ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில் திருப்பாதிரிப்புலியூர் (பகுதி-1)


அருள் மிகு பெரியநாயகி உடனாய பாடலீசுவரர் திருக்கோவில்
திருப்பாதிரிப்புலியூர் (பகுதி-1)
 
திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும் திருநாவுக்கரசர் பதிகம் இரண்டும் அருணகிரிநாதர் பட்டினத்தார் தொல்தாப்பியதேவர் மாதவச் சிவஞானமுனிவர் சிதம்பரநாத முனிவர் ஞானியார் அடிகள் பொன்னுசாமிப் பிள்ளை பெரியசாமிப் பிள்ளை நாராயண வேங்கடாசல நாயக்கர் திருப்பாதிரிப்புலியூர் சிவசிதம்பர முதலியார் திரிவியம் பிள்ளை பு.தெ.தெய்வசிகாமணி முதலியார் பலராம அய்யர் வண்டிப்பாளையம் ஆ.சிவ.சிவலிங்கனார் போன்ற ஏராளமான அடியவர்களாலும் சான்றோர்களாலும் புலவர்களாலும் பாடப்பெற்ற குறிப்பிடப்பட்ட அற்புதமான திருத்தலம் இதுவாகும்.

இலக்கியப்சிறப்பு:தேவாரப் பாடல்கள் திருப்புகழ் திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பதிகம் திருப்பாதிரிபுலியூர்த் தோத்திரக் கொத்து மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் புலியூர் நாடகம் கன்னிவனப் புராணம் புலிசைப்பத்து திருப்பாதிரிபுலியூர் பதிகம் போன்ற எராளமான நூல்களில் குறிப்பிடப்பட்ட எண்ணிலடங்கா சிறப்புக்களை உடைய திருத்தலம் இதுவாகும்.

தொண்மையும் சிறப்பும்:பூலோக கைலாயம் என்று போறற்றப்படும் சிதம்பரமான தில்லையை தென்புலியூர் என்றும் திருப்பாதிரிப்புலியூரை வடபுலியூர் என்றும் கூறுவர்.சிதம்பரத்திற்கு இணையாக(நம் முன்னோர்களால்) போற்றப்பட்ட மகத்துவம் வாய்ந்த தலம். சுமார் 1500 ஆண்டுகளுக்குமேல் தொண்மை வாய்ந்த தலம்.ஏராளமான கல்வெட்டுக்கள் ஓவியங்கள் சிற்ப வேலைப்பாடுகள் நிறைய மண்டபங்கள் பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்ட வழிபடப்பட்ட தொண்மை வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.

மகிமைச்சிறப்பு:திருநாவுக்கரகரை கொடுமை செயதசமணர்கள் கல்லைகட்டி கடலில் விசியபோது கல்லோடு மிதக்கச் செய்த இறைவன் மாணிக்கவாசகருக்காக கேடிலம் நதியையே மாறிவிடச் செய்த இறைவன் மங்கண முனிவரின் சாபம் தீர்த்த இறைவன் பிரமசீலனுக்கு அருளிய இறைவன் இவ்வாறு எராளமான மகிமைகளையும் திருவிளையாடல்களையும் புரிந்த இறைவனான பாடலேசுவரர் அருள்புரியும் புண்ணிய திருத்தலம் இதுவாகும்.

புலியூர்:இவ்வூரின் பெயர் அமைந்த காரணத்தை பலரும் பலவாறு கூறுகின்றனர்.புலியின் வீரத்தைத் குறித்து தமிழர்கள் சில ஊர்களுக்குப் புலியூர் எனப் பெயரிட்டுள்ளனர். புலியூர்,பெரும்புலியூர்,குரும்புலியூர், சிறுபுலியூர்,புலிவலம் முதலியன.

தமிழர்கள் அக்காலத்தில் மரங்களில் தெய்வம் உறைவதாக நம்பினார்கள். பிறகு மரத்தின் கீழ் தெய்வப் படிமங்களை வைத்து வழிபட்டனர். பின்பு அவ்விடத்தில் கோயில் அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்ட ஆலயத்திற்கும், இறைவனுக்கும் மரத்தின் பெயரே சூட்டப்பட்டது.அவ்வாறே பாதிரி மரங்கள் நிறைந்த புலியூர் என்பதால் இவ்வூர் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் பெற்றது என்றும் இத்தலத்திற்கு பாடலீசர் தலம் பாடலி சிவன்கோவில் என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.புலியூர் என்று பெயர்கொண்ட பல ஊர்கள் தேவாரப்பாடல் பெற்றுள்ளன.
காவிரி வடகரையில் திருஓமாம் புலியூர் திருப்பெரும்புலியூர்.நடு நாட்டில் திருஎருக்கத்தம்புலியூர் திருப்பாதிரிப் புலியூர் பாண்டிய நாட்டில் பெரும்பற்றப்புலியூர் முதலியன.தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்களில் இத்தலம் 18வது திருத்தலம் ஆகும்.திருப்பாதிரிப்புலியூர் ஊரின் பெரும் பகுதி கெடிலம் ஆற்றின் தென்பகுதியில் தான் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் கேக்கிழார் ஆகியோர் கெடிலம் ஆற்றைப் பற்றி குறிப்பிடவில்லை. அனால் இத்தலத்தை பற்றி கூறும் பல புராணங்களில் கேடிலம் ஆறு குறிப்பிடப்பட்டுள்ளது.இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய திருப்பாதிரிப் புலியூர்ப் புராணத்தில் கேடிலம் நதியின் சிறப்பு கூறபட்டுள்ளது.

கெடிலமாநதி பாடலேச் சுரணிக்கே தனத்தின்
கெடிலமாநதி செய்த்த தாய்க்கெலு முவதன்றி(இலக்கணம் சிதம்பரநாத முனிவர்)

கரையேறவிட்ட நகர்ப்புராணம் இயற்றிய சிவச்சிதம்பர புலவர் கெடிலத்தின் சிறப்பையும், ஆதன் நீர் வளத்தையும் தல விசேடப் படலத்தில் சிறப்பாக கூறியுள்ளார்.

தென் திசையிற் கங்கையெனத்
திகழ திகழ் கெடிலம் பூம்புனலே
தீர்த்த மாமாம்.(சிவச்சிதம்பர புலவர்)

 தல வரலாறு:ஒரு சமயம் இறைவனும் இறைவியும் பகடை ஆடியபோது இறைவியே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். நடுவராக இருந்த திருமால் இறைவனிடம் அவர் தோற்றதாகக் கூறினால் தான் அபச்சாரப்பட நேரிடும் எனக் கருதி தான் ஆட்டத்தைச் சரிவர கவனிக்கவில்லை என்று கூறி விட்டார்.

கோபம் மேலோங்கிய இறைவி "இறைவனின் திருக்கண்களை மறைப்பேன் ஒளி தந்தால் அவர் வெற்றி பெற்றதாகவும் ஒளி தராவிட்டால் இறைவியே வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்"என்று கூறி இறைவி இறைவனின் கண்களைத் தனது திருக்கரங்களால் பொத்தினார். இதனால் அண்டங்கள் பல யுகங்கள் இருண்டன.தவறை உணர்ந்த இறைவி இறைவனிடம் தனது செயலுக்ககாக மன்னிப்பு கோரி பாவ விமோசனம் அருளுமாறு வேண்டினார்.அதன்படி இறைவி பூவுலகம் சென்று 1008 தலங்களையும் தரிசித்து வரும்போது எந்தத் தலத்தில் அவரது இடது தோளும் இடது கண்ணும் துடிக்கிறதோ அந்த இடத்தில் தவம் மேற்கொண்டால் அங்கு வந்து திருமணம் புரிவோம் என்று இறைவன் கூறினார். இறைவியும் அதற்கிணங்க பாதிரிப்புலியூர் வந்த போது இறைவியின் இடது தோளும் இடது கண்ணும் துடிக்கவே இறைவி இங்கேயே தங்கி அருவமாகத் தவமிருந்து இறைவனை மணம் புரிந்தார்.எனவே இது இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடைபெற்றத் தலமாகும்.எனவே இத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் சன்னதியே பள்ளியறை ஆகும்.

பொதுவாக சிவத்தலங்களில் இறைவி அருள்பாலிக்கும் இடத்தில் தான் பள்ளியறை அமைந்திருக்கும். அர்த்தசாம பூசைக்கு பின்னர் இறைவன் தான் அப்பள்ளியறைக்கு எழுந்தருள்வார்.ஆனால் இத்திருக்கோயிலில் மட்டும் பள்ளியறை இறைவன் அருள்பாலிக்கும் இடத்திலேயே அமைந்துள்ள பள்ளியறைக்கு இறைவி எழுந்தருள்வார்.இது எங்குமே காண முடியாத சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

தல விநாயகர்:இத்தல விநாயகர் வலம்புரி விநாயகர் ஆவார்.மேலும் மேற்கு மதிலில் இருக்கும் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்க் கொத்துகளே காணப்பெறும். அம்பிகை இறைவனைப் பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம்.அதனால் அவர் கன்னி விநாயகர் எனப் பெயர் பெறுகிறார்.

தல சிறப்பு:காசியப்பரின் மனைவி அதிரி பத்து வியாழக்கிழமைகள் அருந்தவநாயகியைப் பூசித்ததால் ஆதிதேயரைப் பெற்றாள் என்பது ஐதீகம்.கார்த்திகைப் பெண்கள் அறுவர் இத்தல இறைவனைப் பூசித்ததால் முருகப்பெருமானுக்கு திருமுலைப்பால் கொடுக்கும் பேறு பெற்றனர் என்பதும் ஐதீகம்.திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் சுமார் 30 கல்வெட்டுக்கள் உள்ளன.கல்வெட்டுச் செய்தியை வைத்துப் பார்க்கும் போது மகேந்திரவர்ம பல்லவன் முதலாம் பராந்தகன் முதலாம் ராஜராஜன் முதலாம் ராஜேந்திரன் ராஜ மகேந்திரன் வீர ராஜேந்திரன் கோப்பெருஞ்சிங்கன் விக்கிரம பாண்டியன் வீரபாண்டியன் தொண்டையர்கோன் முதலாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன், போன்ற பல மன்னர்களால் கோயில் விரிவு படுத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதை அறிய முடிகிறது.

கல்வெட்டுச் சான்று:கி.பி.7ம் நூற்றாண்டில் இத்திருக்கோவில்"ஞாழற்கோயில்" என்றும் இத்தல இறைவனுக்கு“ஞாழற் பெருமான்”என்றும் திருநாமம் வழங்கப்பட்டதாகக் கல்வேட்டுச் செய்தி கூறுகிறது.

பிற்காலத்தில் திருஞானசம்பந்தர் புன்னை மரத்தின் கீழுள்ள திருப்பாதிரிப்புலியூர் இறைவன் என்று பாடியுள்ளார்.ஆனால் திருநாவுக்கரசர் மரம் பெயர் எதுவும் குறிப்பிடாமல் பாதிரிப்புலியூர் ஆலயத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.வரலாற்றின் அடிப்படையில் பார்க்கின்றபோது திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கல்வேட்டுச் செய்தி மற்றும் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் ஆகிய சான்றுகளை வைத்து ஆராய்ந்து பார்க்கும் பொது திருஞானசம்பந்தர் இங்கு வந்து வழிபட்டு சென்றதற்கு பிறகு சில காலம் கழித்து தான் திருநாவுக்கரசர் வந்து வழிபட்டுள்ளார்.ஆகையால் முற்காலத்தில் இத்தலம் மரங்களின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டதையும் பிற்காலத்தில் தான் திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயர் வழங்கப்பட்டதையும் நம்மால் தெளிவாக அறிய முடிகிறது.
எண்ணிலடங்கா பெருமைகளையும் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருப்பாதிரிப்புலியூர் தலத்தின் மகத்துவத்தை முழுமையாய் தரிசிக்க வேண்டுமெனில் சற்று காத்திருங்கள்.

நாளை தொடரும்.

கருத்துகள் இல்லை: