வியாழன், 12 செப்டம்பர், 2013

துன்பங்கள் நீக்கும் ஜீவ விக்ரகம் ...!

முதுமையினால் உடல் தளர்ந்தபோதும், ஸ்ரீரங்கம் தென் திருக்காவேரிக்கு தினமும் நடந்து சென்று நீராடி, அனுஷ்டானங்களை நிறைவேற்றி வந்தார், ராமானுஜர். திடீரென்று சில சீடர்களை அழைத்து, தான் இதுவரை உபதேசிக்காத ரகசியத் தத்துவங்களையும், பல சூட்சும அர்த்தங்களையும் உபதேசித்தார். சீடர்கள் இது பற்றிக் கேட்க, நான் இந்த பூத உடலை விட்டு விலகும் காலம், வெகு தூரத்தில் இல்லை என்றார் ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின், திருவடி நிலை, என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கந்தாடை ஆண்டான் என்ற சீடர் அவரைக் கண்ணீருடன் அணுகி, சுவாமி, உங்கள் நினைவாக உங்களது திருமேனி விக்ரகம் ஒன்றைத் தந்திட வேண்டும் என்று வேண்டினார். ராமானுஜர் அதற்கு அனுமதி அளித்தார். மிகச் சிறந்த சிற்பி ஒருவர் மூலம் அப்போது ராமானுஜர் எவ்விதம் இருந்தாரோ, அதே போன்று ஒரு தத்ரூபமான விக்ரகம் வடிக்கப்பட்டது! ஸ்ரீமத் ராமானுஜர் அதனை ஆரத் தழுவி, தனது ஆத்ம சக்தியை அதனுள் செலுத்தினார். அவரது ஆணைப்படி, தைப்பூசத்தன்று அத்திருமேனி ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த விக்ரகத்தின் கண் திறப்பின்போது, ஸ்ரீரங்கத்தில் இருந்த ராமானுஜரின் கண்களில் இருந்து ரத்தம் வடிந்ததாம்! இதனை நானாகவே ஏற்று, என்னிடம் காட்டிய பேரன்பை அதனிடம் காட்ட, அனைத்து மங்களமும் உண்டாகும் என்று திருவாய் மலர்ந்து அருளினார், ராமானுஜர். ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரீரம் ஸ்ரீரங்கத்தில்  இருந்தாலும், இந்த ஜீவ விக்ரகம் ஸ்ரீபெரும்புதூரில் தன்னை நாடி வருவோரின் துன்பங்களை நீக்கி, அருள்புரிந்து வருவதில் ஆச்சரியமில்லை.

கருத்துகள் இல்லை: