செவ்வாய், 3 நவம்பர், 2020

ஆன்மீக தகவல்

ஆன்மீக தகவல்கள்


நம்முடைய கஷ்டங்கள் தீராமல் தொடர்வதற்கு, தீபம் ஏற்றும்போது நாம் செய்யும் இந்த தவறுகளும் ஒரு காரணம்.

 நம்முடைய சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமான வழிபாடாக சொல்லப்பட்டுள்ள வழிபாடுகளில், தீப வழிபாடும் ஒன்று. நம்முடைய சம்பிரதாயப்படி காலை மாலை இரண்டு வேளையும் கட்டாயம் வீட்டில் தீபமேற்றி வழிபடவேண்டும். காலை தீபம் ஏற்ற முடியாதவர்கள் கூட, மாலை வேளையில் கட்டாயம் தீபமேற்றி வழிபடுவது தான்
நம்முடைய வீட்டிற்கும் நல்லது. லட்சுமி கடாட்சமும் கூட, இதேபோல் சிலர் பரிகாரங்களுக்காக தீபம் ஏற்றுவார்கள். இத்தனை வாரம், இந்த குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும். ராகுகால தீபம் அல்லது ராகு கேது தீபம், விநாயகருக்கு தீப ஏற்றுவது, சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவது, இப்படி எந்த கடவுளுக்காக இருக்கட்டும். நீங்கள் தீபத்தை கோவிலுக்கு சென்று ஏற்றினாலும் சரி, வீட்டில் ஏற்றி வழிபாடு செய்தாலும் சரி, அது குத்துவிளக்காக இருந்தாலும் சரி, காமாட்சியம்மன் விளக்காக இருந்தாலும் சரி, மண் அகல் தீபம் இருந்தாலும் சரி, நாம் அந்த தீபத்தை எப்படி ஏற்றினால் வேண்டுதல்களுக்கான பலனை உடனடியாக, முழுமையாகப் பெற முடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

 இந்த பதிவில் கொடுக்கப்போகும் குறிப்புகள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம். சில பேருக்கு
தெரியாமலும் இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள சில முக்கியமான குறிப்புகள். முதலில் நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு முன்பாக முகம் கை கால்களை அலம்பி விட்டு தான் ஏற்ற வேண்டும். காலையில் குளித்து இருப்போம். குளித்தபின்பு தீபம் ஏற்றி இருப்பீர்கள் அல்லது வேலை
சுமை காரணமாக தீபம் ஏற்றாமலும் இருக்கலாம். இருப்பினும் மாலை தீபம் ஏற்றும் போது கை கால் முகம் கழுவாமல் தீபம் ஏற்றவே கூடாது. எந்த இடத்திலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, கை கால் கழுவாமல் தீபம் ஏற்றாதீர்கள்.

 வீட்டிலிருந்து புறப்பட்டு சென்று ஆண்கள் கடைக்கு போவார்கள். கடைக்கு போன உடனேயே தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, கல்லா பெட்டியில் அமர்ந்து விடுவார்கள். இது மிகப்பெரிய தவறு. கை கால்களை கழுவிவிட்டு தான் தொழில் செய்யும் இடத்திலும் தீபமேற்ற வேண்டும். அப்போதுதான் அந்த தொழில் மேலும் சிறக்கும்.

 அடுத்தபடியாக சில பேர் தங்களுக்கு ஏற்படக்கூடிய இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு தீபம் ஏற்றுவார்கள். இருமல், தும்மல், சிறுநீர், மலம்,
இப்படியாக நமக்கு வரக்கூடிய இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்திக்கொண்டு எக்காரணத்தைக் கொண்டும் தீபம் ஏற்றக்கூடாது. பெண்கள் தங்களுடைய முந்தானையை எடுத்து சொருகிக் கொண்டு தான் தீபம் ஏற்றவேண்டும். முந்தாணையை அப்படியே விட்டுவிட்டு தீபம் ஏற்றுவது தவறு. உங்களுடைய வீட்டில் ஸ்டாண்டின் மேல் தீபம் எரிந்தாலும் கூட, பூஜை அலமாரியில் தீபத்தை வைத்து இருந்தாலும் கூட, அந்த விளக்கை எடுத்து கீழே வைத்து நீங்கள் தரையில் அமர்ந்து, சம்மணம் போட்டு அமர்ந்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி, அதன் பின்புதான் அதை எடுத்து அலமாரியின் மேல் வைக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் நின்று கொண்டு, வேண்டிக்கொண்டு தீபமேற்றினால் அந்த வேண்டுதல் உடனே பலிக்காது. கோவிலுக்கு சென்றாலும் இதே விதிமுறை தான். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக ஸ்டாண்ட் வைத்திருப்பார்கள். நீங்கள் தரையில் அமர்ந்து தீபத்தை ஏற்றி எடுத்து தான், அந்த ஸ்டாண்டின் மேலே வைக்க வேண்டும். அப்போது தான் உங்களுடைய வேண்டுதல் சீக்கிரமாக நிறைவேறும். மனதில் ஒரு குறிக்கோளை
வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்று தினம்தோறும் அமர்ந்தபடி இறைவனை நினைத்து, மனதை ஒரு நிலைப்படுத்தி உங்களது வேண்டுதலை அந்த தீபச்சுடரில் அந்த தீப ஒளியில் வைத்து ஏற்றி, மனதார பிரார்த்தனை செய்து வழிபட்டு வாருங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும்
உங்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தாலும் அதை அந்த இறைவன் உடனடியாக நிறைவேற்றி வைப்பார் என்பதில் சந்தேகமே கிடையாது. சில பேர் அலமாரிகளில் பூஜை அறையை தயார் செய்து வைத்திருந்தாலும், ஸ்டண்ட் அடித்து வைத்திருந்தாலும் குறிப்பாக பெரிய பெரிய பூஜைகள் செய்யும்போது, வாழை இலை போட்டு, சுவாமி கும்பிடும் போது, அவர்கள் வீட்டில் இருக்கும் விளக்கை ஸ்டாண்டில் இருந்து கீழே இறக்கி தரைப்பகுதியில் தான் வைத்து ஏற்றுவார்கள். வெறும் தரையில் கீழே வைத்து வழிபடக் கூடாது. விளக்கு கீழே சிறிய தாம்பூலம் கட்டாயம் இருக்க வேண்டும். நிறையப்பேர் வீட்டில் பிள்ளையார் மனை இருக்கும். அந்த பிள்ளையார் மனையை, மரப்பலகையின் மீது வைத்து, இரண்டு பக்கங்கள் குத்து விளக்கு அலங்காரம்
செய்து, நடுவே ஒரு காமாட்சியம்மன் தீபமேற்றி அலங்காரம் செய்து, அதன்பின்பு படையல் இடுவார்கள். இப்படிப்பட்ட பழக்கம் வந்ததற்கும் காரணம் கீழே அமர்ந்து தீபமேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். அமர்ந்து தீபம் ஏற்றுவதன் மூலம் நம்முடைய மூலாதார சக்கரம் சீராக இயங்கி நமக்கும் தீபச்சுடருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது

 இதன்மூலம் உங்களது வேண்டுதல் பிரபஞ்சத்திற்கு சீக்கிரம் போய் சேர்ந்து அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்கும். இது முழுக்க முழுக்க நம் முன்னோர்களால்,
சாஸ்திரப்படி சொல்லி வைக்கப்பட்டுள்ள விஷயங்கள். தொடர்ந்து 48 நாட்கள் இப்படி தீப வழிபாடு செய்து பாருங்கள்

 இதுவரைக்கும் தீரவே தீராது அப்படின்னு நினைச்சிட்டு இருந்த பிரச்சினைகள் எல்லாமே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

 உங்களுக்கே மனநிம்மதி மனநிறைவு ஏற்பட்டுவிடும். அதன் பின்பாக தொடர்ந்து, உங்களை அறியாமலேயே அமர்ந்து தீபம் ஏற்ற தொடங்கிவிடுவீர்கள்

நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.


சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி

சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி

 



🍄 படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது.

🍄 அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு #ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்டார்.

🍄 இந்த கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை என்பதால் அவருடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் #கொட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார்.

🍄 பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். பிரம்மன் சிறையில் இருப்பதை நினைத்து #வருந்திய திருமால் சிவபெருமானிடம் சொல்லி விடுதலை கிடைக்க வேண்டுகிறார்.

🍄 சிவபெருமானும் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும்படி கூற தந்தை #சொல்மிக்க மந்திரம் இல்லை என்று முருகன் விடுதலை செய்துவிட்டார்.

🍄 இதை பார்த்து உள்ளம் மகிழ்ந்த சிவபெருமான் முருகனை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பிரம்மனுக்கே தெரியாத #பிரணவ மந்திரத்தை நீ எனக்கு சொல்ல வேண்டும் என்று கேட்க முருகனும் எல்லோரும் அறியக் கூறக் கூடாதே என்று சொல்லி சிவபெருமான் காதருகே சென்று பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தார்.

🍄 அதிசயத்தின் அடிப்படையில் இக்கோயில் முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

🍄 கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருகிறார்.

உடுப்பி ஸ்ரீகிருஷ்னர் தோன்றிய வரலாறு

உடுப்பி ஸ்ரீகிருஷ்னர் தோன்றிய
 வரலாறு 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

கிருஷ்ணாவதாரதின் போது   துவாரகையில் ருக்மணி ஒரு நாள் கிருஷ்ணனிடம் தனது ஆசை ஒன்று உள்ளதாகவும், அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஒரு நாள் கிருஷ்ணன் விவரமாக அந்த ஆசை என்ன என்று கேட்ட போது ருக்மணி கீழ் கண்டவாறு சொன்னார்கள்.

நாதா, நீங்கள் சிறு பிராயத்தில் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும், மதுராவிலும் பல லீலைகள் செய்தீர்கள் அல்லவா. அப்போது உங்களுக்கு வயது பத்துக்குள் தான். ஆகவே நான் அப்போது இல்லாததால் அந்த சிறு பிராயத்தில் நீங்கள் இருந்தது போல் எனக்கு காட்சி தரவேண்டும் என்றாள்.

உடன் கிருஷ்ணன் மூன்று வயது சிறுவன் போல் உள்ள தோற்றத்தை காண்பிக்க தேவ சிற்பிகள் அதை அப்படியே வடிவமைத்துக் கொடுத்தார்கள். ருக்மணிக்கு ஏக சந்தோஷமாயிற்று. ருக்மணி அந்த விக்ரஹத்திற்கு தினமும் ஒரு நாள் கூட விடாமல் பூஜை செய்து வந்தாள்.

பிற்காலத்தில் துவாரகை கடலுக்கு அடியில் போய் விட்டது அல்லவா. அந்த விக்ரஹமும் அப்போது இல்லை. இது ஒரு புறம் இருக்க இப்போது மத்வாசார்யாரை பற்றி கொஞ்சம் பாப்போம்.

மத்வர் தினமும் தனது அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு எப்போதும் கிருஷ்ண ச்மரனத்திலேயே இருப்பார். அப்படி இருக்கையில் ஒரு நாள் கடலில் சீற்றம் அதிகம் காரணமாக அங்கு வந்த கப்பல் நிலை தடுமாரிப் போனது. கப்பலில் உள்ள மாலுமி என்னன்னவோ செய்து பார்த்தும் எதுவும் இயலவில்லை. அப்போது கரையில் நின்று ஜபம் செய்து கொண்டிருந்த மத்வரை பார்த்து குரல் கொடுக்க பிறகு அந்த மாலுமி மத்வரை வேண்டிக்கொண்டார்.
 

ஸ்வாமி மகான் போல் தெரிகிறது. நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்றார். நமது ஆசாரியருக்கு தெரியாதா என்ன? அவரும் ஒப்புக் கொண்டு தனக்கு உண்டான பாணியில் கிருஷ்ணனை வேண்டி புயலை ஓயச் செய்தார்.
இப்போது மாலுமிக்கு மிகவும் சந்தோசம் ஏற்பட்டு குரு காணிக்கை கொடுக்க சித்தம்பூண்டு மத்வரை அணுகினான். ஆச்சர்யார் என்ன நம்மைப் போல் ஆசைபடுபவரா என்ன? திட்டவட்டமாக மறுத்து விட்டார். மீண்டும் ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதின் கட்டாயத்தால் மத்வர் அப்போது ஒன்று கேட்டார். உங்கள் கப்பலில் சரக்குகளுடன் வந்துள்ள கோபி சந்தன கட்டி என்கிற பொருள்.   அதை கொடுக்கும் படி கேட்டார் மாலுமிக்கோ வியப்பு ஒன்றுக்கும் உதவாத இதை கேட்கிறாரே என்று வியப்பில் ஆழ்ந்தவர். மத்வர் கேட்ட அந்த பொருளையே கொடுத்தார்.

மத்வாச்சாரியார் அதை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு மாலுமியை ஆசிர்வதித்து இப்போது அப்படி அதை தேய்த்து அது கரைய கரைய கடைசியில் ஒரு கிருஷ்ண விக்ரகம் வந்தது. உடன் ஸ்வாமி அதை தழுவிக் கொண்டு சந்தோசம் அடைந்து அதற்க்கு நித்திய ஆராதனை செய்ய முன் வந்தார்.

மத்வர் வாழ்ந்த இடம் இன்றைய உடுப்பி ஆகும். அந்த கிருஷ்ணனை நாம் இன்று தரிசிக்க காரணம் இந்த மத்வரே ஆகும். மத்வர் காலம் கி.பி.13ம் நூற்றாண்டு. கிருஷ்ணாவதாரா காலத்தில் துவாரகையில் மூழ்கிய கிருஷ்ண விக்ரகம் எவ்வளவு காலம் கழித்து மத்வர் கைக்கு கிடைத்து அதை நாம் இன்று தரிசிக்கிரோமே என்னே நம் பாக்கியம்.

இந்த கிருஷ்ணரை கப்பலில் இருந்து கொண்டு வந்தார் அல்லவா. அப்போதே பல க்ரந்தங்கள் செய்து கொண்டே வந்தார். அந்த க்ராந்தம் தான் இப்போது கோயிலில் தீபாராதனை காண்பிக்கும் போது சொல்லுகிற அதே நேரத்தில் நம் வீட்டில் சொல்லுகிற சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த ஒரு கிரந்தம் தான்.


ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர்.

அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி தீட்சிதர்.
அத்துடன், திருத்தணியில், முருகப் பெருமானே இவருக்கு காட்சியளித்து, வாயில் கற்கண்டு இட்டு அருள் புரிந்திருக்கிறார்.

செல்வத்தின் மீது பற்றில்லாமல், அம்பாள் அருளே, பெரும் செல்வம் என, இறை சிந்தனையில் வாழ்ந்திருந்தார், தீட்சிதர்.

ஆனால், அவர் மனைவியோ, 'அம்பாள் அருள் இவருக்கு பரிபூரணமாக இருக்கையில், இவர் போய் நின்றாலே போதுமே அரசர்கள் அள்ளிக் கொடுப்பரே... அதை வாங்கி வந்து, எனக்கு நகை, நட்டுகள் செய்து போடக் கூடாதா...' என, நினைத்தாள்.

ஒருநாள், தன் எண்ணத்தை தீட்சிதரிடம் கூறினாள். ஆனால், அவர் அம்பிகையின் நினைவில் ஆழ்ந்திருந்ததால், அதை செவி மடுக்கவில்லை.

அதனால், அவரது சீடர் ஒருவர், 'குருநாதா... தாங்கள் அனைத்தையும் துறந்தவர்; அதனால், தங்களுக்கு வேண்டுமானால் எதுவும் தேவையிருக்காது. ஆனால், தங்கள் மனைவி அப்படியில்லையே... அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடாதா... ஒருமுறை தஞ்சாவூர் அரசரை, தாங்கள் போய் பார்த்தாலே போதுமே... குரு பத்தினி வேண்டுவதெல்லாம், குறைவில்லாமல் கிடைத்து விடுமே...' எனக் கூறினார்.

அதற்கும் பதில் சொல்லவில்லை, தீட்சிதர். அன்றிரவு, நவாவரணப் பூஜை முடித்து, வழக்கம் போல, பாடத் துவங்கினார், தீட்சிதர். இந்நிலையில், அவரது மனைவி கனவில், சர்வ அலங்கார பூஷிதையாக தோன்றிய லட்சுமி தேவி, தன் திருமேனியில் இருந்து, ஒவ்வொரு ஆபரணமாக கழற்றி, தீட்சிதரின் மனைவிக்கு அணிவித்தவள், 'போதுமா... இன்னும் வேண்டுமா...' எனக் கேட்டாள். மெய் சிலிர்த்து, விழித்தெழுந்தாள், தீட்சிதரின் மனைவி. நகை மேல் அவளுக்கு இருந்த நாட்டமும் கலைந்தது.

அம்பிகையை துதித்து, தீட்சிதர் பாடிய கீர்த்தனைகள், இன்றும், கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகின்றன. இறையருள் பெற்றவர்களின் உள்ளம், வேறெதிலும் பற்றாது என்பதை விளக்கும் வரலாறு இது!


திங்கள், 2 நவம்பர், 2020

நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் முடிந்ததும் திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர். நான் சென்றிருந்த போது கோவில் நடை சாத்தியிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து அர்ச்சகர் ஒருவர் வெளியே வந்தார்.
அவரை அணுகி ஸ்வாமி தரிசனம் பண்ணனும்... நீங்க தானே அர்ச்சகர்? என கேட்டதும் நான் அர்ச்சகர் இல்லீங்க ஆட்டோ டிரைவருங்க... என்றார் பணிவாக. கோவில் நடை திறக்கும் வரை வீட்டில் உட்காருங்க... என்று சொல்லி வீட்டிலிருந்த பொங்கல் மற்றும் காபியை இன்முகத்துடன் தந்தார். பின் அவரை பற்றி அவரே சொல்ல ஆரம்பித்தார்.

பெயர்: சுதர்சன், வயது: 64. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஆட்டோ சாமி என்றால் எல்லாருக்கும் தெரியும். அப்பா பெயர்: ராமானுஜம். ஆசிரியர்; மகா நேர்மையானவர். திடீரென இறந்து விட்டார். எனக்கு கீழே நான்கு தங்கைகள். அப்பாவோட 'பென்ஷன்' மட்டுமே வருமானம். அதில், அரிசி மட்டுமே வாங்க முடியும். இருந்தாலும், எல்லாவற்றையும் சமாளித்தார். அம்மா. அவருக்கு ஒத்தாசையா இருப்பதற்கு வேலை தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். உண்மை மற்றும் நேர்மையுடன் உழைச்சு பிழைக்கிற எந்த பிழைப்பும் குற்றமில்லை... என்று சொல்லி ஆசிர்வதித்தார். தாயார்
இப்பகுதியில் உள்ள 11 திவ்யதேசங்களையும் ஒரு கைடு போல ஆட்டோவில் அழைத்து போய் காட்டுவேன். சீர்காழி பகுதியில் சாமி ஆட்டோ என்றால் எல்லாருக்கும் தெரியும். யாரிடமும் சவாரிக்கு இவ்வளவு என்று கறாராக கேட்பதில்லை. பயண முடிவில் நீங்கள் தருவதை தாருங்கள்... என்று சொல்வேன். பயணம் செய்வோரும் மனம் நிறையும் படி தந்து செல்வர். அப்படி தராவிட்டாலும் வருந்த மாட்டேன். ஒரு தம்பதியினர் என் ஆட்டோவில் பயணித்தனர். பயணத்தின் போது என் குடும்பம் பற்றி விசாரித்தனர். பையன் குருராஜன், பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்துள்ளான்... இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்க்கணும்... பண வசதி இல்லை... என்று கூறினேன். மறு நாள் பையன் விருப்பப்பட்ட கல்லுாரியிலிருந்து போன் வந்தது... உடனே வந்து கல்லுாரியில் சேரும்படி கூறினர். பையனும் நன்றாக படித்து தற்போது வளைகுடா நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்.
யாரிடமும் உதவி கேட்டது கிடையாது. அன்றைக்கு மட்டும் தான் வாய் திறந்தேன். பையனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் ஒரே ஒரு நாள் புலம்பினேன். உடனே பெருமாள் போல உதவிய அந்த உத்தமர் பெயர் கூட இப்போது வரை தெரியாது.
மாதவ பெருமாள் சன்னிதி அருகில் வீடு இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற என் வீட்டை பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன். காபி, டீ போட்டு உணவை பகிர்ந்து தருவோம். எதற்கும் காசு வாங்க மாட்டோம். பெருமாள் பக்தர்களுக்கு என்னாலான கைங்கர்யம் என நினைத்து செய்கிறேன்.
நாலு பேரை பார்க்கலாம்... சம்பாதிச்சு அதை நாலு பேரோடு பங்கிட்டு சாப்பிடுற சந்தோஷமே தனி என்பதால் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்... இப்போ ரொம்ப துாரம் ஓட்டுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 28 அக்டோபர், 2020

வீணை


வாத்தியங்களில் வீணையின் சிறப்பு தெரியுமா?

மற்ற இசைக்கருவிகளுக்கு இல்லாத சில தனிச் சிறப்புகள் வீணைக்கு உண்டு. அது, தோற்றத்துக்கு இனிய உருவத்தை உடையது. பெரு முழக்கம் செய்யாமல் தார ஸ்தாயியிலும் மந்தர ஸ்தாயியிலும் இனிதாக இசைப்பது. வீணையை மீட்டி நிறுத்தி விட்டால், அதன் இன்னொலி உடனே நின்றுவிடுவதில்லை. அதன் ஒலி அலைகள் பின்னும் நீண்டு ஒலித்து மெல்லிய அலைகளைப் போல அடுத்தடுத்துப் பரவி நிற்கும். வலது கையிலே மீட்டிய ஒலி இடக்கையில் வாசிக்கும் போதும் இடையறாது ஒலித்து இன்பத்தை உண்டாக்குகிறது. மற்ற வாத்தியங்களில் அப்படியல்ல; வாத்தியத்திலிருந்து கையை எடுத்தவுடன் ஒலியும் நின்றுவிடும். பிடி கருவியில் வில்லை எடுத்துவிட்டால் உடனே ஒலி நிற்பதைக் காணலாம். வீணை அத்தகையதல்ல. அதனுடைய கமகம் வேறு எதற்கும் வராது. பிரணவ நாதம் வாத்தியத்தின் அமைப்புக்கேற்றபடி நீண்டு ஒலிக்கும். சரியானபடி அமைக்கப்பட்ட வீணையில் இந்த நாதம் நெடுநேரம் நிற்கும். இதனால் மனிதக் குரலைப் போலவே தோன்றும்படி வாசிக்க முடிகிறது. ஸ்வரங்களையும் கமகங்களையும் தக்கபடி இசைக்க முடிகிறது.

சக்தி அம்சமும் சிவ அம்சமும் உடைய வீணையில் நயமும் கம்பீரமும் ஒருங்கே திகழ்கின்றன. ஆத்மானுபூதிக்குத் துணை நிற்கும் வாத்தியம் வீணை. அதனால் இதைத் தேவவாத்தியம் என்பார்கள். தெய்வத் திருவருளைப் பெறுவதற்கும், ஆத்மாவின் பக்திப் பெருக்கை வெளியிடுவதற்கும் ஏற்றதாக விளங்குகிறது வீணை. யாக்ஞவல்கியர் தம்முடைய மனைவியருள் கார்கியை மட்டும் தம்முடன் மோட்சத்துக்கு அழைத்துச் சென்றாராம். மைத்ரேயியை அழைத்துச் செல்லவில்லை. அவளிடம், நீ உன் வீணைத் திறனால் மோட்ச லோகத்துக்குத் துணை இன்றியே வரலாம் என்று அவர் கூறினார். வீணையின் நாதம் மோட்ச இன்பத்தையும் கூட்ட வல்லது என்கிற தத்துவத்தையே இது குறிக்கிறது.

வீணை வகைகள்: வீணையை சிவபெருமானே உருவாக்கினார். அதனால் அதற்கு ருத்திர வீணை என்றும் பெயர். உருவ வேறுபாட்டினால் வீணையின் பெயர்களும் வேறுபடும். வட நாட்டில் ருத்திர வீணை, விசித்திர வீணை, கச்ச வீணை, சிதார், ஸூர் பஹார், ஸூர் சிங்கார் என்ற வகை வீணைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீணையும், கோட்டு வாத்தியம் என வழங்கும் மகா நாடக வீணையும் வழக்கத்தில் உள்ளன. தென்னாட்டில் இசைக்கப்படும் வீணைக்கு சரஸ்வதி வீணை என்ற பெயரும் உண்டு.

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு அகப்பையினால் பகிர்ந்து கொண்டு இருக்கும்போது, அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கியிருக்கையில், அசுரர்களில் ஒருவன் தேவர்களின் பந்தியில் யாருக்கும் தெரியாமல் அமர்ந்து விடுகிறான். திருமாலும் தேவர்களின் வரிசையில் தேவர்களைப் போல இருந்த அசுரனுக்கு மூன்று அகப்பை அமிர்தத்தைக் கொடுத்து விடுகிறார். அமிர்தத்தைக் கொடுத்த திருமாலுக்கு அவன் அசுரன் என்பதை அருகில் இருந்த சூரியனும் சந்திரனும் ஜாடை காட்டிச் சொல்ல, அமிர்தத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த அசுரனின் தலையை திருமால் அகப்பையால் வெட்டி விடுகிறார். இதனால் தலை (ராகு) வேறு உடல் (கேது) வேறு என வெட்டுண்ட அசுரன், தனது வாயில் மீதமிருந்த அமிர்தத்தைக் கக்கி விடுகிறான். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் சூரியனும் சந்திரனும் ராகு கேதுவுக்கு பகை கிரகங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

கக்கிய அமிர்தமானது பூமியில் விழுந்து வேப்பமரமானது. வேம்புக்கு கசப்புச் சுவை ஏனென்றால், அது அசுரனின் (பாம்பின்) வாயிலிருந்து வெளிப்பட்டதால்தான். இப்படி பாம்பின் நஞ்சும் அமிர்தமும் கலந்து உருவானதே வேம்பு. வேம்பின் இலை, பட்டை, வேர், பிசின், காய், எண்ணெய், முதலியன உண்ணும் மருந்தாகவும், புற மருந்தாகவும் பலவிதமான நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட வேம்பை உண்டு வந்தால் மனிதனுக்கு நோய் என்பதே கிடையாது.

வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் பொடியுடன் முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும்.  வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் மறைந்து விடும்.


லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது. என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றுள் மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர். லிங்கமே சிவபெருமான் தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தி என்று போற்றுகிறோம். அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளவில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே. இது போன்ற நிலையைத் தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம். பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான். உதாரணமாக,

சிவனும் சக்தியும்: அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் மாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) காணலாம். ஆலய நிர்மாண நூல்களை உற்று நோக்கினால், எந்த ஆலயமுமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.

எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் மாலும், பிரமனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை. மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றிடுவதும், சூடம் ஏற்றிடுதலுமே மிக முக்கியமான வழிபாடாகும். அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.

இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக லிங்கத்துள்ளிலிருந்து வெளிப்பட்ட லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.


உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

உலகின் முதல் இரட்டை குழந்தைகள் யார் தெரியுமா?

ஒருமுறை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரும் வியாழ பகவானைக் கவனியாமல் ஆடிக்கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த தேவகுரு ""பூந்துறை நாட்டில் முத்தி என்ற தாசி வயிற்றில் இரட்டை குழந்தைகளாக பிறப்பீர்கள் என சபித்தார். தாங்கள் அறியாமல் செய்த தவறை மன்னித்தருளுமாறு குருபகவானை இருவரும் வேண்டினார்கள். சாப விமோசனம் வேண்டிய அவர்களை மன்னித்த தேவகுரு, ""தாசியின் வயிற்றில் பிறந்து 12 ஆண்டுகள் பார்வதி தேவியை வணங்கி வந்தால், ஐராவதம் ஏறிய இந்திரன் நீங்கள் வாழும் பூந்துறை நாட்டில் பொன்மாரி பெய்வான். அப்போது உங்கள் சாபம் நீங்கும் என்றார்.

தேவகுருவின் சாபத்தால் ரம்பை, ஊர்வசி இருவரும் அழகாலும் குணத்தாலும் சிறந்த தாசி முத்தியின் வயிற்றில் பிறந்தனர். அவர்கள் சிறுநல்லாள், பெருநல்லாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். தேவகுருவின் வாக்கின்படியே சிறுநல்லாள், பெருநல்லாள் இருவரும் ஈரோட்டில் குடி கொண்டுள்ள ஆருத்ரா கபாலீஸ்வரரையும், வருணாம்பிகையையும் மனமுருக வழிபாடு செய்தனர். அவர்களது அன்புக்கு இறங்கிய சிவன், இந்திரன் மூலம் பூந்துறை (தற்போதைய ஈரோடு) நாட்டில் பொன்மாரி பொழிய வைத்து ரம்பை, ஊர்வசியின் பாவம் போக்கினார். இந்த ரம்பை, ஊர்வசி தான் உலகின் முதல் இரட்டை குழந்தைகள்!..


சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!

சித்தர்களில் இடைக்காடரின் சிறப்பு!

சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.

சித்தர்கள் யார்?

அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன். (நூல் - அகத்தியர் பரிபாஷை)

தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.

இடைக்காடர் வாழ்க்கை - அவதாரம் தலம்: இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.

மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே

- போக முனிவர் 7000 நூல்

இடைக்காடர் ஞானஸ்தலம்: தற்பொழுது சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூராகும். பழங்காலத்தில் இவ்வூர் அழகிய பாண்டிய நல்லூர் என்று அழைக்கப்பட்டது. இடைக்காடரின் சித்துகளாலும், அற்புதங்களாலும் இவ்வூரை பொது மக்களாலும், சிஷ்யர்களாலும் இவ்வூரை இடைக்காட்டூர் என்று அவர் பெயரில் அழைக்கப்பட்டது.

இடைக்காடர் பிறவியிலேயே ஞானம் கைவரப் பெற்று பல அற்புதங்களை நிகழ்த்தினார். இடைக்காடர் தனது குல தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலை செய்தாலும் அவரது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மாவை நோக்கி விண்வெளியில் ஒன்றர கலந்திருப்பார். இவ்வாறு இவரின் தவக்கோலத்தில் விண்நோக்கி அமர்ந்திருப்பை வான்வெளியில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த போக மகரிஷி இவரை காணும் ஆர்வத்துடன் இவர் முன்வந்து காட்சியளித்தார். இதனையும் வந்திருப்பவர் போகர் என்பதை அறியாமல் இடைக்காடர் அவரை வணங்கி அங்கிருந்த தர்ப்பை புல்லை சேகரித்து ஆசனமாக செய்து அவரை அமரச் செய்து ஆட்டின் பாலை கறந்து கொடுத்து உபசரித்தார். இவரின் விருந்தோம்பல் பண்பைக் கண்டு மகிழ்ந்து போகர் இவரை தனது சீடனாக்கி அவருக்கு ஞானம், மருத்துவம் மற்றும் வானசாஸ்திரம் ஆகியவற்றை பல நாட்கள் அங்கு தங்கிருந்து உபதேசித்து அருள்பாலித்தார்.

சில காலம் பின்பு போகர் அவரை விட்டு விடைபெறும் நேரம் வந்த பொழுது இடைக்காடர் கண் கலங்கினார். அப்பொழுது இடைக்காடருக்கு கலங்காதே உனக்கு அருளிய ஞானத்தை வைத்து உலகம் உய்ய வாழ்விக்க அருள்வாயாக என்று கூறி மறைந்தார். இவ்வாறு போகரின் அருளால் ஞானம் பெற்ற இடைக்காடர் தனது தவத்தாலும், ஞானத்தாலும் முக்காலத்தை உணர்ந்தார். தனது குருவின் சொல்படி மக்களுக்கு சேவை செய்ய உறுதி பூண்டார். அதன் பொருட்டு பல ஞானநூல்கள் எழுதினார். மனிதனின் துயரங்கள் அடிப்படையாக விளங்குவது மற்றும் நிலைக்களுக்கும் காலம் செயல்படுவதை கண்டறிந்து அதனை விளக்கு விதமான வருஷாதி என்னும் நூலை இயற்றினார். இப்பொழுது பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.

இவர் தனது ஞான சிருஷ்டியால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் கொடுமையான பருவ மாற்றத்தையும், அதனால் ஏற்படப் போகும் பஞ்சம், பசி மற்றும் பட்டினியை உணர்ந்து தனது சீடர்களுக்கும் மக்களுக்கும் எச்சரித்தார். ஆனால், அவர்களோ அதனை பொருட்படுத்தவில்லை. இருப்பினும், அவர் தன் பொருட்டு பட்டினியிலிருந்து தனது ஆடுகளை காக்க, எந்த பருவ மாற்றத்திலும் பாதிப்படையாமல் வளரும் எருக்கஞ் செடியை உணவாக கொடுத்தார். இதனை கண்ட மக்கள் இவருக்கு சித்தம் கலங்கிவிட்டது என்று எள்ளி நகையாடினர். ஆனால் இடைக்காடரோ தனக்கும் உணவு கிடைக்க, குறுந்தானியமான குருவரகு எடுத்து வந்து அதனை மண்ணில் சேற்றோடு கலந்து அவர் குடிலில் மண்சுவர் எழுப்பினார். இதன்மூலம், எருக்கஞ் செடியை உண்ணும் ஆடுகளுக்கு உடலில் தினமும் ஏற்படும் அரிப்பை போக்க மண் சுவர்களில் உடம்பை தேய்க்கும். அதன் மூலம் பஞ்ச காலகட்டத்தில் அதனை உணவாக வைத்து கொள்ளலாம் என எண்ணினார். அவர் எண்ணியபடியே, மக்களும் பஞ்சத்தினாலும், பட்டினியாலும் இறக்கத் தொடங்கினர். ஆனால் இடைக்காடரும் அவரது ஆடுகளுடன் எப்பொழுது போல் எவ்வித பாதிப்பின்றி நன்றாக உயிர் வாழ்ந்து வந்தனர். இதனை அறிந்த நவக்கிரக நாயகர்கள் ஆச்சர்யம் அடைந்து அதனை கண்ணூற காண விரும்பி இடைக்காடரின் மண்குடிலுக்கு வந்து சேர்ந்தனர்.

உலகையே ஆட்சி செய்கின்ற நவக்கிரக நாயகர்கள் தனது குடிசைக்கு வந்தமைக்கு இடைக்காடர் பெரும் மகிழ்ச்சியுடன் திகைத்து நின்று அவர்களை வரவேற்றார். அவர்களுக்கு ஆட்டுப் பாலுடன், குருவரகு கஞ்சியும் கொடுத்து உபசரித்தார். அவரின் உபசரிப்புக்கு மகிழ்ந்த நவக்கிரக நாயகர்கள் அவருக்காக உண்டனர். பின்னர் எருக்கஞ்செடிகளை தின்ற ஆடுகளின் பாலின் காரணமாக அதனை உண்ட அவர்கள் மயக்கமுற்று படுத்துறங்கினர். இதனை கண்ட இடைக்காடருக்கு சற்று ஒரு யோசனை தோன்றியது. நவக்கிரகங்களின் வேறுபட்ட நிலைகளால் தானே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் உறங்கி கொண்டிருந்த நவக்கிரக நாயகர்களை பஞ்சம் நீக்குகின்ற ஒரு நிலையில் இடமாற்றி படுக்க வைத்தார். இதன்மூலம், அடுத்த கணமே, பூமியில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. மேகங்கள் சூழ்ந்தது பெரும் மழை பெய்தது பூமி குளிர்ந்தது வறட்சி நீங்க நீர் நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பின. அனைத்து ஜீவராசிகளும், மனிதர்களும் மலர்ச்சியுடன் உயிர் பெற்றன. பஞ்சம் நீங்கியது.

பூமியில் ஏற்பட்ட திடீர் குளிர்ச்சியையும் மாற்றத்தையும் உணர்ந்த நவக்கிரக நாயகர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்து எழுந்தனர். இது அனைத்தும் இடைக்காடரின் செயலாகத்தான் இருக்கும் என்று உணர்ந்து அவர்கள் அவரின் நுட்பத்தினையும், சகல உயிர்கள் மேல் அவர் கொண்ட அன்பையும் நினைத்து நெகிழ்ந்தனர். அதே நேரத்தில் இடைக்காடரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருப்பதை பார்த்த அவர்கள் அவரை தொந்தரவு செய்ய மனமின்றி வாழ்த்தி இவரால் பூலோக மக்களுக்கு நன்மைகள் நிகழட்டும் என்று ஆசி வழங்கி மறைந்தனர்.

முக்திஸ்தலம்: இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.

ஆன்மீக பணி : சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.

இருப்பிடம்: மதுரை டூ பரமக்குடி சாலையில் முத்தணேந்தல் என்ற ஊரின் அருகே உள்ளது. (மதுரையிலிருந்து 39 கிலோ மீட்டர்)

வழித்தடம் : மதுரையில் பெரியார் நிலையம் டூ இடைக்காட்டூர். பேருந்து எண் : 99 எப்

குரு வணக்கம்:

ஆதியாம் சப்தரிஷி மார்களோடு அருள் பூண்ட
பதினென்பேர் பாதம் போற்றி!
சேதியாம் மூத்ததொரு முனிவர் மூதோர்
செப்பரிய பெரியோர்கள் சுகந்தாள் போற்றி!
நீதியாம் ரவியோடு மதியும் தேவர் நிலையான
மூவருடன் இணைகள் போற்றி!
ஜோதியென சென்னிமீது உரையும் கலைகள்
ஓதுவித்த குருவடிகள் போற்றி! போற்றி!

ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச் செய்யுள்:

ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைக்களுக்கருளிய கோனார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே! மண்சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!

பாடல் : மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்தது என்று எண்ணோடா தாண்டவக்கோனே

விளக்கம் : கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்தி விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.

பாடல் : சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே

விளக்கம் : கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சும்பாம்பை அடக்கி உள்ளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால் சித்தி கிடைக்கும்.

பாடல் : தேவன் உதவியின்றி பசுவே! தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே

விளக்கம் : உயிரே ! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்ட முடியாது. உயிருக்கு உயிராய் இருப்பது பரம்பொருளின் அருள்தான் என்பதை மறவாதே!


இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?

இறைவழிபாட்டில் சங்கு முக்கிய இடம் பெறுவது ஏன்?

பிறப்பு, இறப்பு என அனைத்திலும் சங்கு முக்கியம் இடம் வகிக்கிறது. இதன் ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது. ஆலயங்களில் பூஜைகள் ஆரம்பிக்கப்படும் போது சங்கு முழங்கும் செய்து பூஜைகள் செய்யப்படும். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். இப்படி ஓசை தரும் சங்கு பாசம் தரும் சங்காக குழந்தைகளுக்கு பால் பருக்குவதற்கும் அந்நாளில் பயன்படுத்தினர்.

மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும்.  சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று. இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீடசம் பெருகும். வியாதிகள் நீங்கும்.

ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். கார்த்திகை மாதத்தில், பவுர்ணமியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடும் நேரத்தில், சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சி தருகிறார். அதனால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்), சிவன் கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சிவ பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க சங்கை வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறுவோம்.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.