ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2019

விஷ்ணு புராணம் {பிரபஞ்ச உற்பத்தி} பகுதி இரண்டு

மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி அதன் முக்கிய விஷயமான ஸ்ரீவிஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்கள விக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும் படியான ஜயசாலியான ஸ்ரீ மகா விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைக்கும் போது ஹிரண்யகர்ப்ப ரூபியாகவும், காக்கும் போது ஹரி ரூபியாகவும், சங்கரிக்கிற போது சங்கர ரூபியாகவும் இருந்து வழிபடுவோருக்கு விடுதலையளிப்பவருமான ஸ்ரீ வாசுதேவருக்கு என் வணக்கம் உரியதாகுக! ஒன்றாயும் பலவுமான சொரூபமுள்ளவராயும் காரணவஸ்தையிலேயே ஒன்றாய் சூட்சுமமுமாய் அவ்யக்தமுமான ரூபத்தையும் காரியாவஸ்தையிலே அநேகமாய் ஸ்தூலமாய், வியக்தமுமான ரூபத்தையும் உடையவராகி அனாதியான பிரகிருதி வாசனையாலே கட்டுப்பட்ட சேதனங்களுக்கெல்லாம் மோட்ச காரணமான ஸ்ரீ விஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக! படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றுக்கு மூலமாய் நிமோஷான் மேஷ சூரியகமனாதி சகல பதார்த்த ஸ்வரூபமான காலத்தையே தனது சரீரமாக உடையவராயும் அந்தக்காலத்துக்குட்படாத மேன்மையான சொரூபமுடையவராயும் சர்வ வியாபகருமானவருக்கு என் வணக்கம் உரியதாகுக! பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் ஆதி சூட்சுமத்துக்கும் சூட்சுமமான ரூபமாய் எல்லாவற்றினுள்ளும் அந்தரியாமியாய் பிரகிருதி சம்பந்தத்தினாலே குற்றமடையாமல் என்றும் உண்மையான ஞானத்துக்குரியவராய் கல்யாண குணங்களால் புருஷோத்தமர் என்று வழங்கப்படுபவரான எம்பெருமானைச் சேவித்தேன். தெண்டனிட்டேன். அதன் பிறகு இதனைச் சொல்லுகிறேன்.

பரமார்த்தமாக விசாரிக்குமிடத்தில் சுத்தஞான சொரூபமாய், அஞ்ஞானம், தூக்கம் ஆகியவை இல்லாத அத்தியந்த நிர்மலராய் அனாதிப் பிரகிருதி வாசனையினால் உண்டான பிரமிப்பினால் தேக இந்திரியாதிகளை ஆன்மாவாக நினைப்போருக்கு தேவ, மனுஷ்யாதி ரூபமாகத் தோன்றுபவராய், சேதனங்களிலெல்லாம் வியாபித்து, ஜகங்களைக் கிரகித்து, தனது சங்கல்ப மாத்திரத்தாலேயே, சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரங்களைச் செய்து கொண்டு தன் திருவுளத்தாலல்லது கருமவசத்தினாலே பிறப்பு இறப்பில்லாதவருமான ஸ்ரீவிஷ்ணு பகவானை தக்ஷப்பிரஜாபதி முதலிய முனிவர்கள் சேவித்து வணங்குகிறார்கள். பிறகு அவர்கள் உலகத்துக்கெல்லாம் படைப்புக் கர்த்தராயும் எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவராயும் யாவற்றின் உற்பத்தி நாசம் முதலியவற்றை அறிந்த உலகத் தந்தையாகவும் விளங்கும் பிரம்மாவினிடம் கேட்க அவர் அருளியதைச் சொல்கிறேன். பிரம்மதேவன் அருளியதை கேட்டறிந்தவர்களான தக்ஷர் முதலிய முனிவர்கள் உள்ளத் தூய்மையுடன் நர்மதை நதிக்கரையில் ஆட்சி புரிந்து வந்த புருகுத்சன் என்ற மன்னனுக்கு தாம் பிரம்மனிடம் கேட்டவற்றைக் கூறினார்கள். அதை அந்த மன்னன் சாரஸ்வதன் என்ற முனிவருக்கு உபதேசித்தான். அந்த மாமுனிவரின் திருவருளால் நான் அவற்றை அறிந்தேன். இவ்விதமாக ஆசாரிய பரம்பரை ரீதியில் நான் அறிந்து இந்த மகா புராணத்தை விளக்கமாக உமக்குச் சொல்கிறேன்.

மைத்ரேயரே! சொரூப குணங்களின் மேம்பட்ட லோகாதிபதிகளுக்குள்ளே உயர்ந்தவர்களான பிரம்மாதிகளில் உயர்ந்தவரும் தன்னை விட உயர்ந்தோரில்லாத வருமாய்ப் பரமாத்மாவாய் சேதனா சேதனங்களுக்கெல்லாம் தானே ஆதாரமாய் தனக்கு வேறெதுவும் ஆதாரமில்லாதவராய் தன்னிடத்திலே தானிருப்பவராய் தேவ மனுஷ்யாதி ஜாதிகளையும் கறுப்பு வெளுப்பு முதலிய வர்ணங்களையும் கிரியைகளையும் திரவியங்களையும் சொல்கின்ற இயல்புகள் இல்லாதவராய் குறைதல். விநாசம், திரிதல், வளர்தல், பிறப்பு என்ற விவகாரங்களை விட்டிருக்கையால் சர்வகாலங்களிலும் அப்பிரமேயங்களான ஞானம், சக்தி, தேஜஸ், பலம் முதலிய ஷட்குண சொரூபத்தோடே இருப்பவர் என்று சொல்லக்கூடியவராய் தோனா சேதனங்கள் யாவற்றிலும் மேலும் கீழும் உள்ளும் புறமும் பக்கமும் தான் வசித்துக் கொண்டு சேதனா சேதனங்களும் தன்னிடத்தில் வசிக்கத்தக்கதாகிய சர்வலோக வியாபகமான சொரூபமுடையவராய் ஒன்றிலும் ஒட்டாமல் எல்லாமே தன்னால் விளங்கும் படிப் பிரகாசிப்பவராகையால் ஸ்ரீ வாசுதேவர் என்ற வேதாந்த அறிஞர்கள் கொண்டாடும்படியிருக்கிறார். சொரூபத்திலும் குணத்திலும் பெருமையுடையவர் ஆகையால் பிரமம், பரமன் என்றும் சொல்லப்பட்டு நித்தியனும் ஜனனரகிதனும் அட்சரனும் எப்பொழுதும் ஒரே விதமான சொரூபனுமாய் துக்கம் அஞ்ஞானம் முதலிய ஈன குணங்களற்றவராகையினாலே நிர்மலராய் தோன்றுவதும் தோன்றாததுமான சகல லோகங்களையும் சரீரமாகக் கொண்டவராய் புருஷ ரூபமாயும் கால ரூபராயும் இருக்கிற பரப்பிரம்மம் என்று சொல்லப்படும் பகவான் ஒருவர் உண்டல்லவா? அந்தப் பிரம்மத்துக்குச் சேதனமான க்ஷேத்திரக்கியன் முக்கிய சரீரம்.

அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும் சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும். அது எப்படியெனில் வியக்தமான சராசரங்களும் அவ்வியக்தமான பிரகிருதியும் சேதனமான க்ஷேத்ரக்கியனும் களாகாஷ்டாதி ரூபமானகாலமும் ஸ்ரீ விஷ்ணுவினாலேயே தாங்கப்பட்டும் ஆளப்பட்டும் இருப்பதால் அவருக்கே சொரூபமாக இருக்கும். சகல இஷ்டங்களும் நிறைந்துள்ள அவருக்குச் சிருஷ்டி முதலியவற்றை ஏன் செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பீராயின் அதற்கு சொல்கிறேன். விளையாடும் பாலகனுக்கு அந்த விளையாட்டே பயனுவது போல பரமாத்மாவுக்குச் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் முதலியவை விலைகளேயன்றி வேறு பயன் கிஞ்சித்தும் இல்லை என்று அறிவீராக.

இனிமேல் படைப்புக் கிரமத்தைக் கேளுங்கள் : எம்பெருமானுக்குச் சரீரம் என்று எதைச் சொன்னேனோ அந்த அவ்வியக்தமானது பிரகிருதி என்றும் பிரதானம் என்றும் மனு முதலானவர்களால் சொல்லப்படுகின்றது. அது சேதனா சேதனங்கள் அடங்கியது ஆகையால் நித்தியமாய். அளவில்லாததாய் தான் அசேதனமாகியும் மரங்களிடத்தில் அக்கினியிருப்பது போலத் தன்னிடத்திலே சேதனங்களான சீவகோடிகள் எல்லாம் இருக்கப்பெற்று அக்ஷயமுமாய் அப்பிரமேயமுமாய் பகவானேயல்லாது வேறு ஒரு ஆதாரமுமற்றதாய், நிச்சலமாய், சப்த, ஸ்பரிச, கந்த, ரூப, ரச, கந்தங்கள் இல்லாததாய், சத்துவ, ரஜஸ், தாமச குணத்துமகமாய், ஜகத்துக்குக் காரணமாய் காரணம் உற்பத்தி, விநாசம் என்ற இம்மூன்றும் இல்லாததாக இருக்கும்.

இந்த சிருஷ்டிக்குப் பூர்வத்தில் மகாப்பிரளயமானவுடனே அதனாலேயே யாவும் வியாபிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயரே! வேதாந்தத் தத்துவ பிரமவாதிகள் பிரதானத்தை தெரிவிப்பதான இந்தப் பொருளையே சொல்வார்கள். எப்படியெனில் அப்பொழுது பகலும் இரவும் ஆகாயமும், பூமியும், காற்றும், நீரும், சூரிய சந்திராதி ஜோதிகளும் இருளும், சாத்துவிக, தாமச, ராஜசகுண விலாசங்களும் மற்றுமுண்டான வஸ்துக்கள் ஒன்றும் இல்லாமல் மூலப்பிரகிருதி ஒன்று மட்டுமே சமஷ்டி புருஷ ரூபமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேம்பட்டதான அந்த ஸ்ரீ விஷ்ணு ஸ்வரூபத்தினின்று பிரதானம் என்கிற பிரகிருதியும் புருஷன் என்கிற ஆத்துமாவும் உண்டாகி சிருஷ்டிக்கு உபயோகமான சேர்க்கையில்லாதவைகளாய் அந்த எம்பெருமானுடைய எந்த ரூபத்தினால் தரிக்கப்பட்டிருந்தனவோ அது அவருக்குக் காலம் என்கின்ற பெயரையுடையதான ஒரு சொரூபமாக இருக்கும். மைத்ரேயரே! வியக்தமான மகத்தகங்காராதிகள் அந்தப் பிரகிருதியில் இருக்கும். பிரகிருதியும் பரமாத்மாவிடத்தில் லயப்பட்டதனால் மகாப்பிரளயத்துக்குப் பிராகிருதப் பிரளயம் என்றும் பெயருண்டு. அந்தக் காலம் அனாதியானது. அந்தக் காலத்துக்கு எப்போதும் முடிவில்லாமையினாலே சிருஷ்டி ஸ்திதி, சங்காரங்கள் அவிச்சின்ன பிரவாக ரூபமாய்ப் பிரவர்த்திக்கின்றன.

மைத்ரேயரே! பிரகிருதி சமகுணமாகவும் புருஷன் வேறாகவும் இருக்குமிடத்தில் விஷ்ணுவின் ஸ்வயரூபமான காலமானது சிருஷ்டிக்கு அனுகூலமாகப் பிரவர்த்திக்கிறது. பிறகு பரப்பிரமமும் பரமாத்மாவும் செகன்மயனும் சர்வக்தனும் சர்வபூதேஸ்வரனும் சர்வாத்மகனும் பரமேஸ்வரனுமான ஸ்ரீஹரி தன்னிச்சையினாலேயே லீலார்த்தமாகப் பிரகிருதி புருஷர்களிடத்தில் பிரவேசித்து ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வில்லாமல் சமமாக இருக்கிற சத்துவ, ராஜஸ, தாமச குணங்களுக்கு வைஷம்மியங்களைக் கற்பித்து பிரகிருதி புருஷர்களுக்குச் சலனமுண்டாக்கி அருளினார். எப்படி வாசனையானது அதிகம்பீரமான மனதுக்கு தன் சான்னித்யத்தினாலேயே விகாரத்தை உண்டு பண்ணுகிறதே அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது அல்லாது யாதொரு தொழிலையும் செய்வதில்லையோ அது போலவே பரமேஸ்வரன் தன் சான்னித்ய விசேஷத்தாலேயே பிரகிருதி புருஷர்கள் பிரபஞ்சத்தைப் படைப்பிக்கக் கலக்குகிறான். வாசனையானது மனோவிகாரத்துக்கு நிமித்தம். பரமாத்மாவோ பிரபஞ்சத்துக்கு நிமித்தகாரணம் மட்டுமல்ல தானே சலனமுண்டாக்குகிறவனாய் சலிப்பிக்கப்படுவது மான பிரகிருதி புருஷ ஸ்வரூபமாகத் தானே ஆகின்றான். ஆகையால் உபாதான காரணமும் அவனே! சூட்சும ரூபமும் ஸ்தூல ரூபமுமான பிரகிருதியும் வியஷ்டி சமஷ்டி ரூபமான பிரம்மாதி ரூபங்களும் வியக்தமாயும் அவ்வியக்தமாயும் இருக்கின்ற பிரபஞ்சமும் மூலப்பிரகிருதியும் சர்வேசுரனாய் புருஷோத்தமானாயிருக்கின்ற விஷ்ணுவின் ஸ்வரூப மாகையினாலே காரியமான செகத்தும் அவனன்றி வேறல்ல. இது நிற்க.

மைத்ரேயரே! ஜீவனுடைய கர்மவசத்தினாலே சலனப்பட்ட பிரகிருதியினின்றும் சத்துவ, ராஜச, தாமஸ, குண வைஷம்மிய ரூபமான மகத்தத்துவம் உற்பத்தியாயிற்று. பராத்பரனான ஸ்ரீ விஷ்ணுவினுடைய சரீரமான பிரகிருதியானது. தன்னால் உண்டான மகத்தத்துவத்தை மூடிக்கொண்டது. அந்த மகத்தத்துவம் சாத்வீக ராஜச, தாமசம் என்ற குணத்திரயத்தை கொண்டதாய் விதையானது மேற்புறம் தோலால் மூடப்பட்டிருப்பதைப் போல பிரகிருதியினால் மூடிக்கொள்ளப்பட்டது. அப்பால் அந்த மகத்தத்துவத்திலிருந்து வைகாரிகம், தைஜஸம், பூதாதிகள் என்ற மூன்று வித அகங்காரம் பிறந்தது. அதில் சாத்விக அகங்காரம் வைகாரிகம் ஆகும். ராஜச அகங்காரம் தைஜஸம் ஆகும். தாமஸ அகங்காரம் பூதாதி என்று சொல்லப்படும். அந்த அகங்காரங்கள் திரிகுணாத்மகமான படியினாலே பஞ்ச பூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் ஏதுவாக இருக்கும். பிரகிருதியினாலே மகத்தத்துவம் மூடப்பட்டது போல அகங்காரம் மகத்தத்துவத்தினாலே மூடப்பட்டு இருந்தது அதில் பூதாதி என்று வழங்கப்பட்ட தாமச அகங்காரம் விகாரப்பட்டு சப்த தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து சப்தத்தை லக்ஷணமாகக் கொண்ட ஆகாசம் பிறந்தது. அந்த ஆகாசம் தாமச அகங்காரத்தாலே மூடிக்கொண்டது. அந்த ஆகாசம் விகாரப்பட்டு ஸ்பரிச தன்மாத்திரையை உண்டாக்க அதனால் காற்று தோன்றியது. அந்தக் காற்றுக்கு ஸ்பரிசம் குணமாகும். அந்த ஸ்பரிச தன் மாத்திரையான வாயுவும் ஆகாசத்தாலே மூடப்பட்டது. அந்த வாயு விகாரப்பட்டு ரூப தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் தேஜசு பிறந்தது. அந்த தேஜசு அசாதாரணமான குணத்தையுடையது.

ஸ்பரிச தன்மாத்திரையினாலே ரூப தன்மாத்திரையான தேஜசு மூடப்பட்டுள்ளது. தேஜசு விகாரப்பட்டு ரச தன்மாத்திரையை உண்டாக்கிற்று. அதிலிருந்து அப்பு பிறந்தது. ரச தன்மாத்திரையான அப்புவும், ரூப தன்மாத்திரையினாலே மூடப்பட்டது. அந்த அப்பு விகாரப்பட்டு கந்த தன் மாத்திரையை உண்டாக்கிற்று. அதனால் பிருத்வி பிறந்தது. பிருதிவிக்குக் கந்தம் அசாதாரண குணமாக இருக்கும் சூட்சுமம் கண்ணுக்குப் புலனாகாதபடியினால் பஞ்சமகாபூத காரணங்களான சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தங்களுடனே கூடிய சூட்சும பூதங்கள் தன்மாத்திரைகள் என்று சொல்லப்படும் ஸ்தூலங்களான ஆகாசாதி பூதங்களிலே சப்தாதி குணங்கள் விகசிதமாய்க் காணப்படும். தன்மாத்திரைகள் அதிநுண்ணியதாய் சரீரலகுத்துவமும் அற்புதப் பிரகாசமும் பிரசன்னத்துவமும் உண்டாக்குகிற சாந்தமான சாத்வீக குணமும் வியாகுலமும் நானாவித வியாபாரங்களும் உண்டாக்குகின்ற கோரமான ராஜசகுணமும் நித்திரையும் ஆலசியமும் உண்டாக்குகின்ற மூடமான தாமச குணமும் இல்லாதிருக்கும். இவ்விதமாக ஆகாசாதி பூதங்களும் தன்மாத்திரைகளும் பூதாதியென்று வழங்கப்படும் தாமச அகங்காரத்தால் பிறந்தன தைஜசம் என்று வழங்கப்பட்ட ராஜச அகங்காரத்தால் இந்திரியங்கள் உண்டாயின என்று சிலர் கூறுவார்கள். வைகாரிகம் என்று சொல்லப்பட்ட சாத்வீக அகங்காரத்தால் இந்திரியங்கள் பிறந்தன என்றும் சிலர் கூறுவார்கள். இந்த இரு பக்ஷங்களிலேயும் மனதுடன் பதினோரு இந்திரியங்கள் சாத்வீக அகங்காரத்திலே பிறந்தன என்பதே நிச்சயம். ராஜச அகங்காரம், சாத்வீக தாமச அகங்காரங்கள் இரண்டுக்கும் சகாயமாக இருக்கும்.

இனி இந்த ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றின் சொரூபத்தைக் கேளுங்கள்! மெய் கண், மூக்கு, வாய், செவி என்ற இவ்வைந்தும் ஞானேந்திரியங்கள்! இவற்றுக்கு ஸ்பரிசம், ரூபம், கந்தம், ரசம், சப்தம் என்ற இவ்வைந்தும் போக்கிய பதார்த்தங்கள், வாக்கு, பாணி, பாதம், பாயு, உபஸ்தம் முதலிய ஐந்தும் கர்மேந்திரியங்கள், வசனம், கர்மம், கமனம், சொர்க்கம், ஆனந்தம், இன்னுமிவை ஐந்தும் அவ்வைந்துக்கும் காரியங்கள், ஆகாயம், வாயு, தேயு, அப்பு, பிரிதிவி என்ற பூதங்கள் தமக்கு அசாதாரண குணமான சப்த, ஸ்பரிச, ரூப ரச, கந்தங்கள், (பூமியில் ஐந்தும், நீரில் நான்கும், தீயில் மூன்றும், காற்றில் இரண்டும், வானில் ஒன்றும்) தாங்கள் மேன் மேலும் அதிகமாகப் பெற்று அன்னியோன்னிய சையுக்தமாய்ச் சாத்வீக, ராஜச, தாமச குணாத்மகங்களான படியால், சாந்தங்களாயும் கோரங்களாயும் மூடங்களாயும் சிறப்புற்று விளங்கும். இந்த விதமாகப் பிறந்த பஞ்சபூதங்களும் நானாவித சக்தி யுக்தங்களாய் ஒன்றோடொன்று கலந்து ஐக்கியமாயின. அதெப்படியென்றால், பிரிதிவியில் அப்புவும், தேயுவும், வாயுவும், ஆகாயமும், ஜலத்தில் பூமி, தேயு, வாயு, ஆகாயமும், தேயுவில் பிருதிவி, அப்பு வாயு, ஆகாயமும், ஆகாயத்தில் பிருத்வி, அப்பு தேயு மாருதங்களும் கலந்தன. இதுவே பஞ்சீகரப் பிரகாரம் இவ்விதமாக அன்னியோன்னியமாகக் கலந்ததனாலே பிரம்மாண்டத்தைச் சிருஷ்டிப்பதற்கும் நான்குவதைப் பிறவிகளைச் சிருஷ்டிப்பதற்கும் சாமர்த்தியமுடையவைகளாய் ஜீவனுடைய கர்ம விசேஷத்தினாலும் பிரகிருதி மகத்தகங்கார தன்மாத்திரைகளின் சையோகத்தினாலும் ஈசுவர சங்கல்பத்தினாலும் பிரமாண்டத்தை உண்டாக்கின.



இப்படி பஞ்சபூதங்களினாலே பிறந்த அந்த அண்டம் நீர்க்குமிழி போல ஒரு கணப்பொழுதிலே அபிவிருத்தியாயிற்றேயல்லாமல் கிரமக் கிரமமாக அபிவிருத்தியாகவில்லை இவ்விதமாகப் பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான பிரமாண்டம் பிரகிருதி சரீரகரான ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு லீலா ஸ்தானமாய் மகா ஜலத்திலே மிதந்து கொண்டிருந்தது. இவ்விதமாகப் பிறந்த பிரம்மாண்டத்தில் பிரகிருதி சொரூபனும் மகத்தகங்காரத் தன்மாத்திரா மகா பூத சரீரகனும் ஜகதீச்வரனுமான விஷ்ணுதேவர் சதுர்முக ஸ்வரூபமாய்த் தானே அவதரித்தார். அந்த அண்டத்துக்கு மேருமலையானது உல்ப்பம்; மற்ற மலைகள் ஜராயு; சமுத்திரங்கள் கர்ப்போதகமுமாகும். உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையைப் போன்ற ஒன்றாகும். ஜராயு வென்றால் அதன் மீது சுற்றியிருக்கிற கருப்பை, கர்ப்போதகமாவது அதிலிருக்கும் தண்ணீர் அந்தப் பிரமாண்டத்தில் மலைகள், தீவுகள், சாகரங்கள் ஜோதிச் சக்கரங்கள், மனுஷ்யர், தேவர், அசுரர் ஆகியவை பிறந்தன. இப்படியுண்டான பிரம்மாண்டத்தை கவிந்து ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும் அக்கினியும் காற்றும் ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அது போலவே பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது. அந்த அண்டத்தில் விசுவரூபமான நாராயணர் பிரமரூபியாகி ரஜோகுணத்தைப் பிரதானமாகவுடையவராய் தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பக்ஷி தாவரங்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொண்டு, அப்பிரமேயப் பராக்கிரமனும் சட்குண ஐசுவரிய சம்பன்னனுமான தானே சாத்வீகக்குணப் பிரதானனாய், லீலார்த்தமாக யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்விய அவதாரங்களைச் செய்து கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தைப் பரிபாலனம் செய்து கொண்டும் பிரளய காலத்தில் தாமச குணப் பிறதானனாய் ருத்திர ரூபியாகிறான். அப்பொழுது அதிபயங்கரனாய் சராசரங்களான அகில பூதங்களையும் விழுங்கி மூவுலகங்களையும் ஏகார்ணவமாகச் செய்து ஸஹஸ்ர பணு மண்டல மண்டிதனான ஆதிசேடனாகிய படுக்கையில் சயனித்துக் கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி முன் போலவே பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.

ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன் அந்தந்தச் சொரூபங்களில் நின்று சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களைச் செய்வதனால் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களைப் பெறுகின்றான். அந்தப் பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறேன் அப்படியே தானே காக்கின்றான். யுக முடிவில் தானே சங்கரிக்கின்றான். ஆகையால் சிருஷ்டி கர்த்தாவாகவும் சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும் சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாகத் தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பிருத்வி அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும் இந்திரியங்களும் மனமும் க்ஷேத்ரக்ஞனுமாகிய சக்ல பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்! எப்படியெனில் சகல பூதங்களுக்கும் ஆன்மாவாய், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாகவுடையவனாகையால் கை, கால் முதலிய சரீரத்தின் செய்கை, சரீரியான ஆன்மாவுக்கு உபகாரமாவது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். இனிமேல் நான் சொன்னவற்றையெல்லாம் சுருக்கமாகச் சொல்கிறேன். அதாவது சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில் படைப்பவன் அவன் ! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன் - அவன். காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன் சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால் தான் சர்வசக்தனாக இருக்கும் போது பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படிச் செய்யும் படி அவனே வரங்கொடுத்திருக்கிறேன். ஆகையால் தான் மைத்ரேயரே! அந்த ஸ்ரீ மகா விஷ்ணுவே சகல விதத்திலும் உபாசிக்கத் தக்கவனாக இருக்கிறான்! 

தொடரும்

கருத்துகள் இல்லை: