செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அம்பாளை விட மங்கள வஸ்து ஒன்றும் இல்லை

அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை. ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார்.

மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்?  இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கூறுகிறார்.

காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள். சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன.

பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை வைர ஒலை என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.

அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம். மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது.அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா!என்கிறார் ஆசாரியாள்.

 திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனி தாடங்க மஹிமா என்கிறார்.
விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான்.

வேத வாக்கியமான ஸ்ரீ ருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது. ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது.

 கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.


கருத்துகள் இல்லை: