ஞாயிறு, 3 ஜனவரி, 2021

கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்


கண் திறந்து கவலை போக்கும் கரிவரதன்

கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் மிகப் பழமையானதும் பக்தர்களுக்கு எல்லாம் நன்மைகளையும் வாரி வழங்கும் அற்புதமான திருக்கோயில் ஆகும். இத்தலம் சென்னை-கோயம்பேடு அருகிலுள்ள நெற்குன்றத்தில் அமைந்துள்ளது. இப்பெருமாளுக்கு கலியுக வரதன், கண்திறக்கும் பெருமாள், பக்தவத்சலன், பாகவதப் பிரியன் என்று பல திருநாமங்கள் உண்டு. ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். உற்சவர், தனது இடது கையில் கதையுடன் சத்யநாராயணனாக காட்சி தருகிறார். இத்தல பெருமாள் யானைக்கு அருளியவர் ஆவார். ‘‘ஆதிமூலமே’’ என்றழைத்த கரி எனும் யானையை முதலையிடமிருந்து காப்பாற்றியதால் கரிவரதராஜப் பெருமாள் எனும் திருநாமம் ஏற்பட்டது.

முதலைக்கும் யானைக்கும் சாப விமோசனம் அளித்து மோட்சத்தையும் அளித்தார். நெல்வயல் நிறைந்திருந்த நெற்குன்றத்தில் எழுந்தருளியவர் இந்த நெற்குன்றம் வரதர். நெல் அதிகமாக குன்றுபோல் விளைந்து காணப்பட்டதால் இந்த ஊர் நெற்குன்றம் என்றாகியது. மூலவர் சந்நதிக்குமுன் துவாரக பாலகர்கள் ஜய-விஜயர்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். கரிவரதராஜப் பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி-பூதேவி தாயார்கள் உபய நாச்சியாருடன் காட்சி தருகின்றனர். கோயில் பிராகாரத்தில் விஷ்வக்சேனர், விஷ்ணு துர்க்கை சந்நதிகள் உள்ளன. பெருமாளுக்கு எதிரே தனி சந்நதி கொண்டிருக்கும் கருடாழ்வார், நாகதோஷம் போக்குபவர்.

பெருமாளின் இடதுபுறத்தில் வெளிமண்டலத்தில் நம்மாழ்வார் அமர்ந்த நிலையில் சேவை சாதிக்கிறார். அனுமன் வரத ஆஞ்சநேயராக, வடக்கு நோக்கி வராஹமுகமாக கைகூப்பி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இந்த ஆஞ்சநேயருக்கு வடைமாலையும் வெண்ணெயும் சாற்றி வழிபடுகின்றனர்.
இக்கோயிலின் சிறப்பே நேத்ர தரிசனம்தான். பெருமாள் நம்மை, தன் வெண் விழிக்கு நடுவே கருவிழி மூலம் நோக்குவது அற்புத காட்சியாகும். பெருமாளின் திருப்பார்வை நம்மைத் தீண்டும் அதிசயம்! சாதாரணமாக, கரிவரதராஜப் பெருமாளின் முன்பு நின்று பார்க்கும்போது பெருமாளின் கண்கள் மூடியிருப்பது போல் தோன்றுகிறது.

கருவறையிலுள்ள மின்சார விளக்குகளை நிறுத்தி விட்டு இருளில் நெய்விளக்கேற்றி ஆரத்தி காட்டும்போது மட்டும் கண் இமைகள் மெல்லத் திறந்து நம்மைப் பார்க்கும் அற்புதத்தை அங்குபோய் அனுபவித்தால்தான் உணரமுடியும். நேத்ர சேவை முடிந்ததும் மின் விளக்குகளை ஏற்றும்போது அவர் விழிகள் மூடிக்கொள்கின்றன! ஐந்தரை அடி உயரத்தில் காணப்படும் கரிவரதராஜப் பெருமாளின் இரு மேற்திருக்கரங்களில் சங்கு-சக்கரம், வலது கீழ் திருக்கரம் அபய ஹஸ்தமாகவும் இடது கீழ் திருக்கரம் கடிகஹஸ்தமாக உள்ளன. அழகான இந்தப் பெருமாளின் கண், மூக்கு, அதரம், நெற்றி, திருவடி என அனைத்து பாகங்களும் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

திருக்கையில் நாககங்கணம், தொப்புளின் கீழே சிம்மமுகம் உள்ளதும் மார்பின்மேல் தோள்பட்டை அருகில் ஸ்ரீவத்ஸம் உள்ளதும் விசேஷமாகும். இவரது திருமேனியைச் சுற்றி அழகாக பத்தாறு வஸ்திரம் அணிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மார்பில் இரு தாயார் உள்ளனர் என்பது கூடுதல் அதிசயம். கழுத்தில் சாளக்ராம மாலையும் மார்பில் பூணூலும் அணிந்து மிக அழகாக காட்சியளிக்கிறார். பெருமாள் சந்நதியில் கையில் வெண்ணெயுடன் காட்சிதரும் சந்தான கிருஷ்ணனை திருமஞ்சனம் செய்து வழிபட்டு பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். உற்சவர் சத்யநாராயணனாகத் திகழ்வதால், இங்கே பௌர்ணமிதோறும் சத்யநாராயண பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை: