செவ்வாய், 2 ஜூன், 2020

விநாயகர் பெயர்கள்

கணங்கள் என்போர்  பதினெட்டு இனக்குழுக்கள் ஆவர்.

இவர்களை பதினெண் கணங்கள் என்பர்.

இவர்களுக்கு அதிபதி  விநாயகர் கணபதி என்று அழைக்கப்பெறுகிறார்.

விநாயகர் 12 அவதாரங்கள் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகிறது.

இந்தவகையில் விநாயரை வணங்கும்போது இவரின் 12 பெயர்களை கூறி வழிபட்டால் 12 அவதாரங்களின் பலன் கிடைக்கும்.

விநாயகரின் 12 அவதாரங்கள்

வக்ரதுண்ட விநாயகர்:

இவர் உலகம் ஒவ்வொரு முறை அழியும் போது தோன்றி, மீண்டும் உலகத்தை படைப்பதற்கான வழிமுறைகளை பெருமாள், பிரம்மா, ருத்ரன் (சிவவடிவம்) ஆகியோருக்கு அருளுவார்.

கஜானனபவிநாயகர்:

சிந்தூரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக அவதரித்தவர்.
விக்கிரனபராஜர்: காலரூபன் என்ற அரக்கனை கொல்வதற்காக பிறந்தவர்.

மயூரேசர்:

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை கமலாசுரன் என்ற அசுரன் திருடிச்சென்றபோது மயில் வாகனத்தில் சென்று அவனை வென்று வேதங்களை மீட்டவர்.

உபமயூரேசர்:

சிந்தாசுரன் என்ற அசுரன் தேவர்களை சிறை வைத்தபோது அவனை அழித்தவர்.

பாலச்சந்திரர்:

தூமராசன் என்ற அசுரனை கொன்றவர்.

சிந்தாமணி:

கபிலர் என்ற முனிவரிடம் இருந்த சிந்தாமணி என்ற அற்புத பொருளை கனகராஜன் என்பவன் திருடிச் சென்றான். உயிர்காக்கும் இந்த சிந்தாமணியை அவனிடமிருந்து மீட்டவர்.

கணேசர்:

பலி என்ற அசுரன் தேவர்களை துன்புறுத்தியபோது, 5 முகத்துடன் தோன்றி அவனை அழித்தவர்.

கணபதி:
கஜமுகாசுரனை வென்றவர்.

மகோற்கடர்:

காசிராஜன் என்ற புகழ்பெற்ற அரசனுக்கு நராந்தகன், தேவாந்தன் என்ற கொடியவர்கள் துன்பம் செய்து வந்தனர். இதனால் உலகத்தில் தர்மம் அழிந்தது. அவர்களை நாசம் செய்ய அவதரித்தவர்.

துண்டி:

துராசதன் என்ற அசுரனை வென்றவர்.

வல்லபை விநாயகர்:

மரீச முனிவரின் மகளான வல்லபையை திருமணம் செய்தவர்.

இதைத் தவிர்த்து விநாயகரை 32 விதமான மூர்த்தங்கள் பெற்று விளங்குகிறார். அந்த மூர்த்தங்களின் பெயர்கள்

1. பால கணபதி

பால" என்பது "இளம்" அல்லது "சிறு பராயம்" எனப் பொருள்படும். கணபதியைச் சிறு பராயத்தினராகக் கொண்டு வழிபடுவதற்கான வடிவம் ஆகையால் இதற்கு "பால கணபதி" எனப் பெயர் ஏற்பட்டது.

2. தருண கணபதி

நண்பகல் தோன்றும் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனியையும் யானை முகத்தையும் எட்டுத் திருக்கரங்களையும் உடையவர். கைகளில் பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு என்பவற்றை உடையவர்.

3. பக்தி கணபதி

நிறைமதி போன்ற வெண்மைநிறம் உடையவராக தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், பாயச பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் உடையவர்.

4. வீர கணபதி

சிவந்த திருமேனியையும், சிறிது சினந்த திருமுகத்தையும் உடையவர். வேதாளம், வேல், அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடகம், சம்மட்டி, கதை, அங்குசம், நாகம், பாசம், சூலம், குந்தாலி, மழு, கொடி ஆகிய பதினாறையும் பதினாறு திருக்கரங்களிலும் கொண்டவர்.

5. சக்தி கணபதி

செவ்வந்தி வானம் போன்ற நிறமுடையவராக, பச்சைநிற மேனியையுடைய தேவியைத் தழுவிக்கொண்டு இருப்பார். பாசம், பூமாலை இவற்றைத் தாங்கிய திருக்கரத்துடன் அபயகரமும் உடையவர்.

6. துவிஜ கணபதி

சந்திரன் போன்ற வெண்மை நிறமும் நான்கு முகமும் கொண்டவர். நான்கு திருக்கரங்களிலும் முறையே புத்தகம், அட்சமாலை, தண்டம், கமண்டலம் இவற்றைத் தரித்தவர். மின்னற்கொடிபோல விளங்குகின்ற கைவளையல்களை உடையவர்.

7. சித்தி கணபதி

பொன்கலந்த பசுமை நிறமுடையவரும் மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பரசு இவற்றை நான்கு திருக்கரங்களிலும் துதிக்கையுள் எள்ளுருண்டையையும் கொண்டு விளங்குகிறார்.

8. உச்சிட்ட கணபதி

இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.

வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.

உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும்.

பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.

பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும்.

மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு.

இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.

9. விக்ன கணபதி

பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார்.

10. க்ஷிப்ர கணபதி

செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார்.

11. ஏரம்ப கணபதி

விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது..

விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது.

12. லட்சுமி கணபதி

எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு தேவிமார்களோடு விளங்குவர்.

13. மஹா கணபதி

செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர்.

14. விஜய கணபதி

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர்.

15. நிருத்த கணபதி

பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர்.

16. ஊர்த்துவ கணபதி

நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர்.

17. ஏகாட்சர கணபதி

செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர்.

18. வர கணபதி

செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர்.

19. திரயாக்ஷர கணபதி

திரயாக்‌ஷர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார்.

20. க்ஷிப்ரபிரசாத கணபதி

பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.

21. ஹரித்திரா கணபதி

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

22. ஏகதந்த கணபதி

பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர்.

23. சிருஷ்டி கணபதி

பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர்.

24. உத்தண்ட கணபதி

நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்

25. ரணமோசன கணபதி

பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.

26. துண்டி கணபதி

அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர்.

27. துவிமுக கணபதி

தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.

28. மும்முக கணபதி

வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்ற முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம், பூப் போன்ற சிவந்த நிறம் உடையவர்.

29. சிங்க கணபதி

வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர்.

30. யோக கணபதி

யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர்.

31. துர்க்கா கணபதி

சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையுடன் விளங்குபவர்.

32. சங்கடஹர கணபதி

இளஞ்சூரியன் போன்ற வண்ணத்துடன், இடது பாகத் தொடையில் அம்மையை உடையவர். அம்மை பசிய மேனியவளாக, நீலப் பூவை ஏந்திய இருப்பாள். வலது கையில் அங்குசம் வரதம் உடையவர். இடது கையில் பாசம், பாயசபாத்திரம் ஏந்தியவர். செந்தாமரைப் பீடத்தில் நிற்பவர். நீலநிறமான ஆடையணிந்தவர்.
*லிங்க புராணம் ~ பகுதி — 06*

         ருத்திரர் தோற்றம்
 ======================

பிரம்மன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க., கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட., பிரம்மனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரம்மனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரம்மன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோஜாதம்., வாமதேவம்., தத்புருஷம்., அகோரம்., ஈசானம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரம்மனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் தொகுத்தளிப்பார் என்றார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். திருமாலும்., நீயும்., இந்திரனும்., லிங்கபூஜை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை., ஆற்றில் நீராடல்., அக்கினிப் பிரவேசம்., மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும்., சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.

தர்பை., பலாச இலை., நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்யம் விட வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு., கம்பளி., மான்தோல்., ஆகியவற்றின் மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து சங்கல்பம் செய்து ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் பித்ருக்களுக்கு., முனிவர்களுக்கு., தேவர்களுக்கு தர்ப்பணம் செய்யது., பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். விநாயகரையும்., முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேஸ்வரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து., தூய மலர் கொண்டு அர்ச்சித்து., தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும்.

பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம் :

அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம்.
அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம்.
மகத்தத்துவம்., அலங்காரம்., பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து., ஞானேந்திரியங்கள் ஐந்து., கர்மேந்திரியங்கள் ஐந்து., மனம்., பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும்.
இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா.
அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர்.

தொடரும்.....

*தேவ கணார்சித ஸேவித லிங்கம்*
*பாவைர் பக்தி பிரேவச லிங்கம் |*
*தினகர கோடி ப்ரபாகர லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*
ஸ்ரீதேதியூர் பெரியவா  அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் ஸ்ரீகாயத்ரீ மகிமை

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தேதியூர் சாஸ்திரிகள் குடும்பத்துடன் ரயிலில் பயணிக்கும்போது ஸந்த்யாகாலத்தில் ரயில் மாயவரம் ஸ்டேஷன் அடைந்தது. சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!  ரயில் கிளம்பும் நேரம் ஆனதும்  Guard பச்சைக்கொடி காட்ட Angloindian driver ரயிலை Start செய்ய தயாரானார். விசிலும் அடித்தார். இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்! இல்லையெனில் ரயிலில் அவர் ஏறமுடியாது  என்று சக பயணிகள் பதற்றபடுத்த மாமியும் ஜபத்தை நடுவில் நிறுத்தமாட்டார் சாஸ்திரிகள் என்று கூறி தானும் பெட்டி சாமான்களுடன் இறங்கி ஜபம் பண்ணும் தன் கணவர் அருகில் போய் நின்றுகொண்டார்! இதற்குள் பலமுறை ப்ரயத்தனம் செய்தும் நின்ற இரயில் கிளம்ப மாட்டேன் என மக்கர் செய்ய Driverம் ஏதோ Technical snag என்று SM / guard ஆகியோரை கலந்து ஆலோசிக்க தொடங்கினார். இதற்கிடையில் நித்யம் செய்யும் ஆவர்த்தி பூர்த்தியாகி கண் திறந்த சாஸ்திரிகள் தன்னருகில் பெட்டியுடன் நிற்கும் மனைவியை பார்த்து நீ ஏன் இறங்கினாய்? என்று கேட்டு, வா ஏறிக்கொள்வோம்! என்று மாமியுடன் மீண்டும் ரயிலில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களில் கிளம்ப மறுத்த ரயிலை start. செய்ய மீண்டும் ஒருமுறை Driver  முயற்சிக்க ரயில் திடுக்கென்று கிளம்பியது!

சாஸ்திரிகள் ஜபத்தை நிறுத்தவில்லை!

காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக்கொள்வோம் ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை விடாமல் காப்பாற்றினாள்.இதிலிருந்து அவர் நமக்கு சொல்லும் பாடம் நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
#தெரிந்த #ஹனுமான் #தெரியாத #விஷயங்கள்....    

*சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை*
*உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி,* *எம்பெருமானை*
*பார்த்து கேட்டாள்,* *“சுவாமி,நீரே* *எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன்* *இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”*
*சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி,* *'ராம' என்ற எழுத்து 2* *விஷயங்களை குறிக்கிறது.* *ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம்.* *இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து*
*ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“*

*இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க* *மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். " தேவி, கவலை வேண்டாம்.* *பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்.* *பார்வதியும் சமாதானமாகி* *சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும்* *அவதாரத்தை பற்றி*
*விவாதிக்க* *தயாரானாள். பலத்த* *விவாதத்துக்கு பிறகு* *சுவாமியின் அவதாரம்*
*ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று* *நிச்சயிக்கப்பட்டது.*

*ஏன், குரங்கு அவதாரம்?*
*பரமேஸ்வரன் விளக்குகிறார். ”* *மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.* *எஜமானனை விட சேவகன் *
*ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும்.* *இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.*

*பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).*

*பார்வதி கடைசியாக இன்னொரு* *சந்தேகத்தை* *கிளப்பினாள். “சுவாமி,* *ராவணன் உங்கள் பரம பக்தன்.* *நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு*
*உதவ முடியும்? ”,என்று கேட்டாள். சிவன், ”* *தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி* *பண்ணுவதற்காக*
*தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.*
*ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.*
*ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்.*

*இப்பொழுது, எப்படி அவதாரம் நடந்தது என்று பார்க்கலாம்.*

*3 உப கதைகள்:*

*சிவன் -மோகினி*
*ஒரு சமயம்,விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். சிவன் மோகினியின்* *ஆட்டத்தை ரசித்து, அவருக்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்தார்.*
*மோகினியான விஷ்ணு ”உங்களுடய ஆத்ம சக்தியின் முழு பலத்தையும்* *கொடுங்கள்”, என்று கேட்டார். சிவனும் அப்படியே தன் சக்தியை ஒரு விதையாக கொடுத்தார். விஷ்ணு சப்த ரிஷிகளை கூப்பிட்டு," இதை பத்திரமாக காப்பாற்றுங்கள். இதிலிருந்து ஒரு மஹா பலம் பொருந்திய மஹான் பிறக்க போகிறார். அவர் என்னுடைய ராமாவதாரத்தில் ராவண வதத்துக்கு துணையாக இருப்பார்.” என்று சொன்னார். அவர்களும் தக்க சமயத்தில் அந்த விதையை வாயு பகவானிடம் சேர்த்தனர்.*

*வாயு-அஞ்ஜனி*

*முன்னொரு சமயம் வாயு பகவான்* *ஜாலந்திரன் என்ற அசுரனை கொல்வதற்கு சிவனுக்கு உதவி செய்தார். அதற்காக சிவன்,*
*வாயுவுக்கு மகனாக பூலோகத்தில் பிறப்பேன், என்று வரம் கொடுத்தார்.*

*அஞ்ஜனி*
*அஞ்ஜனி, கேசரி என்ற குரங்கின் மனைவி. இந்த அஞ்ஜனி,* *சாதரண குரங்கு*
*இல்லை. இவள், ஒரு தேவ மாது. பார்வதி தேவியின்* *பணிப்பெண். ஒரு* *சமயம், இந்த தேவ மாது இந்திரனை ஆயிரம்* *கண்ணுடையவன்*
*என்று கேலி செய்யப் போய், குரங்காக பிறக்க வேண்டிய நிலையை அடைந்தாள். சிவன்,* *அவள் மேல்* *இரக்கப்பட்டு, அவள் வயிற்றில் அவர்*
*மகனாக பிறக்கிற பாக்கியத்தை, வரமாக அளித்தார்.*

*வாயுவுக்கு* *அஞ்ஜனியின் மேல் ஒரு ஈடுபாடு.* *சிவனுடைய விதையை*
*அஞ்ஜனிக்கு கொடுக்க* *தீர்மானித்தார் அஞ்ஜனி சிவனை நினைத்து*
*தியானம் செய்து கொண்டிருந்தாள்.*
*வாயு பகவான் சிவனுடைய விதையை அவள் காது வழியாக அவளுடைய கர்ப்பத்தில் சேர்த்தார்.*

*இப்பொழுது எல்லா முடிச்சும் அவிழ்ந்து விட்டதா?*
*இது தான்,பரமசிவன், அனுமாராக அவதாரம் எடுத்த  கதை. அதனால்  தான், அனுமாரை சங்கர சுவன், கேசரி நந்தன், அஞ்ஜனி புத்திரன் என்று அழைக்கிறோம்.*

*இந்த அதிசய கூட்டணி- விஷ்னு அம்சமான ராமரும், சிவ அம்சமான அனுமானும்*🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம் அனுமன் ஆர் கே சாமி🙏🙏
🌸🙏🏻🌸
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமை....
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெண்மணி தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஓர் அற்புதத்தைப் பற்றி பத்திரிகை ஒன்றில் எழுதி இருந்தார். என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே பிறந்தனர். 
நான் ஐந்தாவது பெண். “ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியா வான்’ என்பது பழமொழி. என் தந்தை ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமல்லாது, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்காவுக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்; போனார்கள். “அக்கா விற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார்- பணம் வேண்டாமா’ என்று கவலைப்பட்டோம்.
திடீரென்று ஒருநாள், வசதியான குடும் பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார்.
 “அவ்வளவு வசதியும், பெரிய வேலையிலிருக்கும் பிள்ளைக்கு அதிக வரதட்ச ணையும், நகைகளும் கேட்க மாட்டார்களா- நம்மால் எப்படி முடியும்’ என்று நினைத்த போதே, பிள்ளையைப் பெற்ற தாயும் தந்தையும், “எங்களுக்கு நிறைய பணமும், நகைகளும் இருக்கு. வரதட்சணை எதுவும் வேண்டாம். உங்களால் முடிந்த அளவிற்கு திருமணத்தை நடத்தினால் போதும்’ என்றார்கள். எங்களுக்கோ வியப்பு. ஆனால் அந்த வரனே முடிந்தது. இப்படியே ஒவ்வொரு பெண் ணிற்கும் நல்ல இடமாய், பெரிய உத்தியோகத்திலிருக்கும் மாப்பிள் ளைகளே கிடைத்தார்கள்.  எனக்கும் அப்படியே அமைந்தது. இன்று ஐந்து பெண்களும் அமோகமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட எழுபத் தைந்து வயதை எட்டிவிட்ட என் அப்பா விடம் நான், “இது எப்படியப்பா சாத்திய மாயிற்று’ என்று கேட்டேன்.  அவர் சொன்னார்: “நான், என்னுடைய பதினைந்தாவது வயதில் விஷ்ணு சஹஸ்த்ர நாமம் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். இதோ, எழுபது வயதிற்கு மேல் ஆகிவிட்டது.  இன்றுவரை ஒருநாள்கூட சஹஸ்த்ர நாம பாராயணத்தை நான் நிறுத்தியதில்லை. உங்கள் ஐந்து பேருடைய கல்யாணத்தையும் அமோகமாக நடத்தியவன் இந்த வாத்தியார் இல்லையம்மா. சாக்ஷாத் அந்த எம்பெருமான் நாராயணனே நடத்தி வைத்தான்!’ என்றார். என்ன அற்புதம் பாருங்கள். ஓர் ஏழை ஆசிரியரின் ஐந்து பெண்களுக்கும் பெரிய இடத்திலிருந்து பிள்ளைகள் வந்து, அவர் களாகவே விரும்பி திருமணம் செய்து கொண்டு அமோக வாழ்வு வாழ்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்மையான இறை நம்பிக்கையே.  அதனினும் பெரிய உண்மை விஷ்ணுசஹஸ்ரநாமத்தின் மகிமையே! ஓம் நமோ நாராயணாய !

திங்கள், 1 ஜூன், 2020

*துளசிதாசருக்கு உதவிய ஆஞ்சநேயர் பற்றிய பகிர்வுகள் :*

ஒரு சமயம் துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார்.

அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது.

அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.

அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.

ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்

எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர்.

ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார்.

அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

ராமன் எப்போ வருவாரோ?
அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!

சபரி புலம்பல்
ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?

உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

காலை பிடித்துக் கொண்ட தாசர்

பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர்.

எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.

சித்ர கூடத்தில் ராம ஜெபம்

இதுதான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.
எப்படி இருப்பார் ராமர்?

ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

ராமனுக்கு ஈடாவாரா?

ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா? தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.
ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன்.

எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

நதியில் நீராடுதல்

இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார்.

எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன்

சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள். (வடதேசத்தில் கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது). அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”

பொருள்: (சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.)

இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர்.

ஞாயிறு, 31 மே, 2020

🙏 ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏

சபரிமலை மேல்சாந்தி A K சுதீர் நம்பூதிரி அவர்களின் பதிவு ......

கலியுகவரதன் கண்கண்ட தெய்வம் சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு,  சன்னிதானத்தில் எனது பூஜை நேரத்தில் உதித்த சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க நமது கலியுகவரதனாம் ஐயப்பசாமியின் சன்னிதியில் தினமும் ஆராதித்து வேண்டி வருகிறேன்.

இந்த கலியுகத்தை கொரோனா பேரிடரில் இருந்து காப்பாற்ற "#ஸ்வாமியே #சரணம் #ஐயப்பா " எனும் நாம ஜெபமே ஒரே சிறந்த வழி....

ஜூன் 01ம் நாளானது, நமது சபரிமலை சன்னிதியில் கலியுகவரதன் அய்யப்பன் பிரதிஷ்டை தினமாகும். ஆகையால் வருகின்ற 01 ஜூன் 2020 முதல், உலகெங்கிலும் உள்ள அய்யப்ப பக்தர்களாகிய நாம் அனைவரும் தொடர்ந்து #41நாட்கள் , சந்தியா வேலை எனப்படும் மாலை 6:30 முதல் 07:00 மணி வரை உங்களது இல்லங்களிலோ, ஆலயங்களிலோ நிலை விளக்கின் முன் நின்று, நமது மணிகண்டனின் திருநாமங்களான சரண மந்திரங்களை உச்சரித்து, மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக 9 லட்சம் முதல் 90 லட்சங்களான சரண மந்திரங்களை ஒரே நேரத்தில் உச்சரிக்கும் பொழுது, நமது அனைவரின் மனதின் உள்ள கொடிய நோயின் பயத்தையும், அதன் ஆற்றலையும் அறவே ஒழிக்கும் சக்தி இப்புவியினில் உருவாகிறது.

இக்கொடிய நோயிடம் இருந்து நம்மை காக்க போராடும் அனைவருக்காகவும் இதை கனிவுடன் செய்வோமாக......

தயவு கூர்ந்து இதை உலகெங்கிலும் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களுக்கும் தெரிவித்து, ஐயனின் அன்பிற்கும் அருளிற்கும் பாத்திரமாகும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்....

இங்ஙனம் :
பிரம்மஸ்ரீ A K சுதீர் நம்பூதிரி,
சபரிமலை மேல்சாந்தி
பெரியவா சரணம்.

வருடத்திற்கு ஒரு முறையேனும் குலதெய்வத்தின் சன்னதிக்குச் சென்று ப்ரார்த்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நாம் தவறாமல் இயன்றபோதெல்லாம் நம் மாதா-பிதா-குரு-தெய்வமான ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் அதிஷ்டானத்துச் சென்று வருவதும் அவசியமானதாயிற்றே!

நம்மில் பல பேர்களுக்கு அதிஷ்டானம் எங்கு அமைந்திருக்கின்றது என்பது தெரியாமற்கூட இருக்க வாய்ப்புண்டு என்பதாலே இன்றைய குருவருட்பாவினைப் பகிர்கையில் காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீபுதுபெரியவா அதிஷ்டான தரிசனங்களையும் பகிர்கின்றேன்.  அதோடு கூட நம்பாத்து ஸ்ரீஉம்மாச்சீயின் விக்ரஹ தரிசனமும் கூட.

காஞ்சிபுரத்தில், சாலை தெருவில் உள்ள ஸ்ரீஆதிசங்கர பகவத்பாத பரம்பரகத  மூலாம்னாய ஸர்வக்ஞ பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் ஸ்ரீமட ஸமஸ்தானத்திலே சாக்ஷாத் நம் பரமேஸ்வர ஸ்வரூபியான ஸ்ரீமஹாஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அங்கேயே அடுத்ததாக வீற்றிருக்கின்றார் ஸ்ரீபுதுபெரியவாளும். அந்த தரிசனமே இங்கே பகிரப்பட்டும் உள்ளது.

சங்கரம் போற்றி!

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

#குருவருட்பா

அஞ்சுகத் தன்னருள் அம்பிகை அருகென
        அம்புலி தீர்த்தமும் சிகைநிரப்பி
செஞ்சடை வாகீசன் திருவருள் உருவென
        செகத்குரு எனவேகி வந்தோனை
மஞ்சுள வரதனை ஞானியர் தலைவனை
        மனதினுள் தொழுதிட நினைந்தேங்கி
காஞ்சிநல் பொக்கிஷம் மேவுநற் சன்னதி
        அண்டியே தரிசித்தும் மகிழ்வோமே!

ஆம்! இயன்றபோதெல்லாம் ஐயன் ஆனந்த வரதன் அவ்யாஜ கருணாமுர்த்தி அண்டினோர்க்கெல்லாம் வரந்தரும் அய்ஹ்புத திருப்பதியாம் கச்சிநகர் காமகோடித் திருப்பீடத்திலே அமைந்துள்ள அன்னவனின் அதிஷ்டானத்திற்குச் சென்று, குருநாதர்களின் சன்னதிகளை  பன்னிரு (12) பிரதட்சிணமும் (வலமும் செய்து நான்கு (4) நமஸ்காரங்களும் செய்வோமே!

நம்பி வந்தோர்க்கெல்லாம் நலம்பயக்கும் அம்மையப்பனின் அருளாலே நல்வாழ்விலே விளங்கச் செய்வோமே! குருவருள் குலத்தினை மட்டுமல்லாமல் குவலயத்தையே காக்குமன்றோ!

செய்வோமா, உறவுகளே!

கோவிட் 19 கொராணா கிருமியானது துன்புறுத்துகின்ற காலம் இது. நம்மால் இயன்றளவு கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளைச் செய்வோம். அதுவே நம் ஆசார்யர்கலின் அருளோடு ஜகன்மாதா - ஜகத்பிதாவின் அருளையும் கூட பெற்றுத் தரும். உலக மக்கள் எல்லோருக்காகவுமாக ப்ரார்த்தனைகள் செய்வோம்! ஜகத்குரு நம்மை ரக்ஷிப்பார் என்பது சத்தியம்.

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
"ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…"”

முதிய தம்பதிகள், தாத்தாவும், பாட்டியும்,
தரிசனத்துக்கு வந்தபோது காலை ஏழு மணி.
பெரியவாள் ஒரு வாதாமரத்தின் கீழே, சாக்கில் அமர்ந்திருந்தார்கள்.

கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
பெரியவாள் கேட்டார்கள்:

“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?”

“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”

“கூடத்திலே ஒரு பத்தாயம் இருந்ததே…அதிலே கறையான் அரிச்சு, ரிப்பேர் பண்றமாதிரி ஆயிருந்ததே…”

“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”

“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”

“ அது ஆறு கன்று போட்டுது. சமீபத்தில்தான் தவறிப்போச்சு. கன்றுக் குட்டிகள் எல்லாம் நன்றாய் இருக்கு. நல்ல வம்சம்…”

“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”

“எட்டுக்குடி முருகனுக்கு, தைப்பூசம் காவடி எடுக்கிற வழக்கமாச்சே…உங்க புத்ராள் யாராவதுவந்து காவடி எடுக்கிறாளா?”

“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”

“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?”

“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே..”

“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தையே…நடக்கிறதா?”

“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!

கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள். அப்போது பார்த்தது, கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?

பாட்டி சொன்னாள், “பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே…..நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”

பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றிவிடுமாப்போலே, ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக்கொண்டிருந்தவர்களையெல்லாம் வானத்தில் பறக்க வைத்துவிட்டார்கள்!

“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…?
ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்கமாட்டேங்கிறதே…”

மஹாபெரியவாளின் ஆதங்கம்
இப்படி இருக்குமானால், நாமெல்லாம் எந்த மூலை?

கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன?

பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக்
கூட்ட வேண்டுமா என்ன?
  
பெரியவாள் தன் ஞாபக சக்தியை விளம்பரப்படுத்திக் கொள்ள

இந்த சம்பவம் நிகழப்படவில்லை.

முத்தாய்ப்பு ஒன்று வைத்தாரே!-

'ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும்  இருக்கமாட்டேங்கிறதே'

அதுதான் ஹைலைட். அது நமக்காக....

                                                                                                                 
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
*பாபஹர தஶமீ (கங்கா தஶஹரா) 01-06-20*

*பத்து வித பாபங்களின் விவரம்*

ज्येष्ठे मासि सिते पक्षे दशमी हस्तसंयुता ।
हरते दश पापानि तस्माद्दशहरा स्मृता ।।

ஜ்யேஷ்டே மாஸி ஸிதே பக்ஷே தஶம்யா ஹஸ்தஸம்யுதா ।
ஹரதே தஶபாபாநி தஸ்மாத்தஶஹரா ஸ்ம்ருதா  ।।

சாந்த்ரமான படி ஜ்யேஷ்ட மாஸத்தில் ஶுக்லபக்ஷ தஶமி திதியும் ஹஸ்த நக்ஷத்ரமும் சேரும் நாளே  பாபஹர தஶமீ இன்று முறைப்படி கங்கை காவேரி போன்ற புண்ய நதிகளிலோ குளம் கிணறு வீடு முதலானவற்றிலோ முறைப்படி ஸ்னானம் செய்ய வேண்டும் இப்படிச் செய்வதால் உடல் மனது வாக்கு ஆகியவையால் செய்த பத்துவிதமான பாவங்கள் விலகி இஹபர ஸௌக்யங்களை பெற்று பரமஶ்ரேயஸ்ஸை அடைவோம்.


*பத்து வித பாபங்களின் விவரம்*

*ஶரீரத்தால் செய்வது மூன்று*

1) நமக்குக் சம்பந்தம் இல்லா பொருள்களை நாம் எடுத்துக் கொள்வது ,
2) பிறரைத் துன்புறுத்துவது ,
3) பிறர் மனைவி மீது ஆசைப்படுவது

*மனதால் இழைக்கப்படும் பாபங்கள் மூன்று*

4)  மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது ,
5) மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது ,
6) மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்வது.

*வாக்கினால் செய்வது நான்கு*

7) கடுஞ்சொல் ,
8) உண்மையில்லாத பேச்சு ,
9) அவதூறாகப் பேசுவது ,
10) அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாகப் பேசுவது.

*वर्षकृत्यदीपिकः*
*வர்ஷ க்ருத்ய தீபிகா*

ஸ்ரீக்ருஷ்ண ஶர்மா வேலூர் 9566649716
நைஷ்டிக பிரம்மச்சாரி = ஆசையற்ற பிரம்மச்சாரி

மகாபாரதப் பெரும்போர் நடந்து முடிந்தது. துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, உயிர் நீங்கும் நிலையில் இருந்தான்.

அசுவத்தாமா, போரில் தன்னுடைய தந்தை துரோணரையும் நண்பன் துரியோதனனையும் கொன்ற பாண்டவர்களின் வம்சத்தையே வேரறுக்க எண்ணினான். .

அதுவே துரியோதனின் ஆசையாகவும் இருந்தது.

உப பாண்டவர்கள் என்னும் பாண்டவ குமாரர்கள் ஐவரும் போர்க்களத்தில் இருந்த பாசறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது பாண்டவர்கள் வெளியில் இருந்தனர்.

அசுவத்தாமன் பாசறைக்குத் தீவைத்தான். உப பாண்டவர்களை, வாளால் வெட்டிக் கொன்றான். ஐவரும் இறந்த செய்தியை உயிர்விடும் நிலையிலிருந்த தன்னுடைய நண்பன் துரியோதனனிடம் சொன்னான்.

துரியோதனும் அசுவத்தாமனும் உப பாண்டவர்கள் அழிந்து விட்டதாக எண்ணினர்.

அந்த நேரத்தில் அபிமன்யுவின் மனைவி உத்திரை கருவுற்றிருந்தாள். அவளுடைய கர்ப்பத்தைக் கலைத்துப் பாண்டவர் வம்சம் குலநாசம் செய்ய எண்ணிய அசுவத்தாமன், பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது உத்தரையின் வயிற்றைத் தாக்கியது. உத்தரை தாங்கமுடியாத வலியால் துடித்தாள்.

உத்தரையின் வயிற்றை, பெண்ணாசை இல்லாத ஒரு சுத்தப் பிரம்மச்சாரி தடவினால் மட்டுமே பிரம்மாஸ்திரக் கட்டு விலகும்.

உத்தரையின் வயிற்றைத் தடவ, பிரபலமான பிரம்மச்சாரிகள் எவரும் முன்வரவில்லை.

ஆனால், ஆயிரக்கணக்கான கோபியருடன் குலாவிய கண்ணன் உத்தரையின் வயிற்றைத் தடவினான்.

பிரம்மாஸ்திரக் கட்டு விலகியது. உத்தரையின் கர்ப்பமும், பாண்டவர்களின் வாரிசும் காக்கப்பட்டது.

கிருஷ்ணன் எப்படி சுத்த பிரம்மச்சாரி

பெண்களே இல்லாத இடத்தில் இருந்து கொண்டு, அல்லது பெண்கள் தன்னை அணுகுவதைத் தவிர்த்துக் கொண்டு, வாழ்பவன் நைஷ்டிக பிரம்மசாரி அல்ல. பெண்கள் மத்தியிலே வாழ்ந்துகொண்டு அவர்களிடம் எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல் இருக்கிறவனே உண்மையில் வைராக்கிய பிரம்மசாரி.

பதினாயிரம் கோபியருடன் ஆடிப்பாடி ராஸலீலை புரியும் ஸ்ரீகண்ணன், அவர்கள் ஒருவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல், பற்றற்ற நிலையில் பரப்பிரம்மமாகவே இருக்கிறார்.

அவர் அன்பும் அருளும் அனைவருக்குமே சொந்தம். பிருந்தாவனத்துப் பசுக்களும், கோபிகையரும் அவர் கண்களுக்கு ஒன்றுதான்.

அவர் அன்புக்கும் அருளுக்கும் ஆண்-பெண் என்ற பேதமில்லை.

அவரை மற்றவர்கள் பிள்ளையாய், தந்தையாய், தாயாய், நண்பனாய், காதலனாய், குருவாய், தெய்வமாய் பாவிப்பது அவரவர்கள் மகிழ்ச்சிக்காகவே!

அவர் தண்ணீரில் உள்ள தாமரை இலை. அது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீர் அதில் ஒட்டுவதில்லை. அதுபோலவே, அவன் பற்றற்ற பரம்பொருள்.

பதினாயிரம் பெண்கள் நடுவே நெருக்கமாக வாழ்ந்து, அவர்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளான போதும், மனதாலும் வாக்காலும், காயத்தாலும் (உடல்) இச்சையின்றி வாழும் அவரே “நைஷ்டிக பிரம்மசாரி”

இராமயண காலத்தில்
தண்டகாரண்யத்தில் இருந்த முனிவர்கள் பலர் ராமனின் அழகில் மயங்கினர்.

தாங்கள் பெண்களாகி, ராமனின் தோள்களைத் தழுவ விரும்பினர். ‘‘ஆடவர் பெண்மையும் அவாவும் தோளினாய்’’ என்று விசுவாமித்திரர் ராமனை அழைத்ததாகக் கம்பராமாயணம் கூறுகிறது.

ராமாவதாரத்தின் போது தண்டகாரண்யத்தில் முனிவர்களாக இருந்தவர்களே, கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளாகப் பிறந்தனர்.

தாங்கள் விரும்பியபடி, கண்ணனைத் தழுவி மகிழ்ந்தனர்.

ஆனால் பரமாத்மாவான கிருஷ்ணன் எவரிடத்திலும் ஆசை கொள்ளவில்லை! அதனால்தான் அவனை ‘நைஷ்டிக பிரம்மச்சாரி (ஆசையற்ற பிரம்மச்சாரி) என்று போற்றினர்.