நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்று கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் முடிந்ததும் திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர். நான் சென்றிருந்த போது கோவில் நடை சாத்தியிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து அர்ச்சகர் ஒருவர் வெளியே வந்தார்.
அவரை அணுகி ஸ்வாமி தரிசனம் பண்ணனும்... நீங்க தானே அர்ச்சகர்? என கேட்டதும் நான் அர்ச்சகர் இல்லீங்க ஆட்டோ டிரைவருங்க... என்றார் பணிவாக. கோவில் நடை திறக்கும் வரை வீட்டில் உட்காருங்க... என்று சொல்லி வீட்டிலிருந்த பொங்கல் மற்றும் காபியை இன்முகத்துடன் தந்தார். பின் அவரை பற்றி அவரே சொல்ல ஆரம்பித்தார்.
பெயர்: சுதர்சன், வயது: 64. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஆட்டோ சாமி என்றால் எல்லாருக்கும் தெரியும். அப்பா பெயர்: ராமானுஜம். ஆசிரியர்; மகா நேர்மையானவர். திடீரென இறந்து விட்டார். எனக்கு கீழே நான்கு தங்கைகள். அப்பாவோட 'பென்ஷன்' மட்டுமே வருமானம். அதில், அரிசி மட்டுமே வாங்க முடியும். இருந்தாலும், எல்லாவற்றையும் சமாளித்தார். அம்மா. அவருக்கு ஒத்தாசையா இருப்பதற்கு வேலை தேடி அலைந்தேன் கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன். உண்மை மற்றும் நேர்மையுடன் உழைச்சு பிழைக்கிற எந்த பிழைப்பும் குற்றமில்லை... என்று சொல்லி ஆசிர்வதித்தார். தாயார்
இப்பகுதியில் உள்ள 11 திவ்யதேசங்களையும் ஒரு கைடு போல ஆட்டோவில் அழைத்து போய் காட்டுவேன். சீர்காழி பகுதியில் சாமி ஆட்டோ என்றால் எல்லாருக்கும் தெரியும். யாரிடமும் சவாரிக்கு இவ்வளவு என்று கறாராக கேட்பதில்லை. பயண முடிவில் நீங்கள் தருவதை தாருங்கள்... என்று சொல்வேன். பயணம் செய்வோரும் மனம் நிறையும் படி தந்து செல்வர். அப்படி தராவிட்டாலும் வருந்த மாட்டேன். ஒரு தம்பதியினர் என் ஆட்டோவில் பயணித்தனர். பயணத்தின் போது என் குடும்பம் பற்றி விசாரித்தனர். பையன் குருராஜன், பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்துள்ளான்... இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்க்கணும்... பண வசதி இல்லை... என்று கூறினேன். மறு நாள் பையன் விருப்பப்பட்ட கல்லுாரியிலிருந்து போன் வந்தது... உடனே வந்து கல்லுாரியில் சேரும்படி கூறினர். பையனும் நன்றாக படித்து தற்போது வளைகுடா நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறான்.
யாரிடமும் உதவி கேட்டது கிடையாது. அன்றைக்கு மட்டும் தான் வாய் திறந்தேன். பையனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன் ஒரே ஒரு நாள் புலம்பினேன். உடனே பெருமாள் போல உதவிய அந்த உத்தமர் பெயர் கூட இப்போது வரை தெரியாது.
மாதவ பெருமாள் சன்னிதி அருகில் வீடு இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இளைப்பாற என் வீட்டை பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்கிறேன். காபி, டீ போட்டு உணவை பகிர்ந்து தருவோம். எதற்கும் காசு வாங்க மாட்டோம். பெருமாள் பக்தர்களுக்கு என்னாலான கைங்கர்யம் என நினைத்து செய்கிறேன்.
நாலு பேரை பார்க்கலாம்... சம்பாதிச்சு அதை நாலு பேரோடு பங்கிட்டு சாப்பிடுற சந்தோஷமே தனி என்பதால் தொடர்ந்து ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்... இப்போ ரொம்ப துாரம் ஓட்டுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக