லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
அவசியத்தின் போதெல்லாம் அவதரிக்கின்ற பரம்பொருளின் அவதாரங்கள் எண்ணிலடங்காது. என்றாலும், ஒரு சில மிக முக்கியமானதாக போற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றுள் மகாவிஷ்ணுவினுடைய பத்து அவதாரங்கள் பரவலாக வணங்கப்படுவது போல, சிவபெருமானுடையவற்றில் 25 முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் லிங்கோத்பவர். லிங்கமே சிவபெருமான் தான் என்றாலும், அந்த லிங்கத்துக்குள்ளேயே, தலை, கால், கை என்று எல்லா அங்கங்களோடும் இருக்கும் திருவுருவைத் தான் லிங்கோத்பவ மூர்த்தி என்று போற்றுகிறோம். அர்ஜுனனின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கண்ணபிரான் கீதையை அருளவில்லை. நாம் ஒவ்வொருவரும், நமக்கு வாய்த்த பணியை ஆற்றிட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே. இது போன்ற நிலையைத் தான் லிங்கோத்பவர் கதையிலும் காண்கிறோம். பரம்பொருள் ஒன்றே ஆயினும், நாம், அதைப் பெரும்பாலும், பலவாகவே கருதி அறியாமையில் உழல்வதால், கடவுளின் ஒருமையை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அப்போதெல்லாம் இறைவன் வெவ்வேறு, புதுமையான ஐக்கிய வடிவங்களின் மூலம் நம்மை ஆட்கொண்டு வந்திருக்கிறான். உதாரணமாக,
சிவனும் சக்தியும்: அர்த்தநாரீஸ்வரராகவும், சிவனும் மாலும் ஒன்றி சங்கரநாராயணராகவும், இப்படிப் பல திருவுருவங்களையும் ஏற்றிருக்கிறான். இது போலவே மும்மூர்த்திகளும் சேர்ந்து நடத்திய திருவிளையாடலால் உருவான புதிய மூர்த்தியே லிங்கோத்பவமூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை சிவாலயத்தில் மட்டுமின்றி, பிற ஆலயங்களிலும், மூலக் கருவறையின் பின்னுள்ள கோஷ்டத்தில் (திருப்பிறையில்) காணலாம். ஆலய நிர்மாண நூல்களை உற்று நோக்கினால், எந்த ஆலயமுமே ஒரு குறிப்பிட்ட தெய்வத்துக்கு மட்டுமே அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.
எல்லா தெய்வங்களையும் ஒரே கருவறையில் வைக்க இயலாது என்பதால் தான் ஏதாவது ஒரு மூர்த்தியை கருவறைக்குள்ளும், பிற பலவற்றை கோபுரம் முதல் கோஷ்டம் வரையும், விமானம் முதல் திருவலச் சுற்றிலும் வைத்திருக்கின்றனர். இதனால் தான் மாலும், பிரமனும் இல்லாத சிவாலயமுமில்லை. ஆண் தெய்வமில்லாத பெண் சக்தி ஆலயமுமில்லை. மும்மூர்த்திகளின் அருளையும் ஒரே திருவுருவில் வழங்குவதாக அமைந்துள்ள லிங்கோத்பவர் வழிபாடு அளப்பரிய சிறப்புடையது. அகண்டாகார ஜோதி நமக்காக தன்னைச் சுருக்கிக்கொண்டு இருக்கின்ற லிங்கோத்பவர் சன்னதியில் விளக்கு ஏற்றிடுவதும், சூடம் ஏற்றிடுதலுமே மிக முக்கியமான வழிபாடாகும். அன்றாடமும், மாலையில் இருட்டத் துவங்கும் நேரத்திலும்; பவுர்ணமி தினங்களில் கூடுதலான நேரமும் வழிபடுதல் விசேஷம். ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து நாம் ஏதோ சாதித்து விட்டதாக எண்ணுகின்ற கர்வம் அழியும்.
இரண்யகசிபுவின் அறியாமையைப் போக்குவதற்காக, தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மமூர்த்தியைப் போல, நம் அறியாமையையும் அகந்தையையும் நீக்குவதற்காக லிங்கத்துள்ளிலிருந்து வெளிப்பட்ட லிங்கோத்பவமூர்த்தியை அனுதினமும் வணங்கிடுவோம்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
புதன், 28 அக்டோபர், 2020
லிங்கோத்பவர் வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக