செவ்வாய், 1 அக்டோபர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 48 ॐ

மகுடாகமம் பற்றிய சில குறிப்புக்கள் வரலாறு. காமில் இருந்து!
நான் தேடியவரை எனக்கு அது பற்றிச் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. வரலாறு காம் இல் இருந்து கிடைத்த வரை எடுத்துக் கொடுத்திருக்கிறேன்.

காமிகாகமத்தைப் போலவே மகுடாகமம் சிவபெருமான் நடனப் பிரதான விசேடமுள்ள சிதம்பரம் திருவாரூர் முதலான சிவாலயங்களில் கிரியாப் பிரமாணமாக அநுசரிக்கப்பட்டு வருவதாகப் பதிப்பாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் வழி இப்போது கிடைத்துள்ள மகுடாகமத்திற்கும் தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்தின் கட்டமைப்பிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வெள்ளிடை மலையாகிவிட்டது. இராஜராஜீசுவரம் கருவறையில் உள்ள ஆவுடையாருடனான லிங்கத்திருமேனி கருவறையின் வாயிலை விட அளவில் மிகப் பெரியதாகும். இத்திருமேனியை கருவறை கட்டிய பிறகு உள்ளே இருத்தியிருக்க முடியாது. அதனால் மூல மூர்த்தமான இத்திருமேனியை முதலில் பிரதிஷ்டை செய்து பிறகே அதைச் சுற்றி விமானம் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது மகுடாகம மரபாகும் எனும் பொருள் பட 'தட்சிண கயிலாய' உரை நிகழ்வு அமைந்துள்ளது. மகுடாகம மரபு ஒரு புறம் இருக்கட்டும் கருவறையிலுள்ள இலிங்கத்திருமேனி இப்போதுள்ள கருவறை நழைவாயில் வழி உள்ளே சென்றிருக்க முடியுமா முடியாதா என்பதைப் பார்ப்போம். இனி பரசிவமும் மகுடாகமும் தம்முடைய தஞ்சைப் பெரிய கோயில் என்னும் நூலின் 23ம் பக்கத்தில் திரு. பாலசுப்ரமணியன், மகுடாகமம் சிவலிங்க வழிபாட்டைக் கூறும் போது நவதத்துவம் எனறுரைக்கிறது. சிவலிங்கத் திருமேனியின் நடுவே தூணாகத் திகழும் பாணமானது மூன்று வகை அமைப்புகளுடன் திகழும். இது அடியில் நான்கு பட்டையாகவும் இடையில் எட்டுப் பட்டையாகவும் மேலாக வட்டமாகவும் இருக்கும். சதுரத் தூண் வடிவை பிரம்மனாகவும் எட்டுப்பட்டை வடிவை விஷ்ணுவாகவும் வட்டத்தூணை ருத்திரன் மகேசன், சதாசிவன், பரபிந்து, பரநாதம், பராசக்தி எனப் பிரித்து உச்சிக்கு வரும் போது பரசிவம் எனப்பகுப்பர். பரசிவம் எனும் போது உருவமாகத் திகழும் இலிங்கம் மறைந்து பரவெளியான பிரபஞ்சமே சிவமாகத் திகழும். பிரமனில் வழிபாட்டைத் துவக்கி பரசிவ வணக்கம் கூறி பரவெளியான மலரஞ்சலியை முடிப்பர். இந்த நவதத்துவ வடிவமாகத் திகழும் சிவபெருமானை மணிவாசகர் நவந்தரு வேதமாகி வேதநாயகன் என்று கூறுகிறார் என்று முடிக்கிறார். மகுடாகமச் செய்தித் தொடர்பான மேற் கோள் குறிகள் சிவலிங்க எனும் இடத்தில் தொடங்குகின்றன. ஆனால் முடியுமிடம் நூலில் சுட்டப்படவில்லை. அதனால் சிவலிங்க எனத் தொடங்கும் மகுடாகமச் செய்தி இப்பத்தியில் எங்கு முடிகிறது என்பதை அறியக்கூடவில்லை. இந்தச் செய்திக்கு அடிக்குறிப்பும் இல்லை என்பதால் இது மகுடாகமத்தின் எந்தப் பிரிவில் எந்தப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதையும் அறிய வாய்ப்பில்லை.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ

கருத்துகள் இல்லை: