ஞாயிறு, 3 ஜனவரி, 2021

திருச்செந்தூர் திருப்புகழ்


திருச்செந்தூர் திருப்புகழ் - ஏவினை நேர் விழி
 
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
       ஏதனை மூடனை நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
       ஏழையை மோழையை  அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
       வாய்மையி லாதனை யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
       வாழ்வுற ஈவது மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
       நாரத னார்புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
       நாயக மாமயி  லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
       தேன்மொழி யாள்தரு சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
       சீரலை வாய்வரு பெருமாளே.
 
வாழ்வு நன்கு அமைய ஒரு வேண்டுகோள் துதி இது அம்பு போன்ற கண்களை உடைய விலை மாதரை விரும்பும் கேடனை,மூடனை,கல்வி இல்லாதவனை,பிணியால் பீடிக்கப்பட்டவனை,இகழாமல் சிலம்பணிந்த உன் திருவடிகளில் உற்ற பெரு வாழ்வைத் தந்து அருளும் ஒரு நாளும் உண்டோ?நாரதர் எடுத்துரைத்த வள்ளி நாயகியை நாடிச் சென்று அவளைக் கூடிய வீரனே.மயில் வாகனனே.பராபரியான பார்வதி பெற்ற சிறியவனே. உயர்ந்த சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலைவாயில் உறைகின்ற பெருமாளே நான் வாழ்வுற உன் திருவடிகளை தரும் நாள் ஒன்று உண்டோ?
 
 
பதம் பிரித்து உரை
ஏவினை நேர் விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை நெறி பேணா
 
ஏவினை நேர் = அம்பை நிகர்க்கும் விழி மாதரை = கண்களை உடைய விலை மாதரை மேவிய = விரும்பும் ஏதனை = கேடனை மூடனை = முட்டாளாகிய என்னை நெறி பேணா = நல்லொழுக்கம் விரும்பாத.
 
ஈனனை வீணனை ஏடு எழுதா முழு
ஏழையை மோழையை அகலா நீள்
 
ஈனனை = இழிந்தோனை வீணனை = வீணாகக் காலம் கழிப்பவனை ஏடு எழுதா = படிப்பு இல்லாத முழு ஏழையை= முழு ஏழையை மோழையை= மடையனை அகலா நீள் = விட்டு நீங்காத நீண்ட
 
மா வினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மை இலாதானை இகழாதே
 
மாவினை மூடிய = பெரிய வினை மூடியுள்ள நோய் பிணியாளனை = நோயும், பிணியும் கொண்டவனை வாய்மை இலாதனை = உண்மை இல்லாதவனை இகழாதே = இகழ்ந்து ஒதுக்காமல்.
 
மா மணி நூபுர சீதள தாள் தனி
வாழ்வு உற ஈவதும் ஒரு நாளே
 
மா மணி நூபுரம் = சிறந்த மணியாலாகிய சிலம்பணிந் துள்ள சீதள = குளிர்ந்த தாள் = (உன்) திருவடிகளை தனி வாழ்வு = முத்தி இன்பத்தை உற = நான் பெற ஈவது ஒரு நாளே= (எனக்குத்) தந்து உதவும் ஒரு நாளும் உண்டோ?
 
நாவலர் பாடிய நூல் இசையால் வரு
நாரதனார் புகல் குற மாதை
 
நாவலர் = புலவர்கள் பாடிய = பாடியுள்ள நூல் இசையால்
வரும் = நூல்களில் புகழப்பட்ட நாரதனார் புகல் = நாரத முனிவர் எடுத்துரைத்த  குற மாதை = குறப்பெண்ணாகிய வள்ளியை.
 
நாடியே கான் இடை கூடிய சேவக
நாயக மா மயில் உடையோனே
 
நாடியே = நாடிச் சென்று கான் இடை = காட்டில் கூடிய சேவக = அவளைக் கூடிய வீரனே நாயக = நாயகனே மா மயில் உடையோனே = சிறந்த மயில் வாகனனே.
 
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன் மொழியாள் தரு சிறியோனே
 
தேவி மநோமணி ஆயி பராபரை = தேவி, மனோமணி, ஆயி, பராபரை (ஆகிய பார்வதி) தேன் மொழியாள் = தேன் போலும் மொழியையுடையவள் தரு = பெற்ற சிறியோனே= இளையவனே.
 
சேண் உயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலை வாய் வரு பெருமாளே.
 
சேண் உயர் = ஆகாயம் வரை உயர்ந்தசோலையின் நீழலிலே திகழ் = சோலைகளின் நிழலில் விளங்கும் சீரலை வாய் = திருச்செந்தூரில் வரும் = எழுந்தருளியிருக்கும் பெருமாளே = பெருமாளே.

நாரதனார் புகல் குற மாதை
வேடுவர்களின் அரசனும் முற்பிறவியில் தவம் பல செய்தவனுமாகிய நம்பி குலதெய்வமாக விளங்கிய முருகனை வழிபட்டு வந்தான்.பல ஆண் குழந்தைகள் அவர்களுக்கு இருந்தனர்.அவனுக்கும் அவன் மனைவிக்கும் பெண் மகவு இல்லையே என்ற குறை இருந்தது.கணவன் மனைவி இருவரும் பெண் குழந்தை வரம் வேண்டி பல விரதங்களை மேற் கொண்டார்கள்.

கண்வ மகரிஷியின் சாபத்தினால் விஷ்ணுவும் லக்ஷ்மியும் பூவுலகில் முனிவராகவும் மானாகவும் பிறந்தார்கள்.முனிவர்,மலையடிவாரத்தில் தவம் புரிந்தார்.மானாகப் பிறந்த மகாலக்ஷ்மி அம்மலையருகே உலவி வந்தது.ஒருநாள் முனிவர் தவம் கலைந்து தம் அருகே இருந்த அழகிய மானைக் கண்டதும் மோகம் கொண்டார்.
 
முருகப்பெருமானை மணம் புரிந்து கொள்வதற்காகவே சுந்தரவல்லி என்ற பெயர் கொண்ட விஷ்ணுபுத்திரி தவம் செய்தாள். முனிவர் மான்மீது மோகம் கொண்டதும் அம்மானின் வயிற்றில் சுந்தரவல்லி கருவானாள். முனிவரின் மோகப் பார்வையால் மான் கருத்தரித்து பெண்மகவை ஈன்றது.உடனே மானின் சாபம் நீங்கப்பெற்று மகாலக்ஷ்மி வைகுந் தத்துக்குச் சென்றாள்.
 
வனத்திலே குழந்தை அழுது கொண் டிருந்தது.நம்பிராஜன் தம் வீரர்களுடன் தினைப்புனத்தைப் பார்வையிட வந்த பொழுது குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச் சென்றான்.வள்ளிக் கொடிக்கு அருகிலே மகாலக்ஷ்மியைப் போன்ற பேரழகுடன் பெண்குழந்தை அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்ந்தது.
 
“ஆகா முருகப்பெருமானின் அருளே அருள்.”என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தான்.ஓடோடிச் சென்று குழந்தையை அள்ளியணைத்தான்.வள்ளிக்கொடியருகே கிடந்ததால் ‘வள்ளி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள் நம்பியும் அவன் மனைவியும்.வள்ளி சீரும் சிறப்புமாக வளர்ந்தாள்.வேடுவர்களின் குலவழக்கத்தின் படி வள்ளிக்கு பதினான்கு வயதாகும்போது அவளை தினைப்புனம் காப்பதற்காக அனுப் பினார்கள். தினைப்புனத்தில் உயரமான பரண் மீது தோழியருடன் வள்ளியம்மை நின்ற வண்ணம், ‘ஆலோலம்’ பாடி கிளி, கௌதாரி காடை போன்ற பறவை இனங்களை விரட்டினாள்.கொடிய மிருகங்கள் வராமல் விரட்டினாள். பறவைகளோ வள்ளியின் ஆலோலப் பாட்டின் இனிமையிலும் அவள் அழகிலும் மயங்கி திரும்பத் திரும்ப தினைப்புனத்திற்கு வந்தன.வள்ளி ‘ஆலோலம்’ பாடியபடியே முருகப்பெருமானை உளமாரப் பூஜித்து வந்தாள். கலிதீர்க்க கந்தன் என்று வருவாரோ என்று வழி பார்த்திருந்தாள்.
 
வள்ளியின் பிறப்பின் பின்னணியை அறிந்து கொண்ட நாரதர் திருத்தணிகைக்குச் சென்றார். தணிகைவேலனைத் தரிசித்து வள்ளியின் தணியாத ஆவலை எடுத்துரைத்தார்.அவளை விரைவில் மணம் புரிந்து கொள்ள வேண்டினார்.
 
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
 
தோழியர்: கோழி கூவப் பிற பறவைகளும் கீச்சிடுகின்றன.
இசைக் கருவிகள் ஒலிக்க வெண்சங்கும்ணொலிக்கின்றது.
ஒப்பற்ற பரஞ்சோதியான பெருமானையும், ஒப்பற்ற அப்பெருமானின்
பரங்கருணையையும், ஒப்பற்ற மேன்மையான (சிவம் சார்ந்த)
பொருட்களையும் பாடினோம். அவையெல்லாம் கேட்கவில்லையா ?
அப்படி இது என்ன உறக்கமோ, சொல்வாய் ! திருமாலைப் போன்ற
பக்தி செய்யும் விதமும் இப்படித்தானோ ! ஊழிகள் எல்லாவற்றிற்கும்
முன்னரே தொடங்கி (அழிவின்றி) நிற்கும் மாதொருபாகனைப் பாடு !
 
குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).
 
திருப்பாவை பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
     மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
     கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
     மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
     ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

மாவாய் - குதிரை வடிவு கொண்ட கேசியின் வாயை;
மல்லர் - சாணூரன் முஷ்டிகன் என்னும் மல்யுத்தம் செய்பவர்களை;
மாட்டிய - அழியச் செய்த; ஆ ஆ என்று அருள் - ஆ ஆ என்று இரங்கி;

கருத்துகள் இல்லை: