இறைவனிடம் எதைக் கேட்க வேண்டும்?
புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படிப்பதால் பல தர்மங்களையும், புத்தி
சக்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. மனிதர்கள் நல்வழி நடந்து, நற்கதி
பெற வேண்டியே இவை புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலதி என்ற பிரசித்தி
பெற்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லாரும் இறந்து
விட்டனர். புத்திர சோகத்தால் மிகவும் வருந்திய அவர், கடுமையான தவம்
செய்தார். இப்படி யாராவது கடுமையான தவம் செய்தால் தேவர்களோ, தேவேந்திரனோ
நேரில் வந்து அவர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க வேண்டும் என்பது நியதி.
அதன்படி தேவர்கள் வந்தனர்.
முனிவரே... உம் தவத்துக்கு மகிழ்ந்தோம். வேண்டிய வரத்தைக் கேளும்...
என்றனர். புத்திர சோகத்தால் வருந்திக் கொண்டிருந்த முனிவர், தேவர்களைப்
பார்த்து, எனக்கு சாவே இல்லாத ஒரு பிள்ளை வேண்டும்... என்றார். சிரித்து,
சுவாமி... பூவுலகில் மனிதராகப் பிறப்போர் என்றாவது ஒருநாள் எந்த
விதத்திலாவது மரணமடைய வேண்டியவர்களே... இதை மாற்ற முடியாது. ஆகையால், நீர்
வேறு ஏதாவது ஒரு வரம் கேளும்... என்றனர் தேவர்கள். யோசித்த முனிவர்,
பக்கத்திலிருந்த பெரிய மலையை சுட்டிக் காட்டி, இந்த மலை எவ்வளவு காலம் இருக்குமோ அவ்வளவு காலம் என் மகன் ஜீவித்திருக்க வேண்டும்... என்று
கேட்டார். அவர்களும், அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, வரம் அளித்து,
சென்று விட்டனர்; முனிவருக்கு சந்தோஷம்.
சில நாட்களுக்கு பிறகு, அவருக்கு மேதாவி என்ற புத்திரன் பிறந்தான்.
வரபலம் மிகுந்த மேதாவி, நல்ல காரியத்தில் ஈடுபடாமல் ஊர் வம்புகளை வாங்கி
வருவான். ரிஷிகளையும், தபஸ்விகளையும் துன்புறுத்துவான். யாருக்கும் அடங்க
மாட்டான். இப்படியே ரொம்ப காலம் செய்து வந்தான். ஒரு சமயம், தனுஷாட்ச என்ற
முனிவரிடம் போனான். அவர் மகாதபஸ்வி. நிம்மதியாக அமர்ந்து தவம் செய்து
கொண்டிருந்தார். அவருக்கு எப்படியெல்லாம் தொந்தரவு கொடுக்க முடியுமோ,
அப்படியெல்லாம் செய்து சந்தோஷப்பட்டான். அவனை பார்த்து, நீ சாம்பலாகக்
கடவது... என்று சபித்தார் முனிவர். ஆனால், அவன் சாகவில்லை. குத்துக்கல்
மாதிரி அவர் முன் நின்று, ஹஹ்... ஹஹ்... ஹஹ்ஹா... என்று சிரித்து, உன்
சாபம் என்னை ஒன்றும் செய்யாது... என்று பரிகசித்தான். முனிவரும் இவன்
சாம்பலாகாமல் இருப்பதற்கு காரணம், இந்த மலை இருக்கும் வரையில் இவனுக்கு
மரணம் இல்லை என்று வரத்தை பெற்றிருப்பதால் தான் என்பதை தன் ஞான
திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.
உடனே, அவர் ஒரு முரட்டு எருமைக்கடா உருவெடுத்து, தன் கொம்புகளால் அந்த
மலைகளை முட்டி மோதி, அசைத்து, அதை தூள் தூளாக்கினார். மலை நாசமடைந்தது;
துஷ்டனான மேதாவியும் நாசமடைந்தான். ரொம்பவும் வருத்தமடைந்த பாலதி முனிவர்,
ஒரே புத்திரன் இறந்ததற்காக அழுதார். இதைக் கண்ட மற்ற முனிவர்களும்,
வேதியர்களும், தெய்வம் ஏற்படுத்திய நியதியை மனிதன் எவ்விதத்திலும் மாற்ற
முடியாது என்பதை நீங்கள் அறியாதவரா? தெய்வ பலத்தினால் தான் மலையை தூள் செய்தார் தனுஷாட்ச முனிவர்.
அதே தெய்வ பலத்தை உம் புத்திரன், நல்ல காரியத்துக்கு பயன்படுத்தி இருந்தால்
அழிவு வந்திருக்காது! கெட்ட செய்கை அவனை கெடுத்து விட்டது. இனியும்
நீங்கள் இது குறித்து வருத்தப்படாமல் தவத்தில் ஈடுபடுங்கள்... என்று ஆறுதல்
கூறினர். முனிவரும் வைராக்கியம் பெற்று, தவத்தில் ஈடுபட் டார். தெய்வமே
வந்து வரம் கொடுக்கிறேன் என்ற போது, நல்ல காரியத்தை செய்ய வரம் கேட்க
வேண்டும்; பேராசையுடன் வரம் கேட்டால், விபரீதமாகவே முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக