செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆதிசங்கரர் அருளிய ஞானோபதேசம்!

காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே; உலகப் பற்றை ஊட்டும் இன்பங்களெல் லாம், முடிவில் துன்பங்களா கவே மாறும் என்பதை மறவாதே; உன்னை நீ அறிவதில் ஆவல் கொள்; தன்னலப் பற்றிலிருந்து உன்னை மீட்டுக் கொள்; நல்லவர்களிடத்தில் உறவு கொள். பகவானிடத்தில் மாறாத அன்பு வை; புலன்களை அடக்குதல் போன்ற உத்தம குணங்களை பழகிக் கொள்; இல்லறத்துக்குரிய கர்மங்களை விடுத்து, துறவறத்தை மேற்கொண்டு, ஆத்ம ஞானியை குருவாக நாடி, அவரது திருவடித் தொண்டை மேற்கொள்; அவரிடம் பிரண உபதேசத்தை வேண்டிக் கொள்; வேதங்களின் முடிவான பொருளை உரைக்கும் வாக்கியங் களைக் கேட்டு தெரிந்து கொள்; வீண், தர்க்க வாதங்களில் ஈடு படாதே.
வேதத்தின் முடிவான பொருளை அடைவதற்கு துணை செய்யும் நியாயமான காரணங்களை மட்டும் நன்கு ஆலோசித்து கொள்; எங்கும் நிறைந்த பரம்பொருளே இந்த உடலில், நான் என்னும் அறிவுப் பொருளாக நிற் கிறது என்ற உண்மையை, நினைவில் வைத்துக் கொள்; நான் ஞானவான் என்னும் கர்வத்தை அறவே ஒழித்து விடு; படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்; பசிப் பிணிக்கு அன்னத்தை மருந்தாக உட்கொள்; ருசியுள்ள உணவைத் தேடியலையாதே; தெய்வாதீனமாக தானாகக் கிடைத்ததைக் கொண்டு மகிழ வேண்டும்.
குளிர், உஷ்ணம் போன்ற உபாதைகளைப் பொருட்படுத் தாமலிரு; பயனில்லாத வார்த்தைகளை சொல்லாதே; பேசும் போது ஜாக்கிரதையாகப் பேசு; எதிலும் பற்றற்ற நிலையில் இரு; உலகத்தாரின் போற்றுதல், தூற்றுதல் இவைகளை மனதில் வாங்கிக் கொள்ளாதே; ஏகாந்தத்தை நாடு.உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய்; எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்த பரிபூர்ண நிலையில் பார்; ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமுமாய் நிற்பதால், இந்த பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருட்களும் வெறும் தோற்றமே எனும் தெளிவைப் பெறு; இவ்விதத் தெளிவினால், முன் செய்த வினைகளை யெல்லாம் அழித்து விடு; இவ்விதத்தெளிவின் பலத்தினால், வருங்காலத்தில் ஏற்படும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு; இந்தப் பிறவியின் இன்ப, துன்பங்களை மகிழ்வுடன் ஏற்று அனுபவித்து விடு; இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள். — இப்படியெல்லாம் உபதேசங்களைச் செய்து உள்ளார். அவரது ஞானோபதேங்களைப் பலரோ, சிலரோ பின்பற்றுவதால் தான், இன்னமும் மனித வர்க்கம் நல்லபடியாக இருக்கிறது என்பது பெரியோர்களின் கருத்து. இந்த உபதேசங்கள், சோபான பஞ்சகம் என்ற ஐந்து சுலோகங்களாக அமைந்துள்ளது. இந்த உபதேசம், சீடர்களாகிய நம் எல்லாருக்கும் சொல்லப்பட்டது தான் என்பதை யும் மறந்து விடக்கூடாது. முடிந்த வரையில் அனுசரித்து நடப்பது நல்லது. சொல்வதும், எழுது வதும் சுலபம் தான். அனுசரிக்க முடியுமா சார்? என்று கேட்டால், அனுசரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சொன்னார். முயன்று பார்க் கலாம். முடியாவிட்டால், மனசே ராஜா, புத்தியே மந்திரி. நம் இஷ்டம்!

கருத்துகள் இல்லை: