ஞாயிறு, 15 மே, 2022

27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள்

உங்கள் நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் தெரியுமா? 27 நட்சத்திரத்திற்குரிய கடவுள்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய  கடவுள் யார்? அந்த நட்சத்திரத்தில் வேறு யாரெல்லாம் பிறந்துள்ளார்கள் என்பதை அறியலாம்

*அஸ்வினி நட்சத்திரத்தில் அஸ்வத்தாமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசரஸ்வதி தேவி.

*பரணி நட்சத்திரத்தில் துரியோதனன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதுர்கா தேவி.

*கிருத்திகை நட்சத்திரத்தில் கார்த்திகேயன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் முருகப் பெருமான்.

*ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகிருஷ்ணன்.

*மிருகசீரிடம் நட்சத்திரத்தில் புருஷமிருகம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

*திருவாதிரை நட்சத்திரத்தில் கருடன், ருத்ரன், ஆதிசங்கரர் மற்றும் ராமானுஜர் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் சிவ பெருமான்.

*புனர்பூசம் நட்சத்திரத்தில் ராமன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீராமர்.

*பூசம் நட்சத்திரத்தில் பரதன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.

*ஆயில்யம் நட்சத்திரத்தில் தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத் தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆதிசேசன் .

*மகம் நட்சத்திரத்தில் சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம்  ஸ்ரீசூரிய பகவான்.

*பூரம் நட்சத்திரத்தில் பார்வதி,மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆண்டாள் தேவி.

*உத்திரம் நட்சத்திரத்தில் மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாலட்சுமி தேவி.

*அஸ்தம் நட்சத்திரத்தில் நகுலன்-சகாதேவன், மற்றும் லவ-குசன் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீகாயத்ரி தேவி.

*சித்திரை நட்சத்திரத்தில் வில்வ மரம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீசக்கரத்தாழ்வார்.

*சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீநரசிம்மமூர்த்தி.

*விசாகம் நட்சத்திரத்தில் கணேசர் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமுருகப் பெருமான்.

*அனுசம் நட்சத்திரத்தில் நந்தனம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீலட்சுமி நாரயணர்.

*கேட்டை நட்சத்திரத்தில் தர்மன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹ பெருமாள்.

*மூலம் நட்சத்திரத்தில் அனுமன் மற்றும் ராவணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஆஞ்சநேயர்.

*பூராடம் நட்சத்திரத்தில் பிரகஸ்பதி பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஜம்புகேஸ்வரர்.

*உத்திராடம் நட்சத்திரத்தில் சல்யன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீவிநாயகப் பெருமான்.

*திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர்.
 
*அவிட்டம் நட்சத்திரத்தில் துந்துபி வாத்தியம் பிறந்துள்ளது. இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள்.

*சதயம் நட்சத்திரத்தில் வருணன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் .

*பூரட்டாதி நட்சத்திரத்தில் கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஏகபாதர்.

*உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜடாயு மற்றும் காமதேனு பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீமகாஈஸ்வரர்.

*ரேவதி நட்சத்திரத்தில் அபிமன்யு மற்றும் சனிபகவான் பிறந்துள்ளனர். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஅரங்கநாதன்

தசரத மன்னன் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்

தசரத மன்னன் இயற்றிய  சனி பகவான் ஸ்தோத்திரம்
""""""""""""""""""""""""""


தசரத மகாராஜா அயோத்தியை ஆண்ட வேளை அது. அப்போது சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தை கடக்க இருந்தார். இதனால் தேசத்துக்கு ஆபத்து வரும் என்று மந்திரி பிரதானிகளெல்லாம், தசரதரிடம் முறையிட்டனர். என் தேசத்துக்கு ஒரு கிரகத்தால் ஆபத்தா? அதைத் தடுத்து என் மக்களைக் காப்பாற்ற அதற்காக என்ன விலையும் கொடுப்பேன்?' என்று ஆர்த்தெழுந்தார் தசரதர். உடனே தன் பறக்கும் தேரை எடுத்தார். வில் அம்பு ஏந்தி சனியின் லோகத்திற்கே சென்று விட்டார். அதிர்ந்து போனார் சனீஸ்வரர்.
""என்னைப் பார்த்தாலே எல்லாரும் ஓடும் வேளையில் நீர் இங்கே வந்திருக்கிறீரே! யார் நீர்? எப்படி வந்தீர்! எதற்காக வந்தீர்?'' என்று கேள்விகளை அடுக்கினார் சனீஸ்வரர். சனீஸ்வரரே! உம் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. உம்முடைய கிரக சஞ்சாரத்தால் எமது தேசத்துக்கு ஆபத்து என்று மந்திரிகள் உரைத்தார்கள். அதைத் தடுக்கவே உம்மைத் தேடி வந்தேன் என்றார் தசரதர்.



சனீஸ்வரர் மகிழ்ந்து போனார். தசரதரே! என் கிரக சஞ்சார காலத்தில் எவரொருவர் பொதுநலன் கருதி பணி செய்கிறாரோ பிறருக்கு நன்மை செய்கிறாரோ கடமையைக் கருத்துடன் செய்கிறாரோ... அவர்களை நான் அண்டவே மாட்டேன். மக்களுக்காக இங்கே வந்து என்னுடன் போரிடவே துணிந்து விட்ட உம்மை வாழ்த்துகிறேன். உம் தேசத்தை ஏதும் செய்ய மாட்டேன் என்றார். தசரதர் மகிழ்ந்தார். தனக்கு அருள் செய்த சனீஸ்வரரை நோக்கி ஸ்லோகங்களால் அர்ச்சித்தார். அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கத்தை தந்துள்ளோம். இதைப் பக்தியுடன் படிப்பதுடன் பிறருக்கு நன்மையும் செய்தால் ஏழரை, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனியால் பீடிக்கப்படும் ராசியினருக்கு நிவாரணம் கிடைக்கும். 

ரவுத்திரன், இந்திரியத்தை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், சூரியபுத்திரன் என்னும் பலவித திருநாமங்களை கொண்ட சனீஸ்வரரே! சகல பீடைகளையும் போக்குபவரே! சூரிய புத்திரரே! உமக்கு நமஸ்காரம்.

கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் போது தேவர்கள், அசுரர்கள், கிங்கரர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், பன்னகர்கள் முதலியோரையும் துன்புறுத்தும் சூரியனின் மைந்தனே! உம்மை வணங்குகிறேன்.

மனிதர், அரசர், பசுக்கள், சிங்கங்கள், காட்டிலுள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய அனைத்துமே உம்மால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சக்தி படைத்த சனீஸ்வரரே! உமக்கு என் வணக்கம்.

நீங்கள் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் காலத்தில் நாடு, நகரம், காடு, படை என அனைத்தும் துன்பத்திற்கு ஆளாகின்றன. அத்தகைய
ஆற்றல் மிக்க சக்தி படைத்தவரே! உம்மைப் போற்றுகிறேன்.

சனிக்கிழமையில் எள், உளுந்து, சர்க்கரை அன்னம் இவற்றை தானம் அளிப்பதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தர்மம்
செய்வதாலும் மகிழ்ச்சி அடைபவரே! சூரிய குமாரனே! உம்மைத் தியானிக்கிறேன்.

சூட்சும வடிவிலும், பிரயாகை என்னும் திருத்தலத்திலும், யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிக்கரைகளிலும், குகைகளிலும் இருக்கும் யோகிகளின் தியானத்திற்கு காரணமானவரே! உம்மை வணங்குகிறேன்.

சனிக்கிழமையில் வெளி இடத்தில் இருந்து தன் வீட்டை அடைபவன் சுகம் அடைவான். சனியன்று வீட்டை விட்டுக் கிளம்ப முடிவெடுத்திருப்பவர், திரும்பவும் அந்த செயலுக்காக செல்லும் தேவை உண்டாகாது. (அதேநாளில் அந்தச் செயல் வெற்றிகரமாக முடிந்து விடும்) இத்தகைய சக்தியைத் தந்துள்ள சனீஸ்வரரே! உம்மைப் போற்றுகிறேன்.

படைப்புக் கடவுளான பிரம்மாவாகவும், காத்தல் கடவுளான விஷ்ணுவாகவும், சம்ஹாரம் செய்யும் சிவனாகவும், ரிக், யஜூர், சாம வேதங்களின் வடிவமாகவும் விளங்குபவரே! உம்மை வணங்குகிறேன்.

திருக்கோணத்தில் இருப்பவரே! பிரகாசம் மிக்கவரே! கருப்பு நிறம் உடையவரே! பயங்கரமானவரே! அழிவைச் செய்பவரே! அடக்குபவரே! சூரியனின் மகனே! ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவரே! மந்த கதி உள்ளவரே! பிப்பலாதரால் துதிக்கப்பட்டவரே! இந்த திருநாமங்களால், காலையில் எழுந்ததும் சொல்லி உம்மை வணங்குபவர்க்கு தோஷம் நீங்குவதோடு சகல சவுபாக்கியமும் தர வேண்டும்.
* சனீஸ்வரரே! தசரதனாகிய என்னால் பாடப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை வேளையில் நீராடி மனத்தூய்மையுடன் சொல்பவர்களுக்கு, நல்ல குழந்தைகள், பசுக்கள்,செல்வம், சொந்தபந்தம் என சகல சவுபாக்கியத்துடன் வாழும் பேறைத் தர வேண்டும். வாழ்வுக்குப் பின், மோட்சம் அளிக்க வேண்டும்.

மாம்பழ கவிச்சிங்கர் நாவலர்

மாம்பழக் கவிச்சிங்கம் நாவலர்...

கண் இழந்தவரான இவர், அதீத முருக  பக்தர்.

சேய் தொண்டர்களில் ஒருவர்.

பழனியில் வாழ்ந்த  முத்தையா
இவர் சிற்பி
இவரின் மகனே மாம்பழக் கவிச்சிங்கம்.

முத்தையா ஆசாரி – அம்மணியம்மாள் தம்பதிக்கு 1836 இல் கவிராயர் பிறந்தார்.

இவரது இயர் பெயர் பழனிச்சாமி.

மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்னரிடம் பெற்றதாகும்.

செல்லமாக அவரது பெற்றோர் மாம்பழம் என அழைத்தனர்.

மூன்றாம்  வயதில்,
அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார்
மாம்பழக் கவிச்சிங்கம்.

முத்தையா தீவிர முருக பக்தர்.

தனது மகனுக்கு கண் போய்விட்டதே
எப்படி அவன் முருகனை காண்பான்
எப்படி வாழ்வான் என
நினைத்து வருத்தப்பட்டு இருந்தார்.

ஓர் நாள்,
முத்தையா உறங்கும்போது கருணைக் கடவுள் கந்தபிரான் காட்சித்தந்து, ‘உன் மகனுக்கு புறக்கண் பார்வைதான் இல்லையே தவிர, அந்த கண்களுக்கு நான் ஒளி என்னும் ஞானத்தை தந்துள்ளேன் கவலை வேண்டாம்’ என்று கூறி மறைந்தார்.

தூக்கத்தில் இருந்து எழுந்த முத்தையா மகிழ்ந்து,  கவலையின்றி மகனை ஆர்வத்தோடு வளர்த்தார்.

முத்தையாவே தம் மகனுக்கு முதல் ஆசிரியராக இருந்து கல்வி போதித்தார்.

தொடர்ந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களை பழனி மாரிமுத்துக் கவிராயரிடம் கற்றுத் தெளிந்தார்.

கவிபாடும் ஆற்றல் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.

மாம்பழக் கவிச்சிங்கம்
மற்றவர்களின் உதவியுடன் வடமொழியையும் கற்றார்.

ஒரு முறை காதால் கேட்டவற்றை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் திறமை பெற்றிருந்தமையால் இவரை ஏகசந்தக் கிரஹி என்றழைத்தனர்.

ஆண்டுகள் செல்ல, மாம்பழம் கல்வியில் சிறந்து விளங்கியதோடு மட்டுமல்லாது, மேலவர்களிடம் வாதிடும் புலமையும் பெற்றிருந்தார்.

இதைக் கண்ட தந்தை, தன் கனவில் இறைவன் கூறியது பலித்ததென்று என நினைத்து மகிழ்ந்தார்.

மாம்பழத்தை யாரும் கண் பார்வையற்றவன் என்று கூறிவிட முடியாது.

காரணம்,

சாதாரணமான மனிதர்களை காட்டிலும் இயல்பாக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவராக இருந்தார்.

மாம்பழம் எப்போதும் பழனி ஆண்டவனைப் போற்றித் தமிழில் இனிய கீதங்களைப் பாடி மகிழ்ந்தார்.

மாம்பழக் கவிராயர் முதன்முதலில் பழனியை அடுத்துள்ள பாப்பம்பட்டி மிராசுதார் வேங்கடசாமி நாயக்கர் ஆய்குடி ஓபுளக்கொண்டம நாயக்கர் துளசிமாணிக்கம் பிள்ளை ஆகியோரைப் பற்றிப் பாடி மனம் களிக்கச் செய்தார்.

புகழும் புலமையும் நிறைந்திருந்த போதும் மாம்பழக் கவிராயர், தம் மூதாதையர்களைப் போன்று தாமும் தமிழ்ப் பற்றும் கொடை நலமும் வாய்க்கப்பெற்ற தமிழரசர் அவைகளுக்குச் சென்று தமிழ்ப் புலமையைக் காட்ட வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டிருந்தார்.

அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தையாண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர்.

ஓர் நாள் இவர்களை காண சென்றவரை அவர்களை பார்க்க முடியாமல் காவலர்களால் திருப்பி அனுப்பப்பட்டார்...



கண் தெரிந்தவர்கள் பாடுவதே மிக கடினம், அந்த மிகக் கடினமான சதுரங்க பந்தத்தை நன்கு பாடியவர்களுள் ஒருவர் மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.

ஒருநாள், பழநி ஆண்டவனுக்குக் காவடி கொண்டு செல்லும் பக்தர்களுடன் மாம்பழக் கவிராயரும் படி ஏறிச் சென்று இறைவன் சந்நதியை அடைந்தார்.

பக்தர்களின் 'அரகரா' கோஷம்.
கேட்டுத் தானும் இறைவன் திருமுன் அமர்ந்தார்.

அருகிலிருந்த சிலர் கண் உள்ள நமக்கே பழநி பதியை காண்பது அரிதானது அப்படியிருக்கும் போது கண்ணில்லாத இவர் என்ன பார்க்கப் போகிறாரோ’ என்று  சிரித்தனர். மனம் நொந்த கவிச்சிங்கர் பழனாபுரி மாலை எனும் நூலைப் பாடினார். விசயகிரி துரை என்பவர் பழநியில் இருந்த நாள், முருகன் பற்பல அற்புதம் காட்டி அருளினான் என்ற செய்தி அவருக்கு நினைவு வந்தது.

‘விசயகிரி துரையின் காலத்தில் இங்கு வெகு அற்புதம் செய்தது சத்தியமாயின் இழித்துப் பேசும் கயவர் சூட்டும் வகைகளை நீக்கி என்னைக் காத்தல் உனக்குப் பெரும் காரியமோ? பழனாபுரி ஆண்டவனே!’’ என்று உள்ளம் உருகப் பாடினார் கவிச்சிங்கர்.

உடனே கவிச்சிங்கரின் மனக்கண்முன், கருவறையில் பழநி நாதனுக்குச் செய்யப்படும் பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், விபூதிக்காப்பு, அலங்காரவகை அனைத்தும் தோன்றலாயின. கவிஞர், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் பெருத்த குரலெடுத்து கூறிக்கொண்டே வந்தார்.இதனைக் கண்டு கேளி பேசியோர் நாணித் தலை குனிந்தனர். அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்கியவர்கள் இராமநாதபுரத்தை ஆண்ட முத்துராமலிங்க சேதுபதியும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இராமநாதபுரத்தை அடைந்த கவிராயருக்குப் பல நாள்களாகியும் இராஜதரிசனம் கிடைக்கவில்லை. இவரது வருகையைப் பற்றிப் புலவர்களும் சேதுபதிக்குத் தெரிவிக்கவில்லை. இறுதியாக ஒரு புலவரின் உதவியால் சேதுபதியின் அவைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.  

அவையில்  

பொன்னுச்சாமித் தேவர், அவரின் சகோதரர் முத்துராமலிங்கத்தேவர் இருவர் மீதும் மாம்பழக் கவிராயர் வாழ்த்துக் கவிகளைப் பாடினார்.

கவிராயரின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பொன்னுசாமித்தேவர் கவிராயரை நோக்கி, "கிரியில் கிரியுருகும் கேட்டு" என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பாப் பாடுமாறு வேண்டினார்.

கவிராயர்,

"மாலாம் பொன்னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்
 சேலாங்கண் மங்கையர் வாசிக்கு நல்யாழ் – நீலாம்
 பரியில் பெரியகொடும் பாலை குளிரும் ஆ
 கிரியில் கிரியுருகும் கேட்டு."

எனப் பாடினார் .

கவிராயரின் இயற்றமிழ், இசைத்தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்த தேவர்,
.
மேலும் பல ஈற்றடிகளைக் கொடுத்துப் பாடக் கேட்டார். அனைத்திற்கும் கவிராயர் பொருத்தமான பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.  

தமிழ்ப் பற்றாளரான பொன்னுச்சாமித் தேவர் கவிராயரின் புலமையை மேலும் அறிய விரும்பி, "புலவரே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாசுரத்தில் "முத்தைத் தரு" எனத்தொடங்கி "ஓது" என்பது வரை உள்ள பகுதியை ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுங்களா" என்றார்.

உடனே கவிராயர்

"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி பரவிய" எனும் தொடரை முதலில் சேர்த்துக் கொள்ளுங்கள்,

அது வெண்பாவாகிவிடும் எனக் கூறி,

"வரமுதவிக் காக்கு மனமே வெண்சோதி
 பரவிய முத்தைத்தரு பத்தித் – திருநகையத்
 திக்கிறை சத்திச் சரவணமுத்திக் கொருவித்
 துக் குருபரனெனவோது."

என்று கவிராயர் பாடிய பாடலைக் கேட்டு மகிழ்ந்தார் தேவர்.

கண் தெரியாமலேயே இவ்வளவு
அற்புதமாக பாடல்களை கொடுக்கிறாரே என ஆச்சரியமானார்.

தமிழ்ப் புலவர்களில் இவரைப் போலத் தாம் எங்கும் எப்போதும் கண்டதில்லை எனக்கூறி, தம் ஆசனத்திலிருந்து எழுந்து வந்து, அவரது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கி, "சபாஷ், சபாஷ்" எனப் பலமுறை கூறிப் பாராட்டினார்.

அத்துடன், "புலவரீர், உமது புலமை அளவிடற்கரியது. அழகும், சுவையும் ஒருங்கே சிறக்கக் கவிபாடும் திறமை வியக்கத்தக்கது. கலை மடந்தையின் பீடமெனத் திகழும் தங்களுக்கு இப்பேரவையில்

."கவிச்சிங்கம்"

 எனும் விருதுப் பெயரைச் சூட்டுகிறேன்" என்று கூறி, மேலும் அவரை கெளரவிக்கும் வகையில் சேது சமஸ்தானத்துப் புலவராகவும் நியமித்தார்.

வாயிற் காவலர் ஒருவர்  புதிதாக வேலைக்கு வந்தவர்
கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள்  நுழைய அனுமதி
மறுத்துவிட்டார்.

இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச்  செய்தார்.  

கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள் நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார்.

பாடல் வருமாறு:

"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்

   சலிக்கக் காய்ந்துவருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
 கருணை மாலே!"

பொருள்:

அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க

திருமாலின் அம்சமானவரே!
தருமகுணம் மிகும் உமது சமுகத்தை

அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி

ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க

நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்

சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.

(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச்  சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.).
.

மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார்.

உடனே கவிச்சிங்கம்   "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார்.

பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது.

பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்;  பாராச்  சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.

ஒருமுறை  பொன்னுச்சாமித்தேவர்  மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும் போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார்.

புலவருக்குத்  துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான்.

உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று.

நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும்  கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?"  என்று வினவினார்.

பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும்.

இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;

புலவருக்குப் பணத்தட்டு வந்தால்  அவர் சமாளித்துக் கொள்வார்

என எண்ணி

 "பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார்.

புலவரும்  ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும்  எடுத்துச் சென்றார்.

அட்டநாக பந்தம், சதுரங்க பந்தம் முதலியவற்றிற்கு இலக்கணம் வகுத்துள்ளார்.

சிலேடை பாடுவதில் வல்லவர்.

தேவாங்கு புராணம், பழநித் திருவாயிரம் என்ற நூல்களும் சில சிற்றிலக்கியங்களும் பாடியுள்ளார். அவை மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்று வெளியாகி உள்ளன.

பழனி முருகன் மேல்

திருப்பழநி வெண்பா,
பழநிப்பதிகம்,
சிவகிரி யமக அந்தாதி,
திருப்பழநி சிலேடை வெண்பா ஆகியவற்றை உளம்முருக பாடினார்.

‘‘வேற்று மருந்து ஏன்?
விபூதி யொன்றேபோ தாதோ
தேற்று உன்னருள் மாத்திரமிருந்தால் காற்றுலவு
பஞ்சாமே நோயனைத்தும் பார்த்துப் பழநிவள்ளால
அஞ்சாமே ஆள்வது அறன்.’’
பழநி வெண்பா அந்தாதி.

‘‘வாழ்க்கைச் சூழலாலும், வயது மூப்பாலும் வரும்
நோய்தீர வேறு எந்த மருந்தையும் நாட
வேண்டியதில்லை; உன் விபூதி மட்டும் போதும்,
காற்றில் பறக்கும் பஞ்சுபோல் நோயனைத்தும் ஓடிவிடும்.
பழநி வள்ளலே!

தண்டபாணித் தெய்வமே!
என்னை உன்னருளால் காக்க  வேண்டும்!’’
என்று பழநி ஆண்டவனின் விபூதி மகிமையை போற்றுகிறார்.

‘‘திளைத்துணை யேனும் நின்சித்தம் என்பக்கம் திரும்பி விட்டால்
வினைத்துயர் தீர்வதரிதோ? பனிவெவ் வெயிலிலுண்டோ?
நினைத்த வரம் தமியேற்கருள் செய்து முன்னின்றிரட்சி
அனைத்துலகும் பணியும் பழனாபுரி ஆண்டவனே!’’
பழனாபுரி மாலை.

பழநி மலை வாழும் பாலதண்டாயுதா! தானியங்களில் சிறிய அளவான தினையளவிலாவது உன் அருள் எனக்குக் கிடைத்துவிட்டால் போதும், முன் வினையால் ஏற்பட்ட துயரம் எல்லாம் ஆதவன் ஒளிபட்டு உருகி அகலும் பனிபோல மறைந்துவிடும். அகிலமெலாம் போற்றி வணங்கும் பழநியிலே ஆட்சிபுரியும் ஆண்டவனே! முருகா! எனக்கு அருள் செய்து ஆண்டருள வேண்டும்.’’

48 வயது வாழ்ந்து 1884ம் ஆண்டு மாசி மாதம் இறைவன் திருவருளால் தனது இறுதிக் காலத்தை உணர்ந்து,‘‘என்ன பிழை யான் செய்திருந்தாலும் எண்ணாமல்
அன்னபிழை எல்லாம் அகற்றி இன்னே நின்உபய பாதநிழல் நல்கி எனைப் பாவித்துக் கொள்
சமயம்
நீ குகனே நம்பினேன்‘‘
என்ற பாடலைப் பாடி முருகன் திருவடியடைந்தார்

 *This is the continuation of yesterday's post on the subject*
 *ஓம் சரவண பவாய நம:*


புல் சாப்பிட்ட நந்தி

புல் சாப்பிட்ட கல் நந்தி!

கல் நந்தி புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும் என்று ஹரதத்தர் மனமுருக வேண்டினார்.

கஞ்சனூரில் தேவசர்மா என்ற அந்தணன் இருந்தான். அவன் ஒரு முறை வைக்கோல் கட்டுகளை, அறியாமலும்.. தெரியாமலும் ஒரு பசுங்கன்றின் மீது போட்டு விட, அந்தக் கன்று துடிதுடித்து இறந்து போனது. அந்தக் கன்று, சிறந்த பக்திமானான ஹரதத்தர் என்பவருக்குச் சொந்தமானது.

பசுங்கன்றைக் கொன்றதால், அவனை மகாபாவி என்று பலரும் ஒதுக்கினார்கள். இந்த நிலையில் நடந்த விபரீதத்தை எடுத்துக் கூறுவதற்காக, பசுங்கன்றின் உரிமையாளரான ஹரதத்தரின் வீட்டிற்குச் சென்றான், தேவசர்மா. அங்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசல்படி தலையில் இடித்து ‘சிவ.. சிவா’ என்று கத்தினான்.

குரல் கேட்டு வெளியே வந்த ஹரதத்தர், தேவசர்மா பற்றியும், அவன் வந்த நோக்கம் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர், ‘நீ சிவ என்று சொன்னதுமே, பசுவைக் கொன்ற உன்னுடைய பாவம் நீங்கிவிட்டது. இரண்டாவதாக சிவா என்று கூறியதற்காக, உனக்கு கயிலாய பதவியும் கிடைக்கப் போகிறது’ என்று தேவசர்மாவுக்கு ஆறுதல் கூறினார்.

ஆனாலும் கூட ஊர்மக்கள் பலரும் தேவசர்மாவை மனதார மன்னிக்கவில்லை. ஊரைவிட்டு விலக்கியே வைத்திருந்தார்கள்.

ஒரு நாள் ஹரதத்தர், கஞ்சனூரில் உள்ள அந்தணர்கள் அனைவரையும், அங்குள்ள ஈசன் எழுதருளியுள்ள அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படியே ஊர் மக்கள் அனைவரும் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

அப்போது ஹரதத்தர், தேவசர்மாவிடம் ஒரு புல் கட்டைக் கொடுத்து, ‘நீ சிவ.. சிவா என்று சொன்னதுமே உன்னுடைய பசுவைக் கொன்ற பாவம் நீங்கிவிட்டதாக நான் கூறினேன். ஆனால் அதை ஊர் மக்கள் யாரும் நம்பவில்லை. எனவே நீ இங்குள்ள கல் நந்திக்கு இந்தப் புல்லைக் கொடு. அது அதை சாப்பிட்டால் உன்னுடைய பாவம் நீங்கிவிட்டதாக இங்கிருப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள்’ என்றார்.

அதைக் கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். ‘கல் நந்தி எப்படி புல் சாப்பிடும்’ என்பதால் வந்த நகைப்பு அது.

ஆனால் ஹரதத்தரோ இறைவன் மீதான நம்பிக்கையில், ‘இறைவா! உன்னுடைய நாமத்தை ஒரு முறை சொன்னாலே பசுங்கன்றை கொன்ற பாவம் நீங்கிவிடும் என்று நான் சொன்னது உண்மையானால், கல் நந்தியை புல் சாப்பிட்டு மெய்ப்பிக்கச் செய்ய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினார்.

என்ன ஆச்சரியம்.. தேவசர்மா கொடுத்த புல்லை அந்த கல் நந்தி சாப்பிட்டது. அங்கிருந்த அனைவரும் சிவ நாமத்தின் உயர்வையும், பக்திக்கு கிடைக்கும் பலனையும் கண்டு இறைவனை மனதார வழிபட்டனர்.

இந்த கல் நந்தி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கிறது.  கும்பகோணம் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ஆடுதுறையில் இருந்து உள்ளே சென்று கஞ்சனூர் ஐ அடையலாம்  .

🔆🔆🔆🔆🔆🔆 சர்வம்சிவார்ப்பணம்


வைத்தியநாத தேசிகர்

வைத்தியநாத தேசிகர்

17ஆம் நூற்றாண்டில் திருவாரூரில்
வான்மீக நாதர், உலகம்மை தம்பதியருக்கு மகனாக வைத்தியநாத தேசிகர் பிறந்தார்.

முருகபத்தியில் மிகச் சிறந்தவர் இவர் சேய்தொண்டர்களில் ஒருவர். தினமும் முருகப்பெருமானை நினைத்து வணங்கி வாழ்ந்து வந்தார் வைத்தியநாத தேசிகர், அருணகிரிநாதர் மீது அளவிலா அன்புக்கொண்டவர்.

ஓர் நாள், வைத்தியநாத தேசிகரின்
கனவில் வந்த முருகப்பெருமான்
பிள்ளைக் கவி பாடு என கூறினார். காலையில் முருகப்பெருமானை நினைத்து பிள்ளை தமிழ் பாடினார்.

பின்னர் ஓர் நாளில், மயிலம் முருகன்  ஆலயத்திற்குச் சென்றார். அந்த ஆலயத்தில் குடிக்கொண்டிருந்த முருகனை தரிசித்து ``மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ்’’ பாடினார்.

மேலும், சில நாள் அங்குத்தங்கி இனிய பல தமிழ்மாலைகள் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழகத்தில் எண்ணற்ற முருகன் ஆலயங்களை தரிசித்து பின்னர் திருவாரூர் திரும்பினார். வைத்தியநாத தேசிகர், படிக்காசுப் புலவரின் ஆசிரியர். தருமபுரம் ஆதினத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர்

பாசவதை பரணி, நல்லூர் புராணம்,
திருவாரூர் பன் மணிமாலை முதலிய நூல்களை இயற்றினார்.

இலக்கண விளக்கம் எழுதியுள்ளார்.
இது ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும்.

இந்நூல் ஐந்திலக்கணங்களையும் கூறுவதுடன் பாட்டியல் பற்றியும் விளக்குகிறது.

தமிழ் இலக்கணத்தை விரிவாகவும் முழுமையாகவும் கூறுவதால் இந்நூலைக் குட்டித் தொல்காப்பியம் என்றும் குறிப்பிடுவதுண்டு.


நரசிம்ம ஜெயந்தி

நரசிம்ம ஜெயந்தி

 


அதாவது பிரகலாதன் அழைத்த குரலுக்கு தூணை பிளந்து கொண்டு அதர்மமே உருவான இரண்யகசிபுவை வதம் செய்ய 16 கரங்களுடனும் சிம்ம முகத்துடனும் கூரிய நகங்களுடனும் நரசிம்மராய் அவதாரம் செய்த தினம்

பகவான் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்ம அவதாரத்தை வணங்கிட பிறவித்துன்பங்களும் சத்ரு தொல்லைகளும் மனபயங்களும் ருணபீடைகளும் நீள் பிணிகளும் விலகி நல்வாழ்வமைந்திடும் நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.
நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் “சிங்கவேள்குன்றம்“ என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள்.
இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள். நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான். திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், “இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்” என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
“எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்” என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம். திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும். நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம். பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.
அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும். வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.
நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும். நரசிம்மரை வழிபடும் போது “ஸ்ரீநரசிம்ஹாய நம” என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும். “அடித்த கை பிடித்த பெருமாள்” என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள். நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும்.
அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
*ஓம் நரசிம்ஹாய நம.*

தசாவதாரம் ஏழு ராம அவதாரம்


தசாவதாரம் ஏழு ராம அவதாரம்
********************************
பெருமாளின் அவதாரங்களில் இது ஏழாவது அவதாரமாகும்....

ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக திருமால் எடுத்த அவதாரம் ராமன். ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும்.

வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும் இரண்யகசிபுவை சிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.
இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவ து பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். சூரிய குலவம்சவழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடை ய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீமந்நாராயணன் கோசலைக்கு ராமன் என்ற மகனாக அவதரித்தார். பூமியில் அரக்கர்கள் அட்டகாசம் அதிகமாயிற்று. தேவர்களிடமும் தங்கள் அட்டூழியங்களைச் செய்து பயமுறுத்தி வந்தார்கள். அவர்களைத் துன்பத்திற்கு ஆளாக்கினார்கள். ஆகவே ஸ்ரீமந் நாராயணன் அவர்களிடமிருந்து உலகத்தையும், தேவர்களையும் காப்பாற்றவே ராமராக அவதாரம் எடுத்தார்.
விசுவாமித்திரர் தாம் இயற்ற இருக்கும் வேள்விக்குப் பங்கம் ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு ஸ்ரீராமன், லட்சுமணன் ஆகிய இருவரையும் தம்மோடு அனுப்பி வைக்கும்படி தசரதனிடம் கேட்டார். முதலில் மறுத்த தசரதன் பின்பு அனுமதி வழங்கினான்.

அவர்களை வேள்வி செய்ய இருக்கும் காட்டிற்கு  அழைத்து செல்லும் வழியில் தாடகை என்ற ஓர் அரக்கி குறுக்கிட்டாள். அவனை ஸ்ரீராமன் வதம் செய்தார். யாகம் தொடங்கியதும் அரக்கர்கள் மாரீசன் என்பவன் தலைமையில் அதை நடக்க விடாதபடி இடையூறு செய்தார்கள். ராமன் அரக்கர்களை அழித்தார்.
மாரீசனைத் தம் இராம பாணத்தால் சமுத்திரத்திலே கொண்டு போய் தள்ளுமாறு செய்தார். அதனால் மகிழ்ச்சியுற்ற விசுவாமித்திரர் அநேக அஸ்திரங்களை அவர்களுக்கு உபதேசித்து அயோத்திக்கு அழைத்து வந்தார். அப்படி வரும் போது கல்லாக சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை ஸ்ரீராமனின் பாத ஸ்பரிசத் தால் சாப விமோசனம் பெற்றுத் திரும்பவும் மானிட வடிவம் பெற்றாள்.
பின்பு அவர்களை விசுவாமித்திரர் ஜனகர் ஆட்சி புரியும் மிதிலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஜனக புத்திரியான சீதைக்கு உரிய கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நடந்தது. அந்த சுயம்வர மண்டபத்தில் ஒரு சிவதனுசு இருந்தது. அது யாராலும் தூக்கி நிறுத்தி வளைத்து நாணேற்ற முடியாத ஒன்று. அந்த வில்லை எந்தப் பராக்கிரமசாலி வளைத்து நாணேற்றுகிறானோ அவனுக்குத் தன் பெண்ணைத் தருவதாக அறிவித்திருந்தான் ஜனகன்.

பலநாட்டு மன்னர்கள் வந்து முயன்றும் சிவதனுசு முறிய வில்லை. ஸ்ரீராமர் அதை வளைத்து நாணேற்றிக் காட்டவே அவருக்கு ஜனகன் சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான். திருமணம் முடிந்துதம் சுற்றம் சூழ அயோத்தி திரும்புகையில் ராமனைப் பரசுராமர் எதிர்த்தார். அவரிடம் இருந்த வில்லை ராமன் வளைத்து, பரசுராமரின் அகந்தையை அடக்கினார். நாடு திரும்பிய ஒரு சில நாள்கள் கழித்து தசரதன் தன் மகன் ஸ்ரீராமனுக்குப் பட்டம் சூட்ட நினைத்தான். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் ராமரின் சிற்றன்னை கைகேயி மிகவும் சந்தோஷமுற்றிருந்தாள். அப்படி அவள் மகிழ்ச்சியாக இருந்த சமயம் மந்தரை என்ற வேலைக்காரி, கைகேயியிடம் துவேஷத்தை ஏற்படுத்தினாள். ராமன் பட்டத்தரசன் ஆகிவிட்டால் கோசலைக்கு பெருமையே ஒழிய கைகேயி உனக்கு ஏது பெருமை? மேலும் ஜனகர் புத்திரியான சீதை பட்டத்தரசி ஆவாள். ஏற்கனவே உன் தந்தையார் நாடாகிய கேகய நாட்டிற்கு ஜனகர் பகைவர். இந்நிலையில் உன் பிறந்த இடம் தாக்கப்படலாம் என்று மந்தரை சொல்ல கைகேயி மனம் மாறினாள். எனவே தசரதர் கைகேயிக்கு ஏற்கனவே தருவதாக வாக்களித்த இரண்டு வரங்களைப் பயன்படுத்தி ஒரு வரத்தால் பரதன் ஆட்சிக் கட்டில் ஏறவும், மற்றொரு வரத்தால் ராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புகுதல் வேண்டும் எனவும் தசரதனை கேட்குமாறு மந்தரை சொல்லிக் கொடுத்தாள்.

மந்தரையின் தூண்டுதலால் தசரதனிடம் அவ்வாறே வரங்களைத் தற்போதே தரவேண்டும் எனக் கைகேயி கேட்டாள். மன்னன் ராமன் மீது கொண்ட பிள்ளை பாசத்தை அளவிட முடியாது. கைகேயி கூட அப்படித்தான் இருந்தாள். ஆனால் தற்போது இவ்வாறு மாறி விட்டாளே என வருந்தினார். தசரதன் எவ்வளவு கெஞ்சியும் அவளுடைய பிடிவாதத்தை மாற்ற மறத்து விட்டாள். தந்தையின் நிலை கண்டு அவர் வாக்கை நிறைவேற்றச் சித்தமானார் ராமன். பரதனுக்கு ஆட்சியை அளித்து விட்டு ராமன் காட்டிற்குப் போனார். அவரோடு லட்சுமணனும் சீதையும் உடன் சென்றார்கள். தன் பிரியமான மகன் கானகம் சென்றான் என கேள்விப்பட்ட தசரதன் அத்துயரம் தாளாமல் உயிர் துறந்தான். அயோத்தி நகரமே சோகத்தில் மூழ்கியது. காட்டுக்குச் சென்ற ராமனுடன் கங்கைக் கரையில் குகன் என்ற வேடன் நட்புக் கொண்டான். அவன் உதவியால் கங்கையைக் கடந்து பரத் வாஜ முனிவர் ஆசிரமத்திற்கு ராமன் வந்தார். அங்கு அவரது உபசாரத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சித்திரகூடம் சென்று அங்கு பர்ண சாலையை அமைத்துக் கொண்டான். அங்கு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிகள் நடக்கும் போது பரதன் தன் தாய் வழிப்பாட்டன் நாடாகிய கேகய நாட்டிற்கு போயிருந்தான். அயோத்திக்கு அவன் மீண்ட சமயம் தன்னைப் பெற்ற அன்னையின் பேராசையால் ஏற்பட்ட சம்பவங்களை தெரிந்து மிகவும் வருந்தினான். மூத்தவன் இருக்க நான் எப்படி முடி சூடுவது என்று பட்டத்தை ஏற்க மறுத்து விட்டான். அத்துடன் வனத்திற்குச் சென்று சகோதரர்களை அழைத்து வரப்போனான். சித்திரகூடம் சென்றான். தந்தையின் மரணச் செய்தியைச் சொன்னான். சொல்லி விட்டு அயோத்தி நாட்டை வந்து ராமன் தான் ஆள வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆனால் ராமன் மறுத்து விட்டார். பின்பு அங்கேயே மிகவும் துயருற்ற ராமனும், சகோதரரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தனர். பரதனிடம் ராமன், பரதா! உன் விருப்பப்படி நான் அயோத்திக்கு வருவது சரியல்ல. தந்தையின் வாக்கு பொய்யாகி விடும். நானும் என் வாக்குறுதியை நிறைவேற்றத்தானே வனம் வந்திருக்கிறேன். அவருக்கு நீயும் மகன் என்ற முறையில் அயோத்தி சென்று மக்களுடைய நலத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்து என்றான். "அண்ணா!  அயோத்தி அரசுக்கு உரியவர் தாங்கள். நீங்கள் அங்கு வராமல் நான் அயோத்தி திரும்பமாட்டேன் என்ற சபதம் எடுத்து இங்கு வந்திருக்கிறேன். ஆக தயவு செய்து தாங்கள் பட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும்." என்று பரதன் பணிந்து உரைத்தான். "தம்பி! அரசன் இல்லாத மக்கள் தவிப்பார்கள். உடனே நீ அயோத்திக்குப் போக வேண்டும்.." என்றார் ராமர். " அண்ணா அப்படியானால் நான் உங்கள் ராஜ்யத்தை உங்கள் பிரதிநிதியாகவே ஆட்சி செய்வேன். அதற்காகத் தாங்கள் தங்களது பாதுகைகளை எனக்குத் தந்தருள வேண்டும்."  என்று பிரார்த்தினான். ராமன் பாதுகைகளைக் கொடுத்தார். அவற்றைத் தலை மேல் தாங்கிக் கொண்ட பரதன், அயோத்திக்குப் போகவில்லை. ராமனின்றி தலைநகர் போவதில்லை என்ற உறுதி பூண்டிருப்பதால் நந்திக்கிராமம் என்ற இடத்திற்கு சென்றான். ராமனுடைய பாதுகைகளைச் சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து அவருடைய பிரதிநிதியாகவே இருந்து அரசு காரியங்களை மேற்கொண்டான்.

பகுதி இரண்டு....

ஸ்ரீராமன், சீதை லட்சுமணுடன் அத்திரி முனிவர் ஆசிரமம் போனார். அங்கு தங்கி அவருடைய உபகாரங்களை ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவர்கள் செல்லும் வழியில் விராதன் என்ற அரக்கன் குறுக்கிட்டான். அவனை அழித்து விட்டு அகஸ்தியர் ஆசிரமம் சென்றார். அவர் வில்லுப், அஸ்திரங்களும் கொடுத்து உதவினார். அங்கிருந்து கோதாவரி நதி தீரத்திற்குப் போகும் வழியில் பறவைகளின் அரசனான ஜடாயுவை சந்தித்தார். அவரோடு அளவளாவிய பின்னர் பஞ்சவடி வந்தார். பர்ணசாலை அமைத்து அவர்கள் மூவரும் அங்கு தங்கினர். அந்தக் காட்டின் பெயர் தண்டகாருண்யம் என்பதாகும். ராமர் அங்கு வந்து சேர்ந்ததால் அங்குள்ள முனிவர்கள் அரக்கர் பயமின்றி வாழ முடிந்தது. அங்கே ஒருநாள் இராவணன் என்ற இலங்கேஸ்வர னுடைய தங்கை சூர்ப்பனகை என்பவளைக் காண நேர்ந்தது. அவர் ராமருடைய அழகைக் கண்டு மயங்கினாள். அவரை அடைய ஆசைப்பட்டாள். ஆயினும் தன்னிலும் அழகு மிகுந்த சீதை அவன் கூட இருக்கும் வரை தன் ஆசை நிறைவேறாது என்ற முடிவுக்கு வந்தாள் சூர்ப்பனகை. பேரழகியாக வடிவம் தாங்கிப் பஞ்சவடிக்குள் நுழைந்தாள் சூர்ப்பனகை. லட்சுமணனுக்கு அவளுடைய தீய எண்ணம் தெரிய வந்தது.

அதனால் அவன் அவளுடைய மூக்கையும், காதுகளையும் அறுத்து அவளை அவமானப்படுத்தி விரட்டி அடித்தான். இதை அவளுக்குப் பக்கத்தில் இருந்த கரன், தூஷணன் என்ற இரு சகோதரர்களுக்கும் தெரிவித்தாள். அவர்கள் தம் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறாதவராக ராம, லட்சுமணர்களைக் கொன்று விடுவதாகக் கூறி அவர்களுடன் போரிட வந்தார்கள். ராமர் தனியாகவே இருந்து மிகவும் குறுகிய காலத்தில் அவர்கள் இருவரையும் சம்ஹரித்தான். சூர்ப்பனகை உடனே இலங்கைக்கு ஓடினாள். ராவணனாகிய தன் சகோதரனிடம் கர, தூஷணாதியர் இராமனால் வதம் செய்யப்பட்டதும் தான் காது, மூக்கு அறுபட்டதையும் உள்ளம் உருக எடுத்துச் சொன்னாள். அதோடு அவள் நிறுத்தினாளா? இல்லை. ராமன் மனைவி சீதை பேரழகி. அந்த அழகு பிம்பத்தை அவன் அடைய வேண்டும் என்ற ஆசைக்கனல் அவன் உள்ளத்தில் தோன்றும் படி சொன்னாள். இதை கேட்டதும் சீதையை அபகரித்துக் கொண்டு வந்து தன் அந்தப்புரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என ராவணன் தீர்மானித்தான். மாயவேலை செய்வதில் அதிசாதுர்யமான மாரீசன் என்ற அரக்கனைப் பொன்மான் உருக்கொண்டு பஞ்சவடியில் திரிய சொன்னான். அப்படி மானாக திரிந்து ராம லட்சுமணர்களை அங்கிருந்து சிறிது தூரம் தள்ளி அழைத்துச் செல்லுமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வாறே மாரீசன் பொன் மானாக மாறி பஞ்சவடிக்குச் சென்று ராமர் சீதை உள்ள பர்ணசாலைப் பக்கம் நடமாடினான். தகத்தகாயமாக மின்னும் பொன்மானைக் கண்டாள் சீதை. அதைத் தனக்குப் பிடித்து தருமாறு ராமனை வேண்டினாள்.

லட்சுமணன், தேவி அது உண்மையான மான் அல்ல. உங்களையும் மற்றோரையும் ஏமாற்ற வந்த மாயமான் என்றான். சீதை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்ரீராமர் பர்ணசாலையில் லட்சுமணனைக் காவலாக இருக்கும் படிச் சொல்லி விட்டு மானைத் துரத்தினார். கையில் வில்லோடு தன்னை தொடர்ந்து வரும் ஸ்ரீராமனிடம் அகப்படாத மாயமான் அவனை வெகு தூரம் இழுத்துச் சென்றது. அலைச்சலில் சினந்த ராமன் ஒர் அம்பு விட்டு அழகிய மானைக் கொன்றார். மாரீசன் உயிர் விடும் போது ராமனுடைய குரலைப் போன்று மாற்றிக் கொண்டு ஹே லட்சுமணா! ஹே சீதா என்று அலறியபடியே உயிரை விட்டான். சீதை பர்ணசாலையில் இருந்தாலும் அவளுக்கு அந்தக் குரல் கேட்டது. அவள் அதனால் வேர்த்து வெலவெலத்துப் போய் லட்சுமணா! உன் அண்ணாவுக்கு ஏதோ ஆபத்து என நினைக்கிறேன். நீ சீக்கிரம் போய் பார் என்று லட்சுமணனை அங்கிருந்து போய்ப் பார்த்து வரும்படி வேண்டினாள்.

தேவி! இது அந்த மாயமானுடைய குரல். என் சகோதரனை வெல்பவர் இந்த பூமியில் எங்கும் யாரும் கிடையாது. ஆகவே கவலை வேண்டாம் என்றான் லட்சுமணன். இப்படி சொன்னதும் அவளுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. லட்சுமணா, நான் சொல்வதைக் கேள், உடனே ஓடிச்சென்று உன் அண்ணனுக்கு என்ன நேர்ந்தது என்று பார்! என ஆவேசமாகக் கூறினாள். சீதையைப் பர்ணசாலையில் தனியே விட்டு விட்டுத் தன் அண்ணனைத் தேடிச் சென்றான் லட்சுமணன். அந்த சமயம் பஞ்சவடியில் ராவணன் ஏற்கனவே வந்து பதுங்கி இருந்தான். ஓர் சந்நியாசியாய் பர்ணசாலைக்கு வந்து பிச்சை கேட்டான் சீதை பிச்சை போட வந்தாள். அப்படியே  அவளை கவர்ந்து கொண்டு விமானத்தில் ஏறி பறந்து போனான் ராவணன். பறக்கும் ஆகாய வீதியில் பறவைகளின் அரசனான ஜடாயு வந்து எதிர்த்தான். அடாத செயலுக்கு அழிவுகாலம் வந்து சேரும் என்று சொல்லி விட்டு அவன் ராவணனைத் தாக்கினான்.

ராவணனோ ஜடாயுவை அடித்துப் பலமான காயங்களை ஏற்படுத்தி விட்டு அவனைக் கீழே தள்ளி விட்டு நேரே இலங்கைக்குப் போனாள். மாரீசனைக் கொன்ற ராமன் பர்ணசாலைக்கு திரும்பினான். அங்கு வரும் வழியில் லட்சுமணன் தங்களுக்கு ஏதோ ஆபத்து என பார்த்து வரும் படி சீதாதேவி என்னை அனுப்பினார் என ராமனிடம் சொன்னான். இருவரும் பெருத்த கலக்கமுற்று பர்ணசாலைக்கு திரும்பினார்கள். அங்கு சீதை இல்லாததைக் கண்டு கலக்க முற்றனர். இருவரும் சீதையை வனாந்தரம் முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது பலத்த காயங்களுடன் ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டனர். ஜடாயுவை தன் மடியில் கிடத்தினார் ராமன். ராவணன் சீதையை கடத்திச் சென்றதை அறிவித்து விட்டு உயிர் நீத்தான் ஜடாயு. ஜடாயுக்கு ஈமச்சடங்குகளை எல்லாம் செய்து விட்டு ராமனும், லட்சுமணனும் அங்கிருந்து கிளம்பினார்கள். கபந்தன் என்ற ஓர் அரக்கன் அவர்களை இடைமறித்தான். அவனோ பிறப்பால் அரக்கன் கிடையாது. சாபத்தின் காரணமாக அவன் அரக்கனாகத் திரிந்தான். அவனை அவர்கள் வதம் செய்ய சாபவிமோ சனம் பெற்றான். சாபவிமோசனம் ஆனதும் அவன் உடல் தேஜோமயமாகத் திகழ்ந்தது. அந்த ஒளிமிகுந்த உடலுடன் அவர்களை வலம் வந்து வணங்கி அவர்களைச் சபரியிடம் போகுமாறு வேண்டினான். அவர்கள் சபரியிடம் போனார்கள். அவள் மிகவும் பக்தி சிரத்தையோடும், அன்போடும் உபசரித்தாள். அவள் ராமருக்குப் பழவகைகளைக் கொடுக்கும் முன்பு தான் கடித்துச் சுவை பார்த்து விட்டே அவருக்கு கொடுத்தாள். அதை  கண்டு பூரிப்பும், ஆனந்தமும் அடைந்தான் ராமன். அவள் கடித்துக் கொடுத்தப் பழங்களை விரும்பி சாப்பிட்டான். அவள் ராமரையும், லட்சுமணரையும் மதங்கமலைக்குப் போகும் படி அறிவுறுத்தினாள். மேலும் அங்கு சென்றால் அந்த மலையைச் சேர்ந்த சுக்ரீவன், அனுமன் முதலியோர் சீதையை மீட்க பெரிதும் உதவுவார்கள் என்றும் சொன்னாள். பகவான் அவளுக்கு மோட்சத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து மதங்கமலைக்குப் புறப்பட்டார்.

பகுதி மூன்று

சுக்ரீவன் மதங்கமலையில் அனுமனோடு தங்கியிருந்தான். கிஷ்கிந்தை மன்னனான வாலியின் சகோதரன் சுக்ரீவன். அவனை அவன் அண்ணன் நாட்டை விட்டுத் துரத்திவிட்டதால் அவனுக்குப் பயந்து மதங்கமலையில் ஒளிந்திருந்தான். ராம, லட்சுமணர்களை அந்த மலைச்சாரலில் பார்த்தவுடன் அவர்கள் தன் அண்ணா வாலியால் அனுப்பப்பட்டுத் தனக்கு துன்பம் விளைவிக்க வருகிறார்களோ என்று பயந்தான். எனவே அவர்களை யார் என்று தெரிந்து வரும் படி அனுமனை அனுப்பினார். அவர்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுமன் ஸ்ரீராமனிடம் மிகுந்த மதிப்பு கொண்டான். பிறகு சுக்ரீவனிடம் ராம, லட்சுமணர்களை அழைத்துச் சென்றான். சுக்ரீவனைச் சந்தித்து விவரம் அறிந்ததும் அவனைத் தன் சகோதரர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டு அவனுடைய துயரத்தைத் துடைப்பதாக வாக்குறுதி கொடுத்தான். எனினும் சுக்ரீவனுக்கு அவனிடம் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. காரணம் வாலியை ராமன் ஒருவனாகக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான். காரணம் வாலியும் வரம் பெற்றவன், அவனை எதிர்ப்போர் பலத்தில் பாதி அவனிடம் போய் விடும். அப்படிப்பட்டவனை ஒரு தெய்வம் தான் வெல்ல முடியுமே தவிர ஒரு மனிதன் நிச்சயம் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கை அவனிடம் வலுத்து இருந்ததே காரணம். பின்னர் வாலியை யுத்தத்திற்கு அழைக்கும் படி சுக்ரீவனை அனுப்பினார். வாலி வந்தான். சுக்ரீவனுடன் போரிட்டான். அப்படி அவர்கள் இருவரும் போரிடும் போது ராமன் வாலியை மறைந்து நின்று அம்பு எய்து கொன்றான். சுக்ரீவனைக் கிஷ்கிந்தை மன்னன் ஆக்கினான்.

அதற்குப்பின் சீதையை தேட பல பாகங்களுக்கும் வானரப் படைகளை அனுப்புவதாகச் சொன்னான் சுக்ரீவன். அப்போது மழைக்கால மாக இருந்ததால் சிறிது காலம் கழித்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்தான். பின் தான் கூறிய வாக்குறுதியை மறந்தே போனான் சுக்ரீவன். அவன் சிற்றின்பத்தில் கட்டுண்டு கிடக்கிறான் என்பதைக் கேள்விப்பட்ட ராமர், லட்சுமணனை அவனிடம் அனுப்பி வைத்தான். அங்கே மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனை பார்த்து, வாலியை  கொன்ற அஸ்திரத்தைப் போல ஆயிரக்கணக்காண அஸ்திரங்கள் இருக்கின்றன அதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்தார். அதை கேட்டதும் தான் செய்த தவறை உணர்ந்தான் சுக்ரீவன். ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டான். அதன் பின் சீதையைத் தேட நாலாப்புறமும் வானரப் படைகளை அனுப்பினான். அப்படி சென்ற படைகளில் தெற்கே சென்ற படைகளை அனுமன், அங்கதன், ஜாம்பவான் தலைமை தாங்கி நடத்தி சென்றனர். அவர்கள் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காமல் மகேந்திர மலைக்கு வந்தார்கள்.

முயற்சியில் தோற்றாலும் உடனே அவர்கள் கிஷ்கிந்தை திரும்பவில்லை. சீதாபிராட்டியை பார்க்கும் பாக்கியம் ஜடாயுவுக்குக் கிடைத்தது மாதிரி தங்களுக்குக் கிடைக்கவில்லையே என அவர்கள் ஏங்கினர். அந்த சமயத்தில் அருகாமையில் தான் ஜடாயுவின் தம்பி சம்பாதி இருந்த விவரம் தெரிய வந்தது. ராம, லட்சுமணர்களுடைய துன்பத்தை அறிந்த சம்பாதி சீதையை ராவணன் சிறை வைத்திருக்கிற சேதியை சொன்னான். அனுமனை அனுப்பி கடல் தாண்டி ராவணன் அவளை எங்கே சிறை வைத்திருக்கிறான் என்று அறிந்து வரும் படியும் ஆவேசமாகக் கூறினார். அதே போல எல்லோரும் அனுமனை அவ்வாறு வேண்டிக்கொண்டார்கள். பகவானிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் அவன் விஸ்வரூபம் எடுத்தான். கடலைத் தாண்டி இலங்கையை அடைந்து அங்கு சீதையை நெடுகத் தேடினான். கடைசியாக அசோக வனத்திற்குள் அவன் போனதும் அங்கே சீதா, ஸ்ரீராமரை நினைத்து வருந்தி அழுது கொண்டிருந்தாள். இதைக் கண்ட அனுமன் மிகவும் வருந்தினார். அவளை சுற்றி காவலில் இருந்த பெண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொழுது சீதாதேவியை நேரில் பணிந்து தொழுதான். தான் யார் என்பதை அவளிடம் எடுத்து கூறினான். தங்களைத் தான் நான் தேடி வந்துள்ளேன். அதற்கு அடையாளமாக ஸ்ரீராமர் கொடுத்து அனுப்பிய கணையாழியைக் கொடுத்து வணங்கினான். அதைத் தன் கைகளில் வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டாள் சீதா. எம்பெருமானுடைய கணையாழியைப் பெற்று மகிழ்ந்த சீதா தன்னிடமிருந்த சூடாமணியை அனுமனிடம் கொடுத்தாள். பின்பு இலங்கையில் தான் இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி பிரபுவை தயவு செய்து சீக்கிரமே வந்து என்னை சிறை மீட்கச் சொல்வாயாக என்று வேண்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து விட்டோம் என்ற களிப்பில் உடனே அனுமன் திரும்பவில்லை. ராவணன் கோட்டைக்குள் இருக்கிற நிலைமையையும் தெரிந்து கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இதனால் ராவணனுடைய அசோகவனத்தை அழிக்கும் வேலையில் இறங்கினான். இந்த சேதி ராவணன் காதுக்கு எட்டியது. உடனே அந்த வானரத்தை பிடித்து வருமாறு தன் பேரனும், தன் மகன் இந்திரஜி த்தின் பிள்ளையான அட்சயன் தலைமையில் ஒரு சேனையை அனுப்பினான். அனுமன் அவர்களை ஒரு சிலகண பொழுதில் மாய்த்து விட்டான். அதனால் சீற்றம் கொண்ட ராவணன் மகன் இந்திரஜித்தே நேரில் புறப்பட்டு அசோகவனத்திற்கு வந்தான். அவன் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தினால் அனுமனைக் கட்டி இழுத்து வந்து ராவணன் அவையில் நிறுத்தினான். அப்போது அவனை பார்த்து ராவணன், அத்துமீறி அட்டகாசம் செய்யும் வானரமே நீ யார்? என்று வினவினான். என் பெயர் அனுமன். நான் கோசலை நாட்டு மன்னன் ஸ்ரீராமனுடைய தூதன். அதோடு கிஷ்கிந்தை அரசன் சுக்ரீவனுடைய தாசன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டு மேலும் ராவணனிடம் ராவணா நீ புத்தி கெட்டு போய் தேவி சீதாவை அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறாய். இனியும் நீ தாமதியாமல் ஸ்ரீதேவியை எம்பெருமானிடம் ஒப்படைத்து விடு. அவர் உன்னை மன்னித்து உனக்குத் திருவருள் தருவார் என்று எடுத்துச் சொன்னார். அப்போது ராவணன் அவனைக் கொன்று விடுங்கள் என்று கூறினான். தூதனாக வந்த அனுமனை நாம் கொல்வது தர்மம் அல்ல என்றான் ராவணன் தம்பி விபீஷணன்.

உடனே இலங்கேஸ்வரன் தன் ஆட்களை அழைத்து ஏதாவது அவமானம் செய்து அனுமனை அனுப்பலாம் என்று சொல்லி அனுமன் வாலில் தீ வைத்து அவனை விரட்டி விடுங்கள் என்று கட்டளை இட்டான். அனுமன் தன்  வாலில் எரிந்த நெருப்பைக் கொண்டு இலங்கையை எரித்து விட்டு மகேந்திரமலைக்கு திரும்பினார். அங்கிருந்து எல்லாருமாக ஸ்ரீராமரை அடைந்தனர். கண்டேன் தேவியை என்று அனுமன் ஸ்ரீராமரிடம் சொல்லி விட்டு அவள் அடையாளமாகக் கொடுத்து அனுப்பிய சூடா மணியைக் கொடுத்தார். தேவியின் சூடாமணியைக் கண்டதும் ராமர் கண்ணீர் விட்டார். சீதாதேவியின் நிராதரவான நிலையை நினைத்துப் பெரிதும் வருந்தினார். சுக்ரீவனை அழைத்து யுத்தத்திற்குத் தயாரா கும்படி கேட்டுக் கொண்டார். வானர சேனைகளுடன் அனைவரும் புறப்பட்டு சமுத்திரக் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். ராமனிடம் கொண்டிருந்த அன்பு காரணமாக சமுத்திரத்தில் மலைகளையும், பாறைகளையும் போட்டு இலங்கைக்குப் போய்ச்சேர பாலம் அமைத்தார்கள். அதன் வழியே அனைவரும் இலங்கைத் தீவுக்குப் போய்ச் சேர்ந்தனர். ராவணனுடைய தம்பி விபீஷணன் அசுர குலத்தில் பிறந்தாலும் தன் சகோதரன் தர்மத்திற்கு விரோதமாகப் பிறர் மனைவியை சிறை எடுத்து வந்திருப்பதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆகவே அவன் தன் அண்ணனிடம் தர்மங்கள் எடுத்துச் சொன்னான். அண்ணா! நீ இன்று சீரும் சிறப்புமாக இருக்க காரணம் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடம் பெற்ற வரம். அவரும் உனது ஈன செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். பிறர் மனைவியை விரும்புவது தகாது என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே. ஆகவே இத்தகைய பாதக செயலை விட்டு விடு. சீதா தேவியை ராமரிடம் ஒப்படைத்து சரணடைந்து விடுவோம். அவர் நம்மை மன்னித்தருள்வார் என்றான்.

ராவணன் கோபமாக விபீஷணனைப் பார்த்து அசுரகுலத்துக்கே நீ இழுக்கு! நீ கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றான். இனியும் இவனுடன் இருப்பது பாதகம் என்றெண்ணிய விபீஷணன் ராமரிடம் சரண் புகுந்தான். அப்போதே ராமன் இலங்கையை அவனுக்குக் கொடுத்து முடிசூட்டி வைத்தார். யுத்தம் தொடங்கும் முன் அரக்கர்கள் குணம் மாறலாம் என்று நினைத்து ராமன் ராவணனிடம் அங்கதனைத் தூது அனுப்பினான். ராவணனோ சீதையை விடுவிக்க முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து விட்டான். யுத்தம் மூண்டது. வானர சேனைகள் அரக்கர் கூட்டத்தை துவம்சம் செய்தனர். ராவணன் தன் படைகளுடன் ராமனை எதிர்த்தான். அவனுடைய சேனைகள் அனைத்தையும் வீழ்த்தி வில்லை முறித்து யுத்த களத்தில் ராவணனை தலை குனியச் செய்தார் ராமன். நிராயுதபாணியாக இலங்கேஸ்வரன் நின்ற போது இன்று போய் நாளை படை திரட்டி மீண்டும் வா! என்று மேலும் அவகாசம் கொடுத்தார் ராமர்.

பகுதி நான்கு

அவமானம் தாங்க முடியாத ராவணன் அரக்கர் சேனையை ஒன்று திரட்டி தன் தம்பி கும்பகர்ணனைப் போர்க்களத்திற்கு அனுப்பினான். அவன் வதம் செய்யப்பட்டதும் தன் குமரன் அதிகாயனை அனுப்பினான். அவனும் கொல்லப்பட்டதும் இந்திரஜித் யுத்தகளத்தில் குதித்தான். இந்திரஜித், லட்சுமணனையும் பிற வீரர்களையும் நாக பாசத்தால் கட்டினான். கருடன் பிரத்தியட்சமாக அந்த பாசத்தை அறுத்து அத்தனை பேரையும் விடுவித்தான். மறுபடியும் இந்திரஜித் அவர்களை பிரம்மாஸ் திரத்தால் கட்டினான். அனுமன், ஜாம்பவானை தவிர அத்தனை பேரும் மயங்கி விழுந்தன. அனுமன் விரைந்து போய் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து எல்லோரையும் பிழைக்கச் செய்தான். இந்திரஜித் தன் நாக, பிரம்ம பாசங்கள் தோல்வியடைந்ததால் #நிகும்பலை என்ற யாகத்தைச் செய்யத் தொடங்கினான். அதற்காக ஓர் இரகசிய இடத்தைத் தேர்ந்து எடுத்து இந்த வேள்வியை ஆரம்பித்தான். அதனால் யாராலும் தன்னைக் கொல்ல முடியாத வரம் பெற்றுப் போர் முனைக்கு வர ஆயத்தமானான். அதை அறிந்த விபீஷணன் ராம, லட்சுமணர்களிடம் விபரம் சொல்லி அந்த ரகசிய இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று யாகத்தை தடுத்து இந்திரஜித்தை வதம் செய்ய வைத்தான். தன் மகன் இந்திரஜித் இறந்து விட்டான் என்ற சேதி கேட்டு ராவணன் ஆடிப் போனான். எனினும் ஸ்ரீராமனிடம் அவன் பணிய விரும்ப வில்லை. தன் மூல பலத்தைத் திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். தமது பாணத்தால் ராவணனை சம்காரம் செய்தார் ராமர். அப்போது தேவர்கள் அவர் மீது மலர் மாரி பொழிந்தனர்.

கற்பகாலம் ஜீவித்திருக்க விபீஷணனுக்கு அனுக்கிரகம் செய்து இலங்கை மன்னனாக முடிசூட்டி வைத்தார் ராமர். பின்னர் அனைவரும் அயோத்திக்கு ராமர் சீதையுடன் புஷ்பக விமானத்தில் செல்லும் போது வழியில் கிஷ்கிந்தையிலும் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றார்கள். அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. பரதன் ஸ்ரீராமரை சிங்காசனத்தின் அமர்த்தினான். வசிஷ்டர் முதலான ரிஷிகள் ராமனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்து மகுடாபிஷேகம் செய்தனர். ஸ்ரீராமர் சீதையுடன் தரும நெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார். கோசலை நாடு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது. ஒரு நாள் ராமர் நகர் வலம் வந்தார். அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி பேசுவதைக் கேட்டார். அங்கே சீதாதேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதைக் கேட்டார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என துயருற்றார். இதன் காரணமாக உலக நிந்தனைக்குப் பயந்து கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.

தாங்க முடியாத துயரத்துடன் வந்த ஜானகியை வால்மீகி தன் ஆசிரமத்தில் தங்க செய்து அவளை நன்கு கவனித்துக் கொண்டார். அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அந்த குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி. அதே சமயம் அயோத்தியில் லட்சுமணனுக்கு, புதன், சந்திரகேது, பரதனுக்கு தட்சன், புஷ்கரன், சத்ருகனுக்கு சுதாகு, சுருதசேனன் என பிள்ளைகள் பிறந்தனர். பரதன் திக் விஜயம் செய்து கந்தர்வர்களை வென்று ஏராளமான செல்வங்களைக் கொண்டு வந்து ராமனிடம் சமர்ப்பித்தான். சத்ருக்கன் லவணன் என்ற ஓர் அரக்கனை வதம் செய்தான். அவன் மதுவனத்தில் மதுரை என்ற ஒரு பட்டணத்தை உண்டாக்கினான். வால்மீகி மகரிஷி ராமனுடைய சரித்திரத்தை ராமாயணம் என்ற பெயரில் இயற்றி அதை லவகுசர்களுக்கு சொல்லி வைத்தார். இருவரும் ஒருநாள் இதை ராமனுடைய அரசவையில் அரங்கேற்றினார்கள். அவர்களை தம் குமாரர்கள் என்று அறிந்த ராமர் மேலும் வால்மீகி ஆசிரமத்தில் சீதை இருக்கிறாள் என்பதையும் அறிந்து அவளை அடைய எண்ணினார்.

ஸ்ரீராமனுடைய உள்ளக்கிடக்கையை அறிந்த வால்மீகி அவளைப் புனிதவதி என்று ஏற்றுக் கொள்ளும் படி கூறினார். சீதையோ தான் கற்புத்தன்மையில் இருந்து கொஞ்சமும் வழுவாது இருக்கிறேன் என்பது உண்மையானால் தன்னை பூமாதேவி அழைத்துக் கொள்ளட்டும் என்று தெரிவித்தாள். அவள் இப்படிச் சொன்னதும், பூமி இரண்டாகப் பிளந்தது அதனுள்ளிருந்து பூமாதேவி வெளிப் பட்டு சீதையை தன் இரு கைகளில் ஏந்தியவளாக அழைத்துக் கொண்டு மறைந்தாள். தன் விருப்பத்திற்கு மாறாக பூமாதேவி தன் தர்மபத்தினியை பிரித்து சென்று விட்டாள் என ராமர் கோபமடைந்தார். அப்போது பிரம்ம தேவன் தோன்றி ராமனை சமாதானப்படுத்தி சீதா தேவியின் பூலோக வாசம் முற்றுப் பெற்றது. அவள் வைகுண்டத்தில் உங்கள் வருகைக்காக காத்திருப்பாள் என்று பிரம்மா சொன்னார். அதன் பிறகே ராமர் சாந்தமடைந்தார். ராமர் தன் புதல்வர்கள் லவ, குசனை ஏற்றுக் கொண்டார்.

பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் ஸ்ரீராமர் ஆட்சி செய்து விட்டு ராஜ்யத்தை தன் புத்திரர்களுக்கும், தமது சகோதரர்களின் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார் அதன் பிறகு சரயு நதியில் இறங்கி வைகுண்டம் சேர்ந்தார். அவரை பின் தொடர்ந்து சங்கு சக்ர அம்சங்களாகப் பிறந்த சத்ருகன், பரதனும் ஆதிசேஷனான லட்சுமணனும் பூலோகத்தை விட்டு வைகுந்தம் சேர்ந்தனர்..

தசாவதாரம் எட்டு.... பலராமன் அவதாரம்... நாளை தொடர்வோம்...
  ....

குண்டலி நீ யோகம்


குண்டலிநீ யோகம்: அதி ஜாக்கிரதை தேவை

இன்னொரு விஷயம், அம்பலப்படுத்தாமல் காப்பாற்ற வேண்டிய விஷயம். அதன் பேரைச் சொன்னால் கூட அதுவும் அம்பலப்படுத்துவது தான் என்பதால் அடியோடேயே பிரஸ்தாபிக்காமல் விட்டு விடணும் என்று இத்தனை நாழி நினைத்துக் கொண்டிருந்ததையும் இப்போது கொஞ்சம் ‘டச்’ பண்ணுகிறேன். [சிரித்து] அதை யாரும் ‘டச்’பண்ணவேண்டாமென்று ‘வார்ன்’பண்ணுவதற்கே ‘டச்’ பண்ணுகிறேன். ஏனென்றால் நான் சொல்லாவிட்டாலும் அந்தப் பேர் இப்போது ரொம்ப அடிபடுகிறது. குண்டலிநீதான். குண்டலிநீ, அது ஸம்பந்தமான சக்ரங்கள் பேரெல்லாம் இப்போது நன்றாகவே இறைபட்டுக் கொண்டிருக்கின்றன. ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் அந்த விஷயங்கள் வருகின்றன. ஆகையினால் அதை நீங்கள் பாராயணம் பண்ணும்போது அந்தப் பேர்களைப் பார்த்துவிட்டு, நான் ‘டச்’ பண்ணா விட்டாலும், வேறே புஸ்தகங்களைப் பார்க்கத்தான் பார்ப்பீர்கள். அதற்கு நாமேதான் சொல்லிவிடலாமே, [சிரித்து] இந்த விஷயத்தை நான் ஏன் சொல்லப் போவதில்லை என்று சொல்லிவிடலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

ஒரு சின்ன அணுவுக்குள்ளே எப்படி ஒரு பெரிய சக்தியை அடைத்து வைத்திருக்கிறதோ அப்படி ஒவ்வொரு ஜீவனுக்குள்ளேயும் பரப்ரஹ்ம சக்தி குண்டலிநீ என்ற சக்தியாக இருக்கிறது; அது நம்மைப் போன்றவர்களிடம் தூங்குகிற மாதிரி ஸ்திதியில் இருக்கிறது; அதற்கான யோக ஸாதனை பண்ணினால், – பண்ணினால் என்பதை ‘அன்டர்லைன்’ பண்ணணும் – அப்படி [ஸாதனை] பண்ணினால் அது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புப் பெற்றுச் சில சக்ரங்கள் வழியாக ஊர்த்வ முகமாக [மேல் நோக்கி] ஸஞ்சாரம் பண்ணி முடிவில் பராசக்தியாகப் பூர்ண விழிப்புப் பெற்று, அப்புறம் அந்த பராசக்தியும் பரசிவத்தோடு ஐக்யமாகி ஜீவ ப்ரஹ்ம ஐக்யம் ஏற்படும் – என்பதுதான் ஸாரமான விஷயம். இதைத் தெரிந்து கொண்டால் போதும்; இவ்வளவு தெரிந்து கொண்டால் போதும்.

நம் தேசத்தில் எப்பேர்ப்பட்ட சாஸ்திரங்கள், உபாஸனா மார்க்கங்கள் இருக்கின்றன என்று ஒரு அரிச்சுவடியாவது தெரிந்தால்தானே இதிலே பிறந்திருக்கிற நமக்குக் குறைவு இல்லாமல் இருக்கும்? அதற்காகத்தான் குண்டலிநீ யோகம் என்று இப்படியரு சாஸ்திரம் இருக்கிறது என்று நான் இப்போது சொன்னேனே, அந்த அளவுக்குத் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மேல் வேண்டாம். அது அவசியமில்லை.

ஏனென்றால் நம்மிலே ஆயிரத்தில் ஒருவர் – இல்லை, லக்ஷம் பத்து லக்ஷத்தில் ஒருவர் கூட முறைப்படி அந்த ஸாதனை பண்ணுவதற்கு முடியாது அப்படியே பண்ணினாலும் முறைப்படி முன்னேறி ஸித்தி அடைகிறது ஸாதகர்களிலும் அபூர்வமாக இரண்டொருத்தரால்தான் முடியும் – ”யததாமபி கச்சிந்” என்று பகவான் சொன்னாற் போல. அதனால்தான் ‘அதற்கான யோக ஸாதனை பண்ணினால்’ என்று அழுத்திச் சொன்னது. ‘பண்ணினால்’ என்பது ஸரி. ஆனால் பண்ணுவதுதான் முடியாத கார்யம்! இந்த ஜீவாத்மாவின் சின்ன சக்தி பரமாத்மாவின் மஹாசக்தியிலே கலப்பது – அல்லது அந்த மஹாசக்தியாகத் தானே விகஸிப்பது [மலர்வது] – லேசில் நடக்கிற விஷயமில்லை.

சாந்தத்திலே ஒன்றாகக் கலந்து ப்ரஹ்மமாவதை விடவும் சக்தியிலே கலப்பதைக் கஷ்டமானதாகவே அந்தப் பராசக்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்!

பக்தி பண்ணுகிறவனையும், ஞான வழியில் போகிற, வனையுங்கூடத் தன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தன்னுடைய சக்திக் கூத்தைப் பார்க்கும்படியும், அதை அவர்கள் வழியாகவும் கொஞ்சம் செலுத்தி அவர்களால் லோகத்துக்கு அநுக்ரஹம் கிடைக்கும்படியும் அவள் பண்ணுவதுண்டுதான். ஆனாலும் இவர்கள் [பக்தரும், ஞானியும்] தாங்களாகச் சக்திக்கு ஆசைப்படவில்லை. பக்தன் ப்ரேமைக்கு, ப்ரேமானந்தத்திற்குத்தான் ஆசைப்படுகிறான். அப்படிப்பட்டவர்களிடம், அவளே, ‘பார்த்தாயா என் சக்தி ப்ரபாவம்! என்று ‘போனஸ்’ மாதிரி அதைக் காட்டிக் கொஞ்சம் கொஞ்சம் அவர்களுக்கும் அதை, லோக கல்யாணத்தை உத்தேசித்து, தருகிறாள். ஆனால், யோகி என்கிறவன் சக்தியில் ஸித்தியாவதற்கே குண்டலிநீ யோகம் என்று பண்ணும்போது, [சிரித்து] அவள் இல்லாத கிராக்கியெல்லாம் பண்ணிக்கொண்டு அப்புறந்தான் கொஞ்சங் கொஞ்சமாக ஏதோ இண்டு இடுக்கு வழியாகத் தன் சக்தியை அவிழ்த்து விடுகிறாள்.

இன்றைக்கு குண்டலிநீ தீக்ஷை பல பேர் கொடுத்து, பெற்றுக் கொண்டவர்களிடம் தூங்குகிற குண்டலிநீ முழித்துக் கொண்டுவிட்டதாகச் சொல்வதெல்லாம் இந்த இண்டு இடுக்குக் கீற்று வெளிப்படுவதுதானே யொழிய பூர்ணமான சக்தி ஜ்யோதிஸ் ஸூர்யோதயத்தைப் போல வெளிப்படுவது இல்லை. அரைத் தூக்கம், கால் தூக்கம் என்று சொல்கிறோமே, அப்படி ஸாதாரணமாக நமக்குள் எல்லாம் முக்காலே மூணு வீசம் தூக்கத்துக்கும் மேலே ப்ராண சக்தி ரூபத்தில் பராசக்தி தூங்கிக்கொண்டிருக்கிறாளென்றால், குண்டலிநீ தீக்ஷையாகி, அது ‘ரைஸ்’ ஆகிவிட்டது என்று சொல்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் முக்கால் தூக்கம் என்கிற அளவுக்கு நம்மைவிடக் கொஞ்சம் முழித்துக் கொண்டிருப்பாள்! அவ்வளவுதான். அதிலேயே [இந்தக் குறைந்த அளவு மலர்ச்சியிலேயே] உச்சந்தலை வரை ஒரு வைப்ரேஷன், ப்ரூமத்தியில் [புருவ மத்தியில்] ஒரு கான்ஸன்ட்ரேஷன் அப்போதப்போது உண்டாவதை வைத்துக்கொண்டு, குண்டலிநீ பூர்ணமாக முழித்துக்கொண்டு லக்ஷ்யமான உச்சிக் சக்ரத்திற்குப் போய்விட்ட மாதிரி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்தவத்தில் ஏதோ கொஞ்சம் சக்தி, கொஞ்சம் ஏறுவது, மறுபடி விழுவது என்றுதான் நடக்கிறது. ஏறும்போதும் அங்கங்கே உண்டாகிற அத்புத சக்திகளில் (ஸித்திகளில், சித்து என்று சொல்வது இந்த சக்திகளைத்தான். அப்படிப்பட்ட சக்திகளில்) சித்தத்தை அலைபாய விடாமல், லக்ஷ்யத்திலேயே ஈடுபடுத்துவது ஸாமான்யமான ஸாதனை இல்லை. அவளேதான் இப்படிப்பட்ட சின்ன ஸித்திகளைக் கொடுத்து பெரிய, முடிவான ஸித்தியிலிருந்து டிஸ்ட்ராக்ட் பண்ணி மயக்குவது. இதெல்லாம் போதாதென்று குண்டலிநீ ஸஞ்சாரம் அதற்கான வழியில் போகாமல் இசகு பிசகாகப் போனால் பலவிதமான வியாதிகள், புத்திக் கலக்கம் ஏற்படுவது வேறே.

லோகத்தில் பலவிதமான மாயைகள், மாயையிலிருந்து மீளுவதற்குப் பலவிதமான ஸாதனைகள் என்று அவள் பரப்பி வைத்திருப்பதில் நேரே அவளுடைய சக்தியைப் பிடிப்பது என்பதற்காக் குண்டலிநீ யோகம் என்று ஒரு ஸாதனையை வைத்திருக்கும்போது அதிலேயே நிறைய மாயையையும் பிசைந்து வைத்திருக்கிறாள். ஏன் அப்படி என்றால் என்ன சொல்வது? ஒரு பயிர் ஸுலபத்தில் பயிர் பண்ணி மகசூல் காணும்படி இருக்கிறது. இன்னொரு பயிருக்கு ஏற்ற நிலம், சீதோஷ்ணம், எரு ஆகிய எல்லாமே கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. ஏனென்று கேட்டால் என்ன பதில் சொல்வது? பல தினுஸாக அவள் லீலா நாடகம் ஆடுவதில் இதெல்லாம் அங்கம். அப்படி குண்டலிநீ யோக ஸாதனை என்பதை ரொம்பவும் சிரம ஸாத்யமாகவே வைத்திருக்கிறாள்.

‘பக்தி, ஞான மார்க்கங்களில் போகிறவர்கள் மட்டும் ஸுலபமாக ஸித்தி அடைந்து பிரத்யக்ஷதரிசனமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ பெற்றுவிடுகிறார்களோ என்ன? ‘என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. ஆனாலும் எந்த அளவுக்கு அவர்கள் ஸாதனை பண்ணியிருந்தாலும், பண்ணுகிற மட்டும் அது [குண்டலிநீ யோகம் போல] இத்தனை ச்ரமமாகவோ, சிக்கலாகவோ இருப்பதில்லை.

அதோடுகூட ஸாதனையில் தப்பு ஏற்படுவதால் இத்தனை விபரீதமாகவும் அவற்றில் நடந்துவிடுவதில்லை. காம யோகத்தைப் பற்றி – அதாவது பலனில் பற்று வைக்காமல் ஸ்வதர்மமான கடமைகளை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணுவதைப் பற்றி – பகவான் சொல்லியிருப்பதெல்லாம் பக்தி, ஞான யோகங்களுக்கும் பெரும்பாலும் பொருந்துவதுதான். ‘யோகம்’ என்றாலே நினைக்கப்படும் குண்டலிநீ முதலான மார்க்கங்களுக்குத்தான் அது அவ்வளவாகப் பொருந்தாமலிருக்கிறது. என்ன சொல்கிறாரென்றால்,

நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்ய்வாயோ ந வித்யதே *
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் **

என்கிறார். என்ன அர்த்தமென்றால் ‘இந்த வழியில் நாம் பண்ணும் முயற்சி பலன் தராமல் வீணாகப் போவது என்பது இல்லை. ஏறுமாறாக, விபரீதமாகப் பலன் ஏற்படுவது என்பதும் இல்லை. ஏதோ ஸ்வல்பம்தான் ஸாதனை பண்ணினாலுங்கூட ஸரி, ‘நமக்கு ஸம்ஸாரத்திலிருந்து விடிவே இல்லையோ?’ என்கிற பெரிய பயத்திலிருந்து அது நம்மை ரக்ஷித்து விடும்’ என்கிறார். ஆனால் குண்டலிநீ மாதிரி ரொம்பவும் சிரமமாக, சிக்கலாக உள்ள ஒரு ஸாதனையில் போக ஆரம்பிக்கிறவர்களில் பலபேர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு அப்புறம், ‘நம்மால் இதில் ஜயிக்க முடியாது’ என்று விட்டு விடுவதைப் பார்க்கிறோம். என் கிட்டேயே வந்து எத்தனையோ பேர் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது ‘அபிக்ரம நாசம்’- ‘முயற்சி வீணாவது’- என்று பகவான் சொன்னது நடந்துவிடுகிறது. ‘ப்ரத்யவாயம்’- ‘விபரீத பலன்’- உண்டாவது என்கிறாரே, அதற்கும் இந்த வழி நிறையவே இடம் கொடுக்கிறது. நடுவாந்தரத்தில் ”விட்டுவிடுகிறேன்”என்று இவர்கள் வருவதற்கே முக்யமாக அதுதான் காரணமாயிருக்கிறது. கடைசி வரையில் பயமும் போக இடமில்லை. ‘ஸரியாகப் பண்ணி பலன் பெறுவோமா, அல்லது இசகு பிசகாக ஆகிவிடுமா?’என்ற பயம். அது மட்டுமில்லாமல் நடுவாந்தரப் பலன்களாகச் சில அத்புத சக்திகள் கிடைப்பதே பெரிய பலனைக் கோட்டைவிடும்படி திசை திருப்பிவிடுமோ என்ற பயம்! ஸ்வல்பம் அநுஷ்டித்தாலும் பயத்தைப் போக்கும் என்று பகவான் சொன்னது இந்த வழிக்கு ஏற்கவில்லை.

அதோடு பகவான் சொல்லாத இன்னொன்றும் இதில் சேருகிறது. என்னவென்றால், ஸாதனை பலிக்குமா என்று கடைசி மட்டும் பயம் ஒரு பக்கம் இருக்கிறதென்றால் இன்னொரு பக்கம் ஏதோ ஸ்வல்ப பலன் கிடைத்ததிலேயே தாங்கள் முடிவான ஸித்தி அடைந்து விட்டதாக ஏமாந்து போவதும் இதில் இருக்கிறது. பக்தி பண்ணுகிறவர்களும், ஞான விசாரம் பண்ணுகிறவர்களும் தங்களுக்கு நிஜமாகவே தெய்வ ஸாக்ஷாத்காரமோ, ஆத்ம ஸாக்ஷாத்காரமோ ஏற்படுகிற வகையில் அவை ஏற்பட்டு விட்டதாக நினைப்பதற்கில்லை. ஆனால் குண்டலிநீ பண்ணுபவர்கள் ஏதோ கொஞ்சம் சக்ரங்களில் சலனம் ஏற்பட்டு விட்டால்கூட ஸித்தியாகி விட்டதாக நினைத்து விடுகிறார்கள் – தூரக்க [தூரத்தில்] அவுட்லைனாக கோபுரம் தெரிவதைப் பார்த்தே கர்பக்ருஹத்தில் இருக்கிறோம் என்று நினைக்கிற மாதிரி!

நான் குண்டலிநீ யோகம் தப்பு வழி என்று சொல்லவேயில்லை. நிச்சயமாக அத்வைத ஸமாதிவரை கொண்டு சேர்க்கக் கூடிய உசந்த வழிதான். இல்லாவிட்டால் யோகீச்வரர்கள், ரிஷிகள் இப்படியரு சாஸ்திரத்தைக் கொடுத்திருப்பார்களா? அதெல்லாவற்றையும்விட, நம்முடைய ஆசார்யாள் அந்த விவரங்கள் சொல்லியிருப்பாரா? வழி ஸரிதான். ஆனால் அந்த வழியிலே போகிற அளவுக்கு நாம் ஸரியாயில்லை என்பதாலேயே, தீரர்களாக இருக்கப்பட்ட யாரோ சில பேரைத் தவிர, நமக்கு அது வேண்டாம் என்கிறேன். ஸித்தி பெற்ற குருவின் இடைவிடாத கண்காணிப்பிலேயே விடமுயற்சியுடன் பரிச்ரமப்பட்டு அப்யஸிக்க வேண்டிய ஒரு வழியைப் பற்றிச் சும்மாவுக்காக எதற்காகப் பேசவேண்டும் என்பதால் சொல்கிறேன்.

நாம் எதற்காகக் கூடியிருக்கிறோம்? நம்மால் முடிந்த முயற்சிகளைப் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்ள என்ன வழி என்று ஆலோசனை பண்ணத்தான். அப்படியிருக்கும் போது நம்மால் முடியாத முயற்சிகளைப் பற்றிப் பேசி எதற்காகப் பொழுதை வீணாக்க வேண்டும்? முடியாத முயற்சி என்பதோடு அவசியமும் இல்லாத ஸமாசாரம். பக்தியாலோ, ஞானத்தாலோ அடைய முடியாத நிறைவு எதையும் குண்டலிநீயால் அடைந்தவிட முடியாது. ஆகையால் முடியாத, அவசியமில்லாத அந்த வழியைப் பற்றி விசாரம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். காஞ்சீபுரத்திற்கு வழி கேட்டால், நாம் ஸுலபமாகப் போய்ச் சேரும்படி, ‘இப்படியிப்படி ப்ராட்வேயிலிருந்து பஸ் இருக்கு. பீச்சிலிருந்து ரயில் இருக்கு’ என்று சொன்னால் அர்த்தமுண்டு. ‘திருவொற்றியூரிலிந்து காஞ்சீபுரம் வரை பல்லவராஜா காலத்தில் போட்ட அன்டர்-க்ரவுன்ட் டன்னல் இருக்கு. அங்கங்கே தூர்ந்து போயிருக்கும். அந்த வழியாகப் போகலாம்’ என்றால் அர்த்தமுண்டா? வாஸ்தவமாகவே அப்படியும் வழி இருக்கலாம் – வாஸ்தவத்தில் இல்லைதான்; ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன் – டன்னல் இருக்கலாம். அதிலே துணிச்சலோடு போகிற ஸாஹஸக்காரர்களும் இருக்கலாம். ஆனால் அதைப் பற்றி வழி கேட்கிற ஸாதாரண ஜனங்களுக்குச் சொல்லி என்ன ப்ரயோஜனம்?

ஸர் ஜான் உட்ராஃப் [குண்டலிநீ யோகம் குறித்து] ‘ஸர்பென்ட் பவர்’முதலான புஸ்தகங்கள் போட்டாலும் போட்டார், வகை தொகையில்லாமல் அதில் ஸித்தியான யோகிகள் என்று பல பேர் தோன்றி ‘க்ளாஸ்’ நடத்துவதும், இன்னும் பல பேர் ஒரு அப்யாஸமும் பண்ணாமலே, பண்ணும் உத்தேசமும் இல்லாமலே, ‘மூலாதாரா, ஸஹஸ்ராரா’ என்றெல்லாம் எழுதி, பொது ஜனங்களிலும் பல பேர் தாங்களும் விஷயம் தெரிந்தவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வார்த்தைகளைச் சொல்வதாகவும் ஆகியிருக்கிறது. எல்லாரும் பேசுகிறதாக ஆகியிருதாலும், பண்ணமுடியுமா-ஸரியாக, அதற்கான கட்டுப்பாடுகளோடு, விடாமுயற்சியோடு ஒரு பெரிய பவர் ரிலீஸாகிறதைப் பக்குவமாகத் தாங்கிக் கொள்கிற தைர்யத்தோடு பண்ண முடியுமா – கடைசிப் படிவரை டிஸ்ட்ராக்ஷன் இல்லாமல் பண்ணிக் கொண்டு போய் ஜயிக்க முடியுமா என்கிறது பெரிய கேள்வியாக இருக்கிறது. சும்மாவுக்காக அதைப் பற்றி பேசுவது புரளிதான். அதைவிட விபரீதம், சும்மாவுக்காகப் பேசுவதாக இல்லாமல் தப்பும் தாறுமாகப் பண்ணிப் பார்த்துப் பல தினுஸான கஷ்டங்களுக்கு, ப்ரமைகளுக்கு ஆளாகிறது. அதனால்தான் இந்த ஸப்ஜெக்டில் இறங்க நான் ப்ரியப்படுவதில்லை. ஆனாலும் ”ஸெளந்தர்ய லஹரிக்கு அர்த்தம் சொல்றேண்டா!” என்று ஆரம்பித்து விட்டு, இதை அப்படியே மூடி மறைப்பதென்று பண்ணப் பார்த்தால் நீங்கள் வேறே வழியில் தூக்கிப் பார்க்கத்தான் செய்வீர்களென்பதால் என் அபிப்ராயத்தை இளக்கிக் கொண்டு ப்ரஸ்தாபம் பண்ணுகிறேன்;’ வார்னிங்’கோடு சேர்த்தே ப்ரஸ்தாபிக்கிறேன்….

உட்ராஃபை நான் குற்றம் சொல்லவேயில்லை. ‘தாங்க்’ தான் பண்ணுகிறேன். ‘யோக சக்தி, யோக ஸித்தி என்பதெல்லாமே பொய். எங்கள் ஸயன்ஸுக்குப் பிடிபடாததாக அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது’ என்று மேல் நாட்டார்களும், அவர்கள் சொல்வதையே வேத வாக்காக எடுத்துக்கொண்ட நம்மவர்களும் சொல்லி வந்தபோது உட்ராஃப்தான் அது ஸத்யமானது, ஸயன்ஸுக்கு மேலான ஸூபர்ஸயன்ஸாக இப்படியிப்படி ஆகப்பட்ட ஒழுங்கில் அதன் கார்யக்ரமம் இருக்கிறது என்று விளக்கமாக எழுதி எல்லார் கண்ணையும் திறந்து வைத்தார். அவர் அப்படிப் பிரசாரம் பண்ணியில்லா விட்டால், நிஜமாகவே அந்த மார்க்கத்துக்கு அதிகாரிகளாக இருக்கப்பட்டவர்கள்கூட அதைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும். அந்த அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மார்க்கம் மங்கிப் போயிருந்தது.

அவர் எழுதினதில் நம்பிக்கை உண்டாக்கித்தான் பல பேர் அப்போது நிஜமாகவே யோக ஸித்தி பெற்றிருந்த யோகிகளிடம் போய் அந்த வழியைக் கற்றுக்கொண்டு, அதற்கப்புறம் மங்கிப் போன வழிக்குப் பிரகாசமான காலம் பிறந்தது. இன்றைக்கு வரை நல்ல யோக ஸித்தர்களும் உண்டாகாமலில்லை. அவர்களிடம் முறைப்படி கற்றுக் கொண்டு, முன்னேறும் ஸாதகர்களும் இல்லாமலில்லை. ஆனாலும் போலிகளும் சேர்வது, பிரகாசம் என்றேனே, அது கண்ணைக் குத்தும் அளவுக்கு வெறும் பேச்சில் மட்டும் பளபளப்பது என்றெல்லாமும் நிறைய ஆகியிருக்கிறது. இதைப் பார்க்கும்போதுதான் ஆத்மாவுக்கு நல்லதைத் தேடிக்கொண்டு போக்க வேண்டிய பொழுதை நாம் அப்யாஸம் பண்ணுவதாக இல்லாத ஒரு வழியைப் பற்றிய பேசி விருதாவாக்குவானேன் என்று தோன்றி [இதுவரை தெரிவித்த அபிப்ராயத்தை]ச் சொன்னேன்.

இவ்வளவு சொன்னதாலேயே, அதில் சிலருக்கு இன்ட்ரெஸ்ட் உண்டாக்கியிருப்பேனோ என்னவோ? அதனால் ஒரு தடவைக்குப் பல தடவையாகப் எச்சரிக்கிறேன்: ‘நிச்சயமாக ஸித்தியானவர் எந்தவிதமான ஸொந்த ஆதாயத்தையும் கருதாதவர், சிஷ்யர்களைக் கைவிடாமல் கண்காணித்து மேலே மேலே அழைத்துப் போகக் கூடியவர் என்று உறுதியாக நம்பக்கூடிய ஸத்குரு கிடைத்தாலொழிய யாரும் ஸ்வயமாகவோ, அல்லது இப்போது எங்கே பார்த்தாலும் புறப்பட்டிருக்கிற அநேகம் யோகிகள் என்கிறவர்களிடம் போயோ இந்த யோகத்தை அப்யாஸம் பண்ணப்படாது. இது அதிஜாக்ரதை தேவைப்படுகிற ஸமாசாரம்’ என்று எச்சரிக்கை பண்ணுகிறேன்.

இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் மந்த்ர யோகத்திலும் ஜாக்ரதையாகவே இருக்கவேண்டும். குண்டலிநீ யோக ரிஸல்ட்களையே மந்த்ர யோகமும் சப்தங்களினால் உண்டாகிற நாடி சலனங்களின் மூலம் உண்டு பண்ணுவதுண்டு. குருமுக உபதேசம் இங்கேயும் அத்யாவசியமானது. இந்தக் காரணங்களால் மந்த்ர சாஸ்திர ஸமாசாரங்களையும் உபாஸகர்கள், அல்லது ச்ரத்தையாக உபாஸிக்க வேண்டுமென்று இருப்பவர்கள் தவிரப் பொத்தம் பொதுவில் விஸ்தாரம் செய்வது உசிதமில்லை.

க்ரமமாக உபதேசமில்லாமல் மந்திரங்களைத் தெரிந்து கொள்வதால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வீட்டுக்குள்ளே உசந்த ஒயர், ஸ்விட்ச், ‘இம்போர்ட் பண்ணின பல்பு எல்லாம் போட்டாலும் பவர்ஹவுஸிலிருந்து கனெக்ஷன் இல்லாமல் விளக்கு எரியுமா? அப்படித்தான் குருவின் பவர் – உயிர் பவர் – இல்லாமல் மந்த்ர சப்தங்களை ஸ்வயமாக எடுத்துக் கொள்வதும்.

ஒரு ப்ரயோஜனமும் இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை. சப்த வீர்யம் முறையாக க்ரஹிக்கப்படாவிட்டால் விபரீத பலனும் உண்டாகலாம். அதனால் உதாரணத்தை மாற்றிச் சொல்கிறேன்: மந்த்ர சப்தங்களே எலெக்ட்ரிஸிடி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நாமே போய்த் தொட்டு வெளிச்சத்தைக் கொண்டுவர முடியுமா? ‘ஷாக்’தான் அடித்துக் கஷ்டப்படுவோம். குரு என்ற ஒயர் வழியாக உபதேசம் என்ற பல்பில் வந்தால்தான் மின்சார வீர்யம் கட்டுப்பாட்டில் வந்து வெளிச்சம் கிடைக்கும். எலெக்ட்ரிஸிடி எங்கேயிருக்கிறதென்றே தெரியாமல் ஒயருக்குள் வருகிறது போல ரஹஸ்யமாகவே மந்த்ரமும் வரவேண்டும்.

..... சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்.

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.

யஜுர்வேத த்ரிகால ஸந்தியா வந்தனம்.


சந்தியா வந்தனம் - பிரம்மச்சாரிகள் 4 முழம் வேஷ்டி அணிந்து இடுப்பில் ஒரு துண்டு கட்டியும், கிருஹஸ்தர்கள் 8 (அ) 9 முழம் வேஷ்டி பஞ்ச கச்சம் உடன் அங்க வஸ்திரம் அணிந்தும் செய்வது நல்லது. காலையில், சூரிய உதயத்திற்குச் சிறிது முன்னரும், மதியம் சுமார் 11.30 to 12.30 அளவிலும்  மாலை சூரியன் அஸ்தமனத்திற்குச் சிறிது முன்பும் செய்ய வேண்டும்.
(1) ஆசமனம் : மந்திரம்:- அச்யுதாய நம:, அனந்தாய நம: ,கோவிந்தாய நம: கெஶவ , நாராயண, மாதவ,கோவிந்த, விஷ்ணோ, மதுஸூதன,  த்ரிவிக்ரம, வாமன ஸ்ரீதர,  ஹ்ரிஷீகேச , பத்மநாப, தாமோதர. (தரையில் கிழக்கு (அ) வடக்கு நோக்கி குந்தி உட்கார்ந்து செய்ய வேண்டும். மந்திரங்களினால், உள்ளங்கையில் ஓரிரு துளிகள் நீர் பருகுதல் - உள்ளும் புறமும் சுத்தி )
(செய்முறை: வலது உள்ளங்கையில் கட்டை விரல், சுண்டி விரல் இரண்டும் தவிர்த்து , நடு மூன்று விரல்களை ஒன்று சேர்த்தால் ஏற்படும் உள்ளங்கைக் குழியில் உத்தரிணியால் சிறிது தண்ணீர் ஊற்றிக்கொண்டு ,அச்யுதாய நம: , அனந்தாய நம: ,கோவிந்தாய நம: மூன்று முறை நீர் உட்கொள்க.  விரல்களின் பிரயோகம். கேஶவ , நாராயண - வலது கட்டை விரல் நுனியால், வலது இடது கன்னத்தைத் தொடவும். மாதவ, கோவிந்த - பவித்ர விரலால் வலது, இடது கண்கள்; விஷ்நோ, மதுஸூதன - ஆள் காட்டி விரல் - வலது, இடது நாசிகள், த்ரிவிக்ரம, வாமன : நடு விரல், வலது இடது காதுகள்:  ஸ்ரீதர, ஹ்ரிஷிகேஸ;நுனி விரல்- வலது, இடது தோள்கள் ;  பத்மநாப - கட்டை விரல் தவிர்த்து மற்ற 4 விரல்களால் நாபியைத் தொடவும்; தாமோதர. ஐந்து விரல்களாலும் சிரசைத் தொடவும்.
(2) கணபதி தியானம் : மந்திரம் :- ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ( செய் முறை ) : இரண்டு கை முஷ்டிகளாலும் 5 முறை மெதுவாக, புருவங்களுக்கு மேல் சிரசில், குட்டிக் கொள்க. )
(3) பிராணாயாமம்: மந்திரம்:-
( செய்முறை  ) வலது கை, கட்டை விரல், மோதிர விரல் இரண்டை மட்டும் உபயோகிக்க. கட்டை விரலை வலது மூக்கின் நுனியில் மேதுவாக அழுத்தவும்; மோதிர விரல் இடது மூக்கின் நுனியைத் தொட்டுக் கொண்டு இருக்கட்டும், அழுத்த வேண்டாம். மூச்சுக் காற்றை மெதுவாக, இடது நாசி வழியாக உள்ளே இழுத்து சிறிது நிறுத்தி, மூக்கின் நுனியை மோதிர விரலால் லேஸாக மூடவும் ; வலது கட்டை விரலை சிறிது தளர்த்தி மூச்சுக் காற்றை வெளியே விடவும். இது போல 10 முறை பிராணாயாமம் ஒவ் வொரு வேளையிலும் செய்ய வேண்டும்.
(4)  ஸங்கல்பம் : மந்திரம் :- மமோபாத்த-ஸமஸ்த- துரித-க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஶ்வர - ப்ரீத்யர்தம் ( காலையில் ) ப்ராத: ஸந்த்யாம் உபாஸிஷ்யே ;  ( மத்யானம்) மாத்யாஹ்நிகம் கரிஷ்யே (மாலையில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே  ( செய் முறை=  என்ன செய்யப் போகிறேன் என்கிற பிரமாணம் - வலது துடைமீது இடது உள்ளங்கை கீழும், வலது கை அதன் மேலும் இருக்குமாறு வைத்துக்கொண்டு சொல்லவும் ).
5) மார்ஜனம் ( ப்ரோக்ஷண மந்திர ஸ்நானம் செய்தல் ). 1.ஆபோஹிஷ்டா மயோபுவ: (2.) தான ஊர்ஜே ததான (3)மஹே ரணாய சக்ஷஸே (4) யோவ: ஶிவதமோ ரஸ; (5) தஸ்ய பாஜயதே ஹந:(6) உஸதீரிவ மாதர:(7).தஸ்மா அரங்கமாமவ (8) யஸ்யக்ஷயாய ஜின்வத (9) ஆபோஜனயதா ச ந: (10) ஓம் பூர் புவ: ஸுவ: ( செய் முறை - ஆத்ம பரிஷேசனம் ஜலத்தினால் சிரசை ப்ரோக்ஷண ஸ்நானம்.செய்தல் ) பின்னர் ஓம் என ஜலத்தில் எழுதி புருவ மத்தியில் தொடவும்.
(6) ப்ராசனம் என்றால் என்ன? விளக்கம் - நாம் ஒவ்வொரு தினமும் அந்தந்த வேளை வரை செய்த பாவங்களுக்கு ஸூர்யன் , அக்னி , திக் தேவதைகளை கை கூப்பி வேண்டிக்கொண்டு ப்ராயச்சித்தம் செய்து கொள்ளுதல்.
மந்திரம்- (மூன்று வேளைக்கும் தனித் தனி மந்திரம் ) ப்ராத:(காலையில் ) ஸூர்யஶ் ச மா மன்யுஶ் சமன்யுபதயுஶ் ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யத்ராத்ர்யா பாப மகார்ஷம் I மநஸா வாசா ஹஸ்தாப்யாம் II பத்ப்யா முதரேண - ஶிஶ்னா I ராத்ரிர் ததவலம்பது I யத்கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மாம்ருத-யோ நெள Iஸூர்யே ஜோதிஷி ஜூஹோமி ஸ்வாஹா II
மாத்யாஹ்நே - ஆப: புனந்து ப்ருதிவீம் ப்ருதிவீ பூதா புநாதுமாம் Iபுனந்து ப்ரஹ்மணஸ் பதிர் - ப்ரஹ்மபூதா புநாது மாம் I யதுச்சிஷ்டம - போஜ்யம்  யத்வாதுஶ்சரிதம் மம I ஸர்வம் புனந்து மாமாபோ ஸதாஞ்ச ப்ரதிக்ரஹ ஸ்வாஹா II
சாயங்காலே-- அக்னிஶ்ச மாமன்யுஶ்ச மன்யுபதயஶ்ச மன்யுக்ருதேப்ய: I பாபேப்யோ ரக்ஷந்தாம் I யதஹ்நா பாப ம கார்ஷம் மநஸா வாசா ஹஸ்தாப்யாம் பத்ப்யா - முதரேண ஶிஶ்னா I அஹஸ்த ததவலம்பது Iயத் கிஞ்ச துரிதம் மயி I இதமஹம் மா-மம்ருத-யோநெளா I சத்யே ஜோதிஷி ஜுஹோமி ஸ்வாஹா II ( வலது உள்ளங்கையில் சிறிது ஜலம் விட்டு உட்கொள்ளவும் )
(7) புனர் மார்ஜனம் : ( செய்முறை : முதலில் ஆசமனம் செய்து, பின்னர் மார்ஜனம் (இதை 3 வேளையும் செய்ய வேண்டும் ) அச்யுதாய நம: முதல்..... தாமோதர...வரை. ததிக்ராவண்ணோ அகாரிஷம் I ஜிஷ்ணோ ரஶ்வஸ்ய வாஜின: Iஸுரபி நோ முகா கரத் I ப்ரண ஆயிஷிஹும் தாரிஷத் II ஆபோ ஹிஷ்டா மயோ புவ: I தா ந ஊர்ஜே ததா தந I மாஹே ரணாய சக்ஷஸே I யோவ: ஶிவத மோரஸ: I தஸ்ய பாஜயதேஹ ந: I உஶதீரிவ மாதர:Iதஸ்மா அரம் கமாம வ: I யஸ்ய க்ஷயாய ஜின்வத ஆபோ ஜனயதா ச ந: I ஓம் பூர் புவஸ்ஸுவ:II ( பின்னர் ஆத்ம பரிசேஷணம் செய்துகொள்க )
(8) அர்க்ய-ப்ரதானம்: ஓம் பூர் புவ: ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்.  செய்முறை - காலையில்    கிழக்கு நோக்கி ( கட்டைவிரல் சேராமல் ) இரண்டு உள்ளங்கை நிறைய 8 விரல்கள் நுனி வழியாக 3 முறை அர்க்யம்  விடவும் , மதியம் வடக்கு
நோக்கி 2 முறையும், மாலையில் மேற்கு நோக்கி 3 முறையும் தரையிலோ,தாம்பாளத்திலோ விழுமாறு கைகளை மேலே தூக்கி நிறைய நீர் விடவும்.
(9) ப்ராயச்சித் தார்க்யம்:பிராணாயாமம் - ஓம் பூ: + பூர் புவஸ்ஸுவரோம் II அர்க்யம்: ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந: ப்ரசோதயாத் II ஓம் பூர்புவஸ்ஸுவ: ஆத்ம பரிசேஷணம். (சிரசில்)  +  ஒரு ஆத்ம ( தன்னைத்தானே) பிரதக்ஷிணம்.
(10) ஐக்யானு சந்தானம்: ( ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியம் ஒற்றுமை ). மந்திரம் : அஸவாதித்யோப்ரஹ்ம Iப்ராஹ்மைவாஹமஸ்மி II
( த்யானம்.சூரியன் ப்ரம்மம் நானும் ப்ரம்மம் என ஜீவாத்மா பரமாத்மா ஒற்றுமையை இரு கைகளாலும் மார்ப்பைத் தொட்டுக் கொண்டு , கண்களையும் மூடிக்கொண்டு, ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கியத்தை ஒரிரு நிமிடம் மெளனமாகச் சிந்திக்கவும் ).
(11)தேவ தர்ப்பணம் - மந்திரம் :- ஆதித்யம் தர்ப்பயாமி, ஸோமம் தர்ப்பயாமி, அங்காரகம் தர்ப்பயாமி, புதம் தர்ப்பயாமி, ப்ருஹஸ்பதிம் தர்ப்பயாமி, ஶுக்ரம் தர்ப்பயாமி,சநைஶ் சரம் தர்ப்பயாமி,ராஹும் தர்ப்பயாமி, கேதும் தர்ப்பயாமி,கேஶவம் தர்ப்பயாமி, நாராயணம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி, கோவிந்தம் தர்ப்பயாமி, விஷ்ணும் தர்ப்பயாமி, மதுஸூதானம் தர்ப்பயாமி,த்ரிவிக்ரமம் தர்ப்பயாமி, வாமனம் தர்ப்பயாமி, ஸ்ரீதரம் தர்ப்பயாமி, ஹ்ருஷீ கேஶம் தர்ப்பயாமி,பத்மநாபம் தர்ப்பயாமி, தாமோதரம் தர்ப்பயாமி.
பிறகு ஆசமனம் செய்யவும் ) செய்முறை -  குந்தி உட்கார்ந்து கொண்டு மேலே அர்க்கியத்திர்க்குக் கூறியபடி கட்டை விரல் சேராமல் ஒவ்வொரு தேவர்களுக்கும் ஒரு முறை ( ஜலம் ) - அர்க்யம்  விடவும் )
பூர்வ பாகம் முடிந்தது.
உத்தர பாகம் : (12) காயத்ரி ஜெப சங்கல்பம். மந்திரம்  ஶுக்லாம்பரதரம், விஷ்ணும், ஶஶி வர்ணம், சதுர் புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே II ஓம் பூ: ஓம் புவ: ஓகும் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன:  ஓம் தப: ஒகும் சத்யம். ஓம் தத் ஸ விதுர் வரேண்யம் பர்கோ தீமஸ்ய தீமஹி  தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் II மமோ பாத்த- சமஸ்த - துரிதக்ஷய -த்வாரா- ஸ்ரீ பரமேஶ் வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: ஸந்த்யா- காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; மாத்யாஹ்நிக காயத்ரீ - மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே; ஸாயம் ஸந்த்யா காயத்ரீ-மஹா மந்த்ர ஜெபம் கரிஷ்யே .(கிழக்கு, வடக்கு, மேற்கு)
(13) (13)(1) ப்ரணவந்யாஸ: மந்திரம் :-  ப்ரணவஸ்ய ரிஷி: ப்ரஹ்மா தேவி காயத்ரி சந்த: பரமாத்மா தேவதா IIபூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி, ப்ருகு, குத்ஸ, வஸிஷ்ட, கெளதம, காஶ்யப, ஆங்கீரஸ ருஷய: II காயத்ரீ-  உஷ்ணிக - அனுஷ்ட்டுப் - ப்ருஹதீ - பங்தீ - த்ருஷ்டுப் - ஜகத்யஶ்- சந்தாம்ஸி II அக்னி - வாயு - அர்க்க- வாகீஶ- வருண- இந்த்ர - விஶ்வே - தேவா - தேவதா: II
( செய்முறை. ரிஷியை சிரசிலும், சந்தஸ்ஸை நாவிலும், தேவதையை இருதயத்திலும் தியானம் செய்ய வேண்டும். ரிஷி என்று சிரசையும், சந்த: என்று உதட்டையும்; தேவதா என்று மார்பையும் தொடவேண்டும். பின்னர் மூன்று பிராணாயாமம் செய்துவிட்டு, முடிவில் வலது காதைத் தொடவும் )
(13)(2)ப்ராணாயாமம் : ஓம் பூ:I ஓம் புவ: I ஓஹும் ஸுவ:I ஓம் மஹ: I ஓம் ஜன:I ஓம் தப: I ஒஹும் சத்யம் II ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோந: ப்ரசோதயாத் I ஒமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுரோம் II ( ஒம் காரமே அனைத்தும் என தியானித்தல் )
(14) காயத்ரீ ஆவாஹநம்: ஆயாத்வித்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி: I அனுஷ்ட்டுப் சந்த: Iகாயத்ரீ தேவதா II ஆயாது வராதா தேவீ அக்ஷரம் ப்ர்ஹ்ம சம்மிதம் I காயத்ரீம் சந்தஸாம் மாதேத்வம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந:II
ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விஶ் வமஸி விஶ் வாயு: ஸர்வமஸி ஸர்வாயு: அபி‌பூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹ்யாமி II
செய்முறை : இரு கை கட்டை விரல் நுனிகளால் பவித்ர விரல் அடிக்கணுவைத் தொட்டுக்கொண்டு மார்பைத் தொடவும் ( இது ஆவாஹனீ முத்திரை -  இருதய கமலத்தில் காயத்ரீ தேவி ப்ரஸன்னமாக வேண்டுமெனப் பிரார்தனை செய்தல் )  .
(15)காயத்ரீ ஜெபம் - ஓம் பூர்புவஸ்ஸுவ: I தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி I தியோ யோன: ப்ரசோதயாத் II ( 28 / 58 / 108). செய்முறை - காலையிலும்,நடுப்பகலிலும் கிழக்கு முகமாக நின்று கொண்டும், மாலையில் - மாலையில் மேற்கு முகமாக உட்கார்ந்து கொண்டும் ஜெபம் செய்ய வேண்டும். காலையில் முகத்திற்கு நேராகவும், பகலில் மார்புக்கு நேராகவும், மாலையில் நாபிக்கு நேராகவும் கைகளை தன்னை நோக்கி இருக்குமாறு ( வஸ்திரத்தால் உபவீதமாக போர்த்தி வைத்துக்கொண்டு செய்யவேண்டும். ஸூக்ஷுமம் - என்னவென்றால் ஜெபம் ஓசை எழாமல், உதடு அசையாமல் , மனதில் ஐந்து இடங்களில் நிலை நிறுத்தி செய்ய வேண்டும் :- ஓம் -- பூர்புவஸ்ஸுவ: -- தத்ஸ விதுர் வரேண்யம் -- பர்கோ தேவஸ்ய தீமஹி -- தியோ யோன: ப்ரசோதயாத் )
(16) காயத்ரீ உபஸ்தானம் = ( திரும்ப அனுப்புதல் ) - பிராணாயாமம். ப்ராதஸ் ஸந்தியா உபஸ்தானம் கரிஷ்யே Iஆதித்ய சந்தியா உபஸ்தானம் கரிஷ்யே I ஸாயம் உபஸ்தானம் கரிஷ்யே I உத்தமே ஶிகரே தேவீ பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ஹ்யனுஜ் ஞானம் கச்ச தேவீ யதா ஸுகம் II ( செய் முறை :- ஜெபம் செய்த திக்கில் நின்ற நிலையில் தேவியை வணங்கி வழி அழ்னுப்புதல் )  (17) ஸூர்ய உபஸ்தானம் - ( மூன்று விதம் - காலை, நடுப் பகல், மாலை ) காலை - மித்ரஸ்ய சர்ஷணீ த்ருத: ஶ்ரவோ தேவஸ்ய ஸானஸிம் I ஸத்யம்     சித்ர ஶ்ரவஸ்தமம் II மித்ரோ ஜனான் யாதயதி ப்ரஜானன் மித்ரோ தாதார ப்ருதுவீ முதத்யாம் Iமித்ர: கிருஷ்டீ ரனிமிஷாபிசஷ்டே ஸத்யாய ஹவ்யம்
க்ருதவத் விதேம IIப்ர ஸ மித்ர மர்தோ அஸ்து ப்ரயஸ்வான் யஸ்த ஆதித்ய ஶிக்ஷதி வ்ரதேன I ந ஹன்ய தே ந ஜீயதே த்வாதோ நைனமங்ஹோ அஶ் நோத யந்திதோ ந தூராத் II
நடுப்பகலில் - ஆஸாத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேஶயன் அம்ருதம் மர்த்யஞ்ச I ஹிரண்யயேன ஸவிதா ரதேனாss தேவா யாதி புவனா விபஶ்யன் II உத்வயம் தமஸஸ்பரி பஶ்யந்தோ ஜ்யோதி ருத்தரம் I தேவம் தேவத்ரா ஸுர்ய-மகண்ம ஜ்யோதி-ருத்தமம்I உதுத்யம் ஜாதவேதஸம் தேவம் வஹந்தி கேதவ: I த்ருஶேவிஶ்வாய ஸூர்யம் II சித்ரந் தேவானா-முதகா -தனீகம் சக்ஷுர் மித்ரஸ்ய வருணஸ் யாக்நே: I ஆ ப்ரா த்யாவா ப்ருதிவீ அந்தரிக்ஷகும் ஸூர்ய ஆத்மா ஜகதஸ் தஸ்துக்ஷஶ்ச IIதச்சக்ஷுர் - தேவ ஹிதம் புரஸ்தாச் சுக்ரமுச்சரத் II பஶ்யேம ஶரதஶ் ஶதம், நந்தாம ஶரதஶ் ஶதம், மோதாம ஶரதஶ் ஶதம், பவாம ஶரதஶ் ஶதஹும், ஶ்ருணுவாம ஶரதஶ் ஶதம், ப்ரபரவாம ஶரத: ஶத: மஜீதாஸ்யாம ஶரத: ஶதம் ஜ்யோக்ச ஸூர்யம் த்ருஶே I ய உதகான்-மஹதோர்ணவாத்-விப்ராஜமான: ஸரீரஸ்ய மத்யாத் ஸமா வ்ருஷபோ லோஹிதாக்ஷ: ஸூர்யோ விபச்சின் - மநஸா புனாது II ஸாயங்காலே- இமம்மே வருண ஶ்ருதீ ஹவ - மத்யா ச ம்ருடய I த்வாமஸ்யு - ராசகே II தத்-த்வா யாமி ப்ரஹ்மணா வந்தமானஸ் ததா ஶாஸ்தே யானஜாமனோ ஹவிர்ப்பிஹி: I அஹேடமானோ வருணேஹ போத்யுருஶஹும் ஸ மாந ஆயு: ப்ரமோஷீ: II யச்சித்திதே விஶோயதா ப்ரதேவ வருண வ்ரதம் I மினீமஸி த்யவி த்யவி II யத்கிஞ்சேதம் வருண தைவ்யே ஜனேபி-த்ரோஹம் மனுஷ்யாஶ் சராமஸி I அசித்தீ- யத்-தவ தர்ம யுயோபிம மா நஸ் தஸ்மா-தேனஸோ தேவ ரீரிஷ: II கிதவாஸோ யத்-ரிரிபுர்- ந தீவி யத்வாகா சத்ய- முதயன் ந வித்ம Iஸர்வாதா விஷ்ய சிதிரேவ தேவாதா தே ஸ்யாம வருண ப்ரியாஸ: II  ( ஶ் , ஶ ஶா, ஶி ,ஶீ, ஶு, ஶூ, ஶெ, ஶே, ஶை, ஶொ, ஶோ, ஶௌ.) (  இதை விட்டுவிடவும் )
 ( செய்முறை விளக்கம் - ஜெபம் செய்த திசையை, கை கூப்பி நோக்கி நின்ற நிலையில், சூரிய மண்டல நடுவில் இருக்கும் பரமாத்வாவை மேற்கூறிய மந்த்திர உச்சாடனத்தால் துதிக்க வேண்டும் )
18).ஸமஷ்ட்யபிவாதனம்: மந்திரம் ஸந்த்யாயை நம: சாவித்ர்யை நம:காயத்ர்யை நம: ஸரஸ்வத்யை நம: ஸர்வாப்யோ தேவதாப்யோ நமோ நம: காமோ கார்ஷீன் மன்யுரகார்ஷீன் நமோ நம:  செய்முறை - ஜெபம் செய்த திசையிலிருந்து ஆரம்பித்து கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலிசெய்து, முடிவில் ஜெபம் செய்த திசையில்- சர்வாப்யோ தேவதாப்யோ நமோன் நம: , காமோகார்ஷீத் மன்யுரகார்ஷீத் நமோ நம: எனவும் சொல்லி வணங்கவேண்டும்.
பின்னர் அபிவாதயே.....இரு காதுகளையும் உள்ளங்கையால் தொட்டுக் கொண்டு அவரவர் கோத்ரம் நாமம் கூறி நமஸ்கரிக்கவும். (1) அபிவாதயே -
(2) _______ _______ ______( ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப ) (3) __(உங்கள் கோத்திரத்திற்கேற்ப - ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தா ரிஷேய
 என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்), (4) ப்ரவரான்வித:
(5) __ஸூத்ர (ஆபஸ்தம்ப ,போதாயனஸூத்ர,  (6) ___(யஜூஷ் , ஸாமோ, ரிக்.. சகாத்யாயி  (7) ______கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ____ராமகிருஷ்ண (உங்கள் பெயர்) சர்மாணம் அஹம் அஸ்மிபோ:
19) திக் தேவதா வந்தனம்: மந்திரம் :- ப்ராச்யை திஶே நம:I தக்ஷிணாயை திஶே நம: I ப்ரதீச்யை திஶே நம: I உதீச்யை திஶே நம:I ஊர்த்வாய நம: I அதராய நம:Iஅந்தரிக்ஷாய நம: Iபூம்யை நம:I ப்ரஹ்மணே நம: I விஷ்ணவே நம:I ம்ருத்யவே நம: I ஜெபம் செய்ய ஆரம்பித்த திசையிலிருந்து வரிசைக் கிரமமாக நான்கு திசைகளிலும் அஞ்சலி செய்க. திக் தேவதைகளையும், மும்மூர்திகளையும் வணங்கவும். 20) யம வந்தனம்: யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்தகாய ச ஒளதும்பராய தத்நாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய     சித்ரகுப்தாயவை நம: சித்ரகுப்தாயவை நம ஓம் நம இதி. ( இம்மந்திரத்தை தெற்கு நோக்கி சொல்லவும் )
21) ஹரிஹர வந்தனம் : ருதஹும் ஸத்யம் பரம்ப்ரஹ்ம புருஷம் க்ருஷ்ண பிங்களம் ஊர்த்வரேதம் விருபாக்ஷம் விஶ்வரூபாயவை நம: விஶ்வரூபாயவை நம ஓம் நம இதி II நர்மதாயை நாம: ப்ராதர் நர்மதாயை நமோ நிஸி நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ ஸர்பத: அபஸர்ப்ப ஸர்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹா யஸா: ஜனமே ஜயஸ்ய யாகாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்னு ஜ்ஜரத்கார்வோ ஜ்ஜரத்கார்வாம் பன்னகேப்யோ பிரக்ஷது ஸ்ரீபன்ன கேப்யோபி ரக்ஷத்வ ஓம் நம இதி. II
22) ஸூர்யநாராயண வந்தனம். நம: ஸவித்ரே ஜகதேக சக்ஷுஷே ஜகத்ப்ரஸூதி ஸ்திதி நாஶ ஹேதவே I த்ரயீ மயாய த்ரிகுணாத்ம தாரிணே. விரிஞ்சி நாராயண ஶங்கராத்மனே II த்யேய: ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண:ஸரஸிஜாஸன ஸன்னிவிஷ்ட: கேயூரவான் மகர குண்டலவான் கிரீடி ஹாரி ஹிரண்மயவபுர் த்ருத ஶங்க சக்ர: II
ஶங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்யுத I கோவிந்த புண்டரீகாக்ஷ ரக்ஷமாம், ஶரணாகதம் II ஆகாஶாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் I ஸர்வ தேவ நமஸ்கார: கேஶவம் ப்ரதி கச்சதி II கேஶவம் ப்ரதி கச்சதி ஓம் நம இதி I அபிவாதாயே ---- அஸ்மிபோ: ஜெபம் செய்த திசையை நோக்கி அஞ்சலி செய்து,நமஸ்காரம்.
23) ஸமர்ப்பணம்: காயேன வாசா மனஸேந்த்ரியைர்-வா புத்த்யாத்ம நாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் I கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி I ஆசமனம். (ப்ரயோகம் - உள்ளங் கையில் சிறிது தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, பலனை ஸ்ரீமன் நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன் .  

(


செய்முறை) வலதுகைவிரல்கள் வழி கீழே தீர்த்தத்தை விடவும் )
24) இரக்ஷை -- அத்யா நோ தேவ ஸவித: ப்ராஜாவத் ஸாவி: ஸெளபகம் I பராதுஸ்வப்னியஹும் ஸூவ II விஶ்வானி தேவ ஸவிதா துரிதானி பரா ஸுவ I யத் பத்ரம் தன்ம ஆஸுவ II ( ப்ரயோகம் -ஜெபம் செய்த இடத்தில்   தீர்த்தத்தை ப்ரோக்ஷித்து , குனிந்து வலது பவித்ர விரலால் பூமியைத் தொட்டு ஜலத்தை புருவ மத்தியில் இட்டுக்கொள்ளவும் )முடிந்தது.- சுபம்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

திருநெல்வேலியில் நெற்கட்டும் செவ்வல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் பிள்ளை  பேச்சிமுத்து ஆகியோருக்கு 1839 இல்   பிறந்தார்.

இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்.

ஐந்து வயதில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அப்போது ஆசிரியர் சீதாராம நாயுடு அவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தை கற்றுக் கொடுத்தார்.
முருகன் மீது பக்தி உருவாயிற்று.

ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார்.

முருகப்பெருமானின் மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட
சேய் தொண்டர்களில் ஒருவர்.

தமிழகத்தில் வாழ்ந்த
“சமூக சீர்திருத்தப் போராளி” ஆவார்.

தமிழ் மொழி மேல் அப்படி ஓர் மகா ஈடுபாடு கொண்டவர்.

“மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட”
என்றார்.

சுமார் ஒரு இலட்சம் பாடல்களை பாடியவர் இவர்.

தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்துப் பாடப்பட்டு வந்த காலத்தில் இவர் தமிழில் வண்ணம் பாடியும், வண்ணத்தியல்பு என்னும் இலக்கணநூல் யாத்தும் தமிழிசைக்கு உயிரூட்டினார்.

பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு ஆகியவற்றை தன் நூல்களில் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார்.

தனது மனைவிக்கு கல்வி கற்பித்து புலமைபெற வைத்தார்.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் தந்தை, தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் உள்ளிட்டோர் இவரது சீடர்கள்.

மேனி முழுவதும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம் தரித்திருப்பார். அக்கமணி மாலை, பாதக்குறடு, கோவணத்துடன், தண்டாயுதம் ஏந்தி வலம் வந்ததால் இவரை ‘தண்டபாணி சுவாமிகள்’ என்றனர் மக்கள்.

அகப்பொருளின் துறைகளை அமைத்து சந்த யாப்பில் ‘வண்ணம்’ என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

இவர்
வள்ளலாரை 3 முறை சந்தித்துள்ளார்

ஒன்பதாம் வயதில் சங்கரலிங்கம் தென்காசியில் உள்ள பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்த போதே, பாடல் இயற்றும் திறமை அவருக்குள் ஊற்றெடுத்து கிளம்பியது.

ஒரு நாள் சுரண்டை என்ற ஊருக்கு அருகில் உள்ள சித்திரா நதிக்கரைக்கரையில் அமைந்த அம்மன் “பூமி காத்தாள்” எனும் தேவியைப் போற்றி ஒரு வெண்பா பாடினார்.

பூமி காத்தாள்’ என்ற அம்மனுக்கு அப்பெயர் வருவதற்கான காரணத்தை அதில் விளக்கி இருந்தார்.

முருகனைப் பற்றி ஏராளமான பாடல்கள் பாடியதால் முருகதாசன் என்றும்,

திருப்புகழைப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.

1864ஆம் ஆண்டு திருநடைப்பயணம் சென்றபோது சுவாமிகள் வேலூரில் தங்கினார்.

அப்போது வடமொழி வாணர்கள் அவரிடம் நேரில் சென்று வாதிட்டனர். தமிழ்மொழியே வடமொழியைவிட உயர்ந்தது என்று சுவாமிகள் வாதிட்டார்.  

மொழிகளில் உயர்வு கொண்டது ‘வடமொழி’ என்பதை ஏற்பீர்களா? என்றனர்.

அதற்குச் சான்று தர முடியுமா?
என சுவாமிகள் கேட்க,

வேதம் வடமொழியில் தான் இருக்கிறது. இது ஒன்று போதுமே!

 வேதம் வடமொழியில் இருக்கிறதா? தமிழ் மொழியிலும் வேதம் இருக்கிறது தெரியுமா? என சுவாமிகள் பதில் சொல்ல,

தெரியாது என்றனர் வாணர்கள்.

ஆட்டையும், மாட்டையும் அடித்துப் போட்டு , ஊன் அவி பெய்து உண்ணும்படி சொல்வது உங்கள் வேதம்.

 “அவி சொரிந்து ஆயிரட் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத் துண்ணாமை நன்று” எனப் பேசுவது எங்கள் வேதம்…

தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றார்.

ஒரு பகலும் , ஒரு இரவும் கழிந்த பின் இரு தரப்பினரும் முடிவை எட்ட வில்லை.

பின்னர்

இறைவனுடைய திருவடியில் தீர்ப்பைப் பெற்றுக்கொள்ள
சம்மதம் தெரிவித்தனர்.

ஈசன் திருவடிக்கு முன்பு திருவுளச் சீட்டு எழுதிப் போடப்பட்டது.

அதில், “தமிழே உயர்ந்தது” என்னும் சீட்டு எடுக்கப்பட்ட போது சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

அப்போது, “தமிழே உயர்ச்சி யென்று சீட்டுக் கொடுத்த பெருமானே!”
என திருப்புகழ் பாடி முடித்தார்.

தமிழின் சிறப்புகளை வரலாற்றுச் சான்றுகளோடு கூறும் இப்பாடல் “தமிழலங்காரம்” என்று அழைக்கப்படுகிறது.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.

சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்

முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தவர். திருக்குறளை அடியொட்டி, 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியவர். அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம், வண்ணத்தியல்பு ஆகிய 3 இலக்கண நூல்களை தந்துள்ளார்.

அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதக்கந்தாதி, அருணகிரிநாதர் புராணம் என பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். ஏராளமான கீர்த்தனைகள், தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

‘ஆங்கிலியர் அந்தாதி’ என்று நூல் வாயிலாக ஆங்கிலேயர் ஆதிக்கத்தை கண்டனம் செய்தார். 1240 விருத்தப் பாக்களால் ஆன சுயசரிதையை குருபர தத்துவம் என்ற பெயரில் எழுதினார். 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை 3 ஆயிரம் பாடல்களில் புலவர் புராணம் என்ற நூலாகப் படைத்தார்.

தமிழகத்தில் அனைத்து ஊர்களுக்கும் சென்று முருகபக்தி
வளர்த்தார்.
விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் கவுமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்க்கப் பாடுபட்டார்.

திருவாமாத்தூரில்
இறுதிகாலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு வகைகளை மட்டுமே உட்கொண்டார். 19-ம் நூற்றாண்டில் முருகன் வழிபாடு தழைத்தோங்கப் பாடுபட்டவர். கடும் தவத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட தண்டபாணி சுவாமிகள் 59-வது வயதில் (1898) மறைந்தார்.

இவரது சீடராகிய இராமநந்த சுவாமிகள் சிரவண புரத்தில் (கோயம்புத்தூர்) இன்னொரு திருமடத்தை நிறுவி, தண்டபாணி சுவாமிகள் செய்த இறைப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். தற்போது இந்த இரு மடங்களும் “கெளமரம் மடம்” என்று அழைக்கப்படுகிறது.


அறுபத்தி மூன்று நாயண்மார்கள்

அறுபத்தி மூன்று நாயன்மார்கள் தொடர்ச்சி பதிவு..



4 - அரிவாட்டாய நாயனார்

பெயர்: தாயனார்
குலம்: வேளாளர்
பூசை நாள் :தை திருவாதிரை
அவதாரத் தலம்:கணமங்கலம்
முக்தித் தலம்:கணமங்கலம்

வரலாறு சுருக்கம்:

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார்.

முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், பயன் இல்லை கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.

“அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார்.

தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

தொடரும்...