ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அருள் மிகு ஞானாம்பிகை உடனாய திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில் (உத்தமபாளையம்)


அருள் மிகு ஞானாம்பிகை உடனாய திருக்காளத்தீஸ்வரர் திருக்கோவில்
(உத்தமபாளையம்)
 
தென்காளகஸ்தி என்று போற்றப்படும் அற்புதத் திருத்தலம். தமிழகத்திலேயே அச்டமாதர்கள் அதாவது எட்டு கன்னிகள் அருள்கின்ற ஒரே தலம். இராகு மற்றும் கேது ஆகியோர் மனைவியுடன் தம்பதியராக குடி கொண்டுள்ள அற்புத தலம்.சுமார் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தலம். இவ்வாறு பெருமைகள் பல கொண்ட புண்ணிய திருத்தலம் இதுவாகும்.

அழகிற்கு இலக்கணமாய் விளங்கும் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்காளகஸ்தி என்று குறிப்பிடப்படுகின்றது. இவவூர் முன்பு காட்டூர் என அழைக்கப்பட்டது. சங்ககாலம் தொட்டு உத்தமபாளையம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.பி.10ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய போது இவ்வூரும் சோழ நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த உண்மையை அருகிலுள்ள சின்னமனூர் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன. இவ்வூரின் பாளையக்காரராக இருந்த உத்தப்ப கொண்டம நாயக்கரின் நினைவாக காட்டூர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உத்தப்பகொண்டம நாயக்கர் பாளையம் என அழைக்கப்பட்டது. பின்பு அப்பெயர் சுருங்கி உத்தமபாளையம் என அழைக்கப்பட்டு வருகிறது.

கி.பி.1689ம் ஆண்டு முதல் 1706 ஆம் ஆண்டுவரை மதுரை நாயக்க அரசியாக இருந்தவர் இராணி மங்கம்மாள். எல்லை தகராறு காரணமாக திருவிதாங்கூர் மன்னன் இரவிவர்மனுக்கும் மங்கம்மாளுக்கும் போர் நடைபெற்றது. இப்போரின் போது கெங்கப்ப நாயக்கர் சாமிநாத நாயக்கர் விசுவநாத நாயக்கர் போன்றவர்கள் படைத் தளபதியாகவும் பிச்சை பிள்ளை என்பவர் உத்தமபாளையம் கணக்குப் பிள்ளையாகவும் இருந்தார். அவ்வூரில் அக்காலத்திலேயே ஆறுமுகப்பெருமான் திருக்கோயில் ஒன்று புகழ் பெற்று விளங்கியது. உத்தமபாளையம் வட்டம் கூடலூரிலுள்ள கூடலழகிய பெருமாள் கோயில் கல்வெட்டு இவ்வுண்மையை வெளிப்படுத்துகிறது.

ராணி மங்கம்மாள் ஆட்சிக்குட்பட்ட உத்தமபாளையம் பகுதியின் கணக்குப் பிள்ளையான பிச்சை பிள்ளை என்பவர் சிறந்த சிவபக்தர். காளத்தீஸ்வரர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி நாளில் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளகஸ்திக்குச் சென்று காளத்தீஸ்வரரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வயதான காலத்தில் அவரால் அங்கு செல்ல இயலாமல் போனது.

மனம் வருந்திய பிச்சை பிள்ளை இறைவனை நினைத்து உண்ணா நோன்பு இருக்கத் தொடங்கினார்.ஒரு நாள் அவரது கனவில் வில்வ வனத்தில் வெள்ளை அரளிச்செடியின் கீழே ஒரு லிங்க வடிவம் இருப்பது போல தோன்றியது. மறுநாள் தான் கண்ட கனவை ஊர்மக்களிடம் தெரிவித்தார். பின்னர் அவர்களின் துணையுடன் வில்வ வனம் சென்றார். அங்கு அவரது கனவில் தோன்றியபடி வெள்ளை அரளிச் செடியின் கீழ் லிங்கம் ஒன்று இருந்தது. அவரும் ஊர் மக்களும் அந்த லிங்கத்தை வழிபட்டு வில்வ வானத்திலிருந்து உத்தமபாளையம் ஆறுமுகப்பெருமான் கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதன் பிறகு ஆறுமுகப்பெருமான் கோவிலிலேயே சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் தனித்தனியாகச் சன்னதிகள் அமைத்துக் கோவிலின் கட்டிடப் பணியை முடித்தனர்.காளகஸ்தி இறைவன் பக்தரின் கனவில் தோன்றிய நாதன் என்பதால் இத்தல இறைவனுக்கு "காளத்தீசுவரர்" என்பது திருநாமம்.

இதைத் தொடர்ந்து அம்மனுக்கும் தனிச் சன்னதி அமைத்திட ஊர்மக்கள் அனைவரும் முடிவு செய்தனர். அம்மன் உருவத்தைச் சிலையாக வடிக்க பல சிற்பிகளைக் கொண்டு முயற்சித்தனர். ஆனால் எந்தச் சிற்பிகளாலும் அம்மன் சிற்பத்தை உருவாக்க முடியவில்லை.

இதனால் மனம் வருந்திய பிச்சை, கோவிலில் அம்மன் சிலை அமைக்கத் தங்களுக்கு அருள்புரிய வேண்டுமென்று இறைவனிடம் தொடர்ந்து வேண்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் கனவில் தோன்றிய இறைவன் இன்னும் சில நாட்களில் மழை பெய்து ஊருக்குக் கிழக்காக ஓடும் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த ஆற்று வெள்ளத்தில் அம்மன் மூங்கில் கூடையில் அமர்ந்து வருவார். அந்த அம்மன் சிலையைக் கொண்டு வந்து அம்மன் சன்னிதியில் வைத்து வழிபடுங்கள் என்று கூறி மறைந்தார்.

இறைவன் கூறியபடி சில நாட்களில் பெரும் மழை பெய்தது. மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தில் ஒரு மூங்கில் கூடை மிதந்து வந்தது. அந்தக் கூடையில் அம்மன் சிலையும் விநாயகர் சிலையும் இருந்தன. அந்தச் சிலைகளை ஊர் மக்கள் காளத்தீஸ்வரர் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அம்மனுக்கான சன்னிதியில் அம்மன் சிலையை வைத்து அம்மனுக்கு திருக்காளகஸ்தியில் அருள் வழங்கும் "ஞானாம்பிகை" என்ற திருநாமத்தையே சூட்டி வழிபட்டனர். கோவிலில் விநாயகர் சிலையை நிறுவி "செல்வ விநாயகர்" என்று பெயரிட்டனர்.

அருள் மிகு ஆறு முகப்பெருமான் : இத்தலத்தில் காளத்தீஸ்வரர் ஞானாம்பிகை சன்னதிகளுக்கிடையே சண்முகர் சன்னதி கொண்டிருக்கிறார். இதனால் இந்த ஆலயம் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்திருக்கிறது. அம்மன் சன்னதிக்கு எதிரில் ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது.இதற்கு அருகில் அமர்ந்து கொண்டால் அம்பிகை முருகப்பெருமான் என இருவரையும் ஒரே நேரத்தில் காண முடியும். இப்படி தாயையும் மகனையும் ஒன்றாகக் காண்பது மிக அரிது என்கின்றனர்.

இதனால் இந்தக் கோவில் தாய் மகன் ஒற்றுமைக்கான வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.மகனைப் பிரிந்து வாழும் பெற்றோர் தங்கள் மகனுடன் ஒன்று சேர்ந்து வாழ இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர். அம்மன் சிலை இத்தலத்தில் இருந்து சற்று தொலைவிலுள்ள கோகிலாபுரம் என்ற ஊரின் ஆற்றில்தான் கிடைத்தது. எனவே இந்த ஊர் அம்பிகையின் பிறந்த வீடாக கருதப்படுகிறது.

அம்மனுக்கு திருக்கல்யாண விழா நடைபெறும் போது இந்த ஊரில் இருந்து பிறந்த வீட்டுச் சீரும் மருமகனான சிவபெருமானுக்கு ஆடைகளும் கொண்டு செல்கின்றனர். திருக்கல்யாணத்தின் போது சுவாமிக்கும் அம்பாளுக்கும் இந்த ஆடை அணிகலன்களையே அணிவிக்கின்றனர்.

எட்டு அம்பிகைகள்: பெரும்பான்மையான கோவில்களில் பிராமி,மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டாதேவி ஆகிய ஏழு அம்பிகைகள் (சப்த கன்னிகள்) இடம் பெற்றிருப்பதுண்டு.ஆனால் இந்த தலத்தில் எட்டு அம்பிகைகள் (அஷ்ட மாதர்கள்) இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆதிசக்தியில் இருந்து ஏழு வடிவில் ஏழு தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே ஏழு அம்பிகைகளாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதனடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாகக் காளிதேவியும் ஏழு அம்பிகைகளுடன் சேர்ந்து காட்சி தருகிறார். அதாவது எட்டு கன்னிகள் அருள்கின்ற ஒரே தலம் இதுவாகும். இந்த எட்டு அம்பிகைகளையும் ஒரே இடத்தில் வழிபடுவதால் எந்தப் பிரச்சினைகளையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பஞ்ச பூத தலங்களில் காளஹஸ்தி வாயுத் தலமாக இருக்கிறது. இதே போல இத்தலத்தில் இருக்கும் காளத்தீஸ்வரரும் வாயு நிலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே இவருக்கு இங்கு வாயுலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.வாயுவைத் தொட முடியாது என்பதால் இவரைத் தீண்டாத்திருமேனியன் என்றும் அழைக்கின்றனர். வேடவரான கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தருளினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கண்ணப்பருக்கும் தனிச்சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு கண்ணப்பர் தனது கையில் ருத்ராட்ச மாலை, அம்பு, வில்லுடன் காட்சி தருகிறார். சிவராத்திரியன்று இரவில் காளத்தீஸ்வரர் கண்ணப்பர் இருவருக்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. கண் பார்வைக் குறைபாடு மற்றும் கண் தொடர்பான நோயுடையவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்கப் பெறலாம்.

 நாயன்மார்கள்:இந்தத் திருக்கோவிலின் தென்பகுதியில் 63 நாயன்மார்கள் சிலைகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளன. தட்சிணாமூர்த்தி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். திருக்காளத்தீஸ்வரர் சன்னிதியின் பின்பகுதியில் காசி விசுவநாதர் சன்னிதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன. மேலும் கல்விக் கடவுளான சரஸ்வதி சிலை இடது கையில் வீணையைப் பிடித்தபடியும் வலது கையில் அட்சர மாலையுடனும் இருப்பது போன்று வடிக்கப்பட்டுள்ளது. குபேரர் ஐஸ்வர்ய லட்சுமியுடன் தனிச்சன்னிதியில் காட்சி தருகிறார்.

இவர்களுக்குப் பின் புறம் மகாலட்சுமியும் இருக்கிறார். இது போல் இந்தக் கோவிலில் நவக்கிரகங்களுக்கான சிலைகளும் தனியாக இடம் பெற்றிருக்கின்றன. பல்வேறு சிறப்புகளுடன் அமைந்திருக்கும் இந்தக் கோவில் தென் காளகஸ்தி எனும் சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது. காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் காளத்தீஸ்வரரை வழிபட்டு காளகஸ்தி சென்று வந்த பலனைப் பெறமுடியும் என்கின்றனர்.

கோவில் அமைப்பு:சிவன் சன்னதி முன்பாக இருக்கும் மண்டபத்தின் மேற்கூரையில் ராசி நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் வாஸ்து பகவான் சடாமுடியுடன் பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது. வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா அம்பிகை இருவரும் வழிபாடு செய்வது போன்ற சிற்பம் உள்ளது. இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றியிருப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் இருக்கின்றனர்.

27 நட்சத்திரங்களுக்கான வாகனங்கள்:
வாஸ்து பகவானைச் சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான வாகனங்கள் 12 ராசிகளுக்கான சின்னங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன. இதனையடுத்து நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் கொண்ட சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் இருக்கிறது.நிலம் வீடு தொடர்பான பிரச்சினைகளால் தவிப்பவர்கள் இந்தச் சக்கரங்களின் கீழ் நின்று இறைவனை வழிபட்டால் அவர்களின் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் என்பது நீண்டகால நம்பிக்கையாகும்.

பரிகாரம்:இவ்வாலயத்தில் ராகு தனது மனைவி சிம்கிகையுடன் இருக்கும் தனிச் சன்னதியும் கேது தனது மனைவி சித்ரலேகாவுடன் இருக்கும் தனிச் சன்னதியும் அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருக்கின்றன.இங்கு ராகு கேது இருவரும் தங்களுடைய உண்மையான உருவத்துடன் இருக்கின்றனர் என்பது தனிச் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில் மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை இவர்களது சன்னிதியில் நாக தோசப் பரிகார வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. நாக தோசம் இருப்பவர்கள் ராகு கேது தோசம் இருப்பவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தல விருட்சம்:செண்பகம்
தீர்த்தம்:உத்தரவாகினி

அருள்மிகு ஞானாம்பிகை அம்பாள்
திருவடி மலரடி போற்றி போற்றி
அருள்மிகு காளத்தீசுவரர் சுவாமி
திருவடி மலரடி போற்றி போற்றி
அருள்மிகு ஆறுமுகப் பெருமான்
திருவடி மலரடி போற்றி போற்றி

கோவில் அமைவிடம்:தேனியில் இருந்து கம்பம் செல்லும் வழியில் 24 கிலோமீட்டர் தொலைவில் உத்தமபாளையம் பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில் கோவில் அமைந்திருக்கிறது.

தரிசன நேரம்:காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை,மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை

முகவரி:நிர்வாக அதிகாரி,
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோவில்,ஞானாம்பாள் கோவில்நகர்,தென் காளகஸ்தி,
உத்தமபாளையம் வட்டம்,தேனி – 625533.தொடர்புக்கு: 04554 275577

கருத்துகள் இல்லை: