செவ்வாய், 22 செப்டம்பர், 2020

பராசர பட்டர்


 பராசர பட்டர்!

எம்பெருமானார் எதிராஜர், உடையவர், பாஷ்யக்காரர், பெரும்பூதூர் முனிவர் என்று ஆறாத அன்பினால் அடியார்கள் போற்றும் ஸ்ரீராமானுஜரின் பவித்திரமெனப் போற்றப்பட்டவர் கூரத்தாழ்வான். கூரம் என்ற ஊரில் சிற்றரசர் போல் செழிப்புடன் வாழ்ந்தவர். அவருக்கேற்ற குணவதியான பத்தினி ஆண்டாள். பவிஷ்யாச்சாரியார் என்று அடையாளம் கண்டு போற்றப்படும் சிறப்பினுக்குரிய லட்சுமணமுனி யான திருப்பாவை ஜீயரின் குணப்பண்புகளில் உளம் தோய்ந்து, பக்தியினால் ஆழங்கால் பட்டு அவரையே தன் ஆசாரியனாக வரித்து அவர் சரண் புகுந்தார் கூரத்தாழ்வான். தன் சுகபோகங்கள் அனைத்தையும் மனைவியுடன் இளையாழ்வாரேசரண் என்று வந்தடைந்தவர் ஆழ்வான்.

ஓரிரவு நகர்வலமாக வந்த கூரத்தாழ்வான், ஒரு வீட்டில் நடந்த துயரமான வாக்குவாதங்களைக் கேட்க நேர்ந்தது. ஆண்டாளை மணந்து கொள்பவன் முதல் இரவில் மரித்து விடுவான் என்று அவள் ஜாதகத்தில் இருந்ததால், அவளது திருமணம் தடைபட்டுவந்தது. காலமெல்லாம் கண்ணீருடன் தன் அருமை மகள் வருந்துவதைச் சகியாது அவளது பெற்றோர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் கடைசி முடிவுக்கு வந்து விட்டனர். மறுநாள் கூரத்தாழ்வான் அவர்களை வரவழைத்து ஆண்டாளைத் தான் மணமுடித்து அவளை மகிழ்ச்சியோடு வாழ வைப்பதாகக் கூறி, பலவிதங்களிலும் அவர்களைச் சமாதனப்படுத்தி, ஸ்ரீஎம்பெருமான் ஸ்ரீமந்நாராயணனை,

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொழிந்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முன் மேவினார்!
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே.

என்று உறுதிபூண்டு, ஒத்தொவ்வாத பல் பிறப்பையும் அளித்து ஆட்கொள்வன்- அவன்தானே! என்று ஞானத்தால் தேறி ஆண்டாளை தன் துணைவியாக ஏற்றார். எம்பெருமானின் அருளால் இந்த திவ்விய தம்பதிகள் 80 பிறை கண்டு நிறைவாழ்வு வாழ்ந்தனர். ஒருமுறை உணவு இடுவதற்கு முன் வாழை இலை வெட்டியபோது வாழை இலை வெட்டிய இடத்திலிருந்து நீர் வருவதைக் கண்டு, கண்ணீர் விட்டு அழுதார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாருக்கு இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் வாத்ஸல்ய பாவத்தில். ஒரு மழை காலத்தில் வெளியில் பிட்சைக்கு போகாமல் இரவில் கண்ணயர தர்மபத்தினியான ஆண்டாள் ஒருக்கணம் எண்ணினால், ஏவலர்கள் எடுபிடியாக ஏவல் செய்ய, தங்கத் தட்டில் பலவிதமான உயர்ந்த உணவு வகைகளை உண்டுகளித்த என் கணவர் இன்று பட்டினியோடும் படுக்க நேர்ந்ததே! ரங்கா, உன் பக்தன் பட்டினி புலம்பவும் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அரங்கன் அர்ச்சாரூபமாக ஆழ்வானுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்க உத்திரவிட, அதன்படி உத்தமநம்பிகள் என்பவர் பெருமாள் பிரசாதங்களுடன் ஆழ்வான் இல்லத்துக்கு வந்து பிரசாதங்களைத் தந்தார்.

ஆழ்வான் ஆண்டாளை அழைத்து நீ ஏதாவது பெருமானிடம் குறைப்பட்டுக் கொண்டதுண்டோ என்று வினவ, நீங்கள் பசியோடிருப்பதைக் கண்டு மனம் பொறாமல், நான் பெருமானிடம் முறையிட்டது உண்மைதான் என்று கூறி மன்னிப்பு வேண்டினாள். ஆழ்வான் அந்த அமுதத்தை மூன்றில் ஒரு பங்கு கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு தானும் ஒரு பங்கை உண்டு உறங்கச் சென்றார். ஆண்டாள் எம்பெருமானின் அருளால் கருவுற்று இரண்டு ஆண்மகவுகளைப் பெற்றெடுத்தாள். ஆழ்வானும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு நாமகரணம் செய்ய ஆசாரியனை வேண்டினார். எம்பார் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வர வேதவியாச பட்டர், பராசர பட்டர் என்னும், திருநாமங்களை எதிராசன் சூட்டி மகிழ்ந்தார். வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த சிசுக்களில் பராசரபட்டர் என்ற குழந்தையை ஸ்ரீரங்கநாதர் தமது சுவிகாரபுத்திரனாக ஏற்றுக் கொண்டார்.

விளையும் பயிர் முளையிலே தெரியும் என்றபடி பட்டர் ஐந்து வயதிலேயே திருவாய்மொழியில் வரும் சிறு மாமனிசர் என்ற பதத்தைக் கூறி சிறு என்பது சிறியது. மா என்றால் பெரியது. எப்படி எதிர்மறையான இவை ஒருவரிடம் ஒன்றாகப் பொருந்தியிருக்கும்? என்று பட்டர் கேள்வி கேட்டபோது வியப்படைந்த தந்தை கூரத்தாழ்வான் அதற்குரிய விளக்கங்களையும் எடுத்துக் கூறினார். ஆகிருதியில் (உருவத்தில்) பெரியவராக இருப்பவரை அப்படிக் கூறி வணங்குகிறோம் என்று கூறினார். ஒரு சமயம் மற்ற பையன்களுடன் மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது சர்வக்ஞபட்டர் என்பவர் பல்லக்கில் பவனி வந்து கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் விருதுகள் சொல்லிக் கொண்டு பின்னே வந்தனர். பட்டர் தன் சிறு கரங்களில் மண்ணை அள்ளி வைத்துக் கொண்டு இதற்குள் எவ்வளவு மண் இருக்கிறது என்று கூற முடியுமா? என்று கேட்க, சர்வக்ஞரும் சிரித்து விட்டு பதில் பேசாதிருந்தார். பையன் ஒரு கைப்பிடி மண் என்று கூறத் தெரியாமல் சர்வக்ஞர் பட்டர் என்று பெயர் கொண்டு, செல்லுதல் தகுமோ? என்று கேட்கவும் பையன் யார் குழந்தை என்று விசாரித்து மகிழ்ந்து பல்லக்கில் ஏற்றி வீட்டுவாசலில் இறக்கி விட கண்ணே என்று ஆண்டாள் உட்சென்று திருஷ்டி கழித்தார்.

மகாபுத்திசாலியாகவும், ஏகசந்தக்கிரகியாகவும் (தன் தந்தையைப் போல) விளங்கிய பட்டருக்கு ஆழ்வானும் எம்பாருமேவேதம் முதல் அனைத்து சாஸ்திரங்களையும் கற்பிக்க எதிராஜர் நியமனம் செய்தார். ஒரு சமயம் பட்டர் பகவத் சந்நிதியில் திரைசாத்தியிருக்கும் போது, நெருங்கி சமீபம் வரும் ஒரு குரல் யாரது? வெளியே போ என்று ஆணையிட பட்டரும் உடன் விலகி வெளியே வந்து விட்டார். சில நொடியில் மீண்டும் யாரது பட்டரா? உள்ளே வர வேண்டும் என்று குரல் ஒலித்தது. வெளியே போம் என்று சொன்னபோது நினைத்ததென்ன? என்று பெருமாள் வினவ, இன்று பகவானும், பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன். இதற்கு முன் நினைத்தது என்ன? என்று விடாப்பிடியாக எம்பெருமானும் வினவ, ஆழ்வானும் ஆண்டாளுமாக எண்ணினேன் என்றார் பட்டர். பட்டரே இது நம் ஆணை எப்பொழுதும் இதுபோலவே நினைத்து இருக்கக்கடவீர் என்று நியமித்தருள, பட்டர் பெருமாளின் சத்புத்திரர் என்ற விஷயம் மேலும் உறுதியாயிற்று.

பட்டருக்கு வயது வந்தவுடன் விவாகம் செய்து வைக்க எண்ணினார் ஆழ்வானும் ஆண்டாளும் பெரியநம்பிகள் <உறவினரின் பெண்ணை பராசரபட்டருக்கு திருமணம் முடிக்க அவர்கள் முனைந்தபோது, புது சம்பந்தமாக இது இருப்பதால் எனக்கு சம்மந்தமில்லை என்று பெண்ணைப் பெற்றவர் மறுத்துவிட்டார். ஆண்டாள் மனம் நொந்து பெருமாளிடம் விண்ணப்பம் செய்தாள். ஆழ்வான் நிச்சிந்தையாக ஈச்வரனின் குடும்பக் கவலைகளை ஏன் இழுத்துப் போட்டுக் கொண்டு, கவலைப் படுகிறாய்? எல்லாம் எம்பெருமானே பார்த்துக் கொள்வார் என்று கூறிவிட்டார்.

அன்று இரவே, அரங்கன் பெண்ணைப் பெற்றவர் கனவில் தோன்றி உமது இரண்டு பெண்களையும் பட்டருக்கே மனம் முடியுங்கள், பட்டர் என்னுடைய ஸ்வீகாரப்புத்திரன் என்பதால் எங்கள் குலமரபுப்படி, உபயநாச்சியாரோடு இருக்கும்படித் திருக்கல்யாணத்தை முடித்து வையுங்கள் என்றார். அதன்படி தனது இரு குமாரத்திகளையும் பட்டருக்கே துணைவியாகத் திருமணம் செய்து மகிழ்ந்தார். ஆழ்வான் பட்டினி கிடந்து அன்று நாம் அனுப்பிய பிரசாதத்தை உண்ட இந்த தம்பதிகள் நமது சங்கல்பத்தால் இரண்டு குமாரர்களைப் பெற அவற்றில் ஒன்றை நமக்காக்கிக் கொண்டோம் என்று உகப்புடன் பெருமாள் கூறிய செய்திகள் அனைத்தையும் எதிராஜர் சந்நிதியில் ஆழ்வான் விஞ்ஞாபனம் செய்ய குருநாதரும் அகமகிழ்ந்தார்.

ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் பட்டரை எதிர்கொண்டு அரங்க நகரப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்கள். அரங்கனை மங்களாசாசனம் பண்ணிய பின் மாலை பரிவட்டம் முதலிய மரியாதைகள் செய்து அவர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். தாயாகிய ஆண்டாளைச் சேவித்து ஆசி பெற்ற பின் எப்பவும் போல, சிஷ்யர்களுக்கு தர்சன கிரந்த <உபதேசங்களைச் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் கங்கோத்தரியில் வேதாந்த மார்க்கம் மாறியபின் பரம வைஷ்ணவரான பட்டர் திருவடிகளே கதியெனயிருந்த தானிஜ், ஒருநாள், இரண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் மிகுந்த பசியோடு அவர் கிருஹத்திற்குச் செல்ல, உணவிட மறுத்த அவரது மனைவிமார்கள் அங்கு அன்னமில்லை நீராடும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கே உங்கள் வேதாந்தி இருக்கிறார் என்று நிஷ்டூரமாகச் சொல்ல, வேதாந்தி மனம் கலங்கினார். தமது சொத்துக்களை மூன்று பாகமாக்கி அதில் இரண்டு பங்கை தன் மனைவியர் இருவருக்கும் தந்து விட்டு தன்னுடைய பங்கை ஓர் ஒட்டகத்தில் ஏற்றிக் கொண்டார்.

