குளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்?
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முன்புள்ள கடலை அக்னி தீர்த்தம் என்கிறோம்.
குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்ட
காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச்
செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார்.
ராவணனிடம் இருந்த அவள் கற்புடன் தான் இருக்கிறாளா என்று மக்கள் சந்தேகம்
கொள்ளலாம் அல்லவா! எனவே, தன் மனைவி களங்கமற்றவள் என்பதை நிரூபிக்குமாறு
கூறினார். சீதாதேவி இதற்காக சற்றும் தயங்கவில்லை. லட்சுமணனை அழைத்து அக்னி
மூட்டச்சொன்னாள். அவன் தயங்கினான்.நாம் அயோத்தியை விட்டு கிளம்பும் போது,
உன் தாய் சுமித்திரை சொன்னது நினைவில்லையா! என்னைத் தன்னைப் போல் காக்க
வேண்டுமென்று. இப்போது, உன் தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடுகிறேன்.
உம்..தீயை மூட்டு, என்றாள். அவன் வேறு வழியின்றி கட்டைகளை எடுத்து வந்து
அடுக்கி தீ மூட்டினான். ஏ அக்னியே! நான் உன்னுள் இறங்குகிறேன். நான்
கற்புடையவள் என்பதை இத்தனை பேர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு,
என்றாள். கொழுந்து விட்டு எரிந்த அக்னிக்குள் அவள் இறங்கினாள். அக்னி
பகவானுக்கு மகா சந்தோஷம். ஏனெனில், சீதை மகாலட்சுமியின் அவதாரம். அந்த
மகாலட்சுமியின் ஸ்பரிசம் தனக்கு கிடைக்கிறதே என்ற ஆனந்தம். அவன் மனம் குளிர்ந்தான். அந்த ஆனந்தத் தில், அவனது இயற்கை குணமான
வெப்பம் குளிராக மாறிவிட்டது. சீதையை அவன் மனிதவடிவெடுத்து கைகளில் தூக்கி
வந்து ராமனிடம் கொடுத்து, தர்மபத்தினியான இவளை என்னால் எரிக்க முடியாது,
என்றான்.அவன் ராமேஸ்வரம் கடற்கரையில் இந்த அற்புதத்தை நிகழ்த்தியதால்,
அவனது பெயரே கடலுக்கும் அமைந்து விட்டது. சீதை எப்படி அக்னியில் மூழ்கி
தன்னைச் சுத்தமானவளாகக் காட்டினாளோ, அதுபோல், இங்கு வரும் பக்தர்களும்
அக்னி தீர்த்தக் கடலில் மூழ்கி, தங்களைப் பாவமற்றவர்களாக்கிக்
கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக