வியாழன், 5 செப்டம்பர், 2019

நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் படிப்பவரின் கண் கலங்க வைக்கும் சம்பவம் என்றால் அது மிகையில்ல.

பத்தாவது வயதில்… சிறுவனாக இருக்கும்போதே மஹா பெரியவாளிடம் சேர்ந்து அவருடனேயே இருக்கின்ற பாக்கியத்தைப் பெற்ற ஸ்ரீபட்டு சாஸ்திரிகள். ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி பக்த ஜன டிரஸ்ட்டை நிறுவி வருடந்தோறும் காஞ்சிப் பெரியவருக்கு உத்ஸவ விழா எடுத்து வருகிறார். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் வைகாசி மாத அனுஷ நட்சத்திர நன்னாளில் துவங்கி 15 நாள் நடைபெறும் இந்த உத்ஸவத்தைக் காண தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர்.

லக்ஷ்மி நாராயணனைத் தொடர்ந்து… காஞ்சி மகான் பற்றிய சில அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஸ்ரீபட்டு சாஸ்திரிகள்:

”மஹா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மஹா பெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.அதோட நிக்காம ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மஹா பெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்த படி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும் பஞ்சலோகத் திரு மேனி பண்றதுக்கு எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணிணார்கள் பக்தர்கள்.அப்புறம் மஹா பெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க சுவாமி மலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மஹா பெரியவாள் மேல் ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும் மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான் அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).

இந்த நேரத்துல கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள் கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ் குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர் காஞ்சி மஹா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலை மஹா  பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ் குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார் கிட்டயும் நான் ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. ஆனா எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து மஹா பெரியவாளே சொல்லிருக்கார்னா பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! சுமார் பத்து வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!பணம் கைக்கு வந்ததும் வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி சுவாமி மலையில ஸ்ரீஸ்வாமி நாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு வடவாம்பலம் வழியா வந்து அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு தீபாராதனை காட்டினோம்.பூஜையெல்லாம் முடிச்சுட்டு வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசை வேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த்தனை செஞ்சுட்டு தான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்க கிட்ட வந்த அந்தக் அவர் ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப அவர் சொன்ன வார்த்தைகள் எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மஹா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க நல்லாவே நகரும்னார். அதோட நிக்காம எங்களோட அவரும் சேர்ந்து ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மஹா பெரியவா சாதாரணமானவரா என்ன? அவர் மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திரு உருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மஹா பெரியவாளுக்கு கோயில்ங்கறது பக்தர்களோட கோரிக்கை தான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார் பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மஹா பெரியவா கருணா மூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள் அப்படியே வணங்கித் தொழுதார்.

கருத்துகள் இல்லை: