செவ்வாய், 22 செப்டம்பர், 2020

நவராத்திரி ஸ்பெஷல்

காளிதாசரின் குமார சம்பவம்...  சிறு குறிப்பு. [ நவராத்திரி ஸ்பெஷல் ]

பார்வதி தேவியின் மனதில் சிவபெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆழத்தை அளப்பதற்கு வந்ததுபோல். சிவபெருமானே பிரம்மச்சாரி வேடத்தில் வந்து தேவியை பரிக்ஷை செய்கிறார். அது மட்டுமல்லாமல் சிவபெருமான் மீது அன்னைக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்பை தேவியே திருவாய் மலர்ந்து அருள வேண்டும். அதைக்கேட்டு பேரானந்தம் அடைய வேண்டும் என்று நினைத்து பிரம்மச்சாரி வேடத்தில் வந்தாரோ என்று நாம் நினைக்க தூண்டுவது போல இருந்தது அவரது பேச்சு.

பிரம்மச்சாரி – பார்வதி தேவியின் வாத – பிரதிவாதங்களுக்கு இடையில் தேவி அவரின் கூற்றை இவ்வாறு ஏளனம் செய்கிறாள். சிவபெருமானைப் பற்றிய உண்மையான ஞானமும் இல்லாத நீங்கள். அவரைப்பற்றிய விஷயம் கூறுவதில் மட்டும் சிறந்து விளங்குபவரா நீங்கள். உங்களையும் அறியாமல், ஈசனைப் பற்றி ஒரே ஒரு உண்மையைக் கூறியுள்ளீர்கள்! சிவபெருமானைப் பற்றிய குலமோ, அவருடைய பெற்றோர்களைப் பற்றிய விவரமோ எதுவும் யாரும் அறியமாட்டார்கள். எனவே அவரைத் திருமணம் செய்ய நினைப்பது தவறு என்று கூறினீர்கள் அல்லவா?! அது முற்றிலும் உண்மையே!! ஏனென்றால் எந்த வேதங்கள் சிவபெருமானை, பிரம்மனுக்கே கர்த்தா: அதாவது பிரம்மனையே சிருஷ்டி செய்தவர் என்று கூறுகின்றனவோ, எந்த சிவபெருமான் இந்த உலகில் உள்ள அனைத்துக்கும் சிருஷ்டி கர்த்தாவாக இருக்கிறாரோ. அவரைப் பற்றிய, ஆதி அந்தம் இல்லாத அவரை, பெருமைப்பற்றிய குலமோ, கோத்ரமோ அறிவது என்பது இயலாத காரியம்தான்!!! ஜகத்பிதாவான அவர் இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்.

இப்படி பேசிக் கொண்டு வந்த பார்வதிதேவி. பிரம்மச்சாரியுடன் பேசி. அவருக்கு சிவனுடைய பரதத்துவத்தைப் புரிய வைப்பது இயலாத காரியம் என்பதை அறிந்து இவ்வாறு சொல்கிறாள். உங்களுடன் இப்படி விவாதம் செய்வது போதும்” நீங்கள் சிவபெருமானைப்பற்றி எப்படியெல்லாம் கேள்விப்பட்டீர்களோ அப்படியே ஒன்றுக்கூட குறையாமல் அவர் இருந்து விட்டு போகட்டும். ஆனால் சிவனின் பேரில் என் மனதில் இருக்கக்கூடிய அபரிமிதமான அன்பு. மற்றவர்களுடைய நிபந்தனையோ, பாராட்டுதலையோ கேட்டு மாறப் போவது இல்லை. எனவே இந்த வீண் வாதம் இனி தேவையில்லை.”

பார்வதிதேவி இவ்வாறு கூறிய பின்பும் தன்னுடைய கருத்துக்களை சொல்ல விழைகின்ற பிரம்மச்சாரியை அங்கிருந்து எப்படியாவது வெளியேற்ற சொல்லி தன தோழிக்கு உணர்த்துகிறாள் தேவி. பின் அதிதியாக வந்த ஒரு பிரம்மச்சாரியை வெளியேறும்படி சொல்வது முறையல்ல என்று நினைத்து. தேவி தானே அந்த இடத்திலிருந்து செல்ல முற்படுகிறாள். அதற்கான காரணத்தையும் சொல்கிறாள். பெருமானைப் பற்றி அவதூறு பேசுவது மட்டுமல்ல அதனைக் கேட்டுக் கொடிருந்தாலும் பாவம் நம்மை சேரும்” இப்படி சொல்லி அங்கிருந்து அவசரமாக வெளியேற முயற்சி செய்யும் போது. தன்னுடைய உத்தரீயத்தின் நுனியை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து மிகவும் கோபமுற்றவலாய் யாரென்று திரும்பிப் பார்க்கிறாள் தேவி. பிரம்மச்சாரி மறைந்து, சிவபெருமான் தன ஸ்வய ரூபத்தில் புன்னகையுடன் காட்சி தருவதை கண்டாள் அன்னை.

சிவபெருமானைப் பற்றி சிவபெருமானுக்கே புரிய வைக்க பாடுபட்டதையும், தன்னுடைய ஆழ்ந்த காதலை அவரிடமே தெரியப்படுத்தியதையும் எண்ணி, வெட்கம், துக்கம், சந்தோஷம், ஆனந்தம், திகைப்பு இவை அனைத்தும் ஒருங்கப் பெற்றவளாய் வெளியே செல்வதற்காக மேலே தூக்கப்பட்ட பாதத்தை கீழே வைத்து.செல்வதா அல்லது அங்கயேஇருப்பதா என்ற தடுமாற்றத்தில், காட்டாறு நடுவில் மலையினால் தடுக்கப்படும்போது. போகும் திசையறியாமல் சுழன்று சுழன்று ஆரவாரம் செய்வது போல். ஆர்ப்பரிக்கின்ற தன் மனதை அடக்க முடியாமல் சந்தோசத்தில் செய்வதறியாமல் நின்றாள் பார்வதி தேவி!!!

“ ஹே தேவி!! நான் இன்று முதல் உனது அடிமை! உன்னுடைய தவத்தினால் என்னை வென்று விட்டாய்” என்று சொல்லும் பிறைச்சந்திரனை தலையில் சூடிய பெருமானின் வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் அவரை அடைய தான் பட்ட எல்லா கஷ்டங்களுக்கும் பலன் கிடைக்கப்பெற்று மீண்டும் புத்துணர்ச்சி அடைந்தாள் பார்வதி தேவி!! இப்படி சொல்லும் பொருளும் போல் என்றும் சேர்ந்தே இருக்கின்ற சிவனும், பார்வதியும் நம் எல்லோரையும் காக்கட்டும்!!


கருத்துகள் இல்லை: