வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

படிப்பில் இனி நீங்கதான் ராஜா!

வெண்குதிரை முகமும், மனித உடலுமாக விஷ்ணு எடுத்த அவதாரம் ஹயக்ரீவர். மது, கைடப அரக்கர்களைக் கொன்று வேதங்களை மீட்டவர் இவர். அதனால், மறை மீட்ட பெருமான் என்று பெயர். கல்விக்குரியவராக விளங்குவதால் இவரை வித்யாராஜா என்றும் போற்றுவர். மாணவர்கள் இவரை புதன்கிழமையன்று வழிபட்டால், படிப்பில் இனி நீங்க தான் ராஜா என புகழப்படுவீர்கள். யோக நிலையில் இருக்கும்போது இவர் யோகஹயக்ரீவர் என்றும், வலக்கரத்தால் அபயமுத்திரை காட்டியபடி இருந்தால் அபயஹஸ்த ஹயக்ரீவர் என்றும் பெயர் பெறுவார். வரம் அளிக்கும் விதத்தில் வலதுகையை கீழ்நோக்கி காட்டி இருப்பவரை வரதஹஸ்த ஹயக்ரீவர் என்பர். தாயாரை மடியில் ஏந்தியிருக்கும் போதுலட்சுமி ஹயக்ரீவர் எனப்படுவார். வாதிராஜ சுவாமிகள் என்ற பக்தர், நைவேத்யத்தை தலையில் வைத்து அமர்ந்திருக்கும் போது, பெருமாள் குதிரை முகத்துடன் வந்து, தன் முன்னங்கால்களை தட்டில் வைத்து ஆர்வமாகச் சாப்பிட்டதாக தகவல் உண்டு.


அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித்தி பெற்றது மனித உடலும், குதிரை முகமும் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.
ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது.


ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நம் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி. அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார்.கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார்.


இந்த வடிவம் ‘லட்சுமி ஹயக்ரீவர்’ எனப்படுகிறது. கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.


ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ ஸ்தலங்கள் ஆகும். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.


ஔஷத மலையில் ஸ்வாமி வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவர் எப்படி காட்சி தந்தாரோ, அதே கோலத்தில் இங்கு இவரை தரிசிக்கலாம். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஹயக்ரீவரை வழிபட ஞானமும் அறிவும் மேம்படும். ஞாபக சக்தி கூடும். ‘ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்’ என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால், படிப்பில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம்.

ஓம்கார உத்கீத ரூபாய ருக்யஜீ ஸாம மூர்த்தயே


நம: அஸ்து தேவதேவாய வாஞ்சிதார்த்த ப்ரதாயினே:


வேத வேதாந்த வேத்யாய வேதாஹரணே கர்மணே


ஸர்வாஸ்த்வ மஹாமோஹ பேதினே ப்ரஸ்மணே நம:


தினமும் 30 நிமிடம் வீதம் முழு ஆண்டு முடியும் வரையிலும் அல்லது 90 நாட்களுக்கு வீட்டுப்பூஜையறையில் இதை ஜபித்து வர வேண்டும்.கல்வியில் பின் தங்கியுள்ள மாணவ மாணவியர் இதை ஜபிக்க கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கருத்துகள் இல்லை: