வெள்ளி, 26 ஜூன், 2015

லிங்கம் மிகச்சிறியது என்பதால் அடையாளம் காட்ட அதன் மீது ஒரு குவளை கவிழ்த்தப்பட்டிருக்கிறது.இந்த குவளைக்கே அபிஷேகம் நடக்கும்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியை கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலமாக இது கருதப்படுகிறது. அவர் உருவாக்கிய குளம் "பரசுராம தீர்த்தம்' எனப்படுகிறது.சில சிவன் கோயில்களில் மூலவர் சன்னதியின் நுழைவு வாயிலின் மேற்பகுதியில்,கஜலட்சுமி சிற்பம் அமைத்திருப்பார்கள்.ஆனால் இத்தலத்தில் பரசுராமர் சயனத்தில் இருப்பதைக் காணலாம். விநாயகர் நடனம் ஆடும் கோலமும் சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலையும் வித்தியாசமானவை. பங்குனி 18ல், சூரியன் தன் கதிர்களால் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறான். திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் பெற்ற தலம். வள்ளலார் விண்ணப்பக்கவி வெண்பாவில்,"நற்கருணை வாய்க்கும் பழுவூர் மரகதமே' என்று சிவனையும், அருணகிரி நாதர் திருப்புகழில் இத்தல முருகனையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

{முதலாம் பராந்தக சோழன் காலத்தில் இங்கு திருப்பணி நடந்துள்ளது.}

"பழு' என்றால் ஆலமரம்.எனவே சுவாமி "ஆலந்துறையார்' எனப்படுகிறார்.

தல வரலாறு:கயிலாயத்தில் அன்னை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்ணை பொத்தியதால், சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரிய, சந்திரரின் ஒளி இல்லாமல் போனது. இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும் தேவர்களும் கலங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், ""விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே ஆகும். இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல். அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கியிரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்,'' என்றார்.அதன்படி பார்வதி தவத்தை முடித்து விட்டு, யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து, ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாள். இறைவனும் அவளுடன் இணைந்தார். அந்த யோகவனமே இன்றைய பழுவூராகும். தவம் செய்த அம்பிகை என்பதால் அம்பாள் "அருந்தவநாயகி' எனப்படுகிறாள்.


கருத்துகள் இல்லை: