மங்கல வாழ்வு அருளும் மதுரைக்கு அரசி!
மதுரையில், மலையத்துவஜ பாண்டியன் நீண்டகாலமாக மகப்பேறு வாய்க்காமல்
வருந்தினான். புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். பாண்டியனின் மனைவியான
காஞ்சனமாலை முற்பிறவியில் வித்யாவதி என்ற பெயரில் பிறந்து, பராசக்திக்கு
சேவை செய்து வந்தாள். இன்னொரு பிறவியில், அம்பிகையே தனக்கு மகளாகப்
பிறக்கவேண்டும் என்ற வரத்தைப் பெற்றிருந்தாள். அதன் பயனாக, அவள் மூன்றுவயது
பெண்குழந்தையாக யாகத்தீயில் தோன்றினாள். தடாதகை என்னும் பெயரிட்டு
குழந்தையை வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்ததைக் கண்டு
காஞ்சனமாலை வருந்தினாள். காஞ்சனமாலையே! வருந்தாதே! தடாதகை தனக்கு
மாலைசூடும் மணாளனைக் கண்டதும் மூன்றாவது தனம் மறைந்துவிடும்! என்று வானில்
அசரீரி ஒலித்தது. ஆதிபராசக்தியின் அவதார மான தடாதகை வீரதீரம்மிக்கவளாக
வளர்ந்தாள். தக்கவயதை அடைந்ததும் மன்னன் பாண்டியநாட்டின் இளவரசியாக
முடிசூட்டினான்.
உலகில் உள்ள தேசங்களை எல்லாம் கைப்பற்ற எண்ணிய தடாதகை, திக்விஜயம்
புறப்பட்டாள். அஷ்டதிக்பாலகர்களான (எட்டுதிசை காவலர்கள்) இந்திரன்,
அக்னி,யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியவர்களை வென்று
கைலாயம் அடைந்தாள். அங்கு கயிலைநாதனைக் கண்டாள். அவளின் வீரம் நொடியில்
காணாமல் போனது. நாணத்தால் முகம் சிவந்தாள். அசரீரியின் வாக்கை
மெய்ப்பிக்கும் விதத்தில் தடாதகையின் மூன்றாம் தனம் மறைந்தது. அங்கயற்கண்ணி
மீனாட்சியாக உருவெடுத்தாள். ஐயனும் சொக்கேசப்பெருமானாக வந்து அவளின்கரம்
பற்றினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் கூடிநிற்க மதுரையில்
மீனாட்சிகல்யாணம் நடந்தேறியது. அம்மையும் அப்பனும் பாண்டியநாட்டின் மன்னராக
பட்டம் சூடி அரசாட்சி நடத்தினர். மீனாட்சியை மீன்+அக்ஷி என பிரிப்பர்.
மீன் போன்ற கண்களையுடையவள் என்பது இதன் பொருள். மீன் தன் பார்வையாலேயே
குஞ்சுகளின் பசியைப் போக்கி விடும். அதுபோல், அங்கயற்கண்ணி எம்பிராட்டியும்
தம் பார்வையாலேயே பக்தனின் குறையைப் போக்கிடுவாள். இதனால் தான் அவள்
மீனாட்சி என்ற பெயர் பெற்றாள். மதுரையில் மீனாட்சி சந்நிதி விசேஷமானது.
இங்கு அம்மனுக்கு நடக்கும் தனிவிழாக்களில் நவராத்திரி சிறப்பானது.
கொலுமண்டபத்திற்கு எழுந்தருளும் மீனாட்சியம்மன் ஒன்பது நாளும் ஒவ்வொரு
அலங்காரத்தில் காட்சி தந்து மங்கல வாழ்வு அருள்வாள். கொலுவும்
வைக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக