ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}


அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் {பகுதி – 2}
 
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஓம் தமிழ் நாள்காட்டி அன்பர்களே தன்நிகரற்ற தனிச்சிறப்பு வாய்ந்த திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தின் தெய்வங்களான அருள்மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் சுவாமி தோன்றிய வரலாறையும் அத்தலத்தின் சிறப்புகள் சிலவற்றையும் அறிந்து அனுபவித்தோம்.ஆண்டவர் அடியவர்களுக்கு செய்த அற்புத வரலாற்றையும் மகிமைகளையும் இனி காண்போம்.

ஞானசம்பந்தர் வழிபாடு:சமயக் குரவர்களில் முதன்மையானவராக போற்றப்படும் திருஞானசம்பந்தர் இத்தல இறைவன் மீது தேவாரப் பதிகம் பாடியுள்ளார்.திருஞானசம்பந்தர் இரண்டாம் திருமுறை பகுதியில் பாடல் – 1311ல் பாடியுள்ளார்.

முன்னநின்ற முடக்கான் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே
(திருஞானசம்பந்தர்)

மாணிக்கவாசகர் வழிபாடு:மாணிக்கவாசகப் பெருமான் இத்தலத்துப் பெருமானை வழிபட தில்லையிலிருந்து வந்தபோது திருப்பாதிரிப்புலியூருக்கு தென்பால் ஓடிக்கொண்டிருந்த கெடிலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் மாணிக்கவாசகப் பெருமான் துயருற்றதை அறிந்த பெருமானார் நதியை நகருக்கு வடதிசையாகச் செல்லுமாறு திருப்பி விட்டு, தனது பக்தரான மாணிக்கவாசகர் தன்னை வழிபட அருள்பாலித்தாக தல வரலாறு கூறுகிறது.

அப்பர் வழிபாடு:திருவதிகை வீரட்டானேசுவரர் இறைவனுக்கு திருத்தொண்டாற்றி வந்தவர் அப்பர் பெருமானின்
(திருநாவுக்கரசர்)தமைக்கையார் திலகவதியார் ஆவார்.அப்பர் பெருமான் சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்ற பெயருடன் அச்சமயத்திற்கு தொண்டாற்றி வந்தார். தனது சகோதரன் பிற சமயம் தழுவியமைக்காக திலகவதியார் மிகவும் வருத்தமுற்றிருந்தார்.தனது சகோதரன் சைவ சமயம் திரும்ப இறைவன் அருள்புரிய வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்.அதற்கு மனமிறங்கிய வீரட்டானத்து இறைவன் சூலை நோயை(வாயிற்று வழியை) உண்டாக்கினார்.இந்நிலையில் அப்பர் பெருமான் சூலை நோயால் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் சமண சமயக் குருமார்களால் அவரைக் குணப்படுத்த முடியவில்லை என்றும் அறிந்த திலகவதியார் மேலும் வருத்தமுற்று தனது சகோதரைனைக் காத்தருறுமாறு திரிபுர சம்கார மூர்த்தியான வீரட்டானத்து இறைவனை வேண்டினார்.பெருமானும் அவரது வேண்டுதலை ஏற்று அப்பர் பெருமான் சூலை நோயைத் தீர்த்தருளினார்.

அதனால் அகமகிழ்ந்த அப்பர் பெருமான் கூற்றாயினவாறு விலக்கலீர்(திருமுறை-4,பாடல்-1) என்னும் தனது முதல் தேவாரப் பாடலை திருத்தலத்தில் பாடினார்.அதனால் அகமகிழ்ந்த இறைவன் அவருக்கு திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரிட்டார் என்பது வரலாறு. பின்னிட்டு திருநாவுக்கரசர் சைவ சமயத்திற்கே திரும்பி திருத்தாண்டாற்றினார்.

அப்பர் பெருமான் சைவ சமயத்தைத் தழுவினார் என்பதையறிந்து சினமுற்ற சமணர்கள் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த சமண சமயத்தைச் சார்ந்திருந்த மகேந்திரவர்ம பல்லவன் மூலம் பல்வேறு இன்னல்களை திருநாவுக்கரசருக்கு ஏற்படுத்தினர். புத்த மதத்தைத் தழுவியிருந்த மகேந்திரவர்ம பல்லவன் இப்பகுதியில் கி.பி.600-630 களில் ஆட்சி செய்து வந்தான்.அப்போது புத்தமதத்திலிருந்து தனது தாய் மதமாகிய சைவ மதத்தைத் தழுவியதற்காக திருநாவுக்கரசரை கருங்கல்லில் கட்டி கடலில் தூக்கி வீசியபோது திருப்பாதிரிப்புலியூர் இறைவனான அருள்மிகு பாடலீசுவரரை எண்ணி பதிகம் பாடினார்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசிவாயவே.
(திருநாவுக்கரசர்)

அருள்மிரு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் அருளாசியால் அக்கருங்கள்ளே தெப்பமாய் மிதந்தது. அப்பர் பெருமான் அக்கருங்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும். திருநாவுக்கரசர் கரையேறிய அவ்விடம் கரையேறவிட்டகுப்பம் என்ற பெயரில் அந்த ஊர் இன்றும் உள்ளது.பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் இச்சம்பவத்தை மிக அழகாக பாடியுள்ளார்.திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் பகுதியில் பாடல்-1397ல் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்து அருள் வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியுர்ப் பாங்கரில்
(சேக்கிழார்)

முடிவில் திருநாவுக்கரசர் அவற்றிலிருந்து மீண்டதோடு மகேந்திரவர்ம பல்லவனையும் சைவ சமயம் தழுவச் செய்தார் என்பதும் பின்னிட்டு சமண சமய வழிபாட்டுத் தலங்களையும் மடங்களையும் சைவசமயத் திருக்கோயில்களாகவும் மடங்களாகவும் மககேந்திரவர்ம பல்லவன் மாற்றினான் என்பதும் இறுதியில் சமணசமயமே அழிந்து போனது என்பதும் தனி வரலாறு. இன்றளவும் இத்திருக்கோயிலில் பழமையான புத்தரின் சிலை ஒன்று இன்றும் உள்ளது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மற்ற சிவத் தலங்கள் அனைத்திலும் நாயன்மார்கரள நின்ற திருக்கோலத்திலேயே நமக்கு அருளாசி வழங்குவர்.இத்திருக்கோயிலில் மட்டும் அப்பர் பெருமான் தனிச் சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

அடியவர்கள் வழிபாடு:அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைப் போற்றி ரிணமொடு குருதி நரம்பு மாறிய என்ற திருப்புகழ் பாடலைப் பாடி இத்தலத்து முருகப் பெருமானை வணங்கியுள்ளார்.வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் இத்தலத்து இறைவனை தரிசித்துள்ளார் என்கிறது தல புராணம்.

கோயில் அமைப்பு:கோயில் இராச கோபுரத்திற்கு முன்பாக 24 கற்றூண்களைக் கொண்டு ஊஞ்சல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.ஊஞ்சல் மண்டபத்தின் மேல்பகுதியில் வடக்கிலும்,தெற்கிலும்,புராண சைவ சமய வரலாற்றை மையப்படுத்திய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இராஜ கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.ஊஞ்சல் மண்டபம் இராச கோபுரத்திற்கு முன்பாக உள்ளதால் கோபுரத்தின் முழு அமைப்பைக் காண முடியாது.இராச கோபுரத்தைக் கடந்தவுடன் குதிரை மண்டபம் மடப்பள்ளி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.அவற்றைக் கடந்ததும் அருள்மிகு பாடலீசுவரர் மற்றும் அருள்மிகு பெரியநாயகி அம்பிகை ஆகியோர் தனித்தனியாக அமைக்கப்பட்ட மிகப்பெரிய சன்னதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர்.மேலும்,அருள்மிகு நடராசப் பெருமான்,வலம்புரி விநாயகர்,சொன்னவாற்றி விநாயகர்,யுக முனிவர்,கஜலட்சுமி, பராசக்தி அம்மன்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர்,பிச்சாடனர், காலபைரவர்,அருந்தவநாயகி, சாமுண்டி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்கின்றனர்.

சிவகார தீர்த்தம்:சிவகர தீர்த்தம் என்பது சிவனும் சக்தியும் ஆகும். கங்கையானவள் மாசி மகத்தன்று சிவகர தீர்த்தத்தில் நீராடி தனது பாவங்கைளைப் போகிக்கி கொண்ட தீர்த்தக் குளம் இங்கு உள்ளது. அப்போதெல்லாம் கங்கை தனது புண்ணியத்தில் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்வாளாம். ஆகவே இத்திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் கங்கையில் நீராடியதன் பலனைப் பெறலாம் என்பர்.

திருவிழாக்கள்:சித்திரை வசந்தவிழா வைகாசிப் பெருவிழா தேர் பவனி ஆனி மாணிக்கவாசகர் விழா ஆடிப்பூரம் விழா புரட்டாசி நவராத்திரி விழா ஐப்பசி அன்னாபிஷேகம் கார்த்திகை சோமவார விழாக்கள் மார்கழி திருவாதிரை விழா தை சமுத்திர தீர்த்தவாரி ஆகியவை பிரசித்தம்.
இதுவரை நாம் திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் அருளாட்சி செய்து வரும் இறைவனின் மகத்துவங்களை எல்லாம் நிறைவாக அறிந்து தரிசித்தோம்.அப்பர் பெருமானுக்கு அருள் செய்ததைப் போல அவனியில் வாழும் அணைத்து உயிர்கட்கும் அருள் செய்ய வேண்டுமென்று வேண்டி வணங்கி திருப்பாதிரிப்புலியூர் வரலாற்றை நிறைவு செய்கிறோம்.

அருள்மிகு பெரியநாயகி
திருவடி மலரடி போற்றி! போற்றி!
அருள்மிகு பாடலீசுவரர்
திருவடி மலரடி போற்றி! போற்றி!
 போக்குவரத்து வசதி

சென்னையிலிருந்து நேரடியாகக் கடலூருக்குப் பேருந்து வசதி உள்ளது. எழும்பூரிலிருந்தும் தாம்பரத்திலிருந்தும் தொடர் வண்டி வசதிகள் உள்ளன.புதுவைக்கு தெற்கே கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ. தொலைவில் திருப்பாதிரிப்புலியூர் அமைந்துள்ளது.புதுவையிலிருந்து ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் கடலூருக்கு பேருந்து வசதி உள்ளது.

சன்னதித் தெருவிலும் அதனையொட்டிய பகுதிகளிலும் தங்குமிடங்கள் உள்ளன.பேருந்து நிலையம் மற்றும் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகிலும் தங்குமிடங்கள் ஏராளமாக உள்ளன.

தரிசனம் நேரம்:காலை 06.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 வரை.

திருக்கோயில் நிர்வாகம்:தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இத்திருக்கோயில் உள்ளது.

திருக்கோயில் முகவரி:நிர்வாக அதிகாரி,அருள்மிகு பிரகன்நாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோயில்,
திருப்பாதிரிப்புலியூர்,கடலூர்-2

கருத்துகள் இல்லை: