செவ்வாய், 2 ஜூன், 2020

*லிங்க புராணம் ~ பகுதி — 06*

         ருத்திரர் தோற்றம்
 ======================

பிரம்மன் தவம் மேற்கொண்டு தன் படைப்புத் தொழிலைத் தொடங்க., கொடிய நஞ்சுடை பாம்புகள் தோன்றின. அதனால் வேதனைப்பட்ட அயன் உயிரை விட., பிரம்மனின் ஆவி பதினோரு ருத்திரராகியது. அழுது கொண்டே தோன்றியதால் அவர்கள் ருத்திரர் எனப்பட்டனர். ஈசன் தோன்றி பிரம்மனை உயிர்ப்பித்தார். எழுந்த பிரம்மன் சிவபெருமானைத் துதிக்க ஒவ்வொரு சமயமும் ஒவ்வோர் உருவில் பரமன் காணப்பட்டான். சத்தியோஜாதம்., வாமதேவம்., தத்புருஷம்., அகோரம்., ஈசானம் என்ற வடிவங்களில் தோன்றியதுடன் காயத்திரியையும் தோற்றுவித்தார். பரமன் பிரம்மனிடம் துவாபர யுகத்தில் வியாசர் தோன்றி வேதங்களைப் தொகுத்தளிப்பார் என்றார். என்னிடம் தோன்றிய நால்வர் ஞானத்தை அனைவருக்கும் உணர்த்துவதோடு அவர்களும் சிறந்த ஞானம் பெற்று கைலையங்கிரியை அடைவர். திருமாலும்., நீயும்., இந்திரனும்., லிங்கபூஜை செய்து கிடைத்தற்கரிய பேறு பெறுவீர்களாக என்று கூறி மறைந்தார். இவ்வுடலைப் புனிதம் ஆக்குபவை., ஆற்றில் நீராடல்., அக்கினிப் பிரவேசம்., மந்திரங்களை உணர்ந்து நடத்தல் ஆகும். நீராடும் போது வருணனையும்., சிவனையும் பக்தியுடன் தியானிக்க வேண்டும்.

தர்பை., பலாச இலை., நறுமண மலரை நீரில் தோய்த்து சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். பிரணவத்தை உச்சரித்து நெற்றி, கைகள், மார்பு, வயிறு தோள்களிலும் கழுத்துகளிலும் விபூதியைப் பக்தியுடன் தரித்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் செய்து உடலைப் புனிதமாக்க வேண்டும். அதே போல கைகளில் நீர் ஏந்தி மந்திரம் ஜபித்து மும்முறை அர்க்யம் விட வேண்டும். ஆசமனம் செய்து சுத்தாசனத்தில் அமரவேண்டும். பட்டு., கம்பளி., மான்தோல்., ஆகியவற்றின் மீது அமரலாம். தர்ப்பையின் மீது அமர்தல் சிறப்புடையது. பவித்திரம் அணிந்து வலது முழங்கால் மீது இடதுகையின் மீது வலதுகையை வைத்து சங்கல்பம் செய்து ஆயிரத்தெட்டு முறை காயத்திரி ஜபிக்க வேண்டும். பின்னர் பித்ருக்களுக்கு., முனிவர்களுக்கு., தேவர்களுக்கு தர்ப்பணம் செய்யது., பிரம்ம யஜ்ஞம் செய்ய வேண்டும். விநாயகரையும்., முருகனையும் பிம்பத்தில் ஆவாகனம் செய்து உமாமகேஸ்வரனைத் தியானித்து வாசம் கொண்ட நீரால் மந்திர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து ஆடை ஆபரணங்களை அணிவித்து., தூய மலர் கொண்டு அர்ச்சித்து., தூப தீப நைவேத்தியங்களால் ஆராதித்துக் கற்பூரம் காட்டித் தரிசிக்க வேண்டும்.

பரப்பிரம்மம் இருபத்தாறாம் தத்துவம் :

அப்பிரம்மத்தை நாடும் உயிர் இருபத்தைந்தாம் தத்துவம்.
அவ்வியத்தம் இருபத்தி நான்காம் தத்துவம்.
மகத்தத்துவம்., அலங்காரம்., பஞ்ச தன்மாத்திரைகள் ஐந்து., ஞானேந்திரியங்கள் ஐந்து., கர்மேந்திரியங்கள் ஐந்து., மனம்., பஞ்சபூதங்கள் ஆகிய இருபத்திரண்டும் சேர்ந்து இருபத்து மூன்று தத்துவங்களாகும்.
இருபத்தாறாம் தத்துவமாய் நின்ற தனி முதலே கர்த்தா.
அவரிடமிருந்து தோன்றிய மூவரும் இவ்வுலகை நடத்திச் செல்கின்றனர்.

தொடரும்.....

*தேவ கணார்சித ஸேவித லிங்கம்*
*பாவைர் பக்தி பிரேவச லிங்கம் |*
*தினகர கோடி ப்ரபாகர லிங்கம்*
*தத் ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் ||*

கருத்துகள் இல்லை: