வெள்ளி, 26 ஜூன், 2015

ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரம் கால் மண்டபம் {காஞ்சிபுரம்}
பஞ்சபூத தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் ஆகும். இக்கோயிலில் 3-ஆம் பிரகாரத்தில் பல்லவ ராஜகோபுரம் அமைந்துள்ளது. 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் அக்கோபுரம் தான் கோயிலின் பிரதான வாயிலாக இருந்துள்ளது.அக்கோபுரத்துக்கு அருகே பல்லவ மண்டபம் இருந்துள்ளது. இது 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சிதிலமடைந்து அழிந்துள்ளது.பல்லவர் மண்டபம் இருந்ததற்குச் சான்றாக 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் கல்வெட்டுடன் கூடிய தூண் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இத்தூண் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ளது.
கடந்த 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்தில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் பல்லவ ராஜகோபுரம் அருகே ஆயிரம் கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆயிரம் கால் மண்டபம் :ஆயிரம் கால் மண்டபத்துக்குள் 2 மேடைகளும், மண்டபத்துக்கு மேலே ஒரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் போது ஸ்ரீ ஏலவார்குழலியை(காமாட்சியம்மன்) கன்னிகாதானம் செய்து வைப்பதற்காக வரும் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்காக ஒரு மேடையும், ஸ்ரீ ஏகாம்பரநாதருக்காக ஒரு மேடையும் என அமைக்கப்பட்டுள்ளது.திருக்கல்யாணம் நடைபெறுவதற்காக ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேலே ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடைக்குச் செல்ல வசதியாக சுட்ட செங்கற்களால் படிக்கட்டுகளும் கட்டப்பட்டுள்ளது.மண்டபத்துக்குள் விகடசக்கர விநாயகர் மற்றும் சண்முகர் சன்னதி அமைந்துள்ளது. இந்த ஆயிரம் கால் மண்டபம் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றளவும் விளங்குகிறது.
16-ஆம் நூற்றாண்டு தொடங்கி கடந்த 1988-ஆம் ஆண்டு வரை ஏகாம்பரநாதர்- ஏலவார்குழலி திருக்கல்யாணம் ஆயிரம் கால் மண்டபத்தில் நடந்து வந்துள்ளது. கடந்த 1988-ல் திருக்கல்யாண மேடையின் தூண்கள் சரிந்ததாலும், மேலே செல்லும் படிக்கட்டுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தாலும், திருக்கல்யாண வைபவத்தை மேலே நடத்த பொதுப்பணித்துறை அனுமதிக்கவில்லை.இந்நிலையில் நாட்டில் உள்ள பழம்பெருமை வாய்ந்த கோயில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க மத்திய அரசின் நிதிக்குழு நிதி ஒதுக்கியது. அந்த வகையில் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டது.ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள அனைத்து தூண்களும் ரசாயனக் கலவை மூலம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டன. மேலும் மண்டபத்தில் உள்ள விகடசக்கர விநாயகர், சண்முகர் சன்னதி கோபுரங்களும் புதுப்பிக்கப்பட்டன.திறந்த வெளியாக இருந்த ஆயிரம் கால் மண்டபத்துக்குப் பாதுகாப்பு கருதி சுற்றிலும் கிரில் கேட்டுகள் அமைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மேல் மேடைக்கு செல்லும் படிக்கட்டுகளும் புதுப்பிக்கப்பட்டன.
திருக்கல்யாணம்:புதுப்பிக்கப்பட்ட பின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் அன்று இரவு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை ஆயிரம்கால் மண்டபத்துக்கு மேலே உள்ள மேடையில் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.திருக்கல்யாணத்தின் போது ஆயிரம் முதல் 2 ஆயிரம் பக்தர்கள் வரை ஆயிரம் கால் மண்டபத்துக்கு மேல் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை பொதுப்பணித்துறை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .





கருத்துகள் இல்லை: