2. இந்த ஊரில் உள்ள, ஆத்மநாத சுவாமி கோவிலில் மூலவர் சிவலிங்கத்தின் ஆவுடையார் எனப்படும் பீடம் மட்டும் இடம் பெற்றிருப்பதால், இந்த கோவிலும், கோவில் அமைந்துள்ள ஊரும், ஆவுடையார் கோவில் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.
3. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது. சைவ, சமய குரவர் நால்வருள் நான்காமவரான மாணிக்கவாசக பெருமானின் வாழ்வில், பல அற்புதங்களை நிகழ்த்தியவர், இந்த 'திருப்பெருந்துறை உறை சிவபெருமான்' தான்.
4. அம்பாள் ஸ்ரீ யோகாம்பாளும் விக்கிரகத் திருமேனியாக இல்லை. அவளது திருவடிகளை மட்டுமே தரிசிக்க முடியும். தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும்
5. முதல் கால பூஜையில் சுத்த அன்னம் (வெறும் சாதம்), 2-ம் கால பூஜையின் போது, சர்க்கரைப் பொங்கல், 3-ம் கால பூஜையில் தேன்குழல் பாயசம், அதிரசம், பிட்டு, தோசை, 4-ம் கால பூஜையில் சுத்த அன்னம், வடை, கீரை, 5-ம் கால பூஜையின் போது, சுத்தம் அன்னம் மட்டுமே, 6-ம் கால அர்த்தசாம பூஜையின் போது, புழுங்கல் அரிசி சாதம் வடிக்காமல், புளியோதரை, பாகற்காய் என நைவேத்தியம், சூடு பறக்கும் உணவின் ஆவி சுவாமிக்கு பிரசாதமாகும். இந்த பிரசாதங்களை சாப்பிட, பித்ருக்கள் எனப்படும் முன்னோரின் சாபங்கள் நீங்கப் பெறுவதுடன், அவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
6. ஆனித் திருமஞ்சனம் விழா 10 நாட்கள் நடக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல் பக்தர்கள் கூடுவர்.
7. மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட மிகச் சிறப்புவாய்ந்த சிவதலம் இது.இக்கோயிலின் மண்டபங்களில் முறுக்கு கம்பிகளால் வேயப்பட்டது போல கொடுங்கைகள் (தாழ்வாரம்) அமைக்கப்பட்டுள்ளது
8. புதிதாக ஒரு கோபுரமோ, மண்டபமோ அமைப்பது என்றால், தங்கள் திறமைக்கு சவாலாக இருக்கிற பணிகளை, செய்வதற்கு ஸ்தபதிகள் ஆயத்தமாகவே இருப்பர். ஆனால், கட்டட கலையின் உச்சக்கட்ட சாதனையாக அமைந்த படைப்புகள் என்று, சிலவற்றைக் குறிப்பிட்டு, அவற்றுக்கு இணையாக மட்டும், தங்களால் சாதனை படைக்க இயலாது என்று, எழுதிக் கொடுத்து விடுவர். ஆவுடையார் கோவிலின் 'கொடுங்கை!' இக்கோவிலில் சிறப்பு பெற்று இருப்பதால் ஆவுடையார் கோவில் கொடுங்கை நீங்கலாக, பிற பணிகளை செய்ய ஆயத்தமாக இருக்கிறோம்' என, புதிய பணிகளை துவங்குவதற்கு முன், இங்கு வேலைக்கு வரும் ஸ்தபதிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.
9. பஞ்சாட்சர மண்டபத்தின் உத்தர கல்லில், சுற்றிலும், நான்கு திசைகளிலும், தொடர்ச்சியாக கட்டளை கலித்துறைப் பாக்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவற்றில், 'இந்த அற்புதமான மண்டப திருப்பணி, மனித முயற்சியால் கைகூடவில்லை. யோகநாயகி (ஆவுடையார் கோவில் இறைவி), கோபுரவேலவன் (பழைய கோபுரத்தில் இடம் பெற்றுள்ள முருகக் கடவுள்), விநாயகர், மாணிக்கவாசகர் ஆகியோரே செய்வித்தனர்' என, பொருள்படும் கவித்துவமான வரிகள் உள்ளன. தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை கட்டுவித்த, பராக்கிரம பாண்டியன், அந்த பணி தன் செயல் அல்ல என, ஒரு பாடலில் கூறுவதை இதனோடு ஒப்பிடலாம்.
10. பஞ்சாட்சர மண்டபத்தில் பொறிக்கப்பட்டு உள்ள, மற்றொரு பாடலில், விசைய (விஜய) ஆண்டு, துலா மாதத்தில், இந்த மண்டப திருப்பணியை துவங்கி, பிலவ ஆண்டு பங்குனி மாதத்தில், யோகநாயகி காரிகை இந்த பணியை முடித்தாள் என்று, கூறப்பட்டு உள்ளது. மேலும், 'சுவரோவியங்களை வரைந்து, பாக்கல் (பாவுகல்) எல்லாம் அமைத்தவன் விநாயகனே' என்று, மற்றொரு பாடலில் கூறப்பட்டு உள்ளது.
11. ஆத்மநாதர் கோயில் சிற்பக்கலைக்கு சான்றாக சிறப்புற கட்டப்பட்டுள்ளது. இங்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள தில்லை மண்டபத்தில் அர்ஜுனனுக்கு பாசுபதம் கொடுத்த சிவன், அம்பாள் சிற்பமும், புலையன், புலத்தி வேடத்தில் வந்த சிற்பமும் உள்ளது.
12. இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.
13. ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவம் இல்லாமை), அருவுருவம் (லிங்க வடிவம்) ஆகிய மூன்று வடிவங்களில் அருளும் சிவன் இத்தலத்தில் மூலஸ்தானத்தில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (ஸ்தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்.
14. இங்கு ஒரு விசேஷம் என்னவென்றால் குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம் நடக்கிறது
15. மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது. அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு "ஆத்மநாதர்' என்று பெயர் ஏற்பட்டது
16. ஆறு கால பூஜையின் போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த தைல அபிஷேகம் நடப்பது விசேஷம்.
17. கோயில்களில் தீபாராதனை செய்யும் போது, பக்தர்கள் அதை கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். ஆனால், ஆவுடையார் கோயில் மூலவருக்கு, தீபாராதனை செய்யும் தட்டை வெளியில் கொண்டு வருவதில்லை.
18. இங்கு சிவனே ஜோதி வடிவமாக இருக்கிறார். அவரை வணங்குவதே தீபத்தை வணங்கியதற்கு ஒப்பானது தான். எனவே, தீபாராதனையை கண்ணில் ஒற்றிக் கொள்ள வெளியில் கொண்டு வருவதில்லை.
19. ஆவுடையார்கோயில் மூலஸ்தானத்தில் சிவனுக்கு பின்புறத்தில் வெள்ளை, சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களில் மூன்று தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. வெள்ளை நிறம் சூரியன், சிவப்பு அக்னி, பச்சை நிறம் சந்திரனாக கருதப்படுகின்றன.
20. சுவாமிக்கு இங்கு சிலை இல்லை என்பதால், அவரது மூன்று கண்களை குறிக்கும் விதமாக இந்த தீபங்களை ஏற்றியுள்ளனர்.
21. பஞ்சாட்சர மண்டபத்தில் உள்ள சிவனை குதிரைச்சாமி என்று அழைக்கிறார்கள்.
22. மாணிக்கவாசகருக்காக, சிவன், குதிரைகளுடன் மதுரைக்கு சென்று அரிமர்த்தன பாண்டிய மன்னனிடம் ஒப்படைத்தார். குதிரை மீது சென்ற சிவன், இக்கோயிலில் பஞ்சாட்சர மண்டபத்தில் இருக்கிறார். இவரை, "குதிரைச்சாமி' என்று அழைக்கிறார்கள்.
23. குதிரைக்குகீழே நரிகளும் உள்ளன. இவருக்கு "அசுவநாதர்' என்றும் பெயர் உண்டு.
24. ஆத்மநாதர் கோயிலில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தத்துவத்தை குறிக்கின்றன. சிவனை சுற்றி திருவாசியில் உள்ள 27 தீபங்கள் நட்சத்திரங்களையும், அருகிலுள்ள 2 தீபங்கள் ஜீவாத்மா, பரமாத்மாவையும் குறிக்கின்றன
25. சன்னதியிலிருந்து வெளியே வரும் அடுத்தடுத்த வாசல் நிலைகளில் பஞ்சகலைகளை குறிக்க 5 தீபம், 36 தத்துவங்கள், 51 அட்சரங்கள், 11 மந்திரங்கள், 224 உலகங்கள் இவற்றை குறிக்கும் விதமாக அந்தந்த எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.
26. இத்தலத்தில் குருவாக இருந்து மாணவர்களுக்கு உபதேசம் செய்தபோது, சீடர்கள் அவருக்கு படைத்த உணவை ஏற்றுக்கொண்டார். அவரிடம் பயின்றவர்கள் வீட்டிலிருந்து புழுங்கல் அரிசி சாதம், கீரை, பாகற்காய் என எளிய பொருட்களை அவருக்கு கொடுத்தனர். அதனை சிவனும் விரும்பி வாங்கி சாப்பிட்டார். இதன் அடிப்படையில், ஆத்மநாதருக்கு புழுங்கல் அரிசி சாதம்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
27. அடுப்பில் இருந்து இறக்கப்பட்ட சாதத்தை அப்படியே சுவாமி சன்னதிக்கு கொண்டு சென்று, படைக்கல்லில் ஆவி பறக்க கொட்டி விடுகின்றனர். அப்போது சன்னதி கதவுகள் சாத்தப்பட்டு, சிறிதுநேரம் கழித்து திறக்கப்படும். சுவாமி அரூப வடிவானவர் என்பதால், அரூபமாகி விடும் ஆவியுடன் நைவேத்யம் படைக்கப்படுகிறது.
28. தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத் தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள். எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.
29. இந்த பாதத்தை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.
30. சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார் கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது. ஆதியந்தம் அல்லாத அருவ வடிவ சிவனுக்கு சிவபூஜை எந்த காரணத்தாலும், தடைபடக்கூடாது என்பதற்காக பூஜை நடக்கிறது.
31. குரு இருக்குமிடத்தில் சிஷ்யர்கள், மரியாதை கொடுப்பதற்காக அவர்முன்பு அமராமல் நின்று கொண்டிருப்பார்கள். இக்கோயிலில் ஆத்மநாதருக்கு மரியாதை செய்யும் விதத்தில், மாணிக்கவாசகர், சொக்க விநாயகர், முருகன், வீரபத்திரர் ஆகியோர் நின்ற கோலத்திலேயே இருக்கின்றனர்.
32. ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப் பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.
33. முக்தியை அடைவதற்கான பிரதான மூன்று நிலைகளான சச்சிதானந்த நிலை அமைப்பில் இக்கோயில் உள்ளது. "சத்' அம்சமாக கோயில் மகா மண்டபமும், "சித்' அம்சமாக அர்த்தமண்டபமும், "ஆனந்த' மயமாக கருவறையும் இருப்பது விசேஷம்.