சன்யாச ஆசிரமத்தையும் ஏற்றுக் கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் சிறுபுத்தூருக்கு எழுந்தருளினார். பரமபாகவத சிகாமணியான அனந்தாழ்வான் முன்பு பட்டரை எதிர்கொண்டது போலவே இவரையும் எதிர் கொண்டு வரவேற்றார். ஸ்வாமி சுகுமார மனோகரனாக இருந்த தேவரீர் இப்படிச் செய்யலாமே? வேர்த்தபோது நீராடி, பசித்தபோது அமுதுண்டு. பட்டர் திருவடிகளே சரணம் என்று இருந்ததால் உம்மைப் பரமபதத்திலிருந்து தள்ளி விடுவார் உண்டோ? என்று கேட்டு அளவளாவி உணவிட்டு உபசரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.வேதாந்தி தனது மூட்டை முடிச்சுகளுடன் பயணகதியில் பட்டர் திருமாளிகை அடைந்து தனது குரு நாதரைத் தண்டனிட்டு, தான் கொண்டு வந்த தனங்களை அவரது திருவடிகளில் சமர்ப்பித்தார். பட்டர் இதெல்லாம் என்ன? என்று கேட்டார். வேதாந்தி வீட்டு விஷயங்களையெல்லாம் விஸ்த்தாரமாக எடுத்துக்கூறி பசியோடு வந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்னம் மறுக்கப்படும்போது, அந்த கிருகஸ்தாஸ்ரமத்தில் என்ன பயன் என்று தேடி அவர்களின் பங்கை அளித்து விட்டு அடியேன் துறவு பூண்டு வந்துள்ளேன் என்று விண்ணப் பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். அதை ஸ்வாமியின் திருவுள்ளப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று விண்ணப்பித்தார். வேதாந்தியும் அவ்விதம் செய்ய அந்தத் திரவியம் சீண்டுவாரின்றி அங்கே போட்டபடியே கிடந்தது. ஒரு நாள் பட்டர் நீராடச் சென்றபோது, இந்தத் திரவியக் குவியல் ஏது? என்று வினவ, வேதாந்தியும் விபரம் கூறினார்.

இந்தத் திரவியம் கொண்டு நந்தவனம் அமைத்து, மேற்கொண்டு பணம் இருந்தால், ததியாராதனம் செய்யக்கடவீர் என்று நியமிக்க அதன்படி நந்தவனம் அமைத்து பகவானுக்கு ததியாராதனம் செய்து வந்தார். அவரது குருபக்தியையும், வைணவ நெறியின் பால் கொண்டிருந்த எல்லையற்ற பக்தி விசுவாசமும் கண்ட பட்டர் அவரை அன்போடு அணைத்து நம் ஜீயர் என்ற நாமம் சூட்டினார். அவரை எக்கணமும் தம்முடன் பிரியாமல் இருக்க பணித்து சகல சாஸ்திரங்களையும் குளிரக் கடாக்ஷித்து, பட்டரைப் பற்றிக் கூறும்போது நஞ்சீயர் பட்டர் பிரபாவமும் நஞ்சீயரைப் பற்றி நவிலும் போது பட்டரின் ஆசாரிய விசேஷமும் வெளிப்படுகின்ற அதிசய குருபரம்பர வைபவமாகும். நஞ்சீயர் ஒருமுறை ஒரு சந்தேகம் கேட்டார். நம் பெருமாள் இங்கே சந்திரப்புஷ்கரணிக்கரையிலே கண் வளர்கிறாரே அதன் திருவுள்ளக்கிடக்கை என்ன வென்று, பட்டர் மறுமொழி பகர்ந்தார். நாராயணா, மணிவண்ணா என்று கூக்குரலிட்டபின் கஜேந்திரனைக் காக்க எழுந்தருளி வந்தார் எம்பெருமான். இங்கே நான் கூப்பிடுவதற்கு முன்னாலேயே தயாராக அவர் ரட்சகம் செய்யக் காத்துக் கண்வளர்கிறார் என்றார்.

பின்னொரு சமயம் பட்டரும் நஞ்சீயருடன் சேதுஸ் நானம் செய்ய எண்ணினார். செல்லும் வழியில், ஓர் இரவு களைப்பு மிகுதியினால் பட்டர் நஞ்சீயரின் மடியில் தலை வைத்து கண் துயின்றார். குருநாதர் தூக்கம் கெடுக்கக் கூடாது என்பதற்காக நஞ்சீயர் கால் களையோ உடம்பையோ சிறிதும் அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு சிஷ்யன் தன் ஆசானிடம் எப்படியிருக்க வேண்டுமென்ற உதாரண புருஷராயிருந்தார். ஆளவந்தாருக்கு ராமானுஜமுனி ஏகலைவன் என்று எம்பார் ஒருமுறை கூறியது இங்கும் பொருத்தமாக (வேறு ஒரு பொருளில்) பட்டரின் ஏகலைவனாக நஞ்சீயர் திகழ்ந்தார் எனலாம். கூரகுலோத்மம் என்ற ஊரிலே பட்டர் ஒரு சமயம் தங்கியிருந்தபோது அங்கு கூரகுலோத்மதாசரின் நந்தவனத்தில் பட்டரின் குடும்பத்தார் புழங்க, அதைப் பராமரிக்கும் காவலர்கள் அதைத் தடுத்தனர். அதைக் கேட்ட கூரகுலோத்தமதாசர் (இவர் கூரத்தாழ்வாருக்கும் பட்டருக்கும் சிஷ்யராக இருந்த பெரியவர். இந்த நந்தவனத்தை ஏற்படுத்தி நிர்வகிப்பவர். ஏகாங்கிகளை கோபித்து இது முற்றிலும் ஆசாரியர் குடுப்பத்தின் உகப்பிற்காகவே உள்ளது பட்டர் விரும்புவதால் பெருமாள் கைங்கரியத்துக்கும் பயன்படுகிறது என்று கூறினாராம். (வார்த்ததாமாலை-177ம் வார்த்தை)

திரிபுவன வீரதேவன் என்கிற காஞ்சிமன்னர் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தமது அரண்மனைக்கு வந்து போகுமாறு தன் விருப்பத்தைத் தெரிவிக்க பட்டரும் அன்புடன் சிறிய பதிலை அந்த மணிப்பிரவாளத் தமிழிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன். திரிபுவன வீரதேவன் பட்டருடைய சபிஜாத்யம் கண்டு நீர் நம் பக்கல் ஒருநாள் வந்து போவீர் என்று அபேக்ஷிக்க பள்ளி கொள்ளுகிறவர் கை மறுத்தால், உன்னுடைய வாசலொழியப் போக்குண்டோ? என்றருளினார். எவ்வளவு சமத்காரமான பதில்கள். அரங்கன் கைவிட்டு விட்டால், நீதானே கதி என்று உயர்த்துவது போல் மன்னனைக் கூறி தனது மறுப்பையும் அதிலேயே தெரிவித்த நேர்த்தி, குரு மணிக்கு மேல் பதக்குண்டு என்று கூறிய கூரேசரின் அருமைப்புதல்வரல்லவா பட்டர்?

குருபரம்பரா பிரபாவத்திலும், வார்த்தா மாலையிலும் இடம்பெற்றுள்ள ஸ்ரீவைஷ்ணவ லட்சணத்தைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வது சுவையானது. பட்டரை ஆச்ரியித்த ஆர்வமுடைய ஸ்ரீவைஷ்ணவரை நோக்கி, நீர் அனந்தாழ்வானிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் இருக்கும்படி என்ன வென்று தெரிந்து வாரும் எனப் பட்டர் ஆக்ஞாபித்தார். அந்த அடியாரும் அதைச் சிரமேற் கொண்டு அனந்தாழ்வான் திருமாளிகைக்குச் செல்ல அப்பொழுது ததியாராதனை நடைபெற்று வந்தது. வந்தவர் பெருமையுடன் ஒரு பக்கம் காத்திருந்தார். பந்தி முடிந்தவுடன் வந்த விருந்தினரை ஆழ்வான் உள்ளே அழைத்துச் சென்று அன்புடன் அமுது படைத்து விபரம் கேட்டார். வைணவர் நான் பட்டரால் அனுப்பப் பட்டேன் என்றும் வைஷ்ணவ லட்சணங்களைக் கேட்டு உம்மிடம் தெரிந்து வரச் சொன்னார். ஆசாரியர் பவ்வியமாக மொழிந்தார்.

அனந்தாழ்வான் ஒரு புன்முறுவலுடன் இது மொழிந்தார். கொக்கு போல, கோழி போல, உப்பு போல உம்மைப் போல இருக்கும் என்று அவரிடம் விண்ணப்பம் செய்யுமென்று அருளினார். இதன் பொருள் நீர்க்கரையில் நின்று கொண்டிருக்கும் கொக்கு தனக்கு ஏற்ற மீனுக்காக காத்திருக்குமாப் போல, நீர் வண்ணனிடம் ஆசார அபசாரங்களை ஒதுக்கி, பாகவத கைங்கரியமென்ற பரம புருஷார்த்தத்தையே வைஷ்ணவன் கேட்டுப் பெறுவான். கோழி எப்படி குப்பையைக் கிளரி வேண்டாத விஷயங்களைத் தள்ளி தனக்கு ஏற்ற நெல்மணிகளையே தெரிந்து எடுத்துக் கொள்வது போல அவனும் சாஸ்திரங்களைத் துருவித் துருவி தனக்கு உரியத் தரமான ஸத் விஷயங்களையே ஸ்வீகரித்து பலன் பெறுவான்.

உப்பும் தான் சேர்ந்த உணவின் சுவையைக் கூட்டி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவது போல, ஸ்ரீவைஷ்ணவர்களும் தன்னைச் சார்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் தன்னைச் சார்ந்த அடியார்களுக்கும் ப்ரயோஜனவஸ்து வாக விளங்கித் தன்னை முன்னிருந்துக் காட்டிக் கொள்ளாமல் பாகவத சேவையில் கரைந்து விடுவர் என்றும் கூறி, அனந்தாழ்வான் இவைகளுக்கு திருஷ்ட்டாந்தமாக உம்மைப் போல் இருப்பான் என்று வந்தவரைக் குறிப்பிட்டு இந்த மூன்று நியமங்களும் பொருந்திய உத்தம ஸ்ரீவைஷ்ணவராக அவரை மேம்படுத்தி உரைத்தது மிகவும் விசேஷமாகும்.

வீரசுதந்தரபிரம்மராயன் என்கிற கூரத்தாழ்வானின் சிஷ்யன், மதில்சுவர் எழுப்பும்போது பட்டரின் ஆணையையும் மீறி, பிள்ளை பிள்ளையாழ்வான் என்கிற இன்னொரு கூரத்தாழ்வான் சிஷ்யரின் கிருஹத்தை இடித்து விட்டுக் கட்டிவிட, மனம் வருந்திய பட்டர், ஸ்ரீரங்கத்தை விட்டு திருக்கோட்டியூர் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் வீரசுதந்தர பிரம்மராயன் இறந்துவிட பட்டருடைய தாயார் ஆண்டாள் மிக வருந்தினார். ஆழ்வாரின் சம்பந்தமுடைய பிரம்மராயன் இகலோக வாழ்விலும் சுகப்படாது பரலோகத்திலும் நரகம் சென்று துன்பப்படயிருப்பதை எண்ணியே வருந்தினார். பட்டரின் சர்வக்ஞ அறிவைப் பரிசோதிக்கவே பல வித்வான்கள் கூடி, விவாதம் செய்தனர். ஆனால் வெற்றி கிடைக்காமல் தோல்வியைத் தழுவி மேலும் பட்டரைச் சோதிக்க ஒரு குடத்தில் பாம்பை விட்டு அழைத்துக் கொண்டு வந்து, இதில் என்ன இருக்கிறது என்று கேட்க, அவர்கள் குடத்தின் வாயைக் கவிழ்த்ததும் ஒரு பாம்பு வெளியே சீரிக் கொண்டு வெளி வந்தது. இது கொற்றக் குடையா? என்று கேலியாகக் கேட்டனர். பட்டர் சொன்னார். ஆம் அதிலென்ன ஐயப்பாடு? சென்றால் குடையாம் என்றல்லவா ஆழ்வார் பாசுரம் உள்ளது என்று கூறியவுடன் அவர்கள் யாவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

திரிபுவன வீரதேவன் என்ற காஞ்சி மன்னன் பட்டரின் வாக்குவன்மை மற்றும் ஆன்மீக மேன்மையை உணர்ந்து தனது அரண்மனைக்கு வந்து தமது விருப்பத்தைத் தெரிவிக்கப் பட்டரும் அன்புடன் கூறிய பதிலை அந்த மணிப்பிரவாள நடையிலே தருகிறோம் படித்துச் சுவையுங்களேன் என்றார். ஒரு சமயம் பட்டர் திரும்பும் வழியில் ஓர் வேடன் குடிலுக்கும் இருவரும் சென்றபோது, அவன் அவர்களுக்கு உபசரனை செய்தான். அப்பொழுது பட்டர் கூறினார். ஐயரே இவன் நம்மை உபசரிப்பது நம் பெருமையை உணர்ந்தோ வேறுலாபங்கள் கருதியோ இல்லை. சரண்யனான பகவான் தன் அபிமானத்தால் ஒதுங்கினவரை ஏற்றுக்கொள்ளாமல்யிருப்பானா? என்று கூறி வேடனிடம் வேறு ஏதாவது விஷயம் உண்டா எனக் கேட்டபோது அவன் கூறினான். சாமி இன்று ஓர் அதிசயம் நடந்தது. வழக்கம் போல் நான் வேட்டையாடும்போது ஒரு முயல்குட்டியைப் பிடித்து விட்டேன் என்றான் வேடன். அவர்கள் இருவருக்கும் இது ஆச்சர்யம் விளைவித்தது. மாமேகம் சரணம் வ்ரஜ என்ற இந்த முயலுக்கும் யாரும் உபதேசிக்கவில்லை. ஆனாலும் சரணாகதியும், ரக்ஷணமும், இரண்டுமே பலிதமானது. என்னே! என்று பட்டர் நஞ்சீயரிடம் கூறி சந்தோஷம் கொண்டார்.

எம்பெருமானார் நியமனப்படி பட்டர் சாரதா பீடத்திற்குச் சென்று ஸ்ரீபாஷ்யத்தை ஸ்ரீசாரதாதேவிக்கு காட்டி அவள் அனுக்கிரகம் பெற்று மீண்டதும் திரும்பி வரும் வழியில் திருவேங்கடமுடையானைச் சேவித்து வரும் வழியில் மனநிலை சரியில்லாத பெண்ளுக்கும் அனுக்கிரகம் செய்திருக்கிற செயல்களை குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. பட்டருக்கு இரண்டு தேவியர்கள். இப்படி இருபக்கமும் இருசர்ப்பங்களை வைத்துக் கொண்டு சம்சாரமாகிய கடலை எப்படி சமாளிக்கிறீர்கள்? என்று குரு பக்தர் கேலியாகக் கேட்க பட்டரும் அயராமல் அந்த இரண்டு சர்ப்பங்கள் சீறும்போது அவைகளின் செருக்கை அடக்க வானத்தில் பறக்கும் வைனதேயன் இருக்கிறான். நம்மால் ஆவதென்ன? என்று கூறி பெருமாளைப் பரவினார்.

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்திலே கைசிக துவாதசி நாளில் கைசிக புராணத்தை பட்டர் உபன்யாசம் செய்த போது பெரியபெருமாள் மிகவுகந்து திருமாலை திருப்பரிவட்டம் திருவாபரணம் இவற்றை அருளியதோடு உமக்கு நாம் மேலை வீடு தந்தோம் என்றிட, மகா பிரசாதம் என்று பட்டர் அதனை ஏற்றுக் கொண்டார். பெரிய பெருமாளையும் எம்பெருமாளையும் சேவித்து நியமனம் பெற்று தம் திருமாளிகைக்கு எழுந்தருள தாயார் அரங்கனைச் சேவிக்க, அவரும் நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் என்று ஆசிர்வதிக்க பட்டர், யாம் வேண்டுவதும் அதுவே எனக் கூறி அமைந்தார். பட்டர் திருமாளிகைக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் கூடி அமுது செய்ய பெருந்திரளாகக் குழுமினர். பட்டர் திருநெடுந்தாண்டகத்துக்கு அர்த்தம் அருளிச் செய்தார். அஞ்சிறைப்புள்ள என்கிற பாசுரத்தை அனுசந்திக்கும்போது திருவேங்கட முடையான் கருடாரூடராய் வானில் காட்சியளித்தருள, பட்டரும் ஆனந்தப்பட்டார். பறவை ஏறும் பரம் புருடா என்கிற பாசுரத்தை இருமுறை அநுசந்தானம் செய்து சிரசின் மீது கைகூப்பிக் கபாலம் வெடித்து திருநாட்டிற்கு எழுந்தருளினார். தாயார் ஓடோடி வந்து அவரைத் தாங்கிப்பிடித்தார். நஞ்சீயரும் மற்றய சீடரும் வேரற்ற மரம் போல் சாய்ந்து கண்ணீர் பெருக்கினார். ஸ்ரீராமப்பிள்ளையக் கொண்டு சரமக்கிரியைகளை முறையாக நஞ்சீயர் செய்தார். பட்டர் அருளிச் செய்த கிரந்தங்கள், விஷ்ணு சகஸ்ரநாம பாஷ்யம், அஷ்டச்லோகி, ஸ்ரீகுணரத்ன கோசம், ஸ்ரீரங்கராஜஸ்தவம் முதலியன.

கருத்துகள் இல்லை: