ஞாயிறு, 28 ஜூலை, 2019

பிரம்மஹத்தி தோக்ஷம் என்றால் என்ன ?

ப்ரம்ஹத்தை அறிந்துணர்ந்தவனை கொல்வதால் பிரம்மஹத்தி தோக்ஷம் தொற்றிக்கொள்கின்றது !

பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார்.

அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்த பிறகு இறைவனே எடுத்து கொள்வார். இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர். அப்படிப் பழிவாங்கும் போது சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும் இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர். ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்த பாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி தோஷம் என்பதாகும்.

ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதா பிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே இராவணனை வதம் செய்தார் ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார். எனவே பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும் பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால் அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் குருவுடன் இணைந்தாலோ குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை, கல்வித் தடை, சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை, கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும். இது போன்ற நிலையில் பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம்.

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்தனர். பைரவர் – பிரம்மனின் தலையை கொய்தமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. சப்தகன்னியர் – மகிசாசுரன் எனும் அரக்கனை கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. வீரசேனன், வரகுண பாண்டியன் – பிராமணனைக் கொன்றமையால் பிரம்மஹத்தி தோசம் ஏற்பட்டது. நாம் வணங்கும் பல இறைவன்கள் அசுரர்களை கொன்றதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்து பின் அதற்கு பரிகாரம் தேடியதாக பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த பிரம்மஹத்தி திருப்பூர் அருகிலுள்ள திருமுருகன் பூண்டி கோயிலில் கல் வடிவில் இருக்கிறது. சூரனைக் கொன்று அதனால் தோஷம் பிடித்த முருகன் இத்தலத்தில் சிவபெருமானை வணங்க பிரம்மஹத்தி அவரை விட்டு நீங்கி கல்லாக மாறி இத்தலத்தில் நிற்கிறார் என்பது ஐதீகம்.

விடைமருதூர் வாழீசா வல்வினைகள்போக்கி வாழ்வளிப்பாயே

வீழ்ந்தயெம் வாழ்வில் வன்துயர்போக்கிநீ விழிவழிகாட்டாயோ

வழிந்தோடிடும் வன்கண்ணீர் வந்துடைத்து வாதுயர்த்திடாயோ!

வாழ்வளி பிருஹத்சுந்தரகுஜாம்பிகையே மஹாலிங்கேஸ்வரா!

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்: காவிரிக் கரையில் அமைந்துள்ளவற்றில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்த கோவில். பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒரு முறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன் பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான். தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும் அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது. வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான். அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி உபாயம் கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது. இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.

கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை பின் தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும் கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும் போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார். அதன் படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றளவும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர்.

மகாலிங்கேஸ்வரர் : இந்த கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது. மார்க்கண்டேயர் விருப்பத்தின் படி இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார்.

பிருஹத்சுந்தரகுஜாம்பிகை : அம்மன் பிருஹத்சுந்தரகுஜாம்பிகை நன்முலைநாயகி என்ற பெயரில் அருள் புரிந்து வருகிறார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடை மருதூர் கோவில் மகாலிங்க ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

நாளை முதல் மூன்று நாட்கள் பரிகாரங்கள் பற்றி பார்போம்.
-------------------------

கருத்துகள் இல்லை: