யமாய நம: சித்ரகுப்தாய நம: ஸர்வபூதேப்யோ நம:” (அல்லது ”அன்னபதயே நம: புவநபதயே நம: பூதாநாம்பதயே நம:”) என்று கூறி மூன்று சிறிய அன்னப்பிடியை வைத்து அதன்மேல் “யத்ரக்வசன ஸம்ஸ்த்தானாம் க்ஷுத் த்ருஷ்ணோ பஹதாத்மநாம், பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்” என்று கூறியப்படியே சிறிது ஜலம் விடுவர்.

இதன் பொருள் என்னவென்றால் “எங்கோ இருந்துகொண்டு பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கும் உயிரினம் அனைத்தின் திருப்திக்கு இந்த ஜலம் உதவட்டும்” என்பதே.

2. உத்தராபோசனத்திற்கு பின் செய்ய வேண்டியது:
சாப்பிட்டு முடிந்ததும் உத்தராபோசனம் செய்யும் நீறை வலது கையில் வாங்கி பருகுவோம் அல்லவா, அந்த ஜலத்தில் மீதி சிறிது ஜலத்தை வலது கையின் கட்டை விரலின் வழியாக உண்கலத்தின் வெளியே தறையில் விட வேண்டும். அது சமயம் மனதில் ப்ரார்த்தனை செய்ய வேண்டிய மந்திரம்: ”ரவுரவேபுண்யநிலையே, பத்மார்புத நிவாஸினாம், அர்சினாம் உதகம் தத்தம், அக்ஷயமுபதிஷ்டது”. நரகம் போன்ற இடங்களில் வசிக்கும் பித்ருக்கள் இந்த செயல் மூலம், இந்த தீர்த்தத்தினால், திருப்தியடைகின்றார்கள்.

பொதுவாக எல்லா மந்திரங்களும் பரிஷேசன சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 48 ॐ

மகுடாகமம் பற்றிய சில குறிப்புக்கள் வரலாறு. காமில் இருந்து!
நான் தேடியவரை எனக்கு அது பற்றிச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாறு காம் இல் இருந்து கிடைத்த வரை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம் திருவாரூர் முதலான சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாகப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது. இராஜராஜீசுவரம் கருவறையில் உள்ள ஆவுடையாருடனான லிங்கத்திருமேனி கருவறையின் வாயிலை விட அளவில் மிகப் பெரியதாகும். இத்திருமேனியை கருவறை கட்டிய பிறகு உள்ளே இருத்தியிருக்க முடியாது. அதனால் மூல மூர்த்தமான இத்திருமேனியை முதலில் பிரதிஷ்டை செய்து பிறகே அதைச் சுற்றி விமானம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மகுடாகம மரபாகும் எனும் பொருள் பட 'தட்சிண கயிலாய' உரை நிகழ்வு அமைந்துள்ளது. மகுடாகம மரபு ஒரு புறம் இருக்கட்டும் கருவறையிலுள்ள இலிங்கத்திருமேனி இப்போதுள்ள கருவறை நழைவாயில் வழி உள்ளே சென்றிருக்க முடியுமா முடியாதா என்பதைப் பார்ப்போம். இனி பரசிவமும் மகுடாகமும் தம்முடைய தஞ்சைப் பெரிய கோயில் என்னும் நூலின் 23ம் பக்கத்தில் திரு. பாலசுப்ரமணியன், மகுடாகமம் சிவலிங்க வழிபாட்டைக் கூறும் போது நவதத்துவம் எனறுரைக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் நடுவே தூணாகத் திகழும் பாணமானது மூன்று வகை அமைப்புகளுடன் திகழும். இது அடியில் நான்கு பட்டையாகவும் இடையில் எட்டுப் பட்டையாகவும் மேலாக வட்டமாகவும் இருக்கும். சதுரத் தூண் வடிவை பிரம்மனாகவும் எட்டுப்பட்டை வடிவை விஷ்ணுவாகவும் வட்டத்தூணை ருத்திரன் மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி எனப் பிரித்து உச்சிக்கு வரும் போது பரசிவம் எனப்பகுப்பர். பரசிவம் எனும் போது உருவமாகத் திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும். பிரமனில் வழிபாட்டைத் துவக்கி பரசிவ வணக்கம் கூறி பரவெளியான மலரஞ்சலியை முடிப்பர். இந்த நவதத்துவ வடிவமாகத் திகழும் சிவபெருமானை மணிவாசகர் நவந்தரு வேதமாகி வேதநாயகன் என்று கூறுகிறார் என்று முடிக்கிறார். மகுடாகமச் செய்தித் தொடர்பான மேற் கோள் குறிகள் சிவலிங்க எனும் இடத்தில் தொடங்குகின்றன. ஆனால் முடியுமிடம் நூலில் சுட்டப்படவில்லை. அதனால் சிவலிங்க எனத் தொடங்கும் மகுடாகமச் செய்தி இப்பத்தியில் எங்கு முடிகிறது என்பதை அறியக்கூடவில்லை. இந்தச் செய்திக்கு அடிக்குறிப்பும் இல்லை என்பதால் இது மகுடாகமத்தின் எந்தப் பிரிவில் எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய வாய்ப்பில்லை.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