ஸ்ரீ காஞ்சி காமகோடி குரு பரம்பரா....
47. ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - நான்கு....
நாற்பத்தி ஏழாவது ஆச்சார்யர் [கி.பி. 1098 - 1166]
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் - நான்கு, குந்தியாற்றங் கரையிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் ''சுகதேவர்''. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ‘'ஸ்ரீகண்டர்'’.
இவர் காலத்தில் சாளுக்கிய நாட்டை ஆண்ட [1143 - 1172] "வித்யாலோல குமாரபாலன்" என்பவர் ஆண்டு வந்தார். அவரது சபையில் ''ஹேமா சார்யன்'' என்ற புலவர் இருந்தார். அவர் மன்னனைத் துதி பாடி, ''குமாரபால சரித்திரம்'' என்ற நூல் ஒன்றை எழுதி இருந்தார்.
ஜைன மதத்தைச் சேர்ந்த அவர். பலரை வாதில் வென்றவர். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திரரின் விஜய யாத்திரையின் போது அவரையும் தர்க்கத்துக்கு அழைத்தார். கடுமையான வாதத்தின் முடிவில் ''ஹேமா சார்யன்'' அவர்கள் தோற்று விட்டார்.
அந்த நிகழ்ச்சியை "ஜயதேவர்" தமது ''பக்தி கல்பலதிகா'' என்னும் நூலில் "ஸ்ரீ ஆச்சார்யாளின் சொல் மழையால் "ஹேமாசார்யர்" என்னும் காட்டு தீ அணைந்தது” என்ற அருமையான வரிகளால் நயம் பட எழுதியிருக்கிறார்.
ஸ்ரீ சந்திர சேகரேந்திரரை காஷ்மீர மன்னன் "ஜயசிம்ஹன்", கி.பி. 1128 ஆம் ஆண்டு வணங்கி வரவேற்றிருக்கிறார்.
''ஸ்ரீகண்ட சரித்திரம்'’ என்ற நூலினை எழுதிய ''மங்ஹர்'' என்பவரும், ''ப்ரபோத சந்த்ரோதயம்'’ என்ற புத்தகத்தை இயற்றிய [கீர்த்திவர்மன் கி.பி.1050 - 1100 சபையை அலங்கரித்த] "கிருஷ்ணமிச்ரரும்", "வைத்யாபிதான சிந்தாமணி'' என்னும் மருத்துவ அகராதியைத் தொகுத்த மருத்துவ அறிஞரான "ஸுஹலன்" என்பவரும், இது போல பல புலவர்களும் இவரைக் கொண்டாடி உள்ளறனர்.
தெலுங்கு சோழ மன்னனாகிய "ஸ்ரீ விஜய கண்ட கோபாலன்" கி.பி. 1111 ஜூலை 17 ஆம் தேதி “ஸ்ரீ காமகோடி பீடத்துக்கு ''கீழம்பி'' எனப்படும் ''அம்பிகாபுரம்'' கிராமத்தை ஆத்மானந்தத்தில் திளைக்கும் ஞானியான [ஸ்வாத்மா ராமாய விதுஷே] ஸ்ரீ சங்கராச் சார்யரிடம் ஒப்படைக்கிறேன்" என்று செப்புப்பட்டயம் எழுதித் தந்திருக்கிறார். அத்தகைய அருளாட்சி நடத்தியவர் இந்த மஹான்.
இவர் கி.பி.1166 ஆம் ஆண்டு, பார்த்திப வருடம், சித்திரை மாதம், அமாவாசை திதி அன்று அருணாசல க்ஷேத்திரத்துக்கு அருகே சித்தி அடைந்தார்.
இவர் 68 ஆண்டுகள் பீடத்தை அலங்கரித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக