வெள்ளி, 4 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி :52 ॐ
           ஆதிரைச் சிறப்பு

இருபத்து ஏழு நட்சத்திரங்களிலே இரண்டே இரண்டு நட்சத்திரத்துக்கு மட்டுமே "திரு" என்ற அடை மொழி உண்டு. அது சிவனுக்கே உரிய "திரு"வாதிரை நட்சத்திரமும், விஷ்ணுவுக்கு உரிய "திரு"வோண நட்சத்திரமும் ஆகும். அதிலும் சிவபெருமானை "ஆதிரையான்" என்றே அழைப்பார்கள். ஆதிரை நட்சத்திரம் ஆனது வான சாஸ்திரத்திலும் சோதிடத்திலும் பேசப் படும் 6 வது நட்சத்திரம் ஆகும். தற்கால வான இயல் அறிவின்படி இதை ஓரியன் குழுவில் சொல்லப்படுகின்றது. இந்த ஓரியன் குழுவில் 5 நட்சத்திரங்கள் முக்கியமாய்ச் சொல்லப்படுகின்றது. அவற்றில் மிகுந்த ஒளியுள்ள நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமே ஆகும். வடகிழக்குத் திசையில் காணப்படும் இந்த நட்சத்திரம் எப்போதும் மற்ற நான்கு நட்சத்திரங்களுடனேயே காணப்படும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்தத் திருவாதிரை நட்சத்திரம் மாதா மாதம் வந்தாலும் மார்கழியில் வரும் திருவாதிரைக்குத் தனிச் சிறப்பு. ஆட வல்லான் தன் பிரபஞ்ச நாட்டியத்தை அன்றே ஆடியதாய்க் கூறுவார்கள். அதிலும் சிதம்பரத்தில் இதற்குத் தனியான மகிமை. சிதம்பரத்தில் முக்கியமான திருவிழா மார்கழித் திருவாதிரைத் திருவிழா என்றே சொல்லலாம். மற்ற நாட்களில் கோயிலுக்கு உள்ளே இருக்கும் நடராஜர் அன்று வீதியில் உலா வருவார். அதோடு அல்லாமல் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகங்களும் நடக்கும். இந்த ஆதிரைச் சிறப்பு நாள் விழாவாய்க் கொண்டாடப்பட்டதைப் பரிபாடல் என்னும் சங்கப் பாடலில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து,
மா ஆருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க,
புரி நூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப,
‘வெம்பாதாக, வியல் நில வரைப்பு!‘ என 80

அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்,
முனித் துறை முதல்வியர் முறைமை காட்ட,
பனிப் புலர்பு ஆடி, பரு மணல் அருவியின்
ஊதை ஊர்தர, உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின், 85

ஆதிரை நன்னாள் மட்டுமின்றி அம்பா ஆடல் என்னும் பாவை நோன்பினையும் சிறப்பித்துக் கூறுகின்றது மேற்கண்ட பாடல். ஆதிரை நாளில் நடராஜர் சிவகாமி பிள்ளையார் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் தான் வீதி உலாச் செல்வார்கள். வானில் தென்படும் அந்த ஐந்து நட்சத்திரக் கூட்டமும் மேற்கண்டவாறே சொல்லப்படுகின்றது. மிக ஒளியுடன் திகழும் திருவாதிரை நட்சத்திரத்தை "ஆடவல்லான்" என்றே சொல்கின்றனர் ஆன்மீகப் பெருமக்கள். மார்கழி மாதம் 11 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் 9-ம் நாள் அன்று காலையில் நடைபெறும் தேர் ஓட்டத்துக்குப் பின் மாலையில் ஆயிரக் கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜருக்கு நள்ளிரவிலிருந்து அதிகாலை வரையில் இந்தத் திருவாதிரை அபிஷேகம் நடக்கின்றது. அதன் பின்னர் ஆடலரசன் தரும் காட்சியே "ஆருத்ரா தரிசனம்" என்று சொல்லப்படுகின்றது. இந்தச் சமயம் ஈசானமூலையில் ஆருத்ரா நட்சத்திரம் எப்போதும் இல்லா வகையில் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்றும் சொல்லப் படுகின்றது. ஆங்கிலக் கணக்கின்படி டிசம்பர் 15-தேதிக்குப் பின்னர் ஜனவரி 15 தேதிக்குள் வரும் ஒரு நாள் தான் திருவாதிரை நாள் ஆகின்றது. முழு நிலவு ஒளி ஊட்டும் பெளர்ணமி தினத்தன்று சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கும்போது இந்த உற்சவம் அதிகாலையில் நடைபெறுகிறது. அந்த நேரம் வானில் தென்படும் திருவாதிரை நட்சத்திரத்தின் அதீத பிரகாசத்தை உணர்ந்தவர்கள் ஈசனின் திருக்கூத்து அப்போது நடைபெறுவதாயே உணர்கின்றனர். இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் சேந்தனார் அளித்த களிக்காகவே அன்று களி நைவேத்தியம் செய்யப்படுவது பற்றியும் அடுத்துப் பார்ப்போம். கிழே காணப்படும் ககன கந்தர்வ கனக விமானம். மேலும் இந்தத் திருவாதிரைத் திருநாள் பற்றியும் இது உலகளவிலும் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் இங்கே காணலாம்.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: