புதன், 10 பிப்ரவரி, 2021

நரகத்திற்கு செல்ல எளிய வழி

நரகத்திற்கு செல்ல எளிய வழி!!
 

நரகத்திற்கு செல்ல யாருக்குதான் ஆசை இருக்கும்?? ஆனாலும் என்னை போல யாராவது நரகத்திற்கு செல்ல ஆசைப்பட்டால் அதற்கு ஒரு எளிய வழியை திருமுறை பாடல் ஒன்று காட்டுகின்றது!!

திருமுறைகளில் உலக வாழ்க்கை பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கின்றது, அதேசமயம் சிவலோகத்திற்கு செல்லவும் திருமுறைகள் வழிகட்டுகின்றன ஆனால் இதில், "நரகத்திற்கு செல்லவும் வழி காட்டப்படுவது ஆச்சர்யமாக இருக்கின்றது அல்லவா??" இதுநிற்க, இந்த நரக வழியை காட்டும் திருமுறை ஆசிரியரோ ஒரு அரசர், அவருக்கு ஒரு திறமை உண்டு அவரது முன்பு நின்று யார் எதனை நினைத்தாலும் அவருக்கு எதிர் நிற்பவர்  என்ன நினைக்கின்றார் என்று அவருக்கு தெரிந்து விடும்!! அதனால் தான் அவரை கழறிற்று அறிவார் நாயனார் என்பார்கள். இவருக்கு இந்த ஆற்றலை திருவஞ்சைக்களத்து மகாதேவர் அருளியதாக சேக்கிழார் பெருமான், யாவும் யாருங் கழறினவும் அறியும் உணர்வும்" என்று பாடுகின்றார்கள்!!

ஆக இந்நாயனாருக்கு உயிர்கள் யாவும் மனதில் நினைப்பது எதுவானாரும் அதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் மனிதர்கள் பலரின் மனதில் உள்ள விசித்திர ஆசைகளும் தெரிந்திருக்கும்தானே!?

இதன்படி யாரோ ஒரு விசித்திர நபருக்கு "நரகத்திற்கு செல்ல வேண்டும், அந்த சூழல் எப்படி இருக்கும் என்ற சிந்தனை எழுந்திருப்பதனை இந்நாயனார் கண்டறிந்து இருக்க கூடும்!!",

ஏன் நமக்கே கூடத்தான் அந்த "எண்ணெய் கொப்பரை எப்படி இருக்கும்?? என்று பாத்திடனும்" என்ற ஆசை அடிமனதில் இருக்கும்!! கொடிய இடம் என்றாலும் அங்கு போய் ஒருமுறை பார்த்துவிட விரும்புவதானே மனித மனத்தின் விசித்திரங்களுள் ஒன்று??

இப்படி பட்ட விந்தை உளவியல்களுக்கு விடைதர நினைந்த எம்பிரான் "சேரமான் பெருமாள் என்னும் கழறிற்று அறிவார் நாயனார் தாம் பாடிய பொன்வண்ணத்து அந்தாதி என்னும் நூலில் நரகத்திற்கு செல்லும் வழியினையும் காட்டுகின்றார்"

பதினோறாம் திருமுறையில் உள்ள இந்த பொன்வண்ணத்து அந்தாதியின் பதினான்காம் பாடல் இப்படி அமைந்திருக்கிறது,

"உலகு ஆளுறுவீர் தொழுமின்; விண்ணாள்வீர் பணிமின்; நித்தம் பலகாமுறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றல் உற்றீர்
நல கா மலரால் அருச்சிமின்; நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே"

 என்பது அந்த பாடல் அஃதாவது மனித மனங்களில் எழும் விசித்திரமான பல ஆசைகளை தாமாகவே அறிந்த நாயனார் ஒவ்வொருவராக அழைத்து தீர்வு கூறுகிறார் அதில் நிறைவாக "நரகத்திற்கு செல்ல விருப்ப பட்டவர்களையும் அழைத்து கூறுகிறார்", அதனை காணும் முன்னம் மனிதர்களின் மற்றைய ஆசைகளையும் அதற்கான தீர்வுகளையும் கண்டுவிடுவோம்

நாயனார் அழைக்கிறார்:

உலகத்தை ஆளும் விருப்பத்தை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவபெருமானை தொழுங்கள் (உலகு ஆளுறுவீர் தொழுமின்), என்றார். அடுத்து,

வான உலகங்களை இந்திர பதவி முதலானவை மூலம் ஆள விரும்புபவர்களே!! நீங்கள் சிவபெருமானை பணிமின்கள் (விண்ணாள்வீர் பணிமின்) என்றார். அடுத்து,

தினமும் உலகியலில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, மக்களாசை முதலிய பல ஆசைகளை கொண்டவர்களே!! நீங்கள் சிவபெருமானை நினைத்து போற்றுங்கள் அத்தனை ஆசைகளும் உங்களுக்கு நிறைவேறும் (நித்தம் பல காமுறுவீர் நினைமின்) என்றார். அடுத்து,

"முக்தி இன்பமாகிய வீடு பேறும் சிவபெருமானொடு கூடிய வாழ்வும் வேண்டும் பிறப்பினை வெறுக்கும் அடியார்களே!! நீங்கள் நல்ல பூங்காவில் விளைந்த புது மலர்களால் இறைவனை தினமும் அருச்சனை செய்யுங்கள் (பரமனொடு ஒன்றல் உற்றீர் நல கா(பூங்கா) மலரால் அருச்சுமின்) என்றார்". அடுத்து, என்னை போன்ற விசித்திர உளவியல் உடைய "நரகத்தையும் பாத்திடுறது என்ற ஆசை உடையவர்களுக்கு தீர்வு சொல்ல அழைக்கிறார்" நாயனார்,

"நாளும் நரகத்தில் நின்று அல்லல் படும் ஆசையை உடையவர்களே!! நீங்கள் தினமும் சிவனடியார்களை துன்புறுத்துங்கள், (நாள் நரகத்து நிற்கும் அல காமுறுவீர் அரன் அடியாரை அலைமின்களே!!) என்றார்" நாயனார்,

"அஃதாவது உங்களுக்கு நரகத்துக்கு செல்ல விருப்பமாக இருக்கிறதா!? அதற்காக  ரொம்ப சிரமப் படாதீர்கள் யாராவது "திருநீறு பூசி", "உத்ராக்கம் போட்டுகொண்டு" "சிவநாமம்" பேசும் அடியார்கள் உங்களை ஏதேனும் தேவை கருதி தேடிவந்தால் இன்று, நாளை என்று அவர்களை அலைக்கழியுங்கள், கஷ்டப் படுத்துங்கள், அவர்களுக்கு பசிக்கு உணவளிக்காதீர்கள், உங்கள் வீட்டிற்கோ வாசலுக்கோ வந்தால் கதவை சாத்திக் கொண்டு வீட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடிவிடுங்கள், மறந்தும் சிவனடியார்களை வணங்கி விடாதீர்கள், இதில் எதாவது ஒன்றை செய்தால் கூட போதும் நரகத்திற்கு நேரடியாக சென்றுவிடலாம்" என்று எளிய வழியை காட்டுகின்றார்  நாயனார்

இந்த வழியை பின்பற்றி  நரகத்திற்கு சென்றால் போதும் அதன் பிறகு, அங்கு நடக்கும் எண்ணெய் சட்டி பொரியல், வறுவல், சாட்டையடி, உலக்கையடி, கும்பிபாகம், கிருமிபோஜனம் முதலிய கவனிப்புகளை எமனும் அவரது பணியாட்களும் பார்த்து கொள்வர்கள்!! என்று நயமாக கூறுகிறார் எம்பிரான் சேரமான் பெருமாள் நாயனார்

அஃதாவது தமிழில் முரண்தொடை  என்றொரு இலக்கிய நயம் உண்டு, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் முரணாக திரித்து கூறுவது என்று அதற்கு பொருள்,

அதன்படி சிவனடியாரை துன்புறுத்தினால் நரகம் உறுதி என்பதனை முரணாக அழகாக இப்பாடலில் தொகுத்து அளித்து உள்ளார் நாயனார் என்பது அறிந்து இன்புறத் தக்க செய்தியாம்🙏🏻🙏🏻😌

திருச்சிற்றம்பலம்🙏🏻

கருத்துகள் இல்லை: