திங்கள், 21 செப்டம்பர், 2020

சுமங்கலி பாக்யம்

சுமங்கலி பாக்யம்

திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார். காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர், பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார். ஆனால், அது ஒரு முனிவராக மாறியது. அந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார். இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவி) வடிவெடுத்தது. அந்தப்பெண், அவர் மீது விழுந்து அழுதாள். நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜா,  அவளருகே ஓடிவந்தார். ""அம்மா! மான் என்று நினைத்தே அம்பெய்தேன். இப்படி ஆகிவிட்டதே! அந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.

அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னா! இது தாங்கள் அறியாமல் செய்த தவறு. இது மன்னிப்பிற்குரியதே. இருப்பினும், என் கணவரின்றி என்னால் வாழ இயலாது. என்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.

மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டது. ஒரு பெண்ணை... அதிலும் அந்தணப் பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதா! ஐயையோ! என்ன செய்வேன்! என் குலகுருவே! வசிஷ்ட மகரிஷியே! தாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான். வசிஷ்டர் அங்கு தோன்றினார். அந்தப் பெண் அவரது  பாதங்களில் விழுந்தாள்.

என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.

""மாமுனிவரே! இதோ! இங்கே இறந்து கிடப்பவர் என் கணவர். அவர் இறந்த பிறகு அபாக்கியவாதியாக நிற்கிறேன்! தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளே! இதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள். வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும், இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும். என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணே! காவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அருகில் அம்பாள் சிலையும் இருக்கும். அங்கே நீ செல். உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள். அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள். அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளி. அவர் பிழைத்து எழுவார். அந்தக் கோயிலில்  ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணி, இதே போல உயிர் போன தன் கணவனை எழுப்பினாள். அசுரனுக்கே அருளிய அந்த இறைவன் உனக்கு நிச்சயம் உதவுவான் கிளம்பு என்றார். அந்தப் பெண் மகிழ்ந்தாள். ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி மூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள். தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர். அப்போது அம்பாளும், சிவனும் அவர்கள் முன் தோன்றினர். அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையே! என்னைப் போலும் ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும் என வேண்டினாள். அம்பாளும் அப்படியே செய்வதாக  வாக்களித்தாள். ரிஷிபத்தினியும், முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர். தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும் படி கூறினர். மன்னனும் அவ்வாறே செய்தான். அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.




திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. இந்தக் கதையைப்  படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம். தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள். தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்

சிவன் தலை கீழாய் காட்சி தரும் அதிசய கோவில்!


சிரசாசனம்: சிவன் தலைகீழாய் காட்சி தரும் அதிசய கோவில், சிவன் அருகில் முருகனை மடியில் தாங்கி காட்சி தரும் அம்மன், சிவன் சிரசாசனம் கொண்ட கதை.
உலகை காத்து இரட்சிக்கும் பரம்பொருளாகிய ஆதி அந்தம் இல்லாத சிவ பெருமான் பல்வேறு திருவிளையாடல்களும், பல்வேறு கோலங்களும் பூண்டு காட்சி தருகிறார். பக்தர்களுக்கு வேண்டிய அருள்புரிய இறைவன் பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி அருள்புரிந்துள்ளார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலை கீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய திருக்கோவில் தான் ஆந்திர மாநிலம் பீமாவரம் அருகில் உள்ள யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் ஆலயம் ஆகும்.

சிரசாசன கோல தலவரலாறு

முன்னொரு காலத்தில் சம்பாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களை பெற்றான். தன் வரத்தை கொண்டு அனைத்து தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அஷ்டதிக்கு பாலகர்களில் யமனை தவிர அனைவரையும் தோற்கடித்தான். யமன் தனது பலத்தால் போர் புரிந்தார். போர் தொடர்ந்து கொண்டே இருக்க யமன் தன் பலத்தை இழந்து கொண்டே வந்தார். இறுதியாக சம்பாசுரன் யமபுரியை கைப்பற்றினான். தேவர்களை அடிமைப்படுத்தினான். இதனால் யமன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

அப்போது இறைவன் தற்பொழுது கோவில் உள்ள இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சிரசானத்தில் இருந்தார். ஈசனின் தியானம் கலைய வழி அறியாது யமன் நின்றார். யமனின் வேதனை அறிந்த அன்னை பார்வதி காட்சி அளித்தார். யமனிற்கு அசுரனை அழிக்கும் சக்தி வழங்கினார். யமனும் சம்பாசுரனை கொன்று தேவர்கள் குறையை தீர்த்தார்.


பின் இங்கு வந்து சிரசாசனத்தில் இருந்த இறைவனையும், குழந்தை முருகனுடன் இருந்த பார்வதியையும் பூஜித்தார். எனவே தான் இன்றும் இங்கே இறைவன் சிரசாசனத்தில் தலைகீழாய் காட்சி தருகிறார் என்கிறது தலபுராணம்.

யம பயம் போக்கும் சிவ பெருமான்
இங்கே கருவறையில் இறைவன் தலை கீழாய் லிங்கம் இன்றி உருவமாக காட்சி தருகிறார். சிரசை பூமியில் பதித்து பாத்தை மேலே தூக்கி நிறுத்தி சிரசாசனத்தில் காட்சி தருகிறார்.



அருகிலேயே அன்னை வேறு எங்கும் இயலா வண்ணம் குழந்தை முருகனை மடியில் கிடத்திக் கொண்டு தாய்மையே வடிவாக பார்வதி தேவி காட்சி அளிக்கிறார்.
யமன் பூஜித்த தலம் ஆதலால் ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம் உள்ளவர்கள், ஜாதகத்தில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து இறைவனையும் அம்பிகையையும் ஒரு சேர தரிசித்து செல்ல யம பயம் நீங்கும் என்பது கண்கூடான உண்மை. நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடை, குழந்தையின்மை என அனைத்தையும் நீக்கி அருள் வழங்குகின்றனர் பார்வதி அம்பிகையும், சக்தீஸ்வர சுவாமியும்.
அழகிய கிராமத்தில் அழகான சுதை வேலைபாடுகள் கொண்ட திருக்கோவில். தினமும் காலை மாலை என பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசித்து அருள் பெறுகின்றனர். அனைவரும் ஸ்ரீ பார்வதி உடனுறை சக்தீஸ்வர சுவாமியை சென்று தரிசித்து அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

அமைவிடம்: யனமதுரு ஸ்ரீ பார்வதி சமேத சக்தீஸ்வரர் திருக்கோவில்,
ஆந்திர மாநிலம் பீமாவரத்தில்
இருந்து 5 கி.மீ. தொலைவில் யனமதுரு கிராமத்தில் அமைந்துள்ளது.

ஶ்ரீ ஜபாலி ஆஞ்சநேயர் கோவில்

ஶ்ரீ ஜபாலி ஆஞ்சநேயர் கோவில்

, திருப்பதி, ஆந்திர மாநிலம்

ஶ்ரீமத் வால்மீகி இராமாயணத்தில் ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீ இராமர் "பித்ரு வாக்கிய பரிபாலனம்" என்னும் உயர்ந்த கொள்கையை கடைப்பிடித்து இராஜ்ஜிய பரிபாலனத்தை தம்பி பரதனுக்கு விட்டு கொடுத்துவிட்டார். அது மட்டும் அல்லாமல் அயோத்தியாவையும் விட்டு பதினான்கு வருடம் காட்டுக்கு செல்லவும் ஒப்புக்கொண்டார். தனது சகோதரன் லக்ஷ்மணன் மற்றும் மனைவி சீதாதேவியுடன் காட்டுக்கு செல்கிறார். ஶ்ரீஇராமன் காட்டுக்கு சென்ற பின் தசரதன் அயோத்தியில் உயிர் துரந்தார், மாமன் வீட்டிலிருந்து திரும்பிய பரதன் அயோத்தியாவின் அரசனாக மகுடம் ஏற்க மறுக்கிறார். மூத்தவருக்கே அதற்கு உரிமை என்கிறார். இராமரையே அரசாள அழைப்பது என்று முடிவு செய்து, அரச குடும்பத்தினர் அனைவரும் இராஜ ப்ரோகிதருடனும், மற்ற பண்டிதர்களுடனும் காட்டுக்கு புறப்படுகின்றார். சித்திரகூடத்தில் இராமரை அவர்கள் சந்தித்து, அயோத்திக்கு திரும்புமாறும் இராஜ்யத்தை ஶ்ரீராமர் ஆள வரவேண்டும் என்றும் பலரும் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கிறார்கள். ஆனால் இராமரோ, சாத்திரங்கள் தெரிந்தவரும் தந்தையும் ஆனவருக்கு கொடுத்த வாக்கை தான் மீற முடியாது என்று உறுதியாக எடுத்துரைக்கிறார், தான் அரசாள முடியாது என்பதிலும் காட்டில் வாசம் செய்வதிலும் தின்னமாக இருந்தார்.

அந்த நேரத்தில், ஜபாலி [ஜாபாலி என்றும் அழைப்பர்] என்னும் ஒரு வைஸ்யர், பரதனின் வாதத்திற்கு துணையாக தனது வாதத்தை முன் வைத்தார். எல்லோரும் தனித்தே பிறக்கிறோம் தனித்தே மரணத்தை ஏற்கிறோம். அப்படி இருக்கையில் என் தந்தை என் தாய் என்று யாரும் கிடையாது ஏன்னொனில் பூமியில் யாரும் யாருக்கும் உரிமையில்லை. எப்படி யாத்திரிகர்களுக்கு எந்த கிராமத்திலும் பாத்தியதை இல்லையோ அது போல் தான் இதுவும். அரசன் தனி, இராமன் தனி. இந்த உலகம் ஒரு மாயை என்று கூறினார்.
ஒரு படி மேலேபோய் இறந்தவருக்காக எதையும் தியாகம் செய்வதின் முழுமை என்ன என்றார். அப்படி கொடுக்கப்படும் உணவு வீண்; இறந்தவர் சாப்பிடவா முடியும் என்கிறார். அண்டத்தை மிஞ்சியது ஏதும் இல்லை. கண்கள் காணாததை உதறிதள்ளுமாரும், கண்ணால் காண்பதற்கு மட்டும் முன்னுரிமை தருமாறும், வாக்கு, தந்தை இட்ட கட்டளை, மகனின் கடமை,, அரசனின் கடமை அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று நாத்திகம் பேசினார்.

*ஜபாலிக்கு ஶ்ரீஇராமரின் பதில்*
நல்லொழுக்கமுடையோரில் உயர்ந்தவரான ஶ்ரீஇராமர் சாந்தமாக ஜபாலிக்கு பதில் கூறினார். இவர்கள் சொல்லி கேட்ட வார்த்தைகள் உண்மை போல் தோன்றினாலும் செயலுக்கு ஒவ்வாதவை. சாப்பிட கூடாத பழத்தை சாப்பிட சம்மதம் வாங்குவது போல் தான் இது. படிப்பும், நன்நடத்தையும், சீரான பார்வையும், நியாயமாகவும், இருப்பது போல் தன்னை பற்றி தானே நினைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்ல வரலாமா? அரசாட்சி என்பதே உண்மையும் சத்தியமும் தான், அதனால் அரசன் உண்மையாகவும் சத்தியமானவராகவும், உதாரண புருஷனாகவும் இருப்பது வேண்டும். அண்டம், இந்த ஜகம் என்பது நிரூபிக்கப்பட்ட சத்தியம். மேலுலகிலிருந்து நமக்கு கிடைக்கும் வரனான இவ்வுண்மையை மிகவும் உயர்ந்த சத்தியம். வேள்வி, பலி, தியாகம், வழிபாடு, வேதங்கள் எல்லாம் இந்த உண்மையை, சத்தியத்தை கருவாக வைத்து தோன்றியவை. தர்மவானான தசரதனின் ஆணையை எப்படி மீறமுடியும்? தர்மவானான அவருக்கு தான் கொடுத்த வாக்கை எப்படியும் கடைபிடிப்பேன். தனது வார்த்தைகளை ஶ்ரீஇராமர் முடிக்கும் பொழுது புத்திசாலிகள், நாத்திக வாதத்தை புறந்தள்ளுவார்கள் என்றும், தன் தந்தை இப்படிப்பட்ட மாறாத நாத்திகனை [ஜபாலியை], தர்மத்திற்கு புறம்பானவரை தனது அரசசபையில் வைத்திருந்திருக்க கூடாது என்றார்.

ஶ்ரீஇராமரின் ஆணித்தரமான வார்த்தைகளை கேட்ட ஜபாலி தான் நாத்திகன் இல்லை, இராமர் அயோத்தியா வரவேண்டும் என்னும் ஊந்துதலால் அப்படி பேசியதாக கூறுகிறார்.

இந்த ஒரு இடத்தில் மட்டுமே ஜபாலி அவர்கள் ஶ்ரீவால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறார்.

*இராமயணத்திற்கு வெளியே ஜபாலி*
இதன் பிறகு ஜபாலி முனிவரை பற்றி புராணங்களில் அதிகமாக எங்கும் காணக்கிடைக்கவில்லை. இன்றைய ஜபல்பூர் நகரத்திற்கு இப்பெயர் வர காரணம் ஜபாலி முனிவர் அங்கு தவம் எய்தினார் என்பதாகும். வட கர்நாடகாவில் [துலு நாடு] பல திருக்கோயில்களின் தலபுராணத்தில் ஜபாலி முனிவர் அங்கு தவம் செய்ததாக காணப்படுகிறது. திருப்பதி மலையில் இருக்கும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலின் தல புராணத்தில் ஜபாலி முனிவர் பெயர் வருகிறது.

ஜபாலி அயோத்தியா திரும்பிய பிறகு
சித்திரகூடத்திலிருந்து அயோத்தியா திரும்பிய ஜபாலி தான் இராமரை திரும்ப அழைத்து வருவதற்காக சொல்லிய சொற்கள் இராமரை புண்படுத்தி விட்டது குறித்து மிகவும் வருத்தப்பட்டார். நற்காரியம் ஒன்று நடக்க வேண்டும் என்ற ஆவலில் தான் கூறிய வார்த்தைகளும், தவறான உபமானங்களும் இராமர் வாயால் தான் "மாறாத நாத்திகன்; தர்மத்தின் வழியிலிருந்து தவறியவன்; தவறான வழிநடத்தும் அறிவுடையவன்" என்ற பட்டம் பெற வைத்தது மன வேதனையை இன்னும் அதிகரித்தது. தசரதர் அவர் அரசசபையில் தன்னை வைத்திருந்திருக்க கூடாது என்று இராமர் சொல்லுமளவுக்கு தாம் வீழ்ந்துவிட்டோமே என்று வருந்தினார். இராமனின் மகுடாபிஷேகத்திற்கு பிறகு, ப்ரம்மனை குறித்து தவம் மேற்கொள்ள நினைத்து அயோத்தியாவிலிருந்து புறப்பட்டார்.

தெற்கு நோக்கி தனது யாத்திரையை தொடங்கினார், பல இடங்களில் நதிகரையில் தவம் இருந்தார். இப்படியே சென்ற அவர் ஒரு சமயம் ஶ்ரீஅஞ்சனா தேவி தனக்கு மக்கள்செல்வம் வேண்டி தவம் இருந்த இடத்தினை அடைந்தார். அவ்விடத்தின் மகிமையை அறிந்த அவர் இதுவே தனது தவத்திற்கு சிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்தார்.

தர்மத்தின் ரூபமான, புருஷருள் உத்தமமான ஶ்ரீஇராமரை தியானிப்பதற்காக இவ்விடத்தை விட சிறந்த இடம் ஏதிருக்கும்? ஜபாலி தவம் இங்கு மேற்கொண்டார்.

*மகரிஷி ஜபாலியும் திருப்பதியும்*
திருமலையில் கோயில் கொண்டுள்ள ஶ்ரீவெங்கடாசலபதியை தரிசிக்க ஏழு மலைகளை தாண்டி வரவேண்டும். ஶ்ரீவெங்கடாசலபதி சுவாமி வட இந்தியாவில் ஶ்ரீபாலாஜி என்று பிரபலம். அந்த ஏழு மலைகளில் ஒன்று அஞ்சநாத்ரி ஆகும். தனக்கு மக்கள் செல்வம் வேண்டி ஶ்ரீஅஞ்சனா தேவி தவம் இருந்த மலை என்பதால் இம்மலைக்கு அஞ்சநாத்ரி என்று பெயர்.

*ஶ்ரீஜபாலி தவம் மேற்கொண்ட இடம் திருமலையில் திருக்கோயிலுக்கு சற்று தொலைவில் உள்ளது.* ஶ்ரீவியாசராஜா தீர்த்தர், ஶ்ரீஹாத்திராம் பாவாஜி போன்ற மகான்கள் ஶ்ரீவெங்கடாசலபதிக்கு பூஜைகள் செய்துள்ளார்கள். ஶ்ரீராமாநுஜர் பூஜை விதிகளை நிர்ணயத்தன்படி அதன்படி இப்பொழுது பூஜைகள் நடக்கின்றன. ஶ்ரீஹாத்திராம் பாவாஜியின் சமயத்தில் ஜபாலி ஹனுமார் திருக்கோயில் கட்டப்பட்டது. தற்பொழுது ஶ்ரீபிரயாக்ராஜ் மகராஜ் என்னும் சாது ஜபாலி ஹனுமார் திருக்கோயிலை நிர்வாகித்து வருகிறார்.

*திருப்பதியில் ஜபாலி புராணம்*
ஜபாலி [ஜாபாலி] ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில், திருப்பதி, ஆந்திர பிரதேசம்

ஜபாலி அவர்கள் அஞ்சநாத்ரி மலைக்கு வந்த பொழுது, தான் சரியான இடத்திற்கு வந்துவிட்டதாக உணர்ந்தார். ஆனால் நீர்நிலை வேண்டும் என்பதாலும் அங்கு ஶ்ரீஹனுமாரின் சாந்தித்யம் இருக்க வேண்டும் என்பதாலும் சற்றே மேலே நடந்தார். அப்படிப்பட்ட தலத்தில் தவம் எய்தினால் தான் முக்தி பெறலாம் என்றும் நம்பிக்கையாக இருந்தார். மேலும் சென்ற ஜபாலி அவர்கள், தற்போது திருக்கோயிலுக்கும் ஆகாசகங்கைக்கும் நடுவில் உள்ள இடத்திற்கு வரும்போது, ஶ்ரீஹனுமாரின் இருப்பிடமாக உணர்ந்தார்.

ஆகாசகங்கைக்கு செல்லும் பாதையில் ஶ்ரீவேணுகோபால சுவாமி திருக்கோயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் இருக்கும் இடத்தில் ஒரு குறுகிய வளைவில் "ஜபாலி ஶ்ரீஆஞ்சநேய சுவாமி தேவாலயமுலு" என்னும் தெலுங்கு பெயர் பலகையை பார்க்கலாம்.

இங்கிருந்து நாம் ஏற்றமான பாதையில் நடக்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மிக உயரமான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருபுறமும் நம்மை வரவேற்கும். மிக அடர்த்தியான காட்டின் நடுவில் அமைந்திருக்கும் பாதை இது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு தான். நமது மனம் சாந்தமாக இருக்குமாயின் சொர்கத்தில் இருப்போம்,  ஆதலால் மனதினை சுத்தமாக வைத்திருங்கள், தெய்வதன்மை நம்மை ஆட்கொள்ளும்.

*ஜபாலியும் ஶ்ரீஆஞ்சநேய சுவாமியும்*
இவ்விடத்தில் ஜபாலி அவர்கள் ஶ்ரீஹனுமாரின் உணர்வமைதியை உணர்ந்தார். அவ்விடத்திலேயே தவம் மேற்கொள்ள ஆரம்பித்தார். முதலில் ஶ்ரீஹனுமாரை குறித்து தவம் இருந்தார். சில நாட்களுக்கு பின் ஶ்ரீஹனுமார் அவர் முன் தோன்றி ஶ்ரீசீதா பிராட்டியுடன் ஶ்ரீஇராம சந்திர மூர்த்தியின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். இதை கேட்ட ஜபாலி அவர்கள் புதிய தெம்புடன் தனது தவத்தை திரும்பவும் செய்யலானார். நீண்ட நாட்களுக்கு பின், அருகில் ஒரு நீர்நிலை தோன்றும், அதில் நீராடி தனது பாவங்களை போக்கி, பின் திரும்ப தவம் செய்யுமாறு தெய்வீக கட்டளையை பெற்றார். சில நாட்களில் அருகில் அழகிய நீர்நிலை ஏற்பட்டது. அதனை ஶ்ரீஇராமரே தனது அம்பினால் உற்பத்தி செய்தார் என்பதை அவர் அறிந்து மகிழ்ச்சியுடன் அதில் நீராடினார். பின் திரும்பவும் தவம் செய்து ஶ்ரீசீதா பிராட்டியாருடன் கூடிய ஶ்ரீஇராமரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார்.

*ஜபாலி ஶ்ரீஆஞ்சநேயர் திருக்கோயில்"*
ஶ்ரீஜபாலிக்கு காட்சி கொடுத்த அதே வண்ணம் இன்றும் ஶ்ரீஹனுமாரை இங்கு தரிசிக்கலாம். அந்த சுயம்பு சுவாமியை கர்ப்பகிரஹமாக வைத்து இத்திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹமும் அதன் மின் பெரிய முக மண்டபமும் கொண்டது திருக்கோயில். கோயிலின் முன்புறம் அழகிய குளம் உள்ளது. ஶ்ரீஇராமரால் ஏற்படுத்தப்பட்ட இத்திருக்குளத்தை "ராம குண்ட்" என்று அழைக்கிறார்கள். கோயிலின் பின்புறம் இருக்கும் திருக்குளம் "சீதா குண்ட்" என்று அழைக்கப்படுகிறது.

ஜபாலி ஶ்ரீஆஞ்சநேயர்
ஶ்ரீஜபாலி மஹரிஷிக்கு எப்படி காட்சி கொடுத்தாரோ அதே வண்ணம் இந்த க்ஷேத்திரத்தில் சுயம்பு ஹனுமாராக காட்சி அளிக்கிறார். அவர் சுந்தரர் என்ற பெயருக்கு ஏற்ப்ப மிக அழகாக இருக்கிறார். மூர்த்தம் சுமார் நான்கு அடி இருக்கும். ஹனுமார் நேர் கொண்ட காருண்யமான பார்வையில் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்குகிறார். வடக்கு நோக்கியிருக்கும் இவர் பக்தர்களுக்கு எல்லா ஐஸ்வரியத்தையும் அளிக்க வல்லவர். வலது திருக்கரத்தில் கதையை வைத்திருக்கிறார். இடது திருக்கரத்தினை வலிமையான தொடையில் ஊன்றியிருக்கிறார். தலையில் முத்துகளால் ஆன மகுடம் அணிந்துள்ளார். ஶ்ரீஇராம பரிவாரத்தினையும் கர்ப்பகிரஹத்தில் தரிசனம் செய்யலாம்.

*அனுபவம்*
வாருங்கள் ஶ்ரீஜபாலிக்கு தர்மத்தின் உருவான ஶ்ரீஇராமரின் தரிசனத்தை செய்து வைத்த இந்த காருண்ய மூர்த்தி ஹனுமாரை தரிசித்து எல்லா ஐஸ்வரியத்தையும் அடைவோம்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

ராகு காலம்

ராகு காலம்!
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
எல்லாச் செயல்களையும் நல்ல நேரம் பார்த்தே செய்வார்கள். அப்போதுதான் நன்மைகளுடன் நல்வாழ்வு பிறக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக சித்தயோகம், அமிர்தயோகம் போன்றவற்றை நல்ல யோகமான நேரமாகச் சொல்வார்கள். “”பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என பழமொழி சொல்லி புதன்கிழமைகளில் நல்ல காரியங்களைச் செய்வார்கள். மங்கள வாரம், சுக்கிர வாரம்… இப்படி ஒரு கிழமைக்கும் ஒரு வாக்கு உண்டு!

 இப்படி எல்லா நேரத்தையும் புகழ்கிறவர்கள் ராகு காலத்தை நினைத்தால் பயப்படுவார்கள்!  ஆனால், உண்மையில் ராகு காலம்தான் சிறந்த பரிகார காலம். வருத்தப்படுபவர்களுக்கு வளம் தரும் கற்பக விருட்சமாகவும், இருட்டில் இருப்பவர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாகவும், துக்கத்தில் இருப்பவர்களுக்குத் துணையாகவும் இருப்பது இந்தக் காலம்தான்!

ராகு காலத்தின் பெருமையைப் புரிந்து கொள்பவர்கள் அறிவாளியாக இருந்தால், அந்தக் காலத்தைத் தனக்கு லாபம் தரும் விதத்தில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ராகு காலத்தை “அமிர்த காலம்’ என்று சொல்வார்கள். அமிர்தம் எப்படி அதை அருந்தியவர்களுக்குப் பூரண ஆயுளைத் தருகிறதோ, அதுபோல ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகள் புண்ணியத்தைப் பெருக்கிக் கொடுக்கின்றன. ராகுவைப் பற்றிய ஆன்மிகத் தகவல்களை நினைப்பதே புண்ணியம் என்று சொல்லப்படுகிறது.

ராகு காலத்தில் பூஜை செய்யலாமா? அதிலும் குறிப்பாக எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றலாமா? என்றெல்லாம் நிறையப் பேருக்குச் சந்தேகம் இருக்கும்.

 ஹோமங்கள் பற்றிய எல்லா விஷயங்களும் வேத நூல்களில் இருந்தாலும் பரிகார பூஜைகள் பற்றிய தகவல்கள் பழமையான ஜோதிட நூல்களிலேயே உள்ளன.

 ராகு காலத்தில் எல்லா பூஜைகளையும் செய்ய முடியாது. பரிகார பூஜைகளை மட்டும்தான் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். ராகுகாலம் சிறந்த பரிகார காலம் என்று அதில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு ராகு காலம் நல்ல நேரமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், கஷ்டத்தில் இருந்துகொண்டு பரிகாரம் தேட நினைப்பவர்களுக்கு ராகு காலம் மிக உகந்த நேரம்!

சத்ரு உபாதைகள் தீர்வதற்கு எலுமிச்சம்பழம் உகந்தது. துர்க்கைக்கு இந்தப் பழம் மிகவும் விசேஷமானது. துர்க்கைக்கு இதை மாலையாகவும் சாத்தலாம். எலுமிச்சம் பழத்தில் விளக்கு ஏற்றும் பழக்கமும் காலங்காலமாக இருக்கிறது. திருவாரூரில் ஸ்ரீதியாகராஜர் கோயிலினுள் இருக்கும் ராகுகால துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றும் பழக்கம் 1000 ஆண்டுகளாக இருந்து வருகிறது!

 ராகுவுக்கு உடலில் தான் விஷம். ஆனால் நாக்கில் அமிர்தம் இருக்கறது!


அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில்

கரூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் தான் தோன்றி மலை என்ற இடத்தில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குறிப்பாகச் சொல்லணும்னா, திருப்பதிக்கு சென்று தரிசிக்க முடியாதவங்க யாராக இருந்தாலும், இங்கு உள்ள, தான்தோன்றி மலையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்யலாம்.  இத் திருத்தலத்தை தென் திருப்பதி என்றும் சொல்லுவாங்க..

இவ


ர் திருப்பதி பெருமாளின் அண்ணா என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுருக்கேன்..

தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோயில், குடைவரைக் கோயில் என்றும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறப்படுகிறது..      

சோமசர்மா என்ற பக்தன், திருப்பதிக்கு சென்று போது பெருமாளை தரிசிக்க முடியலை. அதனால, மிகவும் மனம் வருந்தினான்.அப்போ,. அந்த சமயத்தில, பக்தனுக்காக திருப்பதி ஸ்ரீ்னிவாச பெருமாளே மனம் இரங்கி வந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.. பெருமாள் தானாக தோன்றியதால் இக்கோயில் “தான்தோன்றி மலை” என்ற பெயர் பெற்றது.

இந்தக் கோவிலோட சிறப்பு என்னவென்றால்,  பெருமாள் மேற்கு நோக்கி, பக்தர்களுக்காக கொஞ்சம்   தன் தலையத் தாழ்த்திக்கொண்டு தான் இருப்பார். இங்கு தாயாருக்கு என்று தனிச் சந்நிதி கிடையாது என்பதால வச்சத்ஸ்தலம் என்று சொல்லக்கூடிய ஸ்வாமியின் திருமார்பில் தாயார் வீற்றிருக்கிறார். மேலும் அதே கருவறையில் பெருமாள் உற்சவமூர்த்தியாக ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் காட்சித்தருகிறார். பிரகாரத்தில் பெருமாளுக்கு எதிரே உபய தெய்வமாக ஆஞ்சிநேயர், கருடாழ்வார், பகவத்ராமானுஜர் மற்றும் ஆழ்வார்களின் தரிசனத்தைப் பெறலாம்.  இங்கு பெருமாளுக்கு தீபாராதனை காண்பித்தவுடன், மஞ்சளும்,தீர்த்தமும் கொடுப்பார்கள். அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெருமாள் துளசி ப்ரியர்..

இங்கு கல்யாண உற்சவம் ஞாயிறு,திங்கள்,புதன்,வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் நடைபெறும். நமக்கு திருமணநாள், அல்லது பிறந்த நாளுக்கு ஒரே ஒரு முறை பைசா கட்டிவிட்டால், போதும். பிறகு நாம் எந்த அட்ரஸ் கொடுக்கின்றமோ, அந்த முகவரிக்கு ஒவ்வொரு வருடமும் நம் விசேஷ நாட்களை முன் கூட்டியே தபாலில் தெரிவித்து சீட்டு அனுப்புவார்கள். அன்றைய நாளில் நாம் போனால், அபிஷேகம் முடிந்து பிறகு ப்ரசாதம் தருவார்கள். அந்தச் சீட்டை நம் சார்பாக, நமக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து அனுப்பினாலும், ப்ரசாதம் தருவார்கள்...  

இங்கு காதுகுத்து, திருமணவைபோகம், எல்லாம் நிறைய நடக்கும்.. இக்கோவிலில் 3 ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. கீழே வீர ஆஞ்சநேயர், குகை ஆஞ்சநேயர் (👈எனக்குப் பிடித்தவர்) பெருமாள் அருகில் இருக்கும் வீர ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது.. 2 பக்கத்திலும் உள்ள படிக்கட்டு வழியாக  பெருமாளை தரிசிக்க செல்லலாம்..

மெயின் மண்டபத்தைத் தாண்டி, படியேறுவதற்கு முன் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருப்பார். அவ்வளவு சக்தி வாய்ந்தவர்.. எத்தனையோ பேரின் குறைகளை நிவர்த்தி செய்து இருக்கின்றார். நல்லபடியா, நாம வேண்டியது நிறைவேறினால், இவருக்கு 25 பைசா சூடம் ஏற்றுவார்கள். துளசி சார்த்துவார்கள்.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை அன்று சுற்றி உள்ள அனைத்து கிராமங்களில் இருந்தும், ஊர்களில் இருந்தும் மக்கள் விரதம் இருந்து, பெருமாளை தரிசிக்க வருவார்கள்.. பிறகு ஊரில் விளைந்த அரிசி,காய்கறி எல்லாம் மாட்டு வண்டியிலோ அல்லது காரிலோ எடுத்துக்கொண்டு வந்து, கோவிலை சுற்றி எங்கு இடம் இருக்கின்றதோ அங்கு சமைப்பார்கள். பிறகு “தாதன்” (பெருமாளின் அடியவர்) என்பவரை சாப்பிட முதல்ல அழைப்பார்கள்.. இவர்கள் நெற்றியில திருமண் நாமம் இட்டுருப்பார்கள். கையில் சங்கு வைத்துருப்பார்கள். பிறகு வட்டமாக இருக்கும் பெல்லில் ஓசை எழுப்புவார்கள்.  அதன் பிறகு அவர் சாப்பிட்டு முடித்தவுடன் தான் மத்தவங்க சாப்பிடுவாங்க...பொதுவாக சனிக்கிழமை மட்டும் தான் கூட்டம்  அதிகமாக இருக்கும். இப்ப புரட்டாசி மாசம்.. எல்லா நாளும் செம்மக் கூட்டமாகத் தான் இருக்கும்..

நான் இவ்வளவு காட்சிகளையும் கல்யாணத்துக்கு முன் அருகிலேயே பார்த்தவள்.

சனிக்கிழமைகளில் க்யூவில் சென்று, அர்ச்சனை செய்ய, முடி இறக்க டிக்கட் வாங்குவதற்கு,  கவுண்டர் உள்ளது.. மத்த நாட்களில் அவ்வளவாக கூட்டம் இருக்காது.. கோவிலுக்கு அருகிலேயே முடி இறக்க வசதி உள்ளது. நானும் பூ முடி கொடுத்து இருக்கேன். பெருமாள் சந்நிதிக்கு எதிரே தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டால், நம் கர்மவினைகள் சீக்கிரம் முடிவுக்கு வரும்னு ஐதீகம்...

இக்கோவிலை கிரிவலம் செய்ய, அதிகபட்ஷம் 30 நிமிஷம் மட்டுமே ஆகும். நான் பலமுறை பண்ணியிருக்கேன்.. கோவிலைச் சுற்றி நிறைய கல்யாண மண்டபங்கள் இருக்கு.. எந்தக் கட்சியாக இருந்தாலும் வேட்பு மனு தாக்கலுக்கு முன் இங்கு வந்து, பெருமாளை தரிசனம் பண்ணி விட்டுத் தான் செல்வார்கள்..

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோவில் கரூர், திண்டுக்கல் சாலையில் உள்ளது. கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசுத்துறை பஸ்கள், மினி பஸ்கள் நிறைய இருக்கிறது.  ஆட்டோவும் இருக்கின்றது.

என் அனுபவத்தில் என் தாந்தோணிமலைப் பெருமாள் ப்ரத்யக்‌ஷமான தெய்வம்.. ஒவ்வொருமுறை ஊருக்குச் செல்லும் போது, மறக்காமல் இவரைப் போய் பார்த்து, நமஸ்காரம் செய்துவிட்டுத் தான் வருவேன்..

 ஏடு கொண்டலவாடா, வெங்கட்ரமணா, கோவிந்தா, கோவிந்தா.. !!!

கங்கை பூமிக்கு வந்த வரலாறு

கங்கை பூமிக்கு வந்த வரலாறு



பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி, கங்கை பூமிக்கு வந்து பாதாளத்துக்கும் பாய்ந்து அவர்களை மோக்ஷம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக் கொண்டான்.*

கங்கை, “அப்பா, பகீரதா! உன் நோக்கம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றே! நானும் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்குவாளா? அவளால் இயலாது. நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்ய முடியுமா உன்னால்? அப்படி எனில் நான் வருகிறேன்.” என்று கூறினாள்.
பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும், பூமியின் மகா பராக்கிரம சாலிகளையும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான்.
ஆனால் கங்கையின் உண்மையான வேகம் அறிந்த அனைவரும் மறுத்தனர். பின்னர் மஹாவிஷ்ணுவை பகீரதன் வேண்ட, அவரோ, “இது ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெற்று அவர் மூலம் கங்கையை வரவழை.” என்று கூறிவிட்டார்.
பகீரதனும் ஈசனைக் குறித்துத் தவம் இருந்து வேண்ட, மனம் மகிழ்ந்த ஈசனும் அவனுக்குக் காட்சி அளித்தார். “பகீரதா, உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம்; உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும், உன் விடா முயற்சியையும் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கையை பூமிக்கும், பின்னர் பாதாளத்துக்கும் அழைத்து வர நான் உதவுகிறேன். எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன்.” என்றார்.
பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க, அவளும் மகிழ்வோடு வரச் சம்மதித்தாள். “ஹோ” வென்ற ஆரவாரமான சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்தாள் கங்கை.

ஈசன் தன் சடையை விரித்துப் பிடிக்க, கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. ஆஹா, நம் வேகம் என்ன? இந்த சடாபாரத்தின் பலம் என்ன?? இதனால் நம்மைத் தாங்க இயலுமா என்ன? என் ஆற்றலையும், வேகத்தையும் இந்தப் பிக்ஷாடனனால் தாங்க இயலுமா?” என யோசித்தாள்.
எல்லாம் வல்ல ஈசன் கங்கையின் மன ஓட்டம் புரிந்து கொண்டவராய், நதி ரூபத்தில் அவளுடைய நீரோட்டத்தைத் தன் சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார் சுருட்டி. திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவிக்க, பகீரதனோ கங்கையைக் காணாமல் கலக்கமடைய, ஈசனை நோக்கி மீண்டும் ஒற்றைக்காலில் தவமிருந்தான்.
அவன் முன் தோன்றிய ஈசன், கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு, கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட, கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான்.
வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் தன் நீர்க்கரங்களால் அந்த ஆசிரமத்தை முற்றிலும் உருட்டித் தள்ளிக்கொண்டு முனிவரையும் நீர்ப்பெருக்கோடு உருட்டித் தள்ள ஆயத்தமானாள்.
கோபம் கொண்ட முனிவர், கங்கையை அப்படியே தன் கைகளால் எடுத்து அள்ளிக் குடித்து ஆசமனம் செய்துவிட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் ஆற்றாமையையும், கங்கைக்காகத் தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான்.
அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்துச் சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் எலும்புகள் மற்றும் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.
சகரபுத்திரர்களுக்கு நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை பூமியில் பாய ஆரம்பித்ததாக ஐதீகம். இந்தக் கங்கையைத் தலையில் தாங்கிய ஈசனே கங்காதரர் எனப்பட்டார்.

சந்திராஷ்டமம் என்றால் என்ன ?

சந்திராஷ்டமம் என்றால் என்ன பண்ணும்? சந்திராஷ்டமம் நாளில் சங்கடம் தவிர்ப்பது எப்படி?




ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும், வார, ராசி, நட்சத்திர கோசார பலன்களையும், எந்த நேரத்தில் என்ன செய்யலாம்?

எந்தெந்த நேரங்களை தவிர்க்க வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழிகாட்டுகிறது.

அந்த வகையில் சந்திராஷ்டமம் என்ற அமைப்பு சந்திரனின் சுழற்சியால் ஏற்படுகிறது.

சந்திரன் ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாம் இடத்தில் வரும்போது சந்திராஷ்டமம் என்கிறோம்.

*🔯இது ஒருவருக்கு என்ன செய்யும் என்பதை காணலாம்.*

சந்திரனின் முக்கியத்துவம்
...
ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும்.

 ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும்.

சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம்.

 அதே நேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, ராகு-கேது இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை.

 இதில் இருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம்.

 சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் திருமண பொருத்தம் பார்க்கிறோம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.

சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோசார பலன்களை பார்க்கிறோம்.

 சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தில்தான் கோயிலில் அர்ச்சனை வழிபாடுகள் செய்கிறோம்.

சந்திரன் மூலம்தான் நம் ஜாதகத்தில் யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.

 இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெருக்கடியான, அவயோக, இடையூறு ஏற்படுகிறது.

 அதுதான் சந்திராஷ்டமம் ஆகும்.

நீங்கள் பிறந்த ராசிக்கு ஒவ்வொரு மாதமும், சந்திரன் எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தை கடந்து செல்லும்.

 இதையே சந்திராஷ்டமம் என்கிறோம்.
 சந்திரன்+அஷ்டமம்=சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் ‘சந்திராஷ்டம‘ காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம வேளையாகும்.

பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனசங்கடங்கள், மனச்சோர்வு, இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

 மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர்பார்வையாக தனம், வாக்கு, குடும்பம் எனும் இரண்டாம் இடத்தைப் பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புக்களும் பாதிப்படைகின்றன.

 ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்யமாட்டார்கள்.

 மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள்.

கிரகப்பிரவேசம், பால் காய்ச்சுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள்.

 முக்கிய பேச்சுவார்த்தைகளை தொடங்க மாட்டார்கள். பிரயாணங்கள் செய்வது, புதிய வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பதும் நலம் தரும்.

சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.

 எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன. டென்ஷன், கோபதாபங்கள், வாக்குவாதம், மறதி, படபடப்பு, சிடுசிடுப்பு உண்டாகிறது.

இதை நாம் அனுபவபூர்வமாக உணரலாம்.

 ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம் எண்ணங்களிலும், செயல்களிலும், கருத்துக்களிலும் நிதான மற்ற நிலை உண்டாகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும், உச்சம், ஆட்சி, நீச்சம் போன்ற அமைப்புக்களில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடுபலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

*🔯சந்திரன் இருக்கும் இடம்*

சந்திரன் தினக்கோள் ஆகும். வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும்.

இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது.

அதே நேரத்தில் லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோபதாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் என்று கலவையான பலன்கள் உண்டாகிறது.

நாம் பிறந்த ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை காணலாம்.

சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும் போது, மனம் அலைபாயும். சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

 வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நலம் தரும்.

இரண்டாம் ராசியில் இருக்கும் போது, பணவரவு உண்டு.

 பேச்சில் நளினமிருக்கும். வேகம், விவேகம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.

மூன்றாம் ராசி: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள், உற்சாகம்.
நான்காம் ராசி:பயணங்கள், மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம்.

ஐந்தாம் ராசி: நல்ல எண்ணங்கள், ஆன்மிக பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் உதவி.

ஆறாம் ராசி: எரிச்சல், டென்ஷன், கோபதாபங்கள், மறதி, வீண்செலவுகள், காயம் ஏற்படுதல்.

ஏழாம் ராசி: பயணங்கள், உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, பெண் சுகம்.

எட்டாம் ராசியில் இருக்கும் நாளைத் தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம்.

 இந்நாளில் மவுனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கோயில், குளம் என்று சென்று வரலாம். கொடுக்கல், வாங்கல், வீண் விவாதங்களை தவிர்ப்பது அவசியம்.

ஒன்பதாம் ராசி: காரிய வெற்றி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம், முக்கிய முடிவுகள்.

பத்தாம் ராசி: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் ராசி: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம்.
பனிரெண்டாம் ராசி: அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள்.

*உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது.*

அந்த குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும், கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

 உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அனுஷம் நட்சத்திரம் வரும் நாள் சந்திராஷ்டம
தினமாகும்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

*🔯பிறந்த நட்சத்திரம் - சந்திராஷ்டம நட்சத்திரம்*

அஸ்வினி - அனுஷம்
பரணி - கேட்டை
கிருத்திகை - மூலம்
ரோகிணி - பூராடம்
மிருகசீரிஷம் - உத்திராடம்
திருவாதிரை - திருவோணம்
புனர் பூசம் - அவிட்டம்
பூசம் - சதயம்
ஆயில்யம் - பூரட்டாதி
மகம் - உத்திரட்டாதி
பூரம் - ரேவதி
உத்திரம் - அஸ்வினி
அஸ்தம் - பரணி
சித்திரை - கிருத்திகை
சுவாதி - ரோகிணி
விசாகம் - மிருகசீரிஷம்
அனுஷம் - திருவாதிரை
கேட்டை - புனர்பூசம்
மூலம் - பூசம்
பூராடம் - ஆயில்யம்
உத்திராடம் - மகம்
திருவோணம் - பூரம்
அவிட்டம் - உத்திரம்
சதயம் - அஸ்தம்
பூரட்டாதி - சித்திரை
உத்திரட்டாதி - சுவாதி
ரேவதி - விசாகம்.
⚜⚜⚜⚜

நாரதரின் கர்வம்

நாரதரின் கர்வம்

ஒரு சமயம் நாரதர், சிவபெருமானை குறித்து வெகு காலம் தவம் புரிந்தார்.

நாரதரின் தவத்தைக் கலைத்து அவர்  நோக்கம் நிறைவேறத் தடை செய்ய விரும்பினான் இந்திரன். அழகில் சிறந்த அப்சரசுகளில் சிலரைத் தேர்ந்தெடுத்து நாரதரிடம் சென்று அவர் தவத்தைக் கலைக்குமாறு அனுப்பி வைத்தான்.தேவ மங்கையரும், நாரதர் தவம் செய்யுமிடத்தை அடைந்து அவர் முன்பு ஆடிப்பாடிப் பலவிதங்களிலும் அவர்  உள்ளத்தைத் தங்கள் பால் திருப்ப முயன்றனர். நாரதர் தம் உள்ளத்தில் பரமசிவனைத் தியானித்து ஒருமித்த சிந்தையுடன் தவம் செய்து வந்ததால் அவரிடம் அப்சரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை.

ஆடி ஆடி முடிவில் அவர்கள் களைத்துப் போய் இந்திரலோகம் திரும்பினர். நாரதரின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்து அவர் விரும்பிய வரத்தை அளித்தார். மகிழ்ச்சியோடு திரும்பிய நாரதர், தாம் தவத்தில் ஈடுபட்டிருக்கையில் இந்திரன் அப்சரசுகளை அனுப்பித் தவத்தைக் கலைக்குமாறு செய்த முயற்சி பலிக்காமல் போனதை நினைத்து கர்வம் கொண்டார்.  

தாம் காமனை வென்று விட்டதாக ஓர் எண்ணம் உண்டாயிற்று. பிரம்மலோகம் சென்ற நாரதர், இந்திரன் தம்மிடம் தோல்வியுற்றதைச் பிரம்மாவிடம் பெருமையாக எடுத்துச் சொல்லி, தாம் காமத்தை, ஜெயித்து விட்டதாகக் கூறினார். அதைக் கேட்ட பிரம்மன், நாரதரின் வெற்றிக்கு முக்கிய காரணம் சிவபெருமானின் அனுக்கிரகமே என்று கூறினார்.

நாரதர் அதை ஏற்கவில்லை.

அங்கிருந்து புறப்பட்டு நேராக வைகுந்தத்தை அடைந்தார். ஸ்ரீ விஷ்ணுபெருமானிடமும் அவர் தம் பெருமையைக் கூறிக் கொண்டார். மகா விஷ்ணுவும் பிரம்மதேவனைப் போலவே, ’சிவபெருமானின் அனுக்கிரகமே அப்சரசுகள் தோல்வியுற்றுத் திரும்பக் காரணம் என்பதை நாரதரிடம் எடுத்துக் கூறினார். நாரதரோ தம் சொந்த முயற்சியாலேயே காமத்தை வென்றதாகக் கூறினார். நாரதரின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் கர்வத்தை திருத்த விரும்பினார் மகாவிஷ்ணு. ஸ்ரீபுரத்தில் இருக்கும்
அம்பரீஷ சக்கரவர்த்தி தம் குமாரத்தி ஸ்ரீமதிக்கு விவாகம் செய்ய சுவயம் வரத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். மகா விஷ்ணு நாரதரைப் பார்த்து, நாரதா, உனக்கு விஷயம் தெரியுமா? ஸ்ரீபுரத்து அரசன் தன் குமாரத்திக்கு விவாகம் செய்ய ஏற்பாடுகள் செய்கிறானாமே?" என்று கேட்டார்.

நாரதருக்குப் பூலோகம் செல்ல விருப்பம் உண்டாகியது. நாராயணனிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட அவர், ஸ்ரீபுரத்திலுள்ள அரண்மனையை அடைந்தார். அரச குமாரத்தி ஸ்ரீமதியின் அழகு வடிவத்தைக் கண்டதும் அவர் உள்ளம் சலனம் கொண்டது. அரசகுமாரியைத் தாமே மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அரசனை அழைத்து அவன் குமாரத்தியைத் தமக்கு மணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்.

மகரிஷி, தங்களுக்கு என் பெண்ணைக் கொடுப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா? ஆனால்..." என்று இழுத்தான் அரசன்.

பின் ஏன் இந்தத் தயக்கம்!" என்று கேட்டார் நாரதர். என் குமாரத்தியோ ஹரியையே மணப்பேன் என்று பிடிவாதம் கொண்டிருக்கிறாளே!..."

அரசனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் நாரதரின் உற்சாகம் அடங்கி விட்டது. அடுத்த கணமே அவருக்கு ஓர் யோசனை தோன்றியது. ஸ்ரீமதியின் விருப்பத்தைக் கெடுப்பானேன். இதோ விரைவிலேயே வருகிறேன்" என்று சொல்லிவிட்டு வைகுந்தத்துக்கு ஓடினார் நாரதர்.

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த நாரதரைக் கண்டதும் நாரயணன் வியப்போடு, நாரதா, என்ன விஷயம்? ஏன் இந்தப் பரபரப்பு?" என்று கேட்டார். பிரபோ, எனக்கொரு வரம் தரவேண்டும். தாமதிக்கக் கூடாது?" என்று வேண்டினார் நாரதர்.

என்ன வரம் வேண்டும், நாரதா?" என்று ஒன்றுமே தெரியாதவர் போலக் கேட்டார் நாராயணன்.

பிரபோ, நான் நினைக்கும் நேரத்தில் யார் என்னைப் பார்த்தாலும் ஹரியின் முகமாக என் முகம் தோற்றம் அளிக்க வேண்டும்" என்று வேண்டினார் நாரதர். எதற்கு இந்த வரம்?..." என்று கேட்டார் நாராயணன்.

நின்று சொல்ல நேரமில்லை, பிரபோ. பூலோகத்திலே முக்கிய காரியம் ஒன்றிருக்கிறது. முடித்துக் கொண்டு வருகிறேன். வந்ததும் எல்லாவற்றையும் சாவகாசமாகச் சொல்கிறேன்"  என்று சொல்லி விட்டு ஓட்டமாக ஓடினார் நாரதர். பொங்கி எழுந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு போய் வா, நாரதா?" என்றார் நாராயணன்.

ஸ்ரீபுரத்தை அடைந்ததும் நாரதர் நேராக அரசனிடம் சென்றார். நாளைக்கே திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் உங்கள் மகள் கண்டிப்பாக சம்மதிப்பாள்" என்றார்.

அரசனோ தயங்கியபடி, வைகுந்தவாசனைத் தவிர வேறு எவரையும் மாலையிடுவதில்லை என ஸ்ரீமதி உறுதி கொண்டிருப்பதை நான் நன்கு அறிவேன் என்றார்.
கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்.
நாளை ஸ்ரீமதி எனக்குத் தான் மாலையிடுவாள் என்றார் நாரதர்.

அரசன் தன் மகளை அழைத்தார்.  அவளுடைய சம்மதம் பெற எண்ணினார். அவள் வரும் போது தம்முடைய முகம் ஹரியின் முகமாகத் தோன்ற வேண்டுமென நாரதர் வேண்டிக் கொள்ள, உள்ளே நுழைந்த ஸ்ரீமதியின் பார்வை நாரதர் பக்கம் திரும்பியது. அவள் அலறிக்கொண்டு தந்தையிடம் ஓடிவந்தாள். அப்பா, அவரைப் பாருங்கள்!..." என்று ஸ்ரீமதி, நாரதரின் பக்கம் கையைக் காட்டினாள்.

அனைவரின் பார்வையும் நாரதர் பக்கம் திரும்பியது. நாரதரின் முகம் குரங்கு முகமாகத் தோற்றமளிப்பதைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. மற்றவர்கள் சிரிப்பதற்கான காரணத்தை விளக்குமாறு அரசனைக் கேட்டார். மகரிஷி தங்கள் முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள். விஷயம் புரியும்" என்றான் அரசன்.

கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்க்கும் போது தான் நாரதருக்கு உண்மை வெளிப்பட்டது. ஹரி என்பதற்குக் குரங்கு என்றொரு பொருள் உண்டு.

ஹரியின் முகமாகத் தோன்றுவதற்கு பதிலாகக் குரங்கு முகமாகத் தோற்றமளிக்கச் செய்து நாராயணன் தம்மை ஏமாற்றி விட்டார் என்பதை அப்போது தான் உணர்ந்தார்.

நாராயணன் மீது அவருக்குச் சொல்ல முடியாத கோபம் உண்டாயிற்று. நேராக வைகுந்தத்துக்கு ஓடினார்.

அங்கே அவரைத் திடுக்கிட வைக்கக்கூடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது.

எந்த ஸ்ரீமதியை மணக்க விரும்பியிருந்தாரோ அவள் நாராயணன் மடிமீது மணக் கோலத்தோடு அமர்ந்திருக்கக் கண்டார். அவர் ஆத்திரம் பன்மடங்காகி விட்டது. பிரபோ, என்னை ஏமாற்றி விட்டீர்கள். அந்தப் பாபம் உம்மைச் சும்மா விடாது. நீங்களும் மனிதனாகப் பிறந்து உங்கள் மனைவியும் பிறன் ஒருவனால் தூக்கிச் செல்லப்பட்டு இழந்து வருந்துவீர்கள். உங்களுக்கு உதவ வானரங்களையே நாடுவீர்கள்" என்று சபித்தார்.

நாராயணன் புன்சிரிப்போடு நாரதரின் சாபத்தை ஏற்றுக் கொண்டு, நாரதா, பூலோகத்தில் என் காரியம் நிறைவேற உன் சாபம் தேவை. அதிருக்கட்டும், முற்றும் துறந்த முனிவனான உனக்கு ஏன் திருமணத்தில் விருப்பம் ஏற்பட்டது? காமத்தை ஜெயித்த நீயா இவ்விதம் அடிமையாக நிற்பது?" என்று கேட்டார். அப்போது தான் இது நாராயணன் திருவிளையாடல் என்பதை உணர்ந்த நாரதர் தம் தவறுக்கு வருந்தி ஸ்ரீ பெரிய பெருமாளை சரணடைந்தார்.


 

ஏழுமலையான் புராணம் பகுதி ஒன்று

ஏழுமலையான் புராணம்
புரட்டாசி மாத பிரசாதம் பகுதி - 1

 பாரதத்தில் நைமிசாரண்யம் என்ற காடு இருக்கிறது. நமது தேசத்தின் கிழக்குப்பகுதியில் கோல் கட்டாவுக்கும், டேராடூனுக்கும் இடையில் உள்ளது இந்தக் காடு. தற்காலத்தில் பெருமாளின் 108 திவ்யதேசங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த தேசங்களில் இதுவும் ஒன்று. இந்த காட்டையே பெருமாளாக கருதி வழிபடுகிறார்கள். திருமங்கையாழ்வார் இங்கே சென்றிருக்கிறார். இவ்வூர் பற்றி பாசுரம் பாடியுள்ளார். தற்போது இங்கே பெருமாளுக்கு கோயில் இருக்கிறது. இந்த வனத்துக்கு புராணங்களில் மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எவ்வித இடைஞ்சலும் இன்றி தவம் செய்ய சிறந்த இடம் எது என்று திருமாலிடம் முனிவர்கள் கேட்டனர். பெருமாள் தனது சக்கரத்தை உருட்டி விட்டு, இது எங்கே போய் நிற்கிறதோ அந்த இடமே சிறந்த இடம் என்றார். சக்கரத்துக்கு நேமி என்ற பெயர். ஆரண்யம் என்றால் காடு. அந்தச்சக்கரம் உருண்டு சென்று விழுந்த இடம் நேமிஆரண்யம் என்றானது. பின்னர் இதுவே நைமிசாரண்யம் ஆகி விட்டது.


இந்தக் காட்டில் சூதர் என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார். ஒருமுறை, நைமிசாரண்யத்து முனிவர்கள் சூதமுனிவரை அணுகி, சுவாமி! தாங்கள் எங்களுக்கு, வேங்கடம் என்னும் மலையில் குடிகொண்டுள்ள சீனிவாசனின் வரலாறை உரைக்க வேண்டும், என்றனர். சூதருக்கு மிகுந்த மகிழ்ச்சி. சீனிவாசனின் கதையைக் கேட்டால் சகல பாவங்களும் நீங்கி விடும். நீங்கள் சரியானதொரு சந்தர்ப்பத்தை எனக்கும் தந்ததுடன், உங்களுக்கும் முக்தி கிடைக்கும். பக்தியுடனும், கவனமாகவும் யார் இதைக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறப்பில்லை. நீங்கள் முற்றும் துறந்த முனிவர்கள். உலகவாழ்வு பற்றிய கவலை இல்லாதவர்கள். எனவே, உங்கள் கவனம் சிதற வாய்ப்பில்லை. இல்லறத்தில் இருப்பவர்களும் கூட, இந்தக் கதையைக் கவனமாக கேட்டால் போதும். அவர்களுக்கு செல்வவளம் சித்திக்கும், வாழ்வுக்குப் பின் ஆனந்தமயமான வைகுண்டத்துக்கும் செல்லும் பாக்கியம் பெறுவார்கள், என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தார். இந்த உலகிற்கு சீனிவாசன் வருவதற்கு காரணமே நாரத முனிவர் தான். இவர் ஓரிடத்தில் இருக்கமாட்டார். நாரம் என்றால் தண்ணீர். ஆம்... பசியாலும், களைப்பாலும் மயக்கமடையும் ஒருவனுக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்தால் போதும். போகும் உயிர் திரும்பி விடும். நாரதரும் அப்படியே. கலகங்கள் செய்தாவது உயிர்களுக்கு நன்மை தந்து விடுபவர். அதனால் தான் தண்ணீர் போல் உயிரூட்டுபவர் என்ற பெயரில் அவரது திருநாமம் அமைந்தது. தேவர்களின் நல்வாழ்வுக்காக, அசுரர்களிடையே கலகத்தை உருவாக்கி அல்லது அவர்களை இக்கட்டில் சிக்க வைக்கும் உபாயங்களை சமயோசிதமாகச் செய்யும் தைரியசாலியும் கூட. பிரம்மனின் புத்திரர் இவர். எந்நேரமும் நாராயண மந்திரத்தைச் சொல்பவர். அவர் ஒருநாள் தன் தந்தையைக் காண பிரம்மலோகம் வந்தார். அப்போது, இந்திரனின் தலைமையில் தேவர்களும் தங்கள் குறைகளைச் சொல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால், சரஸ்வதியின் வீணாகானம் கேட்ட அவர்கள் மெய்மறந்து நின்றனர். நாரதர் பிரம்மாவிடம், தந்தையே! திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த பிறகு பூமியில் மீண்டும் பிறக்கவில்லை. இதனால் பாவிகள் உலகத்தில் அதிகரித்து விட்டனர். இதற்கு மூல காரணம் செல்வம் சேர்க்கும் ஆசை. செல்வ ஆசை மண்ணாசையையும், பெண்ணாசையையும் தூண்டுகிறது. உலக மக்களில் நல்லவர்களைக் காப்பாற்றவும், பாவிகளைச் சீர்திருத்தவும் மீண்டும் அவர் அவதாரம் எடுத்தால் தான் பூலோகம் பிழைக்கும். எனவே, திருமாலை இவ்வுலகில் பிறக்கச் செய்வதற்குரிய கோரிக்கையை தாங்கள் தான் அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். படைத்தவருக்கு, உயிர்களைப் பாதுகாப்பதிலும் பொறுப்பு இருக்கிறதல்லவா? என்றார். பிரம்மா நாரதரிடம், மகனே! நீ கலகக்காரன் என்பது ஊரறிந்த உண்மை. இன்று தந்தையிடமே கலகம் செய்ய வந்திருக்கிறாய் போலும்! நீ சகல லோகங்களிலும் சஞ்சரிப்பவன். சகல சக்திகளையும் தவத்தின் மூலம் பெற்றுள்ளாய். நீ நினைத்தாலே சகலமும் நடந்து முடிந்து விடும். நாராயணனின் திருப்பாற்கடல் முன்னால் நாங்கள் செல்ல முடியாது. ஜெய, விஜயர்கள் தடுத்து விடுவார்கள். பகவானின் அனுமதி பெற்று கரையில் நின்றே அவரைத் தரிசிக்க முடியும். நீ அப்படியா? அவரது திருவடி தரிசனத்தை கடலில் நின்றே காண்பவன் நீ.மேலும், உன் வாயில் நாராயண நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும். சக்திமிக்க உன்னாலேயே அது முடியுமே! நீயே போய் நாராயணனைப் பார், என்றார். ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும் முன்பு, பிறர் சொன்னதை வைத்து சொல்லக்கூடாது. அதில் முன்பின்னாக விஷயங்கள் இருக்கும். நேரில் போய் பார்த்து கேட்டறிந்தால் சரியான தகவல்களைப் பெறலாம். நாராயணனிடம் புகார் சொல்லும் முன்பு, பூலோகத்தின் நிலைமையை நேரில் கண்டறியவும், நாராயணன் அங்கு பிறப்பதற்கு ஏற்ற இடத்தையும், அவரைப் பிறக்கப்போவதை முன்கூட்டியே முனிவர்களுக்கு அறிவிக்கவும் நாரதர் பூலோகம் வந்து சேர்ந்தார்.எத்தனையோ லோகங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், இந்த உலகத்தின் பெயரில் தான் பூ இருக்கிறது. பூ மணக்கும் தன்மையும், வாடும் தன்மையும் உடையது. மலர்ந்த பூவைக் காணும் போது, மனம் மகிழ்கிறது. இதுபோல், நல்லவர்கள் பலர் தங்கள் செயல்பாடுகளால் இவ்வுலகை மகிழச் செய்கிறார்கள். ஆனால், இதே உலகில் பிறந்த வேறுசிலரோ, தங்கள் செயல்பாடுகளால் உலகை வாடச் செய்கிறார்கள். கெட்டவர்கள் செய்யும் கைங் கர்யத்தால் உலகமே வாடத்தானே செய்கிறது! இதனால், இந்த உலகை பூலோகம் என்றார்கள். இத்தகைய அருமை யான உலகத்தை வாழச்செய்ய வந்தார் நாரதர். மற்ற தேவர்கள் இங்கு வந்திருக்கலாமே. அவர்கள் பூமிக்கு வராமல் இவர் இங்கு வந்த காரணம் என்ன. தொடரும்....‌!

சரவணபவ பற்றிய தகவல்கள்

சரவணபவ பற்றிய தகவல்கள்



முருகன் இரண்டு வடிவங்களில் நமக்கு காட்சியளிக்கிறார்.

1. ஒருமுகம்

2. சண்முகம் (6 முகம்)

 இதில் ஒருமுகம் கொண்டவர் சுப்ரமணிய சுவாமி ஆவார். இவர் வள்ளி தெய்வானையுடன் ஒருமுகத்தோடு அருள்பாலிக்கிறார். அதனுடைய அட்சரம்தான் சரவணபவ என்பதாகும். அதேப்போல் ஆறுமுகம் கொண்டவரை சண்முகம் என்று சொல்வார்கள். இந்த ஆறுமுகம் கொண்ட கடவுளின் அட்சரம் சரவணபவ, ரவணபவச, வசரவணபவ, ணவபசரவ, பவசரவண, வசரவணப இதையே சண்முகம் என்று சொல்வார்கள்.

இந்த_சண்முகநாதரை_எதற்காக
 வழிபடலாம்?

 வெற்றி, வீரம், பராக்கிரமம் ஜாதகத்தில் 6ம் இடத்தை சரி செய்து கொள்வதற்கு இந்த சண்முக கடவுளை வழிபடுவது உத்தமம் ஆகும். இந்த சண்முகக் கடவுளுக்கு ஒரு சக்கரம் உள்ளது. இது 36 அட்சரங்களைக் கொண்டதாகும். ஏனெனில் முருகனின் பெயரை சடாட்சரன் என்றுதான் சொல்வார்கள். அட்சரம் என்றால் எழுத்து. ஆறு அட்சரங்களுக்கு உரியவரே முருகன்.

 இந்த அட்சரங்களில் 36 உரு கொண்ட எந்திரங்கள் எங்கிருக்கிறது என்றால் இரண்டு கோவில்களில் உண்டு. அதில் ஒரு கோவில் திருப்போரூர். இது முருகன் போர் புரிந்த தலமாகும். இந்த தலத்திலே முருகனுக்கு தனிப்பட்ட முறையில் சக்கரம் ஒன்று உள்ளது. எதிரிகள் தொல்லை மற்றும் நோய் நொடிகளில் இருந்து விடுபட சக்கரத்திற்கு நீங்கள் அபிஷேகம் செய்து பலன் பெறலாம்.

 அதேப்போல் மற்றொரு கோவில் மதுராந்தகம் பக்கம் பெரும்பேர் கண்டிகை என்ற ஊர். அந்த ஊரில் சிறிய குன்று இருக்கும். அதன்மேல் முருகன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதன் தலவிருட்சம் ருத்ராட்சம் ஆகும்.

 இந்த ஆறுமுகக் கடவுளுக்கு எதிரிகளை வீழ்த்தவும், செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகவும், ஜாதக தோஷம் நீங்கவும், உடல் ஆரோக்கியம் பெறுவதற்கும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம். இந்த ஹோமத்தில் மலர்கள் ஆறு, தருக்கள் ஆறு, விதைகள் ஆறு போன்ற பொருட்கள் எண்ணிக்கை ஆறு கொண்டதாகப் பயன்படுத்தப்படுகிறது. இதையே கந்தசஷ்டி கவசத்தில்

'ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்"

 இதன் அர்த்தம் 36 உரு என்று சொல்லுவது 36 தடவை கந்தசஷ்டி கவசத்தை சொல்ல வேண்டும் என்பது அர்த்தம் கிடையாது. 36 அட்சரங்களை ஜெபித்துவிட்டு, கந்தசஷ்டி கவசத்தை ஜெபித்தால் கவசத்தின் முழுபலன் கிடைக்கும் என்பதுதான் இதனுடைய அர்த்தம்.

 முருகனுக்கு உகந்த சஷ்டி திதியன்று இந்த ஹோமத்தை செய்தால் மிகப்பெரிய பலன், குழந்தைப்பேறு, அறிவுக்கூர்மை, நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்வு, மனோபலம், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுதலை, ஆயுள் ஆரோக்கியம் அனைத்துமே கிடைக்கும். கடன் தொல்லை, நோய் தொல்லை குறைவதற்கு தேய்பிறை சஷ்டி திதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேப்போல் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம்...
ௐ முருகா சரணம்…!!!

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களும் - பலன்களும்

ராமேசுவரத்தில் உள்ள தீர்த்தங்களும் - பலன்களும்




ராமேசுவரம் ராமநாதர் கோவில் அமைந்துள்ள தீர்த்தக் கடலில் நீராடுவதும் சிறப்புக்குரியது. இந்தக்கோவிலின் உள்ளே 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. கோவிலின் உள்ளே அமைந்த தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாக அமைந்தவை. ‘அக்னி தீர்த்தம்’ என்று கூறப்படும் ராமேஸ்வரம் கடலில்தான், தீர்த்தமாடுவதை தொடங்க வேண்டும். பின்னர் கோவிலில் உள்ள மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். மற்ற தீர்த்தங்களும், அதன் பலன்களும் வருமாறு:-

தீர்த்தங்களும்.. பலன்களும்..

மகாலட்சுமி தீர்த்தம் - செல்வ வளம் பெருகும்.

சாவித்திரி தீர்த்தம் - பேச்சுத் திறன் வளரும்.

காயத்ரி தீர்த்தம் - உலக நன்மை உண்டாகும்.

சரஸ்வதி தீர்த்தம் - கல்வியில் உயர்வு தரும்.

சங்கு தீர்த்தம் - வசதியான வாழ்வு அமையும்.

சக்கர தீர்த்தம் - மன உறுதி கிடைக்கும்.

சேதுமாதவ தீர்த்தம் - தடைபட்ட பணிகள் தொடரும்.

நள தீர்த்தம் - தடைகள் அகலும்.

நீல தீர்த்தம் - எதிரிகள் விலகுவர்.

கவய தீர்த்தம் - பகை மறையும்.

கவாட்ச தீர்த்தம் - கவலை நீங்கும்.

கந்தமாதன தீர்த்தம் - எத்துறையிலும் வல்லுநர் ஆகலாம்.

பிரம்மஹத்தி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

கங்கா தீர்த்தம் - பாவங்கள் அகலும்.

யமுனை தீர்த்தம் - பதவி வந்து சேரும்.

கயா தீர்த்தம் - முன்னோர் ஆசி கிடைக்கும்.

சர்வ தீர்த்தம் - முன்பிறவி பாவம் விலகும்.

சிவ தீர்த்தம் - சகல பிணிகளும் நீங்கும்.

சத்யாமிர்த தீர்த்தம் - ஆயுள் விருத்தியாகும்.

சந்திர தீர்த்தம் - கலை ஆர்வம் பெருகும்.

சூரிய தீர்த்தம் - முதன்மை ஸ்தானம் கிடைக்கும்.

கோடி தீர்த்தம் - முக்தி அடையலாம்.