வியாழன், 19 நவம்பர், 2020

அருள் மிகு வள்ளலார் கோவில்

அருள் மிகு வள்ளலார் கோவில்
 
மூலவர் : வள்ளலார்
தீர்த்தம் : தீஞ்சுவை தீர்த்தம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : வடலூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
 



திருவிழா : 1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் இங்கு ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.      
             
தல சிறப்பு:வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.      
             
திறக்கும் நேரம்:காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.     
           
முகவரி:அருள்மிகு வள்ளலார் திருக்கோயில் , வடலூர் - 607303. கடலூர் மாவட்டம்.போன்:+91- 4142- 259 250, 94865 47041.     
            
பொது தகவல்:சென்னை கந்தகோட்டம், திருத்தணி,திருவொற்றியூர் வடிவுடையம்மன், சிதம்பரம்உள்ளிட்ட கோயில்களை வள்ளலார்தரிசித்துள்ளார்.

பிரார்த்தனை:நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீஞ்சுவைதீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்;பிரார்த்தனை:நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.     
            
தலபெருமை:    142 வருடங்களாகஅணையாத அடுப்பு: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இது 21 அடி நீளம், 2.5 அடி அகலம் மற்றும் ஆழம் கொண்டது.இந்த அடுப்பை அணைக்கவே கூடாது என்பதற்காக, இங்கு தீப்பெட்டியே வாங்குவதில்லை. இரவு வேளையில் சமையல் செய்யாத வேளையிலும் கூட, நெருப்புஅணையாமல் இருக்க, பணியாளர் ஒருவர் விறகுகளை இடுவார்.  அன்னதானம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, 142 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுதயாரிக்க அரிசி, உப்பு பக்தர்கள் மூலமாகவந்துவிடுகிறது. தினமும் காலை 6 மற்றும் 8 மணி, பகல் 12, மாலை 5 மற்றும் இரவு 8 மணி என ஐந்து முறை அன்னதானம் நடக்கிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம்நடக்கும்.

திருக்காப்பிட்ட அறை : வள்ளலார் வடலூர் அருகில் மேட்டுக்குப்பத்திலுள்ள சித்தி வளாகத்தில், 1873 அக்டோபரில் சன்மார்க்க கொடியேற்றி, அடியார்களுக்கு பேருபதேசம் செய்தார். சில நாட்களுக்குப்பின் சித்தி வளாகத்தில் ஒரு தீபம் வைத்து, அந்த ஜோதியை இறைவனாக வழிபடும்படி அறிவுறுத்தினார். 1874, தை 19ல், சித்தி வளாகத்திலுள்ள அறைக்குள் சென்றவர், அருட்பெருஞ்ஜோதியுடன் இரண்டறக் கலந்தார். இந்த அறை, "திருக்காப்பிட்ட அறை' எனப்படுகிறது. தைப்பூசம் முடிந்த இரண்டாம் நாளன்று இந்த அறை திறக்கப்படும். அன்று சத்திய ஞானசபையில் இருந்து, வள்ளலார் இயற்றிய திருஅருட்பாவை ஒரு பல்லக்கில் எடுத்துக்கொண்டு, திருக்காப்பிட்ட அறைக்கு கொண்டு செல்வர். மதியம் 12 மணிக்கு அறை திறக்கப்படும். மாலை 6 மணி வரையில் பக்தர்கள் ஜன்னல் வழியாக, வள்ளலார் சித்தியடைந்த அறையைத் தரிசிக்கலாம்.

வள்ளலாரின் கையெழுத்து: சத்திய தருமச்சாலையிலுள்ள வள்ளலார் சன்னதியில், அவரது விக்ரகம் இருக்கிறது. கடுக்காய் மையில் அவர் எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் புத்தகம், அவர் ஏற்றிய ஜோதி மற்றும் ஞான சிம்மாசனம் ஆகியவை இங்கு உள்ளன.

மீசை வைத்த வள்ளலார் : வள்ளலார், கருங்குழியில் திருவேங்கடம் என்பவரின் வீட்டில் ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். இங்குதான் திருஅருட்பாவின் முதல் நான்கு திருமுறைகளை வெளியிட்டார். வள்ளலார், வெளிச்சத்திற்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு, இரவு நெடுநேரம் எழுதுவார். ஒருசமயம் திருவேங்கடத்தின் மனைவி, நீர் ஊற்றிய எண்ணெய் கலயத்தை வள்ளலார் அருகில் வைத்துச் சென்று விட்டார். வள்ளலார் அத்தண்ணீரை விளக்கில் ஊற்ற அது அணையாமல் எரிந்தது. வள்ளலார், கருங்குழியில் வசித்தபோது மீசையுடன் இருந்ததன் அடிப்படையில், இங்கு மீசையுடன் காட்சி தரும் வள்ளலார் படம் வைத்துள்ளனர்.

நித்ய அன்னதானம்: கருங்குழியிலிருந்து மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் தீஞ்சுவை நீரோடை இருக்கிறது. தண்ணீர் பஞ்சம் இல்லாதிருக்க வள்ளலார் உருவாக்கிய ஓடை இது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொள்கிறார்கள். இதற்கு அருகில், "வள்ளலார் தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை' இருக்கிறது. இங்கு எந்த நேரத்திலும், எவ்வளவு நபர்கள் வந்தாலும் தொடர்ச்சியாக அன்னம்பரிமாறப்படுகிறது.

பசியாறும் பறவைகள்: மருதூரில் ராமலிங்க அடிகளார் பிறந்த வீட்டில், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை ஓவியங்களாக வைத்துள்ளனர். இம்மண்டபத்தில் நெற்கதிர்கள்,தானியங்களை கட்டி தொங்க விட்டிருக்கின்றனர். இங்கு வரும் பறவைகளும்கூட, பசியாற வேண்டுமென்பதற்காகவே இந்த ஏற்பாடு. சத்திய தருமச்சாலையில் சமைக்கப்படும் உணவு, முதலில் காகங்களுக்குவைக்கப்பட்ட பிறகே பக்தர்களுக்கு பரிமாறப்படும்.

ஆதரவு மையம்:  தருமச்சாலை அருகில், வள்ளலாரின்சீடர் கல்பட்டு ஐயா ஜீவசமாதி இருக்கிறது. அந்திமக்காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கு ஆதரவு மையம்செயல்படுகிறது. இவர்களை தாய்மைஉள்ளத்துடன் பராமரிக்கிறார்கள். வள்ளலார் கூறிய மந்திரமான, "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி' எனச்சொல்லி இங்கு வழிபடுவது விசேஷம். வள்ளலாரின் மாணவர் தொழூர் வேலாயுதம்,ஒளியான அருளைத் தரும் வள்ளல் என்ற பொருளில், "திருஅருள்பிரகாச வள்ளலார்' எனக் குறிப்பிட்டார். இதன் பிறகே இவருக்கு, "வள்ளலார்' என்ற பெயர் ஏற்பட்டது. மனிதன் தினமும் 21 ஆயிரத்து 600 முறை சுவாசிப்பதன் அடிப்படையில் சத்திய ஞான சபையைச் சுற்றிலும் இதே எண்ணிக்கையில், கண்ணிகள் தொடுக்கப்பட்ட சங்கிலி கட்டப்பட்டுள்ளது. அனைத்து தீபங்களுக்கும், தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வள்ளலாரின் உண்மையான படம் எடுக்கப்பட்டதில்லை. ஜோதி தேகமான அவர் வெண்மையானவஸ்திரம் அணிந்திருந்ததை கருத்தில் கொண்டு,தற்போதிருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தல வரலாறு:தாயின் குணம் : கடலூர் மாவட்டம், மருதூரில் வாழ்ந்த ராமைய்யா, சின்னம்மை தம்பதியின் மகனாக 1823ம் ஆண்டு பிறந்தவர் ராமலிங்கம். தினமும் ஒரு அடியாருக்கு அன்னமிட்ட பிறகு சாப்பிடுவது சின்னம்மையின் வழக்கம். தாயின் இந்த குணம், பிள்ளைக்கும் ஏற்பட்டது. இதுவே பிற்காலத்தில் அவர் ஏழைகளுக்கு அன்னமிடும் சேவை செய்ய தருமச்சாலை அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

எண்கோண வடிவ சபை: இறைவன் ஒளி வடிவில் அருளுகிறார் என்பதை உணர்த்த வடலூரில் வள்ளலார் சத்திய ஞான சபையை உருவாக்கி னார். எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று அமைந்த இச்சபையின் முன்பகுதியில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. தினமும் காலை 11.30 மணி மற்றும் இரவு 7.30க்கு நடக்கும் பூஜையின் போது இந்த தீபத்துக்கும், இதன் பின்புறமுள்ள திரைகளுக்கும் பூஜை நடக்கும். பின்பு, முன் மண்டபத்திலிருக்கும் சிற்சபை, பொற்சபையில் தீபாராதனை செய்யப்படும். ஞானசபையின் நுழைவு வாயிலில், "புலை கொலை தவிர்த்தோர் மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும்' (மாமிசம் உண்ணாதவர்கள்) என்று எழுதப் பட்டிருக்கிறது. அசைவத்தை நிறுத்த விரும்புவோர் இதனுள் சென்று வருகின்றனர். இச்சபையில் வள்ளலார் இயற்றிய "அருட்பெருஞ்ஜோதி அகவல்' பொறிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்:    அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளலார் 1867, மே 23ல் இங்கு தருமச்சாலை அமைத்து அன்னதானத்தை துவக்கினார். இதற்காக அவர் ஏற்றி வைத்த அடுப்பு, தற்போது வரையில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை: