புதன், 10 பிப்ரவரி, 2021

காஞ்சி காமாக்ஷி அம்மன்

காஞ்சி காமாக்ஷி அம்மன்

ஆதிசங்கரர் இத்தலத்தில் தான் ஆனந்த லஹரி பாடினார். மேலும் இவர் அம்பிகையை நினைத்து வழிபட்ட மூககவியின் மூக பஞ்சசதீ துர்வாசரின் ஆர்ய த்விசதி போன்ற ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆதிசங்கரருக்கு இத்தலத்தில் தனி சன்னிதி அமைந்திருக்கிறது.

தமிழகத்திலேயே உள்ள முக்கியமான சக்தி பீடம், காஞ்சீபுரம். பார்வதி தேவியின் சக்தி பீடங்களில் காஞ்சி காமாக்ஷியும் ஒன்று. அம்மனின் மகிமை பெற்ற தலம் என்று காஞ்சியை சொல்லலாம். அதனால் தான் காமாக்ஷி என்றாலே காஞ்சி காமாக்ஷி என்றே சொல்கிறோம்.

ஒவ்வொரு யுகத்திலும், மகான்கள் அம்பிகையை நினைத்து ஸ்லோகங்களை இயற்றியிருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசர், 2000 ஸ்லோகங்களையும்,  திரேதாயுகத்தில் பரசுராமர், 1500 ஸ்லோகங்களையும், துவாபரயுகத்தில், தெளமியாசர் 1000 ஸ்லோகங்களையும், கலிகாலத்தில் ஆதிசங்கரர் 500 ஸ்லோகங்களையும் காமாக்ஷி அம்பிகையை நினைத்து இயற்றியிருக்கிறார்கள்.

ஸ்தல வரலாறு : காமாக்ஷி, ஒன்பது வயது சிறுமியாக தோன்றி பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்து, விண்ணில் மறைந்தாள். அசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல் தேவர்கள் திகைத்தார்கள். அப்போது காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை உணர்த்தும் விதமாக, 24 தூண்களையும், நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம்  நான்கு சுவர்களையும் எழுப்பி,  மண்டபம் கட்டுங்கள். அந்த மண்டபத்தில் கன்றுடன் கூடிய பசு, சுமங்கலிப் பெண், தீபம், கண்ணாடி போன்றவை வைத்திருங்கள். அசுரனை அழித்த என்னை காட்டுகிறேன் என்ற அசரீரி கேட்டது. தேவர்கள் அப்படி செய்ய, காமாக்ஷி தேவி, ஒன்பது வயது சிறுமியாக காட்சியளித்து அருள் புரிந்தாள். தேவர்கள், தேவியின் விருப்பப்படி அந்த இடத்தை மறைத்து ஸ்லோகங்களால் வழிபட, மறுநாள் காமாக்ஷி அம்மனாக காட்சி தந்தாள்.

ஸ்தல சிறப்பு : காமாக்ஷி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்திருக்கிறார். லலிதா ஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர் இவரே. அம்மன், இவருக்குத்தான் காட்சி தந்ததாக கூறுகிறது வரலாறு. அம்மன், தங்க விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் அருள் புரிகிறாள். பத்மாசன கோலத்தில் அருள் தருவது மிகவும் விசேஷமானது என்பது குறிப்பிடத்தக்கது. கருவறையில் காமாக்ஷியின் அருகில் வலப்புறத்தில் ஒற்றைக்காலில் பஞ்சாக்னி நடுவில் ஒற்றை காலில் நின்ற படி தபஸ் காமாக்ஷி காட்சி தரும் அம்மனும் உண்டு.
அசுரனை வதம் செய்து உக்கிரத்தோடு இருந்த காமாக்ஷி அம்மனை சாந்தப்படுத்த, அம்மனின் திருவுருவத்தின் முன்பு ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை செய்து, சாந்தப்படுத்தி அருள் சக்தியாக மாற்றினார்.
ஆதிசங்கரர், இத்தலத்தில் தான் ஆனந்த லஹரி பாடினார். மேலும் இவர், அம்பிகையை நினைத்து வழிபட்ட மூககவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்ய த்விசதி போன்ற ஸ்தோத்திரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆதிசங்கரருக்கு இத்தலத்தில் தனி சன்னிதி அமைந்திருக்கிறது.
காமாக்ஷி ஸ்தூலம், சூட்சமம், காரணம் என்று மூன்று வடிவங்களில் அருள் பாலிக்கிறாள். சக்தி பீடத்தில் முக்கிய தலமான இங்கு, அம்மன் தென் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருக்கிறாள். பிரம்மா, ருத்ரன், சதாசிவன், ஈஸ்வரன், மகாவிஷ்ணு என பஞ்ச பிரம்மாக்களை ஆசனமாக கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறாள். கைகளில் பாசம்,  அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

ஸ்தல பெருமை : இந்நகரை ஆட்சி செய்த மன்னனுக்கு குழந்தைப்பேறு இல்லை. அதனால் அம்மனை நினைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்தான். மன்னனின் வேண்டுதலில் மனம் இறங்கிய அம்மன், தனது புதல்வன் கணபதியையே மன்னனுக்கு மகனாக பிறக்க அருள் புரிந்தார். கணபதி துண்டீரர் என்னும் பெயருடன் வளர்ந்து, ஆகாசராஜ மன்னனுக்கு பிறகு ஆட்சி செய்தார். கா என்றால் சரஸ்வதி, மா என்றால்  மகேஸ்வரி, க்ஷி என்றால் லட்சுமி என மூன்று தேவிகளும் இணைந்தவள் இவள். காஞ்சி மகா பெரியவர், காமாக்ஷி தேவியைப் பற்றி சொல்லும் போது, மனிதர்களுக்கு மாயை ஏற்படுத்தி அந்த மாயையிலிருந்து விடுவிக்கும் கருணையும் கொண்டவள் காமாக்ஷி என்கிறார்.

ஸ்தல பிரார்த்தனை : அம்மனுக்கு முன்பு இருக்கும் ஸ்ரீ சக்கரத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும், இதை வழிபட்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெறலாம். குழந்தை வரம், திருமண வரம், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் இவையெல்லாம் நீங்க காமாக்ஷி அம்மன் அருள் பாலிக்கிறாள். எனக்கு எதுவும் வேண்டாம். இந்த உலக மாயையிலிருந்து விடுபட்டால் போதும் என்றால் அருள் தரக் காத்திருக்கிறாள் காஞ்சி காமாக்ஷி.

கருத்துகள் இல்லை: