செவ்வாய், 17 செப்டம்பர், 2019

ॐ சிதம்பர ரகசியம் பகுதி :36 ॐ
ஆடுகிற ஆட்டம் என்ன சொல்வேன்?

சிதம்பரம் கோவிலில் கம்பரின் "ராமாயணம்" அரங்கேற்றம் நடந்தது என எனக்குக் கிடைத்துள்ள தீட்சிதரின் குறிப்புக்களில் இருந்து எழுதி உள்ளேன். ஆனால் அதை மறுத்தும் ஒருவர் எழுதி உள்ளார். அவர் ஸ்ரீரங்கம் தான் "கம்ப ராமாயணம்" அரங்கேற்றம் நடந்த இடம் என எழுதி உள்ளார். பள்ளி நாட்களில் நான் படித்ததும் அவ்வாறுதான் என்றாலும் இது பற்றியும் தேடிக் கொண்டு போகக் கிடைத்தது ஒரு சுவையான சர்ச்சைக்கு உரிய கட்டுரை! ரசிகமணி திரு டி.கே.சி. அவர்கள் பழைய மணிக்கொடி இதழ்களில் எழுதிய ஒரு கட்டுரை! "கம்பனின் மாண்பு" என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் அவர் இந்தக் கம்ப ராமாயணம் "திருவெண்ணெய் நல்லூரில்" அரங்கேறியதாய்க் குறிப்பிடுவதோடு கம்பனின் காலமும் கி.பி. 8-ம் நூற்றாண்டு எனக் கூறுகிறார். சரித்திர ஆசிரியர்கள் கூறும் 11 அல்லது 12-ம் நூற்றாண்டில் கம்பன் பிறந்திருக்க முடியாது எனக் கூறுகிறார்.
தீட்சிதர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததும் பார்க்கலாம். இப்போது நடராஜரின் நாட்டியத்தைப் பற்றிச் சற்று பார்ப்போம். இந்த உலகம் இயங்குவதற்கே காரணம் நடராஜர் தான். ஒவ்வொரு அணுவின் இயக்கத்திலும் புல், பூண்டு, செடி, கொடிகள், மரங்கள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், அருவிகள்,குன்றுகள், தடாகங்கள்,மிருகங்கள், மனிதர்கள், பூக்கள், காய்கள், பழங்கள், பறவைகள், பறக்கின்றன, ஊர்கின்றன இவற்றின் அசைவுகள் வண்ணச் சேர்க்கை எல்லாவற்றையுமே இயற்கை என்று சொல்லிவிட்டுப் போகலாம்தான். ஆனால் இயற்கை இந்த வண்ணக்கலவையைக் கொண்டு வந்தது எப்படி? பூவில் மகரந்தச் சேர்க்கை எந்த நியதிப்படி ஏற்படுகிறது? அனைத்துக்கும் காரணம் இந்த இடை விடாத நிற்கவே நிற்காத பரம்பொருளின் ஆட்டம் தான். ஆனந்த நடராஜன் ஆனந்த தாண்டவம் ஆடும் வேளையில் வசந்தம் வந்து மெல்லக் கதவைத் தட்டுகிறது பூக்கள் மலர்கின்றன வண்டுகள் ரீங்காரமிடுகின்றன. புள்ளினங்கள் ஆர்க்கின்றன மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. அவனின் தாண்டவம் ருத்ர தாண்டவம் என்றால் அதற்குத் தகுந்தாற் போல் புயல் அடிக்கிறது பெருமழை பொழிகிறது இடி இடிக்கின்றது மின்னல் கண்ணைப் பறிக்கிறது கோபம் எல்லை மீறினால் சுனாமியும் வந்து விடுகிறது. விஞ்ஞான பூர்வமாக பூகம்பம் ஏற்படுவதால் நிகழும் நிகழ்வுகள் இவை என்று சொன்னாலும் இந்த நிகழ்வுகள் ஏற்பட்க்காரணம் என்ன? எல்லை அற்றப் பரம்பொருளின் இடைவிடாத ஆட்டத்தை "சதாதாண்டவம்" என்று சொல்கின்றனர். அதனாலேயே அந்த ஆடுபவனுக்கும் "சபாபதி" "சபாநாயகன்" "நடராஜராஜா" என்றெல்லாம பெயர்கள் உண்டு. இதை "நடாந்த தாண்டவம்" எனவும் சொல்கின்றனர். முடிவில்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் ஆட்டம் என அர்த்தம் இதற்கு. சிவனின் நாட்டியக் கோலங்கள் பலவகைப்பட்டது. அதில் இந்த ஆனந்தத் தாண்டவம் முதல் வகையாக்வும் சிதம்பரத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் காட்சியாகவும் உள்ளது.

பரத முனிவர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரத்தின் படி சிவனின் நாட்டிய வகைகள் 7 முக்கியமான பகுதிகளாய்ப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை :1.ஆனந்த தாண்டவம் - சிதம்பரம், பொன்னம்பலம்
2.சந்தியா தாண்டவம் - மதுரை, வெள்ளி அம்பலம்
3.உமா தாண்டவம் -
4.கெளரி தாண்டவம் - மயூர நாதர் கோவில், மாயூரம், திருப்பத்தூர்,
5.காளிகா தாண்டவம் - ரத்தின சபை - திருவாலங்காடு
6.திரிபுர தாண்டவம் - சித்திர சபை - திருக்குற்றாலம்
7.ஊர்த்துவ தாண்டவம்- சிதம்பரம், திருவாலங்காடு, காஞ்சி, திருசெங்காட்டாங்குடி, தென்காசி, தாராமங்கலம். இது தவிர பிரளய காலத்தில் ஆடப்படும் சம்ஹார தாண்டவமும் சொல்லப் படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
பசு (கோமாதா)

மேற்கத்திய வரலாற்று இயல் காலத்துக்கும் முன்பிருந்தே சனாதன தர்மம் என்ற இந்துமதம் எல்லாம் இறை மயம் என்றும் தத்வமசி அதாவது நீயும் பரம் பொருளே என்றும் அத்வைதம் எல்லாம் ஒன்றே அதாவது, பரம் பொருளின்றி வேறொன்றும் இல்லை என்றும் காண்பவை எல்லாம் கடவுளின் எண்ணற்ற தோற்றங்களே என்றும் கூறி வந்திருக்கின்றது. இந்நிலையில் மிருக இனங்களில், பசுவையும், யானையையும், ஊர்வனவற்றில் நாகப் பாம்பையும், தாவர இனத்தில் அரசு, வேம்பு போன்ற சிலவற்றை மட்டும், மிகச் சிறப்புடையதாக, நம்மிலும் மேலாக, தெய்வங்களாக தொன்று தொட்டு வழிபட்டு வருவதும் அவ்வழக்கத்தை தொடர்ந்திட வேண்டும் என்று கூறுவதும். பாரபட்சமற்ற செயல் தானா? நியாயமான பரிந்துரை தானா?

இந்துக்கள் பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனரே தவிர பிறவற்றை இழிவு படுத்தவுமில்லை அழிக்கச் சொல்லவுமில்லை. எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என்றுமே இந்துக்கள் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவதும் ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவதும். புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பதும் அன்றாடம், பகலில், காக்கைக்கு  உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. இதோடு சிற்றினங்களை நமக்குச் சமமாக மட்டுமின்றி மேலானவையாகவும் நாம் கருத வேண்டும் என்பதற்காக பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன.

விநாயகன் யானைத்தலையன், அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சுறு, தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில், தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம், மாமன் திருமால் படுப்பது பாம்பணையில், அவன் ஏறும் வாகனம் கருடன், எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும் தர்மதேவன் வருவது எருமையின் மீது சனீஸ்வரனை சுமப்பது காகம் இப்படி நூற்றக் கணக்காக பட்டியலிடலாம். மேலும் பல இனங்களின் நிலையை ஆய்ந்து சிலவற்றை உதாரணமாக பூரான், தாய்க்கு ஒரு பிள்ளை என்பதற்காக கொல்லப்படக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது.

கோமாதா பின் தொடர்வாள் பகுதி இரண்டு
11: நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!

         11: ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                   (கி.பி.127-172 வரை)
காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர். ஸ்ரீ சிவானந்த சித்கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கன்னட அந்தண மரபினர். தந்தையின் பெயர்'உஜ்வல பட்டர்' பெற்றோர் இவருக்கு வைத்த நாமதேயம்'ஈச்வர வடு'.சிவ அத்வைத நெறியில் மிகவும் ஈடுபாடு கொண்ட இவர் கி.பி.172 - ல் விரோதி கிருது ஆண்டு,சித்திரை மாதம்,சுக்ல பக்ஷ தசமியில் விருத்தாசலத்தில் சித்தியடைந்தார்.
வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான். அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால் அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான். ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.

பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார். அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார். அந்தணர் காசிக்குச் சென்று திரும்பி வரும் வழியில் உயிர் துறந்தார்.

மூன்று பொருட்களையும் தானஞ் செய்த சக்கிலியன் வீட்டில் மகனாகப் பிறந்தார். சக்கிலியன் தனக்கு மகப்பேறு உண்டானது கண்டு மகிழ்ந்தான். குழந்தை பிறந்து பேச ஆரம்பித்த பருவத்தில் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்தது. அது கண்டு பெற்றோர்கள் கவலைப் பட்டனர். குழந்தை ஞான நெறிக்கேற்ப வளர்ந்து பதினாறு வயது அடைந்தது.

காசி அருகிலுள்ள ஊரில் கள்வர்கள் பயம் அதிகமாக இருந்தது. மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை.அவ்வூர் அரசனிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். அரசன், நாள் தோறும், தினம் ஒருவராக ஊர் சுற்றி வந்து நான்கு ஜாமங்களும் பறை கொட்டி வரும்படி ஆணை பிறப்பித்தார். அவ்வாறே மக்களும் வீட்டிற்கு ஒருவராகப் பறை கொட்டி வந்தனர்.

ஒரு நாள் சக்கிலியன் முறை வந்தது. அன்று அவன் முக்கியமாக வெளியில் செல்ல நேர்ந்தது. மனைவியிடம் ஊமை மகனை பறை அடிக்க அனுப்பும் படிச் சொல்லி விட்டுச் சென்றான். அன்றிரவு தாய் மகனை அழைத்தாள். அவன் கையில் பறையைக் கொடுத்து சாம சாமத்திற்கு அடிக்கும் படி ஜாடை காட்டினாள். ஊமைச் சிறுவன் பறையை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்து அடித்துக் கொண்டே சென்றான்.

பிறந்தது முதல் பதினாறு பிராயம் வரையிலும் பேசாமல் இருந்தவன் முதல் ஜாமம் முடிந்ததும் பறையை நிறுத்தி வடமொழியில் ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான். அந் நாட்டு அரசன் அதைக் கூர்ந்து கேட்டார். இவ்வாறு சிறுவன் நான்கு ஜாமங்களுக்கும் பறை கொட்டி நான்கு ஸ்லோகங்கள் சொல்லி முடித்தான்.

பொழுது புலர்ந்தது. வீட்டிற்குச் சென்றான். பறையை வைத்தான். பழைய படி மௌனமாயிருந்தான். அன்றிரவு முழுவதும் விழித்திருந்து அச் ஸ்லோகங்களைக் கேட்ட அரசன், அவைகளின் பொருளை ஆராய ஆவல் கொண்டான்.

விடிந்ததும் தந்தை [சக்கிலியன்] வீட்டிற்கு வந்தான். மகன் தன் கடமையை ஆற்றினானா என்பதைப் பற்றி மனைவியிடம் விசாரித்தான்.

அரசனும் காலையில் அரசவைக்கு வந்தார். மந்திரியிடம் நேற்றிரவு பறை கொட்டியவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார். அவர்கள் சேவகர்களுக்குக் கட்டளையிட்டனர். அவர்கள் சேரியில் சென்று சக்கிலியனை அழைத்து அரசர் முன் நிறுத்தினர்.

சக்கிலியன் அரசரைக் கண்டு நடுக்கமடைந்தான். அரசன் சக்கிலியனை ஆசனத்தில் அமரச் செய்து, “நேற்றிரவு பறை கொட்டும் போது நான்கு ஜாமத்திற்கும் நான்கு ஸ்லோகங்கள் சொன்னீர்களே அதன் பொருள் என்ன?” என ஆவலுடன் கேட்டார். சக்கிலியன் வியப்புடன், “அரசே! நேற்றிரவு பறை கொட்டியவன் என் மகன் அவன் பேச மாட்டான் ஊமையன்!” என்றான்.

உடனே அரசன் அச் சிறுவனை அழைத்து வரும் படிச் சொல்லச் சேவகர்கள் அவனை அழைத்து வந்தனர். அரசனது மனம் பக்குவம் பெற்றிருந்தது.

சக்கிலியன் மகனைக் கண்ட அரசன் தம் சிம்மாசனம் விட்டிறங்கினார். அச்சிறுவனை எதிர் கொண்டு அழைத்தார். ஆசனத்தில் அமரும் படி பணிவுடன் சொன்னார். இக் காட்சியைக் கண்ட அனைவரும் பிரமித்தனர். அரசர் சிறுவனை உணர்ந்தார். அவனது உள்ளக் கிடக்கையை அறிய அவாக் கொண்டு நேற்றிரவு நான்கு ஜாமங்களிலும் சொன்ன ஸ்லோகங்களின் பொருளை விளக்கும் படி வேண்டினன்.

சிறூவன் முதல் ஸ்லோகத்தைச் சொல்லி விளக்கம் செய்தனன்

“காம; குரோதச்ச லோபச்ச தேஹே நிஷ்டந்தி
தஸ்கரா;
ஞான ரத்நாப ஹாராய தஸ்மாத் ஜாக்ரத
ஜாக்ரதா!”

சரீரத்தில் மதிப்பிடற்கரிய ரத்தினம் போன்ற மணிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. காமம், குரோதம், லோபம் ஆகிய திருடர்கள் ஞானமாகிய ரத்தினத்தை அபகரிக்கும் பொருட்டு சரீரத்தில் வசிக்கிறார்கள். ஆகையால் எச்சரிக்கையாக இருங்கள்.

சிறுவன் ஞான நெறியில் ஈடுபட்டு அந்தரங்கத்திலுள்ள ஆன்மாவை அறிந்தவன். அவ் ஆன்மாவைக் கொண்டு பரமாத்மா தரிசனம் காண முயற்சிப்பவன். ஆதலால் அவன் பார்வையும், சொற்களும் மன்னன் மதிக்கும் நிலையில் இருந்தது. மன்னன் மேலும் கேட்க அவாக் கொண்டான்.

சிறுவன் இரண்டாம் ஸ்லோகம் சொல்லி பொருள் கூறினன்

“ஜன்மதுக்கம் ஜராதுக்கம் ஜாயாதுக்கம் புந;புந:
சம்ஸார ஸாகரதுக்கம் தஸ்மாத் ஜாக்ரதா:
ஜாக்ரதா”

“பிறத்தல் மிகவும் துன்பம். பின்பு விருத்த பருவம் பெருந்துன்பம். இதனிடையில் வாலிப காலங்களில் மாதரின் மோகத்தால் அடிக்கடி உண்டாகும் துன்பங்கள் மிகப் பெரியதாகும். இவையன்றி ஜனன, மரண சம்சாரமாகிய சமுத்திரத்தில் படும் துயரம் அளவிறந்தனவாம். ஆகையால் ஆன்மாக்களே ஜாக்கிரதையாக இருங்கள்”

இரண்டாம் ஸ்லோகத்தின் மூலம் சம்சார சாகரம் தீராத துக்கம் என்றும் இதனின்று விலக அறிவு தனித்திருக்க வேண்டும் என்றும் தெளிந்தார் மன்னர். சிறுவன் சொன்ன மொழிகளைக் உபதேசமாகக் கொண்டு வாழ்நாளில் அடைய வேண்டிய மெய்ப் பொருளை அடைய ஆவல் கொண்டு அடுத்த ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்டினார்.

“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”

“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும் பொருள்களும் அநித்தியம். தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம். ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!!

அரசன் சிறுவன் சொன்ன அறிவுரைகளைக் கேட்டு ஆனந்தம் அடைந்தார். நான்காம் ஸ்லோகத்தின் பொருளைக் கூறும் படி வேண்ட, அவ்வாறே சிறுவன் கூறினன்.

“ஆயசா பத்தே லோகே கர்மணா பஹு
சிந்தையா
ஆயுக்ஷீணம் நஜாநாதி தஸ்மாத் ஜாக்ரதா
ஜாக்ரதா”

“இந்த உலகில் மனிதர்கள் நானாவித சிந்தைகளாகிய கர்ம சம்பந்தமான ஆசைகளினாலே கட்டுப்பட்டுள்ளார்கள். இதனால் தனது ஆயுள் நாளுக்கு நாள் குறைந்து வருவதை அறிகின்றதில்லை. ஆகையினால் எச்சரிக்கையாய் இருங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். கர்மாவை வெல்ல முயலுங்கள்”

சிறுவனின் ஞான உரைகளைக் கேட்ட மன்னர் மிக வியந்தார். சிறுவனின் தந்தையை அழைத்து, “உன் மகன் ஊமையன் அல்லன். பெரிய ஞானி நான் அவன் ஞான மொழிகளைக் கேட்கும் பேற்றைப் பெற்றேன்” என்று ஆனந்தமடைந்தார்.

நம்முள் இருக்கும் திருடர்களை கவனியாது புறத்தேயிருக்கும் திருட்டுகளைப் பற்றி கவலைப்பட்டு காலத்தை வீணாகக் கழிக்கின்றோம் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

🕉

திங்கள், 16 செப்டம்பர், 2019

காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டகாõல் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும்

. பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒருநாள் இரவில் யானையைக் கட்டியிருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சிலநாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சித்தான். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது. பெரியவர் அதைத் தடவிக் கொடுத்து சமாதானம் செய்தார். இதேபோல, யானையிடம் சிக்கிய பக்தரைக் காத்த நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. சிதம்பரத்தில் ஆடிட்டராக இருந்தவர் பாலசுப்ரமண்யம். இவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. பரம்பரையில் வந்தவர். அவர் மகாபெரியவரின் தீவிரபக்தர். எப்போதும் சந்திரசேகரா ஈசா என்று உச்சரிக்கும் வழக்கம் கொண்டவர். ஒருநாள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்ற ஆடிட்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோயில் யானைக்கு மதம் பிடித்து வந்தவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அப்போது ஆடிட்டர் உள்ளே நுழைந்தார். அது அவரை கோபத்துடன் தூக்கியது. அவர் பயத்தில் நடுங்கினார். ஆனால், வாய் மட்டும் சந்திரசேகரா ஈசா என்ற நாமத்தை சொல்ல மறக்கவில்லை. அப்போது அதிசயம் ஒன்று நிகழ்ந்தது.

மதம் கொண்ட யானை ஒரு நிமிஷத்தில் அமைதியானது. ஆடிட்டரை கீழே இறக்கி விட்டுவிட்டு பாகனுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து மண்டியிட்டது. பக்தர்கள் இதைப் பார்த்து அதிசயப்பட்டனர். சுவாமிகளின் மீது நாய்க்கும் கூட பக்தி உண்டு. 1927ல் மடத்தில் நாய் ஒன்று வளர்ந்து வந்தது. மடத்து பொருட்களையும், கால்நடை களையும் பாதுகாத்து வந்தது. சுவாமிகள் ஒவ்வொரு நாளும் நாய்க்கு ஆகாரம் கொடுத்தாகி விட்டதா? என்று அக்கறையாய் விசாரிப்பார். அவரைக் கண்டவுடன் அது சுற்றிச் சுற்றிவரும். ஒருமுறை சிறுவன் ஒருவன் அந்த நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினான். அதன் பின் அது பார்ப்பவர்களை எல்லாம் கடிக்க ஆரம்பித்தது. மடத்து அதிகாரிகள் நாயை 40 கி.மீ., தூரத்தில் இருக்கும் கிராமத்தில் கொண்டு விட்டுவிட்டு வந்தனர். மகாபெரியவருக்கு இந்த விஷயம் தெரியாது. ஆனால், நாயை விட்டு வந்தவர்கள் மடத்திற்கு வருவதற்கு முன் நாய் மடத்திற்கு வந்து சேர்ந்தது. மடத்து ஆட்களிடம், நாய் வந்து விட்டதா? என்று கேட்டார் பெரியவர். நாயும் அன்போடு பெரியவரிடம் வந்து நின்று சாந்தமானது. மடத்தில் இருப்பவர்கள் பெரியவர் செய்த அற்புதத்தை எண்ணி வியந்தனர். மடத்து நாய்க்கு இருந்த பக்தி உணர்வு மனிதர் களான நமக்கு இருக்கட்டும்.
13:நமது ஆச்சார்ய குரு ரத்தினங்களை பற்றி  தெரிந்துகொள்வோம்!!!

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள இரண்டு ஆச்சார்யர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள்  இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.

                      13:ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
                                    (கி.பி.235-கி.பி.272 வரை)

ஸ்ரீ சத்சித் கநேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கெடில நதிக்கரையிலுள்ள சிற்றூரில் பிறந்த அந்தண ரத்தினமாவார்.ஸ்ரீதர பண்டிதர் இவருக்கு தந்தையாகும் பாக்கியத்தை பெற்றவர்.இவருக்கு பெற்றோர்கள் வைத்த நாமதேயம் சேஷய்யா.'குரு எவ்வழி சீடர் அவ்வழி'என்கிறபடி குருவைப் போல இவரும் ஸ்ரீ காமகோடி பீட நிர்வாகத்தை சிஷ்யரிடம் ஓப்படைத்து மௌன விரதம் மேற்கொண்டு அவதூதர் போல பிரம்ம வரிஷ்டராய் காஞ்சி நகர்ப்புறத்தில் இருந்தார்.கி.பி.272-ல் கர வருஷம் மிருகசீரிஷம்,சுக்லப்பிரதமையன்று காஞ்சியில் ஸ்ரீகாயாரோஹணேஸ்வரர் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்தோடு ஐக்கியமாகி சித்தியடைந்தார்.
மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன தெரியுமா?

மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.‘மனம் செம்மைப்படும் போது’என்பதையும் கவனிக்க வேண்டும்.செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மை அடைவது என்று பொருள்.இந்த மன அழுக்குகளைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை.மந்திரம்  ஜபிப்பது ஒன்று தான் வழி.இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான்‘மனமது செம்மையாதல்’எனப்படும்.அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது,விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.
மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன தெரியுமா?

மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.‘மனம் செம்மைப்படும் போது’என்பதையும் கவனிக்க வேண்டும்.செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மை அடைவது என்று பொருள்.இந்த மன அழுக்குகளைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை.மந்திரம்  ஜபிப்பது ஒன்று தான் வழி.இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான்‘மனமது செம்மையாதல்’எனப்படும்.அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது,விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.
ॐ சிதம்பர ரகசியம் பகுதி : 34 ॐ

சிவகங்கைக் குளத்தருகே இருக்கும் இடங்களைப் பற்றி  கேட்டதில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பூஜை செய்த சக்கரமும், சன்னதியும் இருப்பதாய்க் கூறினார். சிவகங்கைக் குளத்தின் வட கரையில் நவலிங்கத்துக்கு அருகே இருப்பதாய்ப் பின்னர் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

அடுத்து தீட்சிதர்கள் பத்தின கேள்வி? தீட்சிதர்கள் முகலாயர் படை எடுப்பின் போது உயிர்த் தியாகம் செய்ததும் நடராஜரைத் தூக்கிக்கொண்டு போய் ஒளித்து வைத்ததும் பற்றிக் குறிப்பு க்களைத் தேடி ஆராய்ந்தபோது "திண்ணை"யில் அரவந்தன் நீலகண்டன் எழுதி இருப்பதைப் படித்தேன். மாலிக்காஃபூர் படை எடுப்பு நேர்ந்த சமயத்தில் இது நடந்ததாயும் இது பற்றி அமீர் குஸ்ரூ தாரிக்-இ-அலை விவரமாக எழுதி இருப்பதாயும் அவர் சொல்லி இருக்கிறார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் பத்தி ஒரு தனிப்பதிவும் வர இருப்பதால் இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன். அடுத்து நாம் காண இருப்பது "ரஜ சபை" என அழைக்கப்படும் ஆயிரக்கால் மண்டபம். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப் பட்டதாய்ச் சொல்லப்படுவதற்கான சரித்திரக் குறிப்புக்கள் இருந்தாலும் இந்த ரஜ சபை மிகவும் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த ஆயிரக் கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு தான் ஆதி சேஷனின் அவதாரம் ஆன பதஞ்சலி முனிவர் தன்னுடைய சிஷ்யர்களுக்குப் பாடம் கற்பித்தார் எனவும் இங்கே தான் மகாபாஷ்யம் எழுதினார் எனவும் சொல்லப்படுகிறது. இதைத் தவிர கம்பர் தன்னுடைய ராமாயாணத்தை அரங்கேற்றியதும் தில்லை தீட்சிதர்களுக்கு முன்னிலையில் இந்த ஆயிரக்கால் மண்டபத்தில் தான். சேக்கிழார் பெரிய புராணம் அரங்கேற்றம் நடத்தியதும் இங்கே தான். மேலும் மாணிக்க வாசகர் பெளத்தர்களை வாதில் வென்றதும் நடராஜர் அருள் பெற்றதும் இங்கே தான் எனக் கூறப் படுகிறது. கம்ப ராமாயணம் அரங்கேறியது பற்றிய சந்தேகம் சிலருக்கு. நானும் ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியதாய்த் தான் படித்திருக்கிறேன். என்றாலும் என்னிடம் உள்ள குறிப்புக்களில் இங்கே சிதம்பரம் தீட்சிதர்களிடம் அங்கீகாரம் பெறவும் கம்பர் இங்கே தன்னுடைய ராமாயணத்தைப் பாடியதாயும் கூறுகிறது. ஆகவே தான் அதை எழுதினேன். அடுத்து கோபுரங்களுக்குச் செய்த பணிகளைப் பற்றியும் தீட்சிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ளும் முன்னர் சிதம்பரம் நகரின் முக்கியத்துவம் பற்றி ஒரு விளக்கம்.

வைஷ்ணவர்களுக்குக் கோயில் என்றால் அது ஸ்ரீரங்கத்தையே குறிக்கும். அங்கே ரங்கராஜனாக அருள் பாலிக்கிறார் விஷ்ணு. சைவர்களுக்கோ கோயில் என்றால் அது சிதம்பரம் மட்டுமே. இந்தப் பிரபஞ்சத்தின் ஐந்து ஆதார சக்திகளில் "ஆகாயம்" சிதம்பரம் தான். இந்தப் பிரபஞ்சமே "விராட புருஷன்" எனக் கூறப்படும் அந்த மகா சக்தியிடம் அடக்கம் என்றால் அந்த விராட புருஷனின் இருதயத்தின் மத்தியப் பகுதி சிதம்பரம் ஆகும் எனக் கூறப்படுகிறது. குன்டலினி யோக சாஸ்திர ஆதாரங்களில் இது "அனஹதா" எனக் கூறப்படுகிறது. சிவன் கோவில்களின் தலைமைப் பீடமாகக் கருதப்படுகிறது. மற்றச் சிவன் கோவில்களில் சிவனின் மற்ற சக்திகள் வியாபித்திருப்பதாயும் இங்கே தான் ஆத்ம சக்தி இருப்பதாயும் தினம் இரவு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் எல்லா சக்திகளும் இங்கே வந்து ஒடுங்குவதாயும் கூறுகிறார்கள். ஐந்து சபைகளில் இது "கனக சபை" . மற்றதில் திருவாலங்காட்டில் "ரத்ன சபை" மதுரையில் "வெள்ளி சபை", திருநெல்வேலியில் "தாமிர சபை", திருக்குற்றாலத்தில் "சித்திர சபை". இந்தத் திருக்குற்றாலத்தில் சித்திர சபை பரமரிப்புக் குறைவால் சித்திரங்கள் அழியும் நிலையில் உள்ளது. நடராஜரும் அங்கங்கே கொஞ்சம் தழும்புகளோடவே காணப் படுகிறார். சிவனின் முழு சக்தியும் நடராஜ ஸ்வரூபத்தில் இங்கே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. மனித உடலில் இதயம் எவ்வளவு முக்கியமோ அப்படி சிதம்பரம் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் நடராஜர் முழு உருவத்துடன் இங்கே ஜீவனுடன் விளங்கிக் கொண்டிருப்பதாயும் இந்த ஸ்வரூபத்தை "அம்சி" எனச் சொல்கின்றனர். மற்றச் சிவன் கோவில்களின் லிங்க ஸ்வரூபம் அவ்வாறு இல்லை எனவும் அவை "அம்சரூபா" எனவும் அழைக்கப் படுவதாயும் சொல்கின்றனர்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, அருணாசலம் நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்தால் முக்தி  என்று சொல்லப்படும் வரிசையில் சிதம்பரம் நடராஜ தரிசனமே முக்தி எனச் சொல்லப்படுகிறது.

ॐ மீண்டும் நாளை சந்திக்கலாம் ॐ
முதலில் கோமாதா எங்கிருந்து தோன்றியது என்று பார்ப்போம் !

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்து வரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில் (பின் பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள் பாலிப்பதாக ஐதீகம். பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும். வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம். இந்த தொடர் பதிவில் கோபூஜை பற்றி விரிவாக பூஜையுடன் பதிவிடப்படும்.

கோமாதா பின் தொடர்வாள் பகுதி ஒன்று.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

பிரதோஷம் உருவான வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகள்!

இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாகராஜனைத் தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப்புறமும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார்கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற்கடலைக்கடைந்த போது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன்று சேர்ந்து ஆலாலம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக வெப்பமுடன் உலகத்துக்கே முடிவு செய்வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும் இடமாகவும் மறித்துத் துரத்தியது. திசை தோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷவேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திருக்கயிலாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.

தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங்கள் அடிமைகள் தேவரீர் உடையவர். நாங்கள் உடைமைகள். நாங்கள் பாற்கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது. தேவரீருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓலமிட்ட வண்ணம் இடமாகவும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தனர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்களைத் காத்தருளக் கோரித்துதித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடிவான கண்ணுதற் கடவுள் தமது அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வாய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத்திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணாமூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம்பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத்தை அடியவர்களாகிய அமரர்கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த விடம் உள்ளே சென்றால் உள்முகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும். ஆதலால் உண்ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார். அதனால் செம்மேனி எம்மானுடைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.

சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாடலை ஆதிசங்கரர் சிவானந்தலகரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத் திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில்லையானால் பிரம விஷ்ணு இந்திராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோருடைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங்கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வானோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூர் வள்ளலார்.

பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே - திருஞானசம்பந்தர்

இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப்பின்வரும் பாடலால் அறிக.

மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்

இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.

இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா

இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷத்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.

மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலைக் கடையுமாறு பணித்தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன்போலவே கடலைக்கடையத் தொடங்கினார்கள். பாற்கடலிருந்து இலக்குமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைச்ரவம் முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. இலக்குமியைத் திருமால் ஏற்றுக்கொண்டார். ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன்றியது. அதனை, தேவர்கள் பகிர்ந்து உண்டார்கள். அமிர்தம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாதசியன்று ஆடியும் பாடியும் பொழுதைப் போக்கினார்கள்.

பிரதோஷம்: மறுநாள் திரயோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தேவர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை) பிரதோஷ வேளையில் சிவபெருமான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூலத்தைச் சுழற்றி, நந்தி தேவரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடனமாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலைமகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெருமான் தாண்டவமாடினார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடை வழியாக ஈசனிடம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடனமாடினார். தேவர்கள் அதனைத்தரிசித்து சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை  உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேரமாயிற்று.

அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால நஞ்சு தோன்றி அனைவருக்கும் பெருந்தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒருவருக்கும் தீங்கு ஏற்படாது காப்பாற்றிய காலம். சகல தேவதைகளும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் காலம். தங்களைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய காலம். ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம். சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும். தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

ஐந்து வகைப் பிரதோஷம் :

1. நித்தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைக்கு (72 நிமிடம்) முன்னர்  உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.

2. பட்சப் பிரதோஷம்:  இது வளர்பிறைத் திரயோதசியன்று வரும்.

3. மாதப் பிரதோஷம்:  இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.

4. மகா பிரதோஷம்:  சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாதம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வைகாசி மாதம் சனிப் பிரதோஷ வேளையென்று கருதுகிறார்கள்.)

5. பிரளயப் பிரதோஷம்:  இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.

பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவைகளை அனுகூலமாக மாற்றத் தெரிந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சையுண்டு நம்மைக்காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல்லோரும் பெறுவோமாக