செவ்வாய், 3 நவம்பர், 2020

ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர்

ஸ்ரீ முத்துஸ்வாமி தீஷிதர்.

அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி தீட்சிதர்.
அத்துடன், திருத்தணியில், முருகப் பெருமானே இவருக்கு காட்சியளித்து, வாயில் கற்கண்டு இட்டு அருள் புரிந்திருக்கிறார்.

செல்வத்தின் மீது பற்றில்லாமல், அம்பாள் அருளே, பெரும் செல்வம் என, இறை சிந்தனையில் வாழ்ந்திருந்தார், தீட்சிதர்.

ஆனால், அவர் மனைவியோ, 'அம்பாள் அருள் இவருக்கு பரிபூரணமாக இருக்கையில், இவர் போய் நின்றாலே போதுமே அரசர்கள் அள்ளிக் கொடுப்பரே... அதை வாங்கி வந்து, எனக்கு நகை, நட்டுகள் செய்து போடக் கூடாதா...' என, நினைத்தாள்.

ஒருநாள், தன் எண்ணத்தை தீட்சிதரிடம் கூறினாள். ஆனால், அவர் அம்பிகையின் நினைவில் ஆழ்ந்திருந்ததால், அதை செவி மடுக்கவில்லை.

அதனால், அவரது சீடர் ஒருவர், 'குருநாதா... தாங்கள் அனைத்தையும் துறந்தவர்; அதனால், தங்களுக்கு வேண்டுமானால் எதுவும் தேவையிருக்காது. ஆனால், தங்கள் மனைவி அப்படியில்லையே... அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடாதா... ஒருமுறை தஞ்சாவூர் அரசரை, தாங்கள் போய் பார்த்தாலே போதுமே... குரு பத்தினி வேண்டுவதெல்லாம், குறைவில்லாமல் கிடைத்து விடுமே...' எனக் கூறினார்.

அதற்கும் பதில் சொல்லவில்லை, தீட்சிதர். அன்றிரவு, நவாவரணப் பூஜை முடித்து, வழக்கம் போல, பாடத் துவங்கினார், தீட்சிதர். இந்நிலையில், அவரது மனைவி கனவில், சர்வ அலங்கார பூஷிதையாக தோன்றிய லட்சுமி தேவி, தன் திருமேனியில் இருந்து, ஒவ்வொரு ஆபரணமாக கழற்றி, தீட்சிதரின் மனைவிக்கு அணிவித்தவள், 'போதுமா... இன்னும் வேண்டுமா...' எனக் கேட்டாள். மெய் சிலிர்த்து, விழித்தெழுந்தாள், தீட்சிதரின் மனைவி. நகை மேல் அவளுக்கு இருந்த நாட்டமும் கலைந்தது.

அம்பிகையை துதித்து, தீட்சிதர் பாடிய கீர்த்தனைகள், இன்றும், கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகின்றன. இறையருள் பெற்றவர்களின் உள்ளம், வேறெதிலும் பற்றாது என்பதை விளக்கும் வரலாறு இது!


கருத்துகள் இல்லை: