திங்கள், 5 ஆகஸ்ட், 2019

திவ்ய தேசங்கள் அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்

மூலவர் : சாரநாதன்
தீர்த்தம் : சார புஷ்கரிணி
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
ஊர் : திருச்சேறை
மாவட்டம் :  தஞ்சாவூர்

பாடியவர்கள் : பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா என்றும் மைவிரியும் மணிவரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம் செய்விரியும் தண்சேறை யெம் பெருமான் திருவடியைச் சிந்தித் தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க் காளாமென் அன்பு தானே.திருமங்கையாழ்வார்
 
விழா : தைப்பூச விழா பத்து நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்விழா. காவிரித்தாய்க்கு காட்சியளித்த தைமாதம், பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாரபுஷ்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.  
      
ஸ்தல சிறப்பு : பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. இத்தலத்தில் மட்டும் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்)நிறைந்தது. எனவே தான் தலத்தின் நாயகர் சாரநாதப்பெருமாள் எனப்பட்டார். தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மருவி "திருச்சேறை' ஆனது.  
      
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். விலாசம் : அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்

தகவல் : இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சார விமானம் எனப்படுகிறது. காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளார்.கோயில் நீளம் 380 அடி. அகலம் 234 அடி. கிழக்கு நோக்கிய 90 அடி உயர பிரமாண்டமான ராஜ கோபுரம். கோயிலுக்கு எதிரில் உள்ள சார புஷ்கரிணியின் மேற்கு கரையில் அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர். கோயில் உள்பிர காரத்தில் சீனிவாசப்பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வார், ராமர், அனுமான், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மணி, நரசிம்ம மூர்த்தி பால சாரநாதர் சன்னதிகள் உள்ளன.
 
ஸ்தலபெருமை : பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர் மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு வலது பக்கம் மார்க்கண்டேயர் வீற்றிருக் கிறார் மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார். உப்பிலி யப்பன் கோயிலில் தனது மகள் பூதேவியை சிறுவயதிலேயே பெருமாள் விரும்புகிறார். அதற்கு மார்க்கண்டேயர் சுவாமி! இவள் சிறு பெண். இவளுக்கு சரியாக உப்பு போட்டு கூட சமைக்க தெரியாது. அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவளை திருமணம் செய்து கொள்ள முடியும்,''என்கிறார். அதற்கு பெருமாள்,""இவள் உப்பே போடாமல் சமைத்தாலும், அதை நான் திருப்தியாக ஏற்று கொள்வேன்''என்று கூறி பூதேவியை திருமணம் செய்து கொள்கிறார். அன்றிலிருந்து பெருமாள் உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன் உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுகொள்கிறார்.மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியின் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவன் மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக்கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரசபூபாலன் இத்தல பெருமாளை வேண்டினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலனாக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோயிலுக்கும் சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.
 
ஸ்தல வரலாறு : பிரளய காலத்தில் பிரம்மா இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. ஒரு முறை காவிரித்தாய் பெருமாளிடம் அனைவரும் கங்கையே உயர்ந்தவள். அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டும் என கேட்டு இத்தல சாரபுஷ்கரணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன் கருட வாகனத்தில் சங்கு சக்கர தாரியாக ஐந்து லட்சுமிகளுடன் காட்சி கொடுத்து வேண்டும் வரம் கேள்' என்றார். அதற்கு காவிரி தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம்.


ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம்

பரிமுகனாம் ஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். இதை அனுதினமும் படித்து ஹயக்ரீவரை வழிபட கல்வி ஞானம் ஸித்திக்கும்.

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத்
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம
ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்

கருத்து: ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது.... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும்(1)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும்(2)

ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.

ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி நான்கு}

ஸ்ரீவராஹ அவதார வைபவம்

குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன் என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார். மைத்ரேயரே! பிரஜாபதிகளுக்கு அதிபதியாய், நாராயணத்துமகனாய், தேவ தேவனுமான அந்தப் பிரமரூபியான பகவான் பிரஜைகளைப் படைத்த விதத்தைக் கூறுகிறேன். முன்பு சொன்னது போல சதுர்யுக சஹஸ்ர சங்கையான இரவெல்லாம் யோக நித்திரை செய்து விடியற்காலத்தில் நித்திரை தெளிந்து பிரபோதம் அடைந்து சத்வகுணம் மேலிட்டவனாகிய சதுர்முகப் பிரமன், சூனியமான மூன்று உலகங்களையும் படைக்கத் திருவுள்ளம் கொண்டான் பராத்பரனும் ஷட்குண சம்பன்னனும் அனாதியும் சர்வ ஜகத்காரண பூதனும் சதுர்முக ஸ்வரூபனுமான அந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியே சகல லோகங்களுக்கும் பிரபு ஆவார். படைப்புக் காலத்தில் அவரே பிரமாவினிடத்தில் அனுப்பிரவேசித்துப் படைப்பைப் படைக்கின்றார்.

அவர் மகாஜலத்திலே சயனித்திருந்தார் அல்லவா? அதனால் மநுவாதி ரிஷிகள், நாராயண சப்த நிர்வசனத்தை தெரிவிக்கிற சுலோகத்தை அருளிச் செய்தார்கள். நரசப்த வாச்சியனனான பரமாத்மாவினிடத்தில் ஜனித்த உதகங்கள் நாரங்கள் என்று சொல்லப்படும். ஏனென்றால் அவை நாராயணருக்குப் பிறப்பிடமான படியினாலும் அவரிடமிருந்து அவை தோன்றியதாலும் அவை பிரம்மனின் முதலாவது சயனத்தில் நிகழ்ந்ததாலும் அவர் நாராயணன் என்று வழக்கப்பட்டார். இத்தகைய திவ்வியத் திருநாமமுடைய எம்பெருமான் நீர் மீது தாமரை இலை ஒன்று மிதக்க கண்டு ஏகார்ணவமான பிரளயயோகத்தில் பூமியானது மூழ்கியுள்ளதாக முடிவு செய்து அதனை மேலேயெடுக்க முந்தைய கல்பங்களின் மஸ்ய, கூர்மாதி திவ்விய அவதாரங்களைச் செய்தருளியது போல இந்தக் கல்பத்தில் ஸ்ரீவராகவதாரம் எடுக்க விழைந்தார். அத்தகைய திருவவதாரத்தை வேதங்களால் சொல்லப்பட்ட யாகாதிகர்மங்களால் நிரூபிக்கத் தக்கதாகவும் சர்வலோக ரக்ஷணர்த்தமாகவும் தாம் மேற்கொண்டு ஜனக ஸனந்தனாதி யோகிகளால் வேதவசனங்களால் துதிக்கப் பெற்று தமக்குத் தாமே ஆதாரமாகி ஏகார்ணவ பிரளயோதகத்தில் பிரவேசித்தருளினார். இவ்விதமாகப் பூமியாகிய தன்னை உத்தரிப்பதற்காகப் பாதாளத்திற்கு எழுந்தருளிய எம்பெருமானை. பூதேவியானவள் வணங்கி பக்திபூர்வமாகத் துதிப்பாளாயினள்.

பூதேவியின் துதி : தாமரை போன்ற திருவிழிகளையுடையவனே! சங்குசக்கரகதாதி திவ்விய ஆயுதமுள்ளவனே! உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறேன். பூர்வத்தில் மகார்ணவத்தில் மூழ்கிக் கிடந்த என்னை நீயே உத்தரித்தாய் இப்போதும் அது போன்றே என்னை உத்தரித்தருள வேண்டும். ஜனார்த்தனா! உன் மகத்தகங்கார தன்மாத்திரைகளும் பிரகிருதியும், சீவனும் யாவுமே உனது திருச்சரீரமல்லவோ! க்ஷேத்திரக்கிய சொரூபனும் பரமாத்மாவும் சமஸ்த ஜகத் வியாபகனுமான உனக்கு நமஸ்காரம்! அவ்வியக்தமான பிரபஞ்சமும் காலமும் சொரூபமாகவுடைய உனக்கு நமஸ்காரம்! பிரம ரூப, ஸ்வயரூப, ருத்திர ரூபமும் தரித்து சர்வ பூதங்களுக்கும் சிருஷ்டிகர்ததாவாகவும் ரக்ஷகனாகாவும் சங்காரகனாகவும் இருந்து கல்பாந்த காலத்தில் சகல பூதங்களையும் கிரகித்து மூன்று லோகங்களையும் தண்ணீரானது பொங்கி அமிழ்த்தும் படிச்செய்து பின்னர் அந்த மகா பிரளயத்திலேயே சயனம் செய்து பரமயோகிகளாலே கோவிந்தா என்று தியானிக்கப்படுபவனும் நீயே அன்றே! பரமாத்பனும் திவ்வியனுமான உனது நிஜஸ்வரூபத்தை எவரே அறிவர்? நீ ஜகத்தை ரக்ஷிப்பதற்காக லீலார்த்தமாகத் தரித்த உனது அவதாரங்களை யன்றே தேவர்களும் ஆராதிக்கிறார்கள்? மோட்சத்தை விரும்பும் மாமுனிவர்களும் பரப்பிரமமான உன்னையே ஆராதித்து முத்தராய் பரமானந்தத்தை அடைகின்றனர். யாவற்றுக்கும் ஆதாரமும் ஆதேயமும், தாரகனும் பிரகாசகனுமாகையால் ஸ்ரீவாசுதேவன் என்கின்ற திருநாமம் கொண்ட உன்னை ஆராதிக்காமல் எவன் தான் முக்தியடைவான்? மனத்தால் கிரகிக்கப்பகிற சுகம் முதலானதும் கண் முதலிய இந்திரியங்களாலே கிரகிக்கத்தக்க ரூபாதிகளும் புத்தியினாலே பரிசோதிக்கும்படியான பிரமாணந்தரங்களும் உனது சொரூபங்களன்றே?

தேவதேவா! உன்னிடத்திலே பிறந்து உன்னையே ஆஸ்ரயித்து, உனது சரீர பூதையாய் உன்னிடத்திலேயே நிலைத்திருப்பவளாகையால் உலகங்கள் யாவும் என்னை மாதவி என்று சொல்லும் சகல ஞான சொரூபனே! நீ ஜெயசாலியாகக் கடவை! ஸ்தூலப் பிரபஞ்ச ஸ்வரூபனே! நீ வாழ்க! அவ்யயனே! அளவில்லாதவனாகையனாலே அனந்தன் என்ற திருநாமமுடையவனே! வியக்த பூதாதி சொரூபனே அவ்வியக்த ரூபனே! உத்கிருஷ்டங்களுக்கும் நிசருஷ்டங்களுக்கும் ஆன்மாவானவனே! விசுவாத்மகனே! யக்கியங்களுக்கு அதிபதியே! நீ வாழ்க! யக்யங்களும் வஷட்காரமும் நீயே! பிரணவமும் திரேதாக்கினிகளும் நீயே! சதுர்வேதங்களும் நீ! யக்ஞத்திற்கு உரிய புருஷனும் நீ! ஓ! புருஷோத்தமா; சூரிய சந்திராதி கிரகங்களும், அசுவினியாதி நட்சத்திரங்களும் மூர்த்தமான திரவியங்களும் மூர்த்தமல்லாதவைகளும் காணப்படுபவைகளும் காணப்படாதவைகளும் நான் சொன்னவைகளும் சொல்லாதவைகளும் சமஸ்தமும் நீயே! சகலமான தேவதைகளுக்கும் மேலான ஸ்வாமி! இப்படி யாவற்றுக்கும் ஆத்மபூதனான உனக்குத் தெண்டன் இடுகிறேன். இவ்விதமாகப் பூமிபிராட்டியானவள் வெகுவாய் ஸ்துதி செய்தாள். அந்தப் பூமியைத் தரிப்பவனான ஸ்ரீயப்பதியானவன் வராக ரூபத்திற்கு அநுகுணமான சாம வேதமயமான இர்குர் என்ற சப்தத்தினாலே பூமிப்பிராட்டியார் செய்த தோத்திரத்திற்குத் திருவுள்ளம் உகந்ததைக் காட்டியருளினான். பிறகு மலர்ந்த செந்தாமரை மலரை ஒத்த திருக்கண்களையுடையவனும் கருநெய்தற் பூவையொத்து விளங்கும் திருமேனியுடையவனுமான மகா வராக ரூபமுடைய ஸ்ரீமந் நாராயணன் தனது கொம்பு நுனியினாலே பூமியை உயர எடுத்து மகா நீலமலைபோல பாதாளத்திலிருந்து எழுந்தருளினான். இவ்விதம் தோன்றிய ஸ்ரீயக்கிய வராக மூர்த்தியின் மூச்சுக்காற்று வேகத்தால் எழும்பிய வியர்வை ஜலமானது ஜனலோகம் வரைப் பாய்ந்து அங்கு பகவத் தியானஞ்செய்து கொண்டு மிகவும் தூயவராயிருக்கும் ஜனக சனந்தருடைய தேகங்களிற்பட்டு அவர்களை மேலும் தூயவராக்கியது.

அதே சமயத்தில் வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில் அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன. அக்கினியே உனது நாக்கு! உன்னுடைய ரோமங்கள், தருப்பைப் புற்கள், ஆகையால் யக்கிய ரூபமாய் யக்கியத்தினால் ஆராதிக்கப்படும் புருஷன் நீயே இரவும் பகலும் உனது திருக்கண்கள் சகல வேதங்களுக்கும் ஆதியான பிரணவமே உனது சிரசு புருஷ சூக்தம் முதலான சூக்தங்கள். எல்லாம் உன்னுடைய பிடரியின் ரோமங்கள் சாமவேதமே உன்னுடைய கம்பீரமான நாதம் பிராக் வம்சமென்கிற அக்கினி சாலையின் முன்புறமானது உன்னுடைய திருமேனி! இப்படியாக மூர்த்தியாய், அனாதியாயுள்ள ஷட்குண ஐசுவரியை சம்பன்னனான எம்பெருமானே! உன் திருவடிவைப்பினாலே பூமியை ஆக்கிரமித்து பதம் கிரமம் என்ற ஏற்பாடுகளுடன்கூடிய அளவற்றதாய் ஆதியில் நின்ற சப்த பிரமமும் நீயே! அக்ஷர சொரூபியாயும் அழியும் தன்மையற்றவனாயும் சகல சொரூபியாயுமிருக்கிற ஸ்வாமி! சராசர மயமான உலகங்களுக்கு எல்லாம் நீயே ஒப்பில்லாத ஈஸ்வரன்! தம்தம் விருப்பங்களைப் பிரார்த்திக்கத் தக்கவனாக நீயே இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிந்தோம். ஆகையால் உன்னையே பிரார்த்திக்கின்றோம். கிருபை செய்ய வேண்டும். திவ்வியமான உனது கோரைப் பல்லின் நுனியிலே காணப்படுகின்ற இந்த சமஸ்த பூமண்டலமானது தாமரைத் தடாகத்திலே பிரவேசித்து விளையாடிய மதயானையானது தனது கொம்பிலே, சேறுடன் கூடிய தாமரையைத் தூக்கிவந்தால் எப்படிக் காணப்படுமோ, அப்படித் தோற்றமளிக்கிறது.

ஒப்பற்ற மகிமையுடையவனே ஓ ஜகந்நாதா! உண்மையான பொருள் நீ ஒருவனேயன்றி வேறொன்றுமில்லை. எப்படியெனில் சராசர மயமான சகலமும் உன்னால் வியாபிக்கப்பட்டு உனது திருமேனியாக இருப்பதனால் இவையாவுமே உனது மகிமையாகும். நீயே பரமார்த்தமாகிறாய். உலகத்துக்குக் காரண பூதனாய், உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உன் மகிமை சொல்லாத முடியாததன்றே! சத்து, அசத்து என்னும் விவேகம் இல்லாத அஞ்ஞானிகள் உன்னுடைய சரீரமான பிரபஞ்சத்தைப் பிராந்தி ஞானத்தால் வேறான தேவமனுஷ்யாதி ரூபமாக நினைக்கிறார்கள். புத்தியீனர்களான ஜனங்கள் ஞானமயமான தமது நிஜ சொரூபங்களை அறியாமல் தான் அமரன் என்றும் தான் மனுஷியன் என்றும் இது மிருகம், இது தாவரம் என்றும் பிராந்தி வசத்தினாலே நினைத்து மோகார்வணத்தில் மூழ்கியிருக்கிறார்கள். ஆத்ம சொரூபத்தை எவர் ஞானசாரமாக அறிந்து பகவானை அனுபவிக்கத்தக்க யோக நிலைக்குத்தக்கதான பரிசுத்த மனமுடையவர்களோ அவர்கள் பிரகிருதிவிகாரமான தேவ மனுஷ்யாகி ரூபமாகக் காணப்படுகிற இந்தப் பிரபஞ்சத்தையே ஞான குணமுள்ள ஆன்ம சொரூபமாகவும் உனது திருமேனியாகவும் காண்கிறீர்கள் யாவற்றிலும் அந்தர்மியாக இருக்கும் ஸ்வாமி! சகல உலகங்களுக்கு இருப்பிடமாக இருப்பவனே! அறியக்கூடாத மகிமையை உடையவனே! சேவிப்பவர்களின் இதயம் குளிரத் தகுந்ததான செந்தாமரைமலர் போன்ற திருக்கண்களையுடையவனே! இந்தப் பூமியை உத்தரித்து அடியேங்களுக்கு சுகத்தினைக் கொடுத்து அருள் செய்ய வேண்டும். கோவிந்தா! நீ உலக உபகாரத்திற்காகவன்றே சிருஷ்டியில் பிரவேசிக்கிறாய் உனக்குத் தெண்டன் சமர்ப்பிக்கிறோம். அடியேங்களுக்குச் சுகம் அருள்வாயாக! என்று ஜகன சனந்தனர் முதலிய யோகிகள் துதித்தார்கள். இப்போது ஸ்ரீவராக ரூபமுடைய பரமாத்மாவானவன் மகார்ணவத்திலிருந்து பூமியை எடுத்து பழையபடியே ஜலத்தின் மீது நிறுத்தி அருள் புரிந்தான்.

இவ்விதம் அந்தப் பெருவெள்ளத்தின் மேல் நிருமிக்கப்பட்ட பூமியானது, கப்பல் போல உருக்கு விந்து பரந்ததாகையாலே அது அந்த மகார்ணவ ஜலத்தில் மிதந்ததேயல்லாமல் மூழ்கவில்லை. பிறகு சர்வகாரணனும் அனாதியுமான ஸ்ரீஹரிபகவான் பூதேவி பிரார்த்தித்த வண்ணம் அந்தப் பூமியில் தன்னுடைய சங்கல்பமாத்திரத்தாலே முன்பு எரிந்து போன பர்வதம் முதலியவற்றையெல்லாம் மீண்டும் முன்போலவே படைத்து அருளினான். இவ்விதமான ஸ்ரீமந் நாராயணன் ரஜோ குணப்பிரமமாய் ஏழு தீவுகளாக இருக்கிற பூமியின் பகுதிகளையும் மற்றும் புவர்லோகம் முதலிய உலகங்களையும் மீண்டும் படைத்தருளினான். எம்பெருமான் சிருஷ்டிக்கு நிமித்தம் மட்டுமேயாகிறான். அவனால் படைக்கப்படும் வஸ்துக்களுடைய சக்திகளே முக்கிய சக்திகளாகின்றன. மைத்ரேயரே! எம்பெருமான் நடுநிலைமையானவன் நிமித்த காரணன் ஆகையால் இப்படி அவன் படைப்பதனால் அவனுக்கு வைஷம்மியமும் நிர்த்தயத்துவமும் இல்லை. உயிரினங்கள் அனாதி கர்மவசத்தினாலே பூர்வ கர்மானுரூபமாக நானாவித கர்ம மார்க்கங்களிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. சர்வ சமநிலையாளனும் சாட்சி பூபதனுமான பரம புருஷனைத் தவிர பிரபஞ்சத்துக்கு வேறொரு காரணமுமில்லை. சீவாத்துமாக்களுடைய அனாதி சர்மவாசனா சக்தியினாலே நல்ல பிறவிகளும் கெட்ட பிறவிகளுமாய் அந்தந்த வஸ்துகள் மாறிவிடும். ஆகையால் தான் ஸ்ரீயப்பதி முக்கிய காரணமாக இருந்தாலும் சேதனர்களுடைய கர்மங்களைக் கொண்டே சிருஷ்டி நானாவிதம் ஆக வேண்டியிருப்பதால் அவை பிரதானமாக உபசார வழக்கை முன்னிட்டு சொல்லப்பட்டன என்று அறிவீராக!



தொடரும்
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி மூன்று}

காலப் பிரமாணம்

பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்? என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார் மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு. அது போலவே எம்பெருமானாருக்கும் படைத்தல் முதலியவைகளுக்குக் காரணமான சக்திகள் உண்டு. அதனாலே பரமாத்மா சிருஷ்டி, ஸ்திதி, லயங்களைச் செய்தருள்கிறான். ஸ்ரீமந் நாராயணன் பிரபஞ்ச, சிருஷ்டி உண்டாக்கிய விதத்தைச் சொல்கிறேன். நாராயணன் என்ற திருநாமமுடைய பகவான் உலகங்களுக்குப் பிதாமகனான பிரம்மாவாக அவதரித்தான் என்று உபசாரத்தினால் சொல்லப்படுவது மகாப்பிரளயத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய திருமேனியில் பிரவேசித்திருந்து மீண்டும் தோன்றுவதனால் தான் என்பதை அறிந்து கொள்ளும் அந்தப் பிரம்மாவுக்கு அவருடைய அளவில் நூறாண்டுக்காலம் ஆயுசு உண்டு. அதற்கு பரம என்று பெயர். அதில் பாதி ப்ரார்த்தம் என்று சொல்லப்படும் காலமானது விஷ்ணு சொரூபம் என்று முன்பே சொன்னேன் அல்லவா! அந்தக் காலத்தினாலே சதுர்முகப் பிரும்மனுக்கும் அந்தியம் உண்டாகும். அதனால் மலைகள், சமுத்திரங்கள் முதலிய சகல சராசரங்களுக்கும் வளர்தல், நசித்தல் முதலியவை உண்டாகும்.

இது இப்படியிருக்க இனி காலப் பிரமாணத்தின் இயல்பைக் கூறுகிறேன். மைத்ரேயரே! நிமிஷகள் பதினைந்து கூடியது ஒரு காஷ்டை அந்தக் காஷ்டை முப்பதானால் அது ஒரு கலை அந்தக் கலைகள் முப்பதானால் ஒரு முகூர்த்தம் அந்த முகூர்த்தம் முப்பதானால் அது மனுஷ்யர்களுக்கு ஒரு அகோராத்திரம் அதாவது ஒரு நாள். அந்த அகோராத்திரங்கள் முப்பதானால் இரண்டு பக்ஷங்களோடு கூடிய ஒரு மாதம் அந்த மாதம் பன்னிரண்டானால் தட்சணாயனம் உத்திராயணம் என்ற இரண்டு அயனங்கள் சேர்ந்து ஒரு வருஷமாகும். தட்சணாயனம் தேவர்களுக்கு இரவாகவும் உத்தராயணம் பகலுமாகவும் இருக்கும். தேவமானத்தில் பன்னீராயிரம் ஆண்டுகளானால் அது ஒரு சதுர்யுகம். அதில் கிருதயுகம் நாலாயிரமும் சந்தி, சந்தியம்சங்கள் எண்ணூறு திவ்விய சம்வச்சரமுமாக இருக்கும். திரேதாயுகம் சந்தி சந்தியம்சங்கள் உட்பட மூவாயிரத்தறு நூறு ஆண்டுகள், துவாபரயுகம் சந்தி, சந்தியம்சங்கள் உட்பட இரண்டாயிரத்து நானூறு தேவ ஆண்டுகள். கலியுகத்திற்கு ஆயிரமும் சந்தி சந்தியம்சங்களின் ஆண்டுகள் இருநூறுமாக இருக்கும் சந்தியாவது யுகத்துவக்கத்திற்கு முந்திய காலம் சந்தியம்சமாவது யுகத்திற்குப் பிற்பட்ட காலம் சந்தி சந்தியம்சங்களுக்கு இடைப்பட்ட காலமானது கிருத, திரேதா, துவாபர, கலி என்ற பெயர்களைப் பெற்று யுகம் என்று வழங்கப்படுகிறது. இந்த விதமான கிருதத்திரேதா துவாபர கலியுகங்கள் என்கின்ற சதுர்யுகங்களும் ஆயிரந்தரம் திரும்பினால் சதுர்முகனாகிய பிரமனுக்கு ஒரு பகல் என்று சொல்லப்படும். அந்த சதுர்முகனுடைய தினத்தில் பதினான்கு மநுக்கள் அதிகாரம் செய்வார்கள். இனி அந்த மநுவந்தரப் பிராமணத்தைக் கூறுகிறேன் கேட்பீராக...

மைத்ரேயரே! சப்தரிஷிகளும், வசு, ருத்திராதியர் ஆகிய தேவதைகளும் இந்திரன் மநுக்கள், மநு புத்திரரான அரசர்கள் ஆகியவர்களும் ஏககாலத்தில் சிருஷ்டிக்கப்படுவார்கள். ஏககாலத்திலே சங்கரிக்கப்படுவார்கள். தேவமானத்தில் எழுபத்தோரு மகாயுகம் ஒரு மநுவந்தரம் என்று சொல்லப்படும். இந்திராதி நூறு தேவதைகளுக்கும் மநுக்களுக்கும் இதுவே ஆயுட் பிரமாணமாகும். ஒரு மநுவந்தரத்துக்கு தேவமானத்தில் எட்டு லட்சத்து ஐம்பத்தீராயிரம் ஆண்டுகள் அளவாகும். அது மனுஷிய மானத்தினாலே முப்பது கோடியும் அறுபத்தேழு லட்சத்து இருபதினாயிரம் ஆண்டுகள் ஆகும். இப்படிப் பதினாலு மநுவந்தரங்களானால் பிரமனுக்கு ஒரு பகல் இதன் முடிவில் ஒரு நைமித்திகப் பிரளயம் உண்டாகும். அந்தத் தினப் பிரளயத்தில், பூலோக, புவர்லோக சுவர் லோகங்கள் தகிக்கப்பட்டு நாசமடையும் அப்போது மகர் லோகத்தில் வாசஞ் செய்பவர்கள் அந்தப் பிரளயாக்கினி ஜ்வாலையின் கனல் வேகத்தைப் பொறுக்க முடியாமல் தங்கள் லோகத்தைவிட்டு ஜனலோகத்துக்குச் செல்வார்கள். அதன் பிறகு சப்த சாகரங்களும் பொங்கித் திரிலோகங்களையும் ஏகார்ணவஞ் செய்யும் அந்தச் சமயத்தில் நாராயணாத் மகனான ஹிரண்யகர்ப்பன் திரிலோகங்களையும் விழுங்கிய எம்பெருமானுடைய அநுப்பிரவேசத்தினால் பருத்தவனாகி அவனுடைய நாபிக்கமலத்தில் இருப்பதால் ஆதிசேடனாகிய சயனத்தில் சயனித்துக் கொண்டு ஜனலோக நிவாசிகளான யோகிகளால் தியானிக்கப்பட்டவனாய் முன்பு சொன்ன பகல் ராத்திரியளவு யோக நித்திரை செய்தருளுவன். இது போல் ஆயிரம் சதுர்யுகப் பிரமாணமான ராத்திரியும் கடந்த பிறகு பிதாமகன் மீண்டும் சராசரங்களை படைப்பான். இப்படிப்பட்ட தினங்களைக் கொண்ட ஆண்டுகள் நூறு ஆனால் சதுர்முகப் பிரமனின் ஆயுள் முடியும் அதில் ஐம்பது ஆண்டுகள் பரார்த்தம் என்று சொல்லப்படும். முன்பு ஒரு பரார்த்தமாயிற்று. அது பிரமனின் ஆயுளில் பாதியாகும். இப்போது இரண்டாவது பரார்த்தம் நடக்கிறது. இதுவராக நாமகமான முதலாவது கல்பமாகும். இது ஸ்ரீவராக கல்பம்!




தொடரும்
விஷ்ணு புராணம் {பிரபஞ்ச உற்பத்தி} பகுதி இரண்டு

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும் படியான ஜயசாலியான ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும் போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும் போது ஹரி ரூபியாகவும், சங்கரிக்கிற போது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீ வாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும் காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி அனாதியான பிரகிருதி வாசனையாலே கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய் நிமோஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும் அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும் சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதி சூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய் எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய் கல்யாண குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய் அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள் உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும் எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும் யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள் உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால் நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும் தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய் சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய் தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய் தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால் சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய் தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய் ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும் படிப் பிரகாசிப்பவராகையால் ஸ்ரீ வாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரே விதமான சொரூபனுமாய் துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே நிர்மலராய் தோன்றுவதும் தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய் புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான க்ஷேத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும் சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான க்ஷேத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீ விஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின் அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக.

இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள் : எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம் உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில் மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள் பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில் அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீ விஷ்ணு ஸ்வரூபத்தினின்று பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய் அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும் சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும் பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய் சலிப்பிக்கப்படுவது மான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும் வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புருஷோத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீ விஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய் விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால் அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்று வித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது. ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு கந்த தன் மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும் அற்புதப் பிரகாசமும் பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும் வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும் நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும் தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன் மேலும் அதிகமாகப் பெற்று அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய் ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.



இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகா பூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன் மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அது போலவே பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர் பிரமரூபியாகி ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும் பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில் சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி முன் போலவே பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன் அந்தந்தச் சொரூபங்களில் நின்று சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுக முடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் க்ஷேத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல் நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில் படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன் - அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன் சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும் போது பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும் படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான் மைத்ரேயரே! அந்த ஸ்ரீ மகா விஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்! 

தொடரும்
விஷ்ணு புராணம் பிரபஞ்ச உற்பத்தி {பகுதி ஒன்று}

புராணம் கேட்ட வரலாறு

பதினெட்டு புராணங்களில் மூன்றாவதாக கருதப்படுவது விஷ்ணு புராணம். இது இருத்திமுன்றாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒரு நாள் அதிகாலையில் பராசர முனிவர் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு பத்மாசனத்தில் வீற்றிருந்தார். அப்போது மைத்ரேய முனிவர் அங்கு வந்து அவரை வணங்கிக் கூறலானார். என் குருநாதரே! அடியேன் சகல வேதங்களையும் சகல தரும சாஸ்திரங்களையும் வேதாகமங்களையும் தங்களமிடமிருந்தல்லவா கற்றறிந்தேன்? சாஸ்திரங்கள் யாவற்றையும் கற்ற அறிஞர்கள் அனைவரும் என்னைத் தங்களுடைய அனுக்கிரகத்தினாலே சகல சாஸ்திரங்களிலேயேயும் நல்ல பயிற்சி பெற்றவன் என்று சொல்வார்கள். தருமங்கள் அனைத்தையும் அறிந்தவரே! உலகம் உண்டான விதத்தையும் இனி உண்டாகப்போகும் விதத்தையும் நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் அருள் புரிய வேண்டும்! மேலும் இந்த உலகம் எல்லாம் எந்த வஸ்துவின் சொரூபமாக இருக்கிறது? எங்கிருந்து எப்படி உண்டாயிற்று? எப்படி எங்கே லயப்பட்டது? இனி எங்கே லயமாகும்? நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு எனும் ஐந்து பருப்பொருட்களில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்னும் பஞ்சபூதங்களின் நிலை என்ன? எதனால் அவை விளங்கும்? இவ்விஷயங்களையும் தேவதைகள் முதலானவருடைய உற்பத்தியையும், மலைகள், கடல்கள் இவற்றின் தோற்றத்தையும் பூமியிருக்கும் விதத்தையும் சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றின் நிலையையும் அளவுகளையும் தேவர்களின் வம்சங்களையும், மனுக்களையும், மனுவந்தாரங்களையும், மஹா கல்பங்களையும், நான்கு யுகங்களால் விகற்பிக்கப்பட்டவையான கல்பங்களின் பிரிவுகளையும் அவற்றின் முடிவு நிலைகளையும் சகல யுகதர்மங்களையும் தங்களிடமிருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஓ முனிவரில் உயர்ந்தவரே! தேவர்கள், அரசர்கள், முனிவர்கள் முதலானவர்களின் வரலாறுகளையும் வியாச முனிவர் வகுத்தருளிய வேதசாகைப் பிரிவுகளையும் பிராமணன் முதலிய வருணங்களின் குலதர்மங்களையும், பிரமச்சரியம் முதலான நான்கு ஆச்சிரமங்களின் தருமங்களையும் தங்களிடமே நான் கேட்க விரும்புகிறேன். வசிஷ்ட முனிவரின் மகனான சக்தியின் குமாரரே! இவ்விஷயங்கள் யாவற்றையும் எனக்கு கூறியருள தாங்கள் திருவுள்ளங்கொள்ள வேண்டும். இவ்வாறு மைத்ரேய முனிவர் பராசர முனிவரை வேண்டினார். அதற்குப் பராசர முனிவர் அவரை நோக்கிக் கூறலானார். தருமங்களையெல்லாம் அறிந்துள்ள மைத்ரேயரே! உலக உற்பத்தி முதலியவற்றை அறிந்துள்ள என் பாட்டனாரான ஸ்ரீவசிஷ்ட பகவான் எனக்கு அருளிச்செய்த முன் விருத்தாந்தத்தை நீர் எனக்கு மீண்டும் நினைப்பூட்டினீர். அதாவது முன்பு ஒரு சமயம் விசுவாமித்ரரால் ஏவப்பட்ட அரகன் ஒருவன் என் தகப்பனாரைப் பழித்தான் என்ற சங்கதியை அறிந்தேன். உடனே மிகவும் கோபம் அடைந்து அந்த அரக்கர்களை அழியச் செய்யும் படியான யாகம் ஒன்றைச் செய்யத் துவங்கினேன். அந்த யாகத்தினால் பல்லாயிரம் அரக்கர்கள் அழிந்தார்கள். அதைக்கண்ட என் பாட்டனாரான வசிஷ்ட முனிவர் பிள்ளாய் உன் கோபத்தை விட்டு விடு. அரக்கர்கள் மீது குற்றம் இல்லை. உன் தகப்பன் மாய்வதற்கு அப்படிப்பட்ட விதியிருந்தது. இத்தகைய கோபம் மூடருக்குத்தான் தோன்றுமே ஒழிய ஞானியருக்குக் கோபம் வராது குழந்தாய்! யாரால் யார் கொல்லப்படுகிறான்? ஒருவனால் மற்றொருவன் கொல்லப்படுவதில்லை. அவனவன் தான் செய்த பாவ புண்ணியங்களையே புசிக்கிறான். மனிதன் மிகவும் வருந்திச் சம்பாதித்த புகழையும் தவத்தையும் அவனுடைய கோபமானது அழித்து விடுகிறது. சொர்க்கம், மோட்சம் ஆகிய இரண்டையும் கொடுப்பதற்குக் காரணமாகிய கோபத்தை முனிவர்கள் அனைவருமே விட்டு விடுகிறார்கள்.

ஆகையால் பேரனே! நீ அந்தக் கோபத்திற்கு வசப்பட்டு விடாதே! எந்த விதமான அபராதமும் செய்வதறியாத பேதையரான அரக்கர்களில் அநேகர் இதுவரை எரிந்து போனது போதும்! இனி இந்த யாகத்தை நிறுத்தி விடு. பெரியோருக்குப் பொறுமையாக இருப்பதே சிறந்த ஆசாரமாகும்! என்றார் நானும் அவருடைய வாக்குக்கு மதிப்பளித்து என் யாகத்தை நிறுத்தி விட்டேன் அதனால் வசிஷ்ட முனிவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது பிரம்ம புத்திரரான புலஸ்திய முனிவர் அங்கு வந்தார். அவர் வந்ததும் என் பாட்டனார் அவருக்கு ஆசனமும், அர்க்கியமும் (இருக்கையும் திருவடி கழுவுதலும்) கொடுத்து உபசரித்தார். மைத்ரேயரே! புலசு முனிவருக்கு தமையனாரான அந்த புலஸ்திய முனிவர் என்னை நோக்கி பராசரர்! உனக்கு பெருங்கோபமும் வைரமும் இருந்துங்கூட குருவாக்கிய பரிபாலனத்திற்காக பொறுமையடைந்தாய். ஆகையால் இனிமேல் நீ சகல சாஸ்திரங்களையும் அறியக்கடவாய். கோபத்தால் நமது சந்ததியாரை அழியாமற்செய்த உன் பொறுமையின் பெருமையை பாராட்டி உனக்கு நாங்கள் வேறொரு வரந்தருகிறோம். அதாவது நீ புராண சம்ஹிதையைச் செய்யும் சக்தியுடையவனாகக் கடவாய்! தேவதையின் உண்மை இயல்புகள் அதாவது இது தான் மேலான தேவதை என்பதை நீ அறியக்கடவாயாக பிரவிருத்தி, நிவர்த்தி (முயற்சி, நீக்கம்) என்ற இருவகைக் கருமங்களிலேயும் உன் புத்தியானது எமது அனுக்கிரகத்தில் நிலைத்தும், சந்தேகமற்றும் விளங்குவதாக! என்று கூறினார். அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்த வசிஷ்ட முனிவர். என்னைப் பார்த்து பராசரா! புலஸ்தியர் அருளியவை உனக்குச் சித்தியாகட்டும்! என்றார்.

இவ்விதமாக மகாஞானியரான புலஸ்தியராலும் வசிஷ்டராலும் கூறப்பட்டவையெல்லாம் இப்போது நீர் கேட்ட கேள்விகளால் மீண்டும் என நினைவுக்கு வந்தன. மைத்ரேயரே! பெரியோரின் அருள் பெற்றதால் சிறப்பான ஞானம் பெற்ற நான் யாவற்றையும் உமக்குக் கூறுகிறேன். நன்றாகக் கேளும். புராணக்கருத்தின் படி பார்த்தால் உலகமானது ஸ்ரீ விஷ்ணுவினாலேயே உண்டாக்கப்பட்டு அவரிடத்திலே தான் இருக்கிறது. தொடர்புக்கும் முடிவுக்கும் அவரே தான் கர்த்தாவாகும். இந்த உலகங்கள் எல்லாம் அவராலேயே வியாபிக்கப்பட்டு அவருடைய சொரூபமாகவே இருக்கின்றன. அவரே தான் உலகம்! இவ்வாறு மைத்ரேய முனிவரின் கேள்விகளுக்கு பராசர மகரிஷி சுருக்கமாகப் பதில் சொன்னார்.

தொடரும்

சனி, 3 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள்  அருள் மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : ஜம்புகேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன் : அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் : வெண்நாவல்
தீர்த்தம் : நவ தீர்த்தங்கள்
ஆகமம் பூஜை  : சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜை
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருஆனைக்காவல், திருஆனைக்கா
ஊர் : திருவானைக்கா
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : திருநாவுக்கரசர்

துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே. திருநாவுக்கரசர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 60வது தலம்.  
      
விழா : பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், ஆடிவெள்ளி.  
      
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞான பீடமாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.  
      
திறக்கும் நேரம் : காலை 05:30 பகல் 01:00 மணி, மாலை 03:00 இரவு 08:30 மணி. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ச்சியாக திறந்திருக்கும். இந்நாட்களில், காலை 06:00 - 06:30, 08:00 - 09:00, 11:00 - 12:30, மாலை 05:00 - 06:00, இரவு 08:30- 09:00 ஆகிய நேரங்களில் மட்டும் சுவாமி, அம்பாள் சன்னதிகள் அலங்காரத்திற்காக அடைக்கப்படும்.

     
முகவரி : நிர்வாக அதிகாரி, அ/மி. ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில், திருவானைக்காவல்-620005, திருச்சி மாவட்டம். போன் : 91-431- 2230 257.
 
தகவல் : சுவாமி சன்னதிக்கு பின் புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை, ரோகிணியுடன் சந்திரன் இருக்கிறார். ஐந்து முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டாதேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் இங்கு குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த குபேர லிங்கம், ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது. ஆனி பவுர்ணமியில் இவருக்கு முக்கனி அபிஷேகம் நடக்கிறது.  
      
பெருமை : சிவன் வடிவில் அம்பாள் அம்பாள் வடிவில் சிவன்! பிரம்மா ஒரு முறை தான் படைத்த பெண்ணையே அடைய விரும்பினார். இதனால் அவருக்கு "ஸ்திரீ தோஷம்' உண்டானது. தோஷ நிவர்த்தி பெற சிவனை வேண்டினார். அவருக்கு அருள சிவன் கைலாயத்திலிருந்து கிளம்பினார். அப்போது அம்பிகை, தானும் வருவதாக கூறினாள். சிவன் அவளிடம் பிரம்மா பெண்கள் மீது மோகம் கொள்பவர் என்று சொல்லி அவளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். ஆனால் அம்பிகை சிவனிடம் நான் உங்களது வேடத்தில் வருகிறேன் நீங்கள் சேலை அணிந்து என் வேடத்தில் வாருங்கள்! என்றாள். சிவனும் ஏற்றுக்கொள்ள இருவரும் மாறு வேடத்தில் சென்றனர். சிவமும், சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையிலும் இந்த திருவிளையாடல் நிகழ்ந்தது. பின்னர் பிரம்மாவுக்கு இருவரும் பாவமன்னிப்பு வழங்கினர். இங்கு நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் போது சிவன், அம்பாள் இருவரும் மாறுவேடத்தில் பிரம்ம தீர்த்தத்ததிற்கு எழுந்தருளி பிரம்மாவிற்கு காட்சி தருகின்றனர். பிரம்மா அவர்களைத் தியானம் செய்யும் சமயம் என்பதால் அப்போது மேளதாளம் இசைக்கப்படுவதில்லை.

மாணவி அம்பாள்: சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்படுகிறாள். அகிலாண்டேஸ்வரி இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக்காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலை அணிந்து கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சன்னதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமாதா பூஜை செய்து விட்டு அம்பாள் சன்னதி திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவமிருந்ததாக ஐதீகம். எனவே இத்தலத்தில் ஆடி வெள்ளி திரு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிவெள்ளியன்று அதிகாலை இரண்டு  மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரெண்டு  மணி வரையில் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். சிவன், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய  அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.

நவ துளை ஜன்னல்: ஜம்புகேஸ்வரர் அமர்ந்துள்ள மூலஸ்தானம் எதிரில் வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. பக்தர்கள் இந்த துளை வழியே தான் சுவாமியை தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னல் மனிதன் தன் உடலிலுள்ள ஒன்பது வாசல்களையும் அடக்கி சிவதரிசனம் செய்ய வேண்டுமென்பதை உணர்த்துகிறது.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியில், அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு வைகாசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இங்கு சிவன் சன்னதியில் எப்போதும் நீர் ஊறிக்கொண்டிருக்கிறது. ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால் கருவறைக்குள் தண்ணீர் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். எனவே அன்னாபிஷேகம் செய்யவது சிரமம். வைகாசியில் தண்ணீர் குறைந்து ஈரப்பதம் மட்டுமே இருக்கும். எனவே அந்நேரத்தில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் லிங்கத்திற்கு விபூதிக்காப்பிடப்படுகிறது.

சித்தராக வந்த சிவன் : மதுரையைப் போல இத்தலத்திலும் சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இப்பகுதியை ஆண்ட மன்னன், கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை கட்டினான். அப்போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனாலும் அவனது மனம் போர் செய்வதில் லயிக்கவில்லை. அவன் சிவனை வேண்டினான். சிவன் விபூதிச்சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இதையறிந்த மன்னன் மகிழ்ந்தான். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் திருமதில் என்றும் பிரகாரம் விபூதி பிரகாரம் என்றும் அழைக்கப்படுகிறது. விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது. அன்னையை சாந்தப்படுத்தும் பிள்ளைகள் ஆரம்பத்தில் இங்கு அம்பாள் உக்கிரமாக இருந்தாள். பொதுவாக உக்கிரமான அம்பிகையை சாந்தப்படுத்த ஸ்ரீ சக்ரத்தில் அம்பாளின் ஆக்ரோஷத்தைச் செலுத்தி சாந்தப்படுத்துவர். ஆனால் இங்கு வந்த ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரத்துக்குப் பதிலாக இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்ரம் போல் உருவாக்கி அம்பாளுக்கு பூட்டி விட்டார். பின்னர் அம்பாள் சாந்தமானாள். உக்கிரமான அம்மாவை பிள்ளைகளான விநாயகர், முருகன் இருவரும் சாந்தப்படுத்தும் வகையில் அம்பாளுக்கு எதிரே விநாயகரையும் பின்புறம் முருகனையும் சங்கரர் பிரதிஷ்டை செய்தார். கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்னும் இருவர் தங்களில் யார் அதிகமாக சேவை செய்கிறார்கள் என்பதில் போட்டி வந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும் படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும் புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது. இதில் சிலந்தி, யானையில் தும்பிக்கைக்குள் புகுந்தது. இதில் சிவன், யானைக்கு மட்டும் முக்தி கொடுத்தார். சிலந்தி, யானையைக் கொல்ல முயன்றதற்காக மீண்டும் பிறக்கும் படி செய்தார். சிலந்தி, சோழ மன்னர் சுபவேதர், கமலாவதியின் மகனாகப் பிறந்தது. இவரே கோச்செங்கட்சோழ மன்னர் ஆவார். இம்மன்னரே தனது முற்பிறவிப் பயனால் யானைகள் புக முடியாத படி சிவனுக்கு மாடக்கோயில்கள் கட்டினார். இக்கோயிலையும் யானை புகாதபடி திருப்பணி செய்தார். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது. திருக்கல்யாணம் இங்கில்லை இக்கோயிலில் திருக்கல்யாணம் நடப்பதில்லை. சிவனை வேண்டி அம்பாள் தவமிருந்த போது அவளுக்கு சிவன் காட்சி கொடுத்தார். ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே இங்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் பள்ளியறை பூஜை கிடையாது. ஆனால் பள்ளியறை இருக்கிறது. இந்த பள்ளியறைக்கு இங்கு அருள் பாலிக்கும் சொக்கநாதர், மீனாட்சியே செல்கின்றனர். சிவன், அம்பாள் மட்டுமின்றி இங்குள்ள வேறு சுவாமிகளுக்கும் திருக்கல்யாணம் நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி தரும் அம்பிகை: வேதியர் ஒருவர் கவி இயற்றுவதில் வல்லமை பெற அகிலாண்டேஸ்வரியை வேண்டினார். அவருக்கு அருள அம்பாள் வெற்றிலை (தாம்பூலம்) போட்டபடியே சென்றாள். வேதியரிடம் நான் வெற்றிலை போட்டுள்ளேன். கோயிலுக்குள் உமிழ்வது தவறு. எனவே உம் வாயைத் திறக்கிறீரா? உமிழ்ந்து கொள்கிறேன் என்றாள். கோபமடைந்த வேதியர் அவளை விரட்டி விட்டார். அதே நாளில் கோயிலுக்கு வரதர் என்ற பக்தர் வந்திருந்தார். அவர் கோயில்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடையவர். கோயில் பாழ்படாமல் இருக்க எந்த தியாகத்தையும் செய்வேன் பெண்ணே! தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்றார். அம்பாளும் அப்படியே செய்ய அவர் பிரபலமான கவியானார். அவரே காளமேகப் புலவர் என பிற்காலத்தில் அழைக்கப்பட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையில் சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.

முருகன் பாதத்தில் அசுரன் : முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு உண்டாகக்கூடாது என்று முருகனிடம் வேண்டிக்கொண்டார். முருகனும் காமத்தை அசுரத்தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
இங்குள்ள சனிபகவான் குதிரை முகத்துடன் தனது தாயுடன் குழந்தை வடிவில் அமர்ந்துள்ளார். எனவே இவர் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். மேலும் சனியின் மனைவிகளான ஜேஷ்டாதேவி, நீலாதேவியும் குழந்தை வடிவில் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்தல வரலாறு : சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிட பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்ச பூத தலங்களில் "நீர்' தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சிவன் அவருக்கு காட்சி கொடுத்து நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர் அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார். நாவல் மரத்துக்கு "ஜம்பு' என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால் சுவாமி ஜம்புகேஸ்வரர் என பெயர் பெற்றார்.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

274 சிவாலயங்கள் : அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : வித்யூஜோதிநாயகி
தல விருட்சம் : கடம்பமரம்
தீர்த்தம் : சக்தி தீர்த்தம்
ஆகமம் பூஜை  :  காமிகம்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருக்கடம்பூர்
ஊர் : மேலக்கடம்பூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : சம்பந்தர், அப்பர்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் தன் கடன் அடியேனைத் தாங்குதல் என் கடன்பணி செய்து கிடப்பதே. திருநாவுக்கரசர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 34வது தலம்.

விழா : சிவராத்திரி, அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், புரட்டாசியில் சம்பந்தர் ஞானப்பால் அருந்திய உற்சவம்.  
      
சிறப்பு : இங்குள்ள சிவலிங்கம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாகும். பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும். ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பு. சனீஸ்வரருக்கு ஆரம்ப காலத்தில் கழுகு தான் வாகனமாக இருந்தது. ராமரின் தந்தையான தசரதர், அவருக்கு கழுகுக்கு பதிலாக காகத்தை கொடுத்தார். இங்குள்ள சனீஸ்வரர் கழுகு வாகனத்துடன் காட்சி தருகிறார். எனவே இவர் ராமாயண காலத்திற்கும் முற்பட்டவர் என்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை 07:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 05:30 மணி முதல் இரவு 07:30 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துச் சென்று சிவனை தரிசிக்கலாம். அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன் : +91- 264 638, 93456 56982. 
     
தகவல் : தேர் வடிவில் அமைந்த கோயில் இது. விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. குஞ்சிதபாத நடராஜர் சற்றே பின்புறமாக சாய்ந்தபடி சிவகாமியுடன் இருக்கிறார். கோஷ்ட சுவரில் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு சிற்பமாக உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்த நாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருப்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசியன்று இவருக்கு பூஜைகள் நடக்கிறது. பின்புற சுவரில் மகா விஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது சிறப்பு. இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருக்கின்றனர். இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவரை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார். கோஷ்டசுவரிலேயே கங்காதரர் ஆலிங்கன மூர்த்தி ஆகியோரும் இருக்கின்றனர். விமானத்தில் தெட்சிணாமூர்த்தி புல்லாங்குழல் வீணையுடன் இருக்கும் காட்சியை தரிசிக்கலாம். இத்தலவிநாயகரின் திருநாமம் ஆரவார விநாயகர்.

பிரார்த்தனை : செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய தலம். இங்கு சஷ்டியப்த பூர்த்தி, ஆயுள் விருத்தி ஹோமம் அதிகளவில் செய்து கொள்கிறார்கள்.
     
ஸ்தல பெருமை : நவக்கிரகங்கள் ஒவ்வொருநாளும் தங்களுக்கான நாளில் இங்கு சிவனை வழிபடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் சிவன் ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகங்களுக்கு உகந்த நிறங்களில் வஸ்திரம் அணிந்து தரிசனம் தருகிறார். எனவே இத்தலம் கிரகதோஷ பரிகார தலமாகவும் இருக்கிறது. அம்பாள் சன்னதிக்கு எதிரே நவக்கிரக சன்னதி இருக்கிறது.
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும், உச்சிக்காலத்தில் யானையுடன் லட்சுமியாகவும், மாலையில் சூலாயுதத்துடன் துர்க்கையாகவும் காட்சி தருகிறாள். இதனால் இவளை வித்யஜோதிநாயகி (வித்யா - சரஸ்வதி, ஜோதி - லட்சுமி, நாயகி - துர்க்கை) என்று அழைக்கின்றனர். இவளுக்கு ஜோதிமின்னம்மை என்றும் பெயர் உண்டு. திருமண புத்திர தோஷம் உள்ளவர்கள் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கு வளையல் வைத்து  வழிபடுகிறார்கள். திருநாவுக்கரசர் என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று இத்தலத்தில் தான் பதிகம் பாடினார். ரிஷபதாண்டவர் இத்தலத்தில் ரிஷபதாண்டவமூர்த்தி நந்தி மீது நடனமாடிய கோலத்தில் பத்து கைகளுடன் உற்சவராக இருக்கிறார். இவருக்கு பிரதோஷத்தின் போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன. பிரகாரத்தில் உள்ள தெட்சிணா மூர்த்தி நந்தியின் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.

ஆரவார விநாயகர் : இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவருக்கு ஆரவார விநாயகர் என்று பெயர். அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும் தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடது புறமாக சாய்த்த படி கோப முகத்துடன் காட்சி தருகிறார்.

செவ்வாய்தோஷ தலம்: சூரனை அழிக்க செல்லும் முன் முருகன் இங்கு அம்பாளை வணங்கி வில் வாங்கிச்சென்றார். எனவே இங்குள்ள உற்சவர் முருகன் கையில் வில்லுடன் இருக்கிறார். செவ்வாய் கிரகம் தனக்கு அதிபதியான முருகனை இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இதன் அடிப்படையில் இங்கு செவ்வாய் கிரகம் உற்சவராக இருக்கிறார். கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா, சிவனை பூஜித்த படி இருக்கிறார். இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருக்கின்றனர். அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. நடராஜரின் நடனத்தை கண்ட மகிழ்ச்சியில் அவரை தன் தலை மீது வைத்து கொண்டாடினாராம் பதஞ்சலி. இதனை இச்சிற்பம் விளக்குவதாக சொல்கிறார்கள். அருகிலுள்ள துர்க்கை கட்டை விரல் இல்லாமல் சிம்ம வாகனத்துடன் இருக்கிறாள். இவளுக்கு கீழே மேரு மலை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் இருக்கிறது.  
      
ஸ்தல வரலாறு : பாற்கடலில் அமுதம் கடைந்த தேவர்கள் விநாயகரை வணங்காமல் அதனை பருக சென்றனர். இதைக்கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி அமுதகலசத்தை எடுத்து சென்று விட்டார். அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார். தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும் படி வேண்டினர். அவர் சிவனிடம் வேண்டும் படி கூறினார். அதன் படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள் புரிந்தார். இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார். தேவர்களின் தாயான அதிதி தன் மக்களுக்கு அமிர்தம் கொடுத்து அருள் செய்த அமிர்தகடேஸ்வரரை தொடர்ந்து வணங்கி வந்தார். அவர் இதற்காக தினசரி தேவலோகத்திலிருந்து இங்கு வருவதை இந்திரன் விரும்பவில்லை. எனவே இங்குள்ள சிவனை கோயிலோடு இந்திரலோகத்திற்கு எடுத்து செல்ல எண்ணி கோயிலை தேர் வடிவில் மாற்றினான். கோயிலை இழுத்துச் செல்ல முயன்றான். அப்போது விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.
விநாயகரின் செயலை அறிந்த அவன் அவரிடம் தான் தேரை எடுத்து செல்ல வழிவிடும் படி வேண்டினார். விநாயகர் அவனிடம் கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்றார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கம் செய்தான். ஆனால் எல்லா லிங்கங்களும் பின்னப்பட்டன. தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வணங்கினான். அவர் ஆயிரம் முறை தன் நாமம் சொல்லி ஒரு லிங்கத்தை செய்யும் படி கூறினார். அதன் படி இந்திரன் ருத்ரகோடீஸ்வர லிங்கத்தை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதாக சொல்லி அதிதிக்கு பதிலாக நீயே இங்கு வந்து என்னை தரிசிக்கலாம் என்றார். இந்திரனும் ஏற்று கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான். தற்போதும் தினசரியாக இங்கு இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.
----------------------
274 சிவாலயங்கள் : அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : சவுந்தர்யேஸ்வரர்
அம்மன் : திரிபுரசுந்தரி
தல விருட்சம் :  புன்னை
தீர்த்தம் : செங்கழுநீர்
பழமை : 2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருநாரையூர்
ஊர் : திருநாரையூர்
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
      
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை யூர்மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம் ஆவினில் ஐந்துங்கொண் டாட்டு கந்தான் அடங்கார் மதில்மூன்றும் ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவாமே. திருஞானசம்பந்தர்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 33வது தலம்.  
      
விழா : வைகாசி திருவாதிரை, ராஜராஜனுக்கு பதிமூன்று நாள் திருவிழா, விநாயகர் சதுர்த்தி.  
      
சிறப்பு : முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள் பாலிக்கிறார்.  
      
திறக்கும் நேரம் : காலை மணி 06:00 முதல் 12:00 மணி வரை, மாலை 04:30 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும். 
அருள் மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர் : 608 303, காட்டு மன்னார் கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்:+91- 94425 71039 
     
தகவல் : மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.  
      
பெருமை : நம்பியாண்டார் நம்பியின் தந்தை இங்குள்ள பிள்ளையாருக்கு தினமும் நைவேத்யம் செய்வார். அவருடன் தினமும் வரும் நம்பியாண்டார் நம்ப இதைப் பார்ப்பார். அப்பா வைக்கும் நைவேத்தியத்தை பிள்ளையார் சாப்பிடுவாரா? என அவருக்கு திடீரென சந்தேகம் வந்தது. தன் தந்தைக்கு பின் நம்பி கோயிலுக்கு பூஜை செய்யும் காலம் வந்தது. அப்போது தன் தந்தையை போல் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து பிள்ளையாரை சாப்பிடும் படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் சாப்பிட்டார்.
இதை நம்பாத மன்னன் ராஜராஜ சோழன் பலவகையான பலகாரத்துடன் நேரில் இக்கோயிலுக்கு வந்து பிள்ளையாருக்கு நம்பி மூலம் நைவேத்தியம் வைக்க கூறினான் . ஆனால் பிள்ளையார் சாப்பிடவில்லை. அப்போது நம்பி பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை பாசுரங்களை மனமுருகப் பாடினார். மனமிரங்கிய பிள்ளையார் ராஜராஜனின் நைவேத்தியத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். மூவர் பாடிய தேவாரப்பாடல்களைத் தொகுத்தவரும் இவரே. இவரது சிலை கையில் கலசம் ஏந்திய நிலையில் உள்ளது. தேவாரத்தை தொகுக்க பாடுபட்ட ராஜராஜ சோழனின் சிலையும் உள்ளது.
முருகப்பெருமானுக்கு ஆறு படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி  விநாயகரின் ஆறாவது படை வீடாகும்.  
      
ஸ்தல வரலாறு : கோபக்காரரான துர்வாச முனிவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து கொண்டிருந்தார். தனது தவத்திற்கு இடையூறு செய்த கந்தர்வன் ஒருவனை நாரையாகும் படி சாபமிட்டார். கந்தர்வன் தவறை மன்னிக்கும் படி வேண்டினான். முனிவர் மறுத்து விட்டார். எனவே இத்தல சிவனிடம் முறையிட்டு கதறினான். சிவன் அவனிடம் தினமும் காசியிலிருந்து இத்தலத்துக்கு தீர்த்தம் கொண்டு வந்து தன்னை வழிபட்டால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். நாரை வடிவிலிருந்த கந்தர்வனும் தன் சக்தியால் அதிவேகத்தில் பறந்து சென்று தீர்த்தத்தை அலகில் சுமந்து வந்து அபிஷேகம் செய்தான். இதன் பிறகு சிவன் நாரைக்கு முக்தி கொடுத்தார்.  
274 சிவாலயங்கள் : அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : பதஞ்சலீஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்மன் : கோல் வளைக்கையம்பிகை
தல விருட்சம் : எருக்கு
தீர்த்தம் : சூர்யபுஷ்கரிணி
ஆகமம் பூஜை  : சிவாகமம்
பழமை : 1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் :  திருக்கானாட்டுமுள்ளூர்
ஊர் :  கானாட்டம்புலியூர்
மாவட்டம் :  கடலூர்
மாநிலம் :  தமிழ்நாடு
பாடியவர்கள் : சுந்தரர்
      
விடை அரவக்கொடி ஏந்தும் விண்ணவர்தம் கோனை வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் அடியிணையும் திருமுடியும் காண அரிதாய சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் உடைஅவிழக் குழல்அவிழக் கோதை குடைந்தாடக் குங்குடங்கள் உந்திவரும் கொள்ளிடத்தின் கரைமேல் கடைகள் விடுவார் குவளை களைவாருங் கழனிக் கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே. சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 32வது தலம்.
 
விழா : சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.  
      
சிறப்பு : இத்தலத்தில் அம்பாள் கோல்வளைக்கையம்பிகை தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இவளை அம்புஜாட்சி கானார்குழலி என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். சுந்தரர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியுள்ளார். இவளது சன்னதிக்கு வலப்புறத்தில் சனீஸ்வரர் தனிச்சன்னதியில் இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.  
      
திறக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை திறந்திருக்கும். பிற நேரங்களில் அர்ச்சகரை அழைத்துக்கொண்டு சுவாமியை தரிசனம் செய்யலாம். அருள் மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர் : 608 306, கடலூர் மாவட்டம். போன் : +91& 4144 & 208 508, 208091, 93457 78863. 
     
தகவல் : கோயில் அமைப்பு கோஷ்டத்தின் பின்புறம் மகாவிஷ்ணு நின்ற கோலத்தில் இருக்கிறார். இவருக்கு நேரே இருக்கும் முருகன், வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். தன் மாமாவிற்கு மரியாதை செய்யும் விதமாக முருகன் நின்ற கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் வள்ளி காதில் மூதாட்டிகள் அணியும் பாம்படம் (தண்டட்டி) அணிந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இங்குள்ள தெட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர், கஜலட்சுமிக்கு சன்னதிகள் உள்ளது. முன் மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
 
பிரார்த்தனை : நன்றாக பணி செய்தும் சரியான மரியாதை கிடைக்காமல் இருப்பவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பணி உயர்வு, இடமாற்றம் வேண்டுபவர்களும் சுவாமியை வழிபடலாம்.
     
பெருமை : கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு மதூகவனம் என்றும் பெயருண்டு. கருவறையில் சிவன் சிறிய லிங்கமாக இருக்கிறார். தமிழ் வருடப்பிறப்பின் போது மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளியை சூரியன் மீது பரப்பி பூஜிக்கிறார். தண்டகாரண்ய முனிவர்கள் இங்கு சிவனை வழிபட வந்த போது மணல்கள் எல்லாம் லிங்கங்களாக அவர்களுக்கு தெரிந்ததால் வெளியில் இருந்தே சிவனை தரிசித்து விட்டு சென்றார்களாம். எனவே இத்தலத்து மண்ணை மிகவும் விசேஷமானதாக கருதுகிறார்கள். மண்ணை எடுத்து சென்றால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள நடராஜர் தனது இடது காலை முன்புறமாக தள்ளி தூக்கி நிறுத்தி உடலை பின் புறமாக சாய்த்த படி இருக்கிறார். பதஞ்சலிக்காக சிவன் மகிழ்ந்து நடனமாடியதால் இவ்வாறு காட்சியளிப்பதாக சொல்கிறார்கள். பதஞ்சலி நடராஜர் சன்னதிக்கு எதிரே நால்வருடன் சேர்ந்து இருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. இத்தலத்திற்கு அருகிலேயே வியாக்ரபாதர் வழிபட்ட ஓமாம்புலியூர் தலம் இருக்கிறது. ஒரே வரிசையில் சிதம்பரம், கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூர் ஆகிய மூன்று தலங்கள் அமைந்திருப்பது சிறப்பு. வரப்பிரசாதியான இந்த அம்பாளுக்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்கள் அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி வளையல்கள் அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால் குழந்தை பேறு கிடைப்பதாக நம்புகிறார்கள்.
 
ஸ்தல வரலாறு : பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகா விஷ்ணுவை தாங்கும் ஆதிசேஷன் சிவனின் நடன தரிசனம் காண விரும்பி பதஞ்சலி முனிவராக அவதாரம் செய்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சி காட்டியருளினார். ஒரு சமயம் பதஞ்சலி நடராஜரை தரிசித்த போது அவரை இத்தலத்திற்கு வரும் படி கூறவே இத்தலத்திற்கு வந்தார் பதஞ்சலி. சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு சிவன் தன் நடனத்தை காட்டி அருள் செய்தார். அப்போது சிவன் பதஞ்சலியிடம் என் தாண்டவங்களை கண்டு மகிழ்ந்தீரா? இப்போது திருப்திதானே! என்றார். தங்கள் நடனம் என்றும் எனக்கு சலிக்காதது. அந்நடனத்தை நான் என்றும் தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் பதஞ்சலி. சிவன் அவர் விரும்பிய படியே பல தலங்களில் தான் தரிசனம் தருவதாக கூறினார். மேலும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது பெயரையே தனக்கும் சூட்டி பதஞ்சலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

மூலவர் : அமிர்தகடேஸ்வரர்
அம்மன் : அபிராமி
தீர்த்தம் : அபிராமி அமிர்த புஷ்கரிணி
பழமை : 50 வருடங்களுக்குள்
ஊர் : சேலையூர் கேம்ப்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

திருவிழா : மாசி மகம், சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம்.  
      
தல சிறப்பு : இங்கு சுவாமியும், அம்பாள் இருவருமே சுயம்பு என்பது சிறப்பு  
      
திறக்கும் நேரம் : காலை 08:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.  
அருள் மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் சேலையூர் கேம்ப், சென்னை.
     
தகவல் : கோயிலுக்குள்ளாகவே அபிராமி அமிர்த புஷ்கரிணி(திருக்குளம்) அமைந்துள்ளது. சுற்றுச்சுவர்களில் கங்கை முதல் காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகளை அமைத்து, அந்த நதிச் சிலைகளிலிருந்து நீர் கொட்டுவது போல அமைத்துள்ளார்கள். வருடந்தோறும் மாசி மகத்தன்று இந்த நதிகளுக்கு சிறப்பாக விழாவும் கொண்டாடுகிறார்கள்.  
     
பெருமை : மாசி மகத்தன்று பதினெட்டு நதிகளின் புனித நீர் கொணரப்பட்டு, ஹோமங்கள் வளர்த்து, பதினெட்டு குடங்களில் உள்ள தீர்த்தத்தால் பதினெட்டு நதி தேவதைகளுக்கும் தனித்தனியாக பூஜை செய்து, பின்னர் இந்த பதினெட்டு நதி நீரை திருக்குளத்தில் கலக்கிறார்கள். இதன்பின்னரே பக்தர்கள் பதினெட்டு நதிகளிலும் தனித்தனியாக கொட்டும்  தீர்த்தத்தில், வரிசையாக குளத்தைச் சுற்றி நீராடுகிறார்கள். நிறைவாக பதினெட்டு நதி நீரும் கலந்துள்ள இந்தத் திருக்குளத்தில் நீராடுகிறார்கள். பின்னர் சிவனையும் அம்பாளையும் வணங்கி அர்ச்சனை செய்தல் சிறப்பு. ஸ்நானம் செய்ய இயலாத பக்தர்கள் தலையில் இந்த நதி நீரை ப்ரோக்ஷித்துக் கொள்ளலாம். திருக்கடையூரில் நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி ஹோமம் போன்று இங்கும் மாதத்துக்கு நான்கு ஐந்து சஷ்டியப்த பூர்த்தி ஹோமங்களை அவரவர் வசதிக் கேற்ப எளிமையாக நடத்துகிறார்கள்.

அபிராமிக்குச் சிறப்பானது தை அமாவாசை. அன்று மாலை 04:30 முதல் 05:00 க்குள் அபிராமி அந்தாதி பாட ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் கூடை புஷ்பம் அம்பாளுக்கு அபிஷேகமாகச் சமர்ப்பிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். பாராயண நிறைவில் அம்மனுக்கு ஒன்பது வகையான பதார்த்தங்கள் நைவேத்யம் செய்விக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அன்னை மிகச்சிறந்த வரப்பிரசாதி. இங்குள்ள அம்பாள் ஒரு அடியை முன்னே எடுத்து வைத்து நமக்கு அருள்வது போல் இருக்கும் காட்சி ஒரு சிறப்பம்சம். அம்பாளை ஒருதரம் பிரதக்ஷிணம் வந்தாலே ஷோடச மண்டபத்தில் அமைத்திருக்கும் ஷோடச லக்ஷ்மிகளையும் வலம் வந்த பலன் உண்டு. வெள்ளிக் கிழமைகளில் இந்த ஷோடச லக்ஷ்மிக்கு சிறப்பு அர்ச்சனையும் உண்டு.
 
ஸ்தல வரலாறு : 1970-ல் காஞ்சி மஹா பெரியவர் சென்னை விஜயம் செய்த போது இவ்வூரில் பழங்காலச் சிலைகள் புதைந்துள்ளன. அவற்றைக்கண்டு பிடித்துக் கோயில் கட்டுங்கள் என்று அருளாசி வழங்கக் கிடைத்தது தான் இந்த கோயில். இக்கோயில் இருந்த இடம் முன்னர் மண்மேடாக இருந்தது. அதை அகற்றும் போது அமிர்தகடேஸ்வரர் மூல விக்கிரகம் கிடைத்தது. அருகில் இருக்கும் முத்தாலம்மன் கோயிலிலும் அச்சமயம் பல சிலைகள் கிடைத்தன. அதில் அன்னை அபிராமியின் விக்கிரகமும் கிடைத்தது. சிலைகள் பல கிடைத்தமையால் சிலையூர் என வழங்கப்பட்டுவந்த இந்த ஊர். நாளடைவில் சேலையூராக மாறிவிட்டது. 1972 ஆண் ஆண்டு கிராமப் பெரியோர்களால் முதலில் அபிராமி அம்மன் கோயிலும், அமிர்தகடேஸ்வரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.