ஞாயிறு, 11 நவம்பர், 2018

சாதுர்மாஸ்யம்


சாதுர்மாஸ்யம் குருமார்களை ஆராதிக்க உகந்த காலம். நாரதர், சாதுர்மாஸ்ய காலத்தில் விரதமிருந்த சந்யாஸிகளுக்கு ஸேவை செய்த காரணத்தாலேயே ஞானம் உண்டாகி தேவரிஷியாகும் வாய்ப்பு கிட்டியதாக கூறுகிறார்.


சதுர் என்றால் நான்கு - சாதுர்மாஸ்யம் என்பது நான்கு மாதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு விரதம். இது எல்லா ஆஸ்ரமத்தில் இருப்பவர்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் தான். ஆனால் சந்யாஸிகளுக்கு இது கூடுதல் விசேஷம்.

பொதுவில் சந்யாஸிகள் ஒரே இடத்தில் ரொம்ப நாளைக்கு தங்குதல் கூடாது என்கிறது சாஸ்திரம். (அந்த ஊரின் மீதோ மக்களின் மீதோ கூட அவருக்கு பற்றுதல் உண்டாகி விடக்கூடாது என்ற நோக்கில்). இதனால் இவர்களுக்கு பரிவ்ராஜகர்கள் என்று பெயர்.

ஆனால் இப்படி தொடர்து சஞ்சரித்துக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஆத்ம விசாரம் செய்யும் நேரம் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்காக விசேஷமாக சொல்லப்படும் காலமே சாதுர்மாஸ்யம். ஆனி மாதத்து பௌர்ணமி முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு சந்யாஸி எங்கும் பயணப்படாமல் ஒரே இடத்தில் தங்கி இருக்க சாஸ்த்ரங்கள் வழிகாட்டுகின்றன. இது மழைக்காலமாகவும் இருப்பதைக் காணலாம். 

மழைக்காலங்களில் பூச்சி, பொட்டுக்கள் வெளியே வரும் வாய்ப்பும் அதிகம். ஒரு சந்யாஸி ப்ரயாணம் மேற்கொள்வதால் அறிந்தோ அறியாமலோ கூட இந்த புழு பூச்சிகளுக்கு துன்பம் உண்டாகலாம் என்ற காரணத்தாலும் இவர்கள் ஒரே இடத்தில் தங்குவது அவசியமாகிறது.

(சக்கரத்தில் சிக்கி பூச்சிகள் சாகுமே என்ற காரணத்தால் சக்க்ரம் வைத்த வண்டியில் கூட ஏறாமல் வாழ்நாள் முழுதும் நடந்தே பயணித்தவர் மஹாபெரியவர்.)

இப்படி பிற உயிர்களுக்கென வாழும் சந்யாஸிகள் ஒரே இடத்தில் தங்கி இருக்கும் காரணத்தால், அவருக்கு சிஷ்யர்கள் ஸேவை செய்யும் காலமே சாதுர்மாஸ்யம்.

(சாதுர்மாஸ்ய காலத்தில் சந்யாஸிகள் மட்டுமே விரதம் அனுஷ்டிப்பது என்ற முறை நம் தமிழகப்பகுதிகளில் தான் பரவலாகக் காணப்படுகிறது. ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் க்ருஹஸ்தர்களும் உணவுக் கட்டுப்பாடு முதல பலவகைகளிலும் விரதம் காப்பது வழக்கம்)

இன்று சாதுர்மாஸ்யம் என்று வழக்கத்தில் இருந்தாலும் (சதுர் பக்ஷம் எனும்படி 2 மாதங்களே வழக்கத்தில் இருக்கின்றன)

சந்யாஸிகளின் சாதுர்மாஸ்யம் வ்யாஸ பூஜையுடனே துவங்குகிறது. நாம் நம் குருமார்களை வணங்க வேண்டிய காலத்தில் குருமார்கள் அவர்களது குருவான வ்யாஸரை வணங்குகிறார்கள்.

இந்த சாதுர்மாஸ்யமே ஒரு சந்யாஸியின் வயது. அதாவது, ஒரு சந்யாஸியின் வயது அவரது உடலுக்கான வயது அல்ல! அவர் எவ்வளது சாதுர்மாஸ்யம் கடைபிடித்திருக்கிறாரோ அதுவே அவர் வயது. 80 வயது ஆகி இருந்தாலும் தன்னைவிட அதிக சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்த பால சந்யாஸியைக் கண்டால் வணங்கத்தான் வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சாதுர்மாஸ்ய காலமே குருவழிபாட்டுக்கு உகந்த காலம்.

நாம் வணங்கும் இஷ்ட தெய்வமே குருவாக மனித உருவில் வந்திருக்கிறது என்ற உண்மையை முதலில் உணர வேண்டும். குருவுக்கும் நம் இஷ்ட தெய்வத்துக்கும் பேதமில்லை என்பதை முதலில் உணரவேண்டும். இதை உணராமல் குருவை சாதாரண மனிதனாக எண்ணுபவன் எத்தனை பிறவி எடுத்தாலும் அவனுக்கு கதி கிடைக்காது.

அப்படிப்பட்ட குருவுக்கு நாம் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

இந்த சாதுர்மாஸ்ய காலத்தில், அந்த நன்றிக்கடனின் வெளிப்பாடாக தான் பெற்ற நல்வாழ்வுக்காகவும், பெற்ற ஞானத்துக்காகவும், குருவை வணங்க வேண்டும்.

சாதுர்மாஸ்ய காலத்தில் தங்கள் குருவையும், குல ஆசார்யர்களையும் வணங்குவதால் எண்ணில்லா நன்மைகள் விளைகின்றன. 

வ்யாஸ பூர்ணிமா, குரு பூர்ணிமா என்றெல்லாம் அழைக்கப்படும் நாளில் அவரவர் குருநாதர்களை குருதக்ஷிணையுடன் சென்று கண்டு வணங்கி ஆசி பெறுதல் வேண்டும்.

குருவில் கருணா கடாக்ஷம் படுவதால் அந்த ஒரு வருஷத்தில் நாம் அறியாமல் செய்த பாவங்கள் கரைவதோடு, வாழ்வில் முன்னேற்றம் அடைய ச்ரேயஸ் உண்டாகிறது, தர்மத்தில் கூடுதல் லயிப்பு உண்டாகிறது. (லௌகீக வாழ்வுக்கான முன்னேற்றம் - தனியே சொல்லப்படா விட்டாலும் குருவின் க்ருபையால் உண்டாகிறது).

ஆக சாதுர்மாஸ்யம் அனுஷ்டிப்பவரைக் கண்டாலே ப்ரம்மஹத்தி முதலான பாபங்கள் நீங்கி விடுவதாக பாரஹஸ்பத்ய ஸ்ம்ருதி கூறுகிறது.

சாதுர்மாஸ்ய காலத்தில் ஸந்யாஸிகளை வணங்குவதாலும் சேவை செய்வதாலும் ப்ரம்மஞானம் உண்டாகிறது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

 மொத்தத்தில் இஹவாழ்வுக்கும் பரவாழ்வுக்கும் தேவையான அனுக்ரஹம் கிட்டுகிறது. 

கருத்துகள் இல்லை: