செவ்வாய், 10 செப்டம்பர், 2013

கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்?

மனித வாழ்க்கை எப்படி எல்லாமோ முடிவுக்கு வந்து விடுகிறது. இப்படி, எப்படியாவது வாழ்க்கை நடத்தி விட்டால் போதுமா! நமக்கு நற்கதி ஏற்பட, ஏதாவது செய்ய வேண்டாமா... வீட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாகி விட்டது. இதெல்லாம், பிறருக்கு தான் உதவும். நமக்கு உதவுவது, நாம் செய்யும் புண்ணியம் மட்டும் தான். இதை சுலபமாக சம்பாதித்து விடலாம் என்கின்றனர் முன்னோர். ஆலயத்தை பிரதட்சணம் செய்வது ஒரு புண்ணியம். வாக்கிங் போகிற மாதிரி, சாயந்திரம் கிளம்பி, ஒரு ஆலயத்தை சுற்றி விட்டு வந்தாலே, ஆலயப் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைத்து விடும். ஒரு சின்ன கதை! சோழ மகாராஜா ஒருவர் இருந்தார். அவர் ஒரு சமயம், ஹரதத்தர் என்ற மகானை தரிசிக்க வந்தார். மகானை சந்தித்த ராஜா, அவரை வணங்கி, நான் கைலாசம் போக என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு ஹரதத்தர், நீர் கஞ்சனூர் முதலான ஏழு சிவ ஸ்தலங்களை, அரை யாம நேரத்தில் தரிசித்து வந்தால், உன் ஆசை நிறைவேறும்... என்றார். உடனே ராஜா, இதென்ன பிரமாதம்... என்று சொல்லி, பஞ்ச கல்யாணி குதிரை மீது ஏறி, குடைபிடித்து ஒருவன் ஓடிவர, ஏழு சிவஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்தார்.  
அதே சமயம், குதிரையும், குடைபிடித்து ஓடிவந்தவனும் மயங்கி விழுந்து, இறந்து போயினர். அந்த நிமிடமே, வானிலிருந்து ஒரு விமானம் வந்து, குதிரையையும், குடைபிடித்தவனையும் ஏற்றிக் கொண்டு, கைலாசம் சென்றது. அந்த அதிசயத்தை கண்டு ஆச்சரியப்பட்ட சோழ ராஜன், தானும், ஆலயத்தை சுற்றி வந்திருக்கும் போது, குதிரைக்கும், குடை பிடித்தவனுக்கு மட்டும், கைலாயம் போகும் பாக்கியம் கிடைத்திருக்கிறதே... நமக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை என்று எண்ணினார். நேராக ஹரதத்தரிடம் சென்று, நடந்த விபரத்தை சொன்னார். அதற்கு ஹரதத்தர், குதிரையும், குடை பிடித்தவனும் காலால் நடந்தே, ஆலயத்தை வலம் வந்தனர். அந்த புண்ணியத்தால், அவர்களுக்கு கைலாசம் போகும் பாக்கியம் கிடைத்தது. நீ, குதிரை மேல் ஏறி வந்ததால் சரீர சுகம் தான் கிடைத்தது. கைலாயம் போகும் பாக்கியம் கிடைக்கவில்லை... என்றார். அரசன் மறுபடியும் அவரை வணங்கி, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்... என்று கேட்க, நீ பாதசாரியாகவே அந்த ஏழு சிவாலயங்களையும் பிரதட்சணம் செய்... என்றார். அரசனும், ஆசார சீலனாக பக்தியுடன், நடந்தே ஏழு சிவாலயங்களையும் வலம் வந்து, அவர் முன் வணங்கி நின்றார். அடுத்த வினாடி, விமானம் வந்து அரசனை, கைலாசத்துக்கு சகல மரியாதைகளுடன், அழைத்துச் சென்றது. இதன் மூலம் அறிந்து கொள்வது என்னவென்றால், ஆலயம் வலம் வருவது என்பது, காலால் நடந்து வலம் வர வேண்டும். ஏதாவது ஒரு வாகனத்தில் ஏறி பவனி வந்து, நான் நூறு சுற்று சுற்றி விட்டேன்... என்றால், அது பயன்படாது. புண்ணியம் என்பது சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியது; விலைக்கு வாங்குவதல்ல.
அமாவாசையன்று வாசலில் கோலம் போடக் கூடாது?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. சதுர்த்தி-விநாயகருக்கு சஷ்டி-முருகனுக்கு, ஏகாதசி-மகாவிஷ்ணுவுக்கு. அஷ்டமி-பைரவருக்கு, சதுர்த்தசி-சிவனுக்கு. பவுர்ணமி-அம்மனுக்கு... இதைப் போலவே, மறைந்த முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்துக்கு வரவழைத்து, அவர்களின் பசி தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை,  அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்(தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.
பேராசைப்படுபவரா நீங்கள்?

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் யாக யக்ஞங்களால், தேவர்கள் திருப்தியடைகின்றனர். எப்படி? இங்கு அக்னியில் போடப்படும் அவிஸ், அமிர்தமாகி அவர்களை அடைகிறது. பதிலுக்கு அவர்கள் மழையைக் கொடுக்கின்றனர். இப்படி பரஸ்பரம் உதவி நடக்கிறது. ஒரு சமயம், மனிதர்களுக்கு எவ்வித ஆசையும் இல்லாமல் இருந்தது. ஆசை இருந்தால் தானே அது நிறைவேற ஏதாவது செய்ய வேண்டும்! ஆசை இல்லாமையால் அவர்கள் எந்த யாக யக்ஞங்களோ, கர்வங்களோ செய்யவில்லை. அதனால், கவலைப்பட்ட தேவர்கள். அவர்களது குருவான பிரகஸ்பதியிடம் முறையிட்டனர். அதற்கு அவர், நான் இதில் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் பிரம்மாவிடம் முறையிடுங்கள்... என்றார். இதே சமயம் சத்யலோகத்தில், மற்றொரு காரியத்தில் ஈடுபட்டிருந்தார் பிரம்மா. பிரம்மாவிடம் சென்ற தேவர்கள், பூலோகவாசிகள் யாகம், யக்ஞம் எதுவும் செய்வதில்லை. எங்களை மதிப்பதில்லை... என்று புகார் செய்தனர். அதற்கு அவர், உலகில் மானிடர்கள் தனக்கு ஏதாவது பயன் உண்டாக வேண்டும் என்பதற்காகவே பிறருக்கு உதவி செய்கின்றனர். மானிடருக்கு உங்கள் உதவி தேவையில்லை. அதனால், அவர்கள் வேள்வி செய்யவில்லை. இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் மகாலட்சுமியிடம் முறையிடுங்கள்.என்றார்.
தேவேந்திரனும், மற்ற தேவர்களும் இமயமலை சென்று மகாலட்சுமியைக் குறித்து, ஸ்தோத்திரம் செய்தனர். மகாலட்சுமி, அவர்கள் முன் தோன்றி, தேவர்களே... உங்கள் துதியைக் கேட்டு சந்தோஷப்படுகிறேன். உங்கள் குறை யாது? என்றாள்; தேவர்களும் தங்கள் குறையைத் தெரிவித்து; ஸ்தோத் திரம் செய்தனர். அந்த ஸ்தோத்திரத்தை கேட்ட மகாலட்சுமி, மனிதர்களில் யார் இந்த நாமாக்களை சொல்லி, ஸ்தோத்ரம் செய்கின்றனரோ, அவர்கள் செல்வந்தர்களாகவும், மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பர்... என்று சொல்லி, மறைந்தாள். சில காலம் சென்றது. அப்படியும் தேவர்கள் குறை தீரவில்லை. மறுபடியும் மகாலட்சுமியை துதித்தனர்; மகாலட்சுமியும் வந்தாள்; விவரம் தெரிந்தது. ஓஹோ... இதற்குக் காரணம் மனிதர்களிடம் ஆசை என்பதே இல்லாமல் இருப்பதுதான். ஆசை இருந்தால் தானே அது வேண்டும், இது வேண்டும் என்ற எண்ணம் எழுந்து, யாக யக்ஞங்களைச் செய்வர். அதற்கு ஒரு வழி செய்கிறேன்... என்று சொல்லி, காமன் என்ற குழந்தையை உண்டாக்கி, தேவர்களிடம் கொடுத்து, இதை நன்றாக வளருங்கள். உங்கள் குறையை தீர்த்து வைப்பான்... என்று சொல்லி மறைந்தாள். இந்த காமன் தான் (காமன் என்றால் ஆசை, விருப்பம்!) மனிதர்களின் மனதில் புகுந்து, பலவித ஆசைகளை உண்டாக்கி அவை நிறைவேற வேண்டி, பூஜை, ஹோமம், யாகம், யக்ஞம் எல்லாவற்றையும் செய்யும்படி செய்தான். தேவர்களுக்கு முன்போல் அமிர்தம் கிடைத்து, நிம்மதியாக இருந்தனர் என்பது கதை. ஆக, மனிதர்களுக்கு காமம் (ஆசை, விருப்பம்) என்பது இருந்தால் தான், பலவித காரியங்கள் நடைபெறும். மனிதர்களும், தேவர்களும் சந்தோஷமாக இருக்க முடியும். இந்த ஆசை என்பது நிதானமாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும். பேராசையாகவும், அநியாயமாகவும் இருக்கக் கூடாது; ஞாபகம் இருக்கட்டும்!
மங்கல வாழ்வு அருளும் மதுரைக்கு அரசி!

மதுரையில், மலையத்துவஜ பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறு வாய்க்காமல் வருந்தினான். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாண்டியனின் மனைவியான காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்ற பெயரில் பிறந்து, பராசக்திக்கு சேவை செய்து வந்தாள். இன்னொரு பிறவியில், அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தாள். அதன் பயனாக, அவள் மூன்றுவயது பெண்குழந்தையாக யாகத்தீயில் தோன்றினாள். தடாதகை என்னும் பெயரிட்டு குழந்தையை வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு காஞ்சனமாலை வருந்தினாள். காஞ்சனமாலையே! வருந்தாதே!  தடாதகை தனக்கு மாலைசூடும் மணாளனைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்துவிடும்! என்று வானில் அசரீரி ஒலித்தது. ஆதிபராசக்தியின் அவதார மான தடாதகை வீரதீரம்மிக்கவளாக வளர்ந்தாள். தக்கவயதை அடைந்ததும் மன்னன் பாண்டியநாட்டின் இளவரசியாக முடிசூட்டினான்.  
உலகில் உள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணிய தடாதகை, திக்விஜயம் புறப்பட்டாள். அஷ்டதிக்பாலகர்களான (எட்டுதிசை காவலர்கள்) இந்திரன், அக்னி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்களை வென்று கைலாயம் அடைந்தாள். அங்கு கயிலைநாதனைக் கண்டாள். அவளின் வீரம் நொடியில் காணாமல் போனது. நாணத்தால் முகம் சிவந்தாள். அசரீரியின் வாக்கை மெய்ப்பிக்கும் விதத்தில் தடாதகையின் மூன்றாம் தனம் மறைந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியாக உருவெடுத்தாள். ஐயனும் சொக்கேசப்பெருமானாக வந்து அவளின்கரம் பற்றினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிநிற்க மதுரையில் மீனாட்சிகல்யாணம் நடந்தேறியது. அம்மையும் அப்பனும் பாண்டியநாட்டின் மன்னராக பட்டம் சூடி அரசாட்சி நடத்தினர். மீனாட்சியை மீன்+அக்ஷி என பிரிப்பர். மீன் போன்ற கண்களையுடையவள் என்பது இதன் பொருள். மீன் தன் பார்வையாலேயே குஞ்சுகளின் பசியைப் போக்கி விடும். அதுபோல், அங்கயற்கண்ணி எம்பிராட்டியும் தம் பார்வையாலேயே பக்தனின் குறையைப் போக்கிடுவாள். இதனால் தான் அவள் மீனாட்சி என்ற பெயர் பெற்றாள். மதுரையில் மீனாட்சி சந்நிதி விசேஷமானது. இங்கு அம்மனுக்கு நடக்கும் தனிவிழாக்களில் நவராத்திரி சிறப்பானது. கொலுமண்டபத்திற்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தந்து மங்கல வாழ்வு அருள்வாள். கொலுவும் வைக்கப்படும்.
உபநிடதங்கள் என்பதன் பொருள் தெரியுமா?

உபநிஷத் என்றால் அருகில் அமர் என்பது பொருள். குருவின் அருகில் அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்பட்டது. உபநிடதங்கள் மொத்தம் 108 என்று சொல்லப்படுகிறது. அவற்றுள் மிக முக்கியமானவை பத்து. அவை ஈசாவாஸ்யம், கேனம், கடம், பிரச்சினம், முண்டகம், மாண்டுக்யம், தைத்தரீயம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரணியகம் எனப்படும். உபநிடதங்கள் இறைவனின் உண்மை வடிவைக் காண, அதாவது பிரம்மத்துடன் ஒன்றி ஐக்கியம் அடைதலாகிய வீடு பேற்றைப் பெறவேண்டும் என்னும் கருத்தைக் கொண்டவை. அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாயிருக்கிறேன்) தத்வம் அசி (நீயும் அதுவாகவே இருக்கிறாய்) என்ற இந்தப் பேருண்மையை உபநிடதங்கள் சொல்லி நிற்கின்றன. வேதங்களின் சாரமே உபநிடதங்கள் என்பர்.
ஈசாவஸ்யம் : இதை ஈசோபநிடதம் என்பர். இது இரண்டு வழிகளைக் கற்பிக்கிறது. ஒன்று ஞானத்தின் வழி; மற்றது ஞானத்தின் வழி நின்று பற்றுகளை விட்டொழிக்கும் வழி. முதல் சுலோகம் ஈசா வாஸ்யம் எனத் தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கேன வாஸ்யம் : உளநூற் பாகுபாடுகளைத் தெளிவாகச் சொல்லி அனைவருக்கும் பரம்பொருளின் நிலைமை அறியச் செய்கிறது. உருவத்தில் சிறியது, கருத்தில் பெரியது என்ற தத்துவத்தின் படியும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற உண்மையையும் விளக்குகிறது. சங்கராச்சாரியார் இதற்கு பதபாஷ்யமும் வாக்யபாஷ்யமும் செய்திருக்கிறார். முதல் ஸ்லோகம் கேன் என்று தொடங்குவதால் காரணப் பெயராயிற்று.
கடோப நிடதம் : வேதாந்தத்தின் மிக உயர்ந்த கோட்பாடுகளை எடுத்து உரைக்கின்றது. மறைத் தத்துவத்தை விளக்கும் பூரணமான நூல். வாழ்க்கையின் இன்ப துன்பங்களையும் வேதத்தின் விழுமிய கருத்துகளையும் நன்குணர்ந்த ஆத்ம ஞானியான யமனை ஆசிரியனாகவும் நசிகேதனை மாணவனாகவும் கொண்டு வேதாந்தத்தின் அதீத பயனை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.
பிரசின உபநிடதம் : ஆறு இளஞ்சீடர்கள் பிப்பிலாதன் என்னும் நல்லாசிரியனை குருவாகக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கேட்டு ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர். அதுவே பிரசின உபநிடதம்.
முண்டக உபநிடதம் : துறவிகளின் ஞான வாழ்க்கையைப் பற்றியும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகளையும் போதிப்பது.
மாண்டுக்ய உபநிடதம் : உருவில் சிறியது. பன்னிரண்டு மந்திரங்கள் மட்டுமே கொண்டது.
தைத்திரிய உபநிடதம் : சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் நூல். குரு சீடனுக்கு உபதேசிக்கும் அறிவுரைகள் கொண்ட முறையில் அமைந்தது.
ஐதரேய உபநிடதம் : நாம் உண்ணும் உணவே பிரம்மம் என்பதையும், உயிரைக் காப்பாற்றக்கூடிய உணவுப் பொருள் பிரத்தியட்சமான தெய்வம் என்பதையும் விரிவாகச் சொல்வது. இதை வருண பகவான் தனது மகன் பிருகுவுக்கு உபதேசித்ததாம்.
சாந்தோக்கிய உபநிடதம் : மூச்சுக் கலை எனப்படும் பிராண வித்தையைப் பற்றிக் கூறுவது. ஜாபாலசத்திய சாமர் என்பவர் வியாக்கிர பாதருடைய குமாரன் கோசுருத்திக்கு உபதேசம் செய்தது.
பிரக தாரணியகம் உபநிடதம் : ஆறு அத்தியாயங்களைக் கொண்டது. முதல் இரண்டு அத்தியாயங்கள் மதுகாண்டம் எனவும் மத்திய இரண்டு அத்தியாயங்கள் யாக்ஞவல்கிய காண்டம் எனவும் கூறப்படும். உபதேசம், விளக்கம், உபாசனை இம்மூன்றும் ஒவ்வொரு காண்டத்திலும் இடம் பெறுகிறது.


சாஸ்திரங்களை மாற்ற முடியுமா?

சாஸ்திரங்களும் வேதங்களும் அநாதி காலமாக இருந்துவரும் சத்தியமான உண்மைப் பொருள். இவற்றை மாற்றவோ, திருத்தவோ கூடாது. மகரிஷிகளும் முனிவர்களும் கடும் தவம்புரிந்து நினைத்து நினைத்து உணர்ந்து, எது உண்டோ அதை எழுதினார்களே தவிர, தங்கள் கற்பனையினால் எழுதவில்லை. அதை எல்லாம் நாம் மாற்றப் பார்த்தோமேயானால் விபரீதமான விளைவுகளையே அனுபவிக்க நேரிடும். இதை விளக்க ஒரு சம்பவம்.  
ஒரு ஆச்சாரியர் சீடர்களுக்கு பாடங்கள் போதித்து வந்தார். ஒருநாள் இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்று போதித்தார். ஆனால் சீடர்களோ, இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை. வித்வான்களையும் இழுக்கும் சக்தி கொண்டவை என்றார்கள் ஆச்சாரியரோ அதை ஒப்புக்கொள்ளவில்லை. மறுநாள் காலை ஆசிரமத்தில் ஆச்சாரியர் மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். அந்தசமயம் ஆசிரமத்தின் வழியாக ஒரு அழகான பெண் கையில் குடத்துடன் தண்ணீர் எடுத்துவரச் சென்றாள். ஒரு வினாடி ஆச்சாரியரின் மனம் ஸ்தம்பித்துவிட்டது. என்ன சவுந்தர்யம்! என்ன நளினம்! மனம் எண்ணிக் கொண்டிருக்கும்போதே அந்த பெண் அவரைக் கடந்து ஆசிரமத்தில் நுழைந்து உட்பக்கமாகத் தாளிட்டுக் கொண்டாள். 
ஆச்சாரியரோ நடுங்கிப் போனார். சீடர்கள் பாடம் கேட்கவரும் நேரமாகிவிட்டது. ஆச்சாரியர் கதவை பலமுறை தட்டிப் பார்த்தார் கதவு திறக்கப்படவில்லை. உடனே ஆச்சாரியர் ஆசிரமத்தின் மேலே ஏறி, வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுகளைப் பிரிக்கத் தொடங்கும்போது இரண்டு மூங்கில்களுக்கிடையில் கால்கள் மாட்டிக் கொண்டன. மூங்கில் கணுக்கள் குத்தி ரத்தம் வழிந்தது வேதனை தாங்கவில்லை. அந்தசமயம் சீடர்கள் வந்தனர் ஆச்சாரியர் நேற்று சொல்லிக்கொடுத்தபடியே. இந்திரியங்கள் வித்வான்களை ஆகர்ஷிக்காது என்பதை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வந்தனர். ஆச்சாரியரோ தாங்கமுடியாத அவஸ்தையில் இருந்தார். சீடர்கள் ஆசிரமத்தின் மேலே ஆச்சாரியர் இருப்பதைப் பார்த்தார்கள்.
அவர்கள் வியப்போடு குருவே மேலே என்ன செய்கிறீர்கள்? என்று கேட்க, ஆச்சாரியரோ, நான் செய்வது இருக்கட்டும். நேற்று நான் சாஸ்திரத்தை திருத்தி எழுதிய மந்திரத்தை உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் உடனே மாற்றி எழுதுங்கள் பலவான் இந்த்ரியக்ராம் வித்வாம்ஸமபி கர்ஷதி, கர்ஷதி, கர்ஷதி, கர்ஷத்யேவ என்று கதறினார். இந்திரியங்கள் மிகவும் பலம் வாய்ந்தவை அவை வித்வான்களையும் இழுக்கும் இழுக்கும் இன்னும் இழுக்கும் என்று சொன்னபோதே ஆச்சாரியர் பொத்தென்று உள்ளே விழுந்தார். ஆனால் அங்கு யாரையுமே காணவில்லை. அப்படியானால் வந்தது யார்? சாஸ்திரமே பெண் உருக்கொண்டு வந்து அவரைத் திருத்தியிருக்கிறது. 
இராவணேஸ்வரனைப்போல சர்வ வல்லமை படைத்தவர் யாருமே இல்லை. சிவ பக்தன் வீராதி வீரன். கயிலை மலையையே தனது கைகளால் தூக்கி, தனது நரம்புகளையே வீணையாக மீட்டி சாமகானம் பாடி, சிவபெருமானிடம் சந்திரஹாஸம் என்ற வாளைப் பெற்றவன். எத்தனை இருந்தும் தன் உள்ளே இருக்கிற காம இச்சையை அடக்க முடியாமல் மனைவி, மக்கள் உற்றார், உறவினர், நாடு, செல்வம், புகழ் என அனைத்தையும் இழந்து தன்னையும் இழந்தான். ஐம்புலன்களை வெல்வதென்பது அவ்வளவு சுலபமானதல்ல. தியானம், தவம் போன்றவற்றைத் தொடர்ந்து பழகவேண்டும். இந்த இந்திரியங்களை வென்றால் நாம் எதையும் பெற்றுவிடலாம். 

யார் யார் கொடியில் என்னென்ன சின்னங்கள்!

ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவின் மாபெரும் காவியங்கள். இவை, மன்னர்கள் மற்றும் இளவரசர்களின் வீரக் கதைகளை மட்டுமின்றி, அன்றைய சமூக அமைப்பை விவரிக்கும் கண்ணாடியாகவும் திகழ்வன. அந்தக் காலத்தில் கொடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனின் கொடியில் அனுமன் இடம்பெற்றிருந்த விஷயம் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதேபோன்று... தருமர் தமது கொடியில் நந்தா, உப நந்தா எனப்படும் இரண்டு மிருதங்கங்களைக் கொண்டிருந்தாராம். பீமன் - சிம்மக்கொடி; நகுலன் - சரபக்கொடி; சகாதேவன் - அன்னம்; அபிமன்யு - சாரங்கப் பறவை; பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகுக் கொடியுடன் திகழ்ந்தார்களாம். திருஷ்டத்யும்னன் கோவி தாரா கொடியும், ஸ்ரீகண்ணன் கருடக் கொடியும், அவரின் மகன் பிரத்யும்னன் மகரக் கொடியும் கொண்டிருந்தார்கள்.
கவுரவர்களின் சார்பில்... பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாளக்கொடி கொண்டிருந்தார் (தாள மரம் என்பது பெரிதும் மதிக்கப்பட்ட மூங்கில் மரமாம்). துரியோதனன் - சர்ப்பக் கொடி கொண்டிருந்தான். துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலமும் இருக்கும்படியான ஒரு சித்திரத்தை சின்னமாக வைத்திருந்தார். கிருபாச்சார்யர் எருதுக்கொடியும், அஸ்வத்தாமன் சிங்கவால் கொடியும் வைத்திருந்தனர். கர்ணன் தனது கொடியில் யானைச் சங்கிலி சின்னம் பொறித்திருந்தான். ஜெயத்ரதன் கரடியையும், சல்லியன் கலப்பையையும் கொடியில் கொண்டிருந்தனர். பீஷ்மரை எதிர்த்து பாண்டவர் தரப்பில் போரிட்டவன் சிகண்டி. ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தது மட்டுமல்லாமல், அவனது கொடியில் அமங்கலமான ஒரு சின்னத்தை பொறித்து வைத்திருந்ததாலும் அவனுடன் போர் புரிய மறுத்துவிட்டாராம் பீஷ்மர்.
இறைவனைப்பற்றி நினைப்பதுண்டா நீங்கள்?

மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான். என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா... என்று கேட்டால், அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு... என்று பதில் சொல்லி, டிவி பார்க்க உட்கார்ந்து விடுகிறார். ஆனால், பகவானோ, என்னை வழிபடு, என்னை தியானம் செய். என் கோவிலுக்கு வா... என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவனவனுக்கு என்ன பிராப்தமோ அதன்படி நடக்கட்டும் என்று விட்டு விடுகிறார். நான் உன்னை விடமாட் டேன்... என்று, எந்த பக்தன் அவரை பிடித்துக் கொள்கிறானோ, அவனை கை விடாமல் காப்பாற்றுகிறார். நாம் ஒவ்வொரு நாளும், எவ்வளவோ விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள் கிறோம்.  
நேரப்படி எத்தனையோ காரியங்களை செய்கிறோம். ஞாபகமாக காலை, 6:00 மணிக்கு காபி சாப்பிடுகிறோம். பிறகு டிபன் 9:00 மணியானதும் அலுவலகத்துக்குப் போக வேண்டும். எதற்காக? சம்பளம் பெற்று குடும்பத்தைக் காப்பாற்ற. வீட்டில் யாருக்காவது உடல் நலமில்லை என்றால், வைத்தியரிடம் ஓடுகிறோம். அவர் கொடுக்கும் மருந்தை வாங்கி வந்து, நேரம் தவறாமல் கொடுக்கிறோம். அப்போது, அலுவலகம் போவதை முக்கியமாக கொள்வதில்லை. நோயாளியை குணப்படுத்துவதே முக்கியமாக கருதுகிறோம். இதுவரையில் அலுவலகம் முக்கியம். இப்போது வீட்டில் உள்ளோர் முக்கியம். இவைகளை தவிர, வேறு பல வேலைகளும் உள்ளது. அதற்காக நேரங்களை ஒதுக்கி, அவைகளை கவனிக்கிறோம். அன்றைய பொழுது போய் விடுகிறது; இரவும் வந்து விடுகிறது. அப்பாடா...இன்னிக்கு ஒரே அலைச்சல்... களைப்பாயிருக்கிறது... என்று சொல்லி, சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்று விடுகிறோம். இவ்வளவு நேரம் செலவிட்ட போதும், இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்ட போதும், கடவுள் ஞாபகம் மட்டும் வருவதில்லை; அதற்கான நேரமும் கிடைப்பதில்லை. 
ஒருவன், ஒரு ஊருக்குப் போக வேண்டியிருக்கிறது. ஞாபகமாக, 10 நாள் முந்தியே டிக்கெட் ரிசர்வ் செய்து, அதை பத்திரமாக வைத்துக் கொள்கிறான். என்ன தேதி, எந்த ரயில், எத்தனை மணிக்கு என்பதையும், ரயிலுக்குப் புறப்படும் முன், என்னென்ன பொருள், துணிமணிகள், எவ்வளவு பணம் எடுத்துக் கொள்வது என்பது பற்றியெல்லாம் முன்கூட்டியே எடுத்து வைத்து, தயார் செய்து கொள்கிறான். சரியான நேரத்துக்கு ரயில்வே ஸ்டேஷனை அடைவதிலேயே. கவனம் முழுவதும் இருக்கிறது. ஆனால், சிறிது நேரமாவது கடவுளை நினைக்கவோ, அதற்கு நேரம் ஒதுக்கவோ முடியவில்லை. ஸ்டேஷனுக்குப் போகும் வழியில், ஒரு கோவில் இருந்தால் கூட, உள்ளே போய் சுவாமி தரிசனம் செய்ய நேரமில்லை என்று, வாசலிலிருந்தே ஒரு கையால் அவசர கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். இந்த உலகில் நாம் பிறந்து, நல்ல நிலைமைக்கு வந்து சுகமாக இருப்பதே, அவனருளால் தான் என்பதே மறந்து விடுகிறது! உலக வாழ்க்கை என்பது எவ்வளவு நாட்கள் என்பது நிச்சயமில்லை. எப்படி எல்லாமோ நாட்களை கழிக் கிறோம். நமக்கு என்று ஒரு நற்கதியை தேடிக்கொள்ள வேண்டாமா? இது எப்படி கிடைக்கும்? கடவுள் ஞாபகமும், கடவுள் வழிபாடும் இருந்தால் தான் கிடைக்கும். ஈசனை நினைக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!
ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.
வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.
குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!
பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்!

கோடிக்கணக்கான சிவலிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலன்களைவிட, பாதரச லிங்கத்தை பூஜிப்பதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் பெற முடியும் என்கின்றன சாஸ்திர புராணங்கள்.  பிரம்மபுராணத்தின் கருத்துப்படி, மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் பூர்த்தி செய்யும் பாதரச லிங்கத்தை பூஜிக்கும் மனிதன் தன்யனாகிறான். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தை பூஜித்து எல்லா பவுதிக சுகங்களையும் அனுபவித்து, பரமபதத்தை அடைய முடியும். பிரம்மவைவர்த்த புராணம் சொல்லுவது என்னவென்றால் பாதரலிங்கத்தை விதிப்படியும் முறைப்படியும் ஒரே ஒரு முறை பூஜிப்பவர்கள்கூட சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லா சுகத்தைப் பெற முடியும்!சிவ நிர்ணய ரத்னாகரம் என்ற நூலின் கருத்துப்படி கல்லாலான சிவலிங்கத்தை பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன், தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பலன் ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கும். ஆனால் அதைவிட பலப்பல மடங்கு பலன், பாதரச லிங்கத்தின் பூஜை அல்லது தரிசனத்தாலேயே கிடைக்கும். பாதரச லிங்கத்தைவிட உயர்வான சிவலிங்கம் உலகில் இருந்ததுமில்லை; இருக்கப்போவதுமில்லை!

சிவபுராணத்தின் கூற்றுப்படி, பசு வதை செய்த பாவியும், நன்றிகெட்ட மனிதனும், வீரனைக் கொலை செய்தவனும், கர்ப்பத்தலுள்ள சிசுவைக் கொன்றவனும், தாய் தந்தையரைக் கொன்றவனும்கூட, பாதரச லிங்கத்தை பூஜித்து வந்தால், எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு, முக்தியை அடைய முடியும்! வாய்விய சம்ஹிதையின் கருத்துப்படி நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதையெல்லாம் பெறுவதற்கு ஒரே சிறந்த சுலபமான வழி பாதரச லிங்கத்தை பூஜித்து வழிபடுவதுதானாம். பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை தரிசித்தவரைவிட, பாதரசலிங்கத்தை தரிசித்த அதிர்ஷ்டசாலியையே நான் அதிகம் விரும்புகிறேன்! என்று சிவபெருமானே சொல்லியிருக்கிறார்!சர்வதரிசன சங்கிரகம் என்ற நூலில் பாதரசத்தை திடப்பொருளாக்கி, அதை லிங்கமாக்கி பூஜிப்பவர்களுக்கு, எப்போதுமே மரணபயம் இருப்பதில்லை. தவிர எந்த ஒரு காலத்திலும் அவர்கள் வீட்டில் வறுமை எட்டிப் பார்ப்பதில்லை என்று சிவபெருமான் பார்வதியிடம் கூறியிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரசார்ணவ தந்திரம் என்ற நூலின் கருத்துப்படி எந்த ஒரு மனிதனும் ஒரே ஒருமுறை பாதரசலிங்கத்தை பூஜித்து விட்டாலே போதும், அவனுக்கு வாழ்கையில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற சித்திகள் கிடைத்துவிடுகின்றன. பிரசித்திபெற்ற ஆயிரம் லிங்கங்களை பூஜிப்பதால் கிடைக்கும் பலனைவிடக் கோடி மடங்கு நற்பலன், பாதரச லிங்கத்தை பூஜிப்பதால் கிடைக்கிறது.

ரசசமுச்சயம் என்ற நூலில், பாதரசலிங்கத்தைத் தொடர்ந்து ஆராதித்து வருவதால், எல்லாவித நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. வயதான காலத்தில், மனிதனை நோயின்றி வைத்துக் கொள்வதற்கு வேறெந்தத் தரவரத்திற்கோ, உலோகத்திற்கோ சக்தியில்லை. ஏனெனில் அவை எல்லாமே தண்ணீரில் கரைந்து போகக்கூடியவை; வெப்பத்தால் காய்ந்து போகக்கூடியவை. ஆனால் பாதரசம் ஒன்றுதான் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை. பாதரசத்தை விசேஷச் செயல்பாடுகள் மூலம் திடபதார்த்த மாக்குவதால், அது அமிர்தமாகி விடுகிறது. அப்படி திடப்படுத்தப்பட்ட பாதரசத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி, அந்த லிங்கத்தை வழிபடும் பக்தர்களுக்கு கல்வி, அறிவு, செல்வம், சொத்து, சுகம், அமைதி, செழிப்பு, ஐஸ்வர்யம், மக்களன்பு முதலிய எல்லாப் பலன்களும் தானாகவே வந்தடைகின்றன. பாதரசம் நோய்களை அகற்றி புத்துயிரும் புது இளமையையும் கொடுக்கிறது. அதோடு அஷ்டசித்திகளையும் நவநிதிகளையும் அளிக்கிறது. சாதாரணமாக பாதரசத்தில் அழுத்தங்கள் நிறைய இருக்கும். அதை புடம் போட்டு அசுத்தங்களை அகற்றிய பிறகுதான் அது திடபதார்த்தமாக்கப்படுகிறது. அதிலிருந்து வடிவமைக்கப்படும் சிவலிங்கம் முழுப் பலன்களையும் அளிக்கவல்லது. விதிமுறைப்படி தினந்தோறும் அனுஷ்டானங்கள் செய்து பூஜை, அர்ச்சனை, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக்கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் ஸ்தாபிக்க வேண்டும். வெறும் லிங்கத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுவதால் மட்டும் பலன் கிடைப்பதில்லை!
கண்ணன் வழிபட்ட காமதேனு!

மகாவிஷ்ணு கிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் வளர்ந்த சமயத்தில், கோகுவாசிகள் ஆண்டுதோறும் செய்துவந்த இந்திர பூஜையை நிறுத்தச் சொன்னார். அதனால் இந்திரன் கோபம் கொண்டு கடும் மழை பொழியச் செய்தான். ஊரும் உயிர்களும் நீருள் மூழ்கித் தவிக்க, கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து அதன்கீழ் சகலரையும் இருக்கச் செய்து காத்தார். கோகுலவாசிகளை தன்னால் எதுவும் செய்ய இயலாது என உணர்ந்து கண்ணனிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் இந்திரன். இந்திரபூஜை நின்றாலும், இந்திரனை அவனது தம்பி உபேந்திரனையும் சேர்த்து வழிபடச் சொல்லி, அப்படி வழிபடுவோர்க்கு எல்லா சுகங்களும் கிடைக்கட்டும் என்று பகவானே ஆசியளித்தார் அந்த நாளே, போகி.  இந்திர உப÷ந்திரர்களுடன் கோகுலவாசிகளும் இணைந்து நாராயணனின் அம்சமாகிய சூரியநாராயணனை வழிபட்டனர். அந்த தினமே ஸங்கராந்தி(பொங்கல்) பசுக்களைக் காத்ததால், காமதேனு ஆநிரைகளோடு முன்னின்று தனது பாலால் அபிஷேகித்து கண்ணனை வழிபட்டு கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்தாள்.  கோவிந்தனை கோவாகிய காமதேனு வழிபட்டு செய்த பூஜையே மாட்டுப் பொங்கல்.  சூரியனை, தினமும் காயத்ரியாலும், சூரியநமஸ்காரத்தாலும், ஆதித்ய-ஹ்ருதயம் போன்ற ஸ்லோகங்களாலும் பூஜிக்கிறோம். ராமபிரான், ராவணனை வெல்லவும், பாண்டவர் அட்சயபாத்திரம் பெறவும், ஸத்ராஜித் என்னும் அரசன் ஸ்யமந்தக மணியைப் பெறவும் அவர்கள் சூரியனை வழிபட்டதே காரணம். கிருஷ்ணருக்கும் சாம்பவதிக்கும் பிறந்தவனான ஸாம்பன் சாபத்தால் பெற்ற பெரு நோய், சூரியனின் அருளால், நீங்கப் பெற்றான், ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண அதாவது எப்போதும் சூர்ய மண்டலத்தில் மத்தியில் இருப்பவன் நாராயணன் என்கிறது. வேதசாஸ்திரம். அருள், ஆரோக்கியம், அறிவு, ஆகியன தருபவன் சூரியன். இந்திரனைப்போல் சகல பாக்யங்களும் பெற வேண்டி போகியும் அவற்றை முழுமையாக அனுபவித்திட ஆயுளும் ஆரோக்யமும் வேண்டிச் செய்யும் சூர்ய நமஸ்காரமும் ஸங்காரந்தியும் (பொங்கல்) மறுநாள் மகாலட்சுமியின் அருள்கிட்டச் செய்யும் கோ பூஜையான மாட்டுப்பொங்கலுமேல மார்கழி கடைசிதினமும், தையின் முதல் இரு நாட்களும் பண்டிகை கொண்டாடுவதன் உட்பொருளாகும்.