செவ்வாய், 10 செப்டம்பர், 2013

யார் யார் கொடியில் என்னென்ன சின்னங்கள்!

ராமாயணமும் மகாபாரதமும் இந்தியாவின் மாபெரும் காவியங்கள். இவை, மன்னர்கள் மற்றும் இளவரசர்களின் வீரக் கதைகளை மட்டுமின்றி, அன்றைய சமூக அமைப்பை விவரிக்கும் கண்ணாடியாகவும் திகழ்வன. அந்தக் காலத்தில் கொடிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனின் கொடியில் அனுமன் இடம்பெற்றிருந்த விஷயம் பெரும்பாலானோருக்குத் தெரியும். அதேபோன்று... தருமர் தமது கொடியில் நந்தா, உப நந்தா எனப்படும் இரண்டு மிருதங்கங்களைக் கொண்டிருந்தாராம். பீமன் - சிம்மக்கொடி; நகுலன் - சரபக்கொடி; சகாதேவன் - அன்னம்; அபிமன்யு - சாரங்கப் பறவை; பீமனின் மகன் கடோத்கஜன் - கழுகுக் கொடியுடன் திகழ்ந்தார்களாம். திருஷ்டத்யும்னன் கோவி தாரா கொடியும், ஸ்ரீகண்ணன் கருடக் கொடியும், அவரின் மகன் பிரத்யும்னன் மகரக் கொடியும் கொண்டிருந்தார்கள்.
கவுரவர்களின் சார்பில்... பீஷ்மர் - ஐந்து நட்சத்திரங்களுடன் கூடிய தாளக்கொடி கொண்டிருந்தார் (தாள மரம் என்பது பெரிதும் மதிக்கப்பட்ட மூங்கில் மரமாம்). துரியோதனன் - சர்ப்பக் கொடி கொண்டிருந்தான். துரோணர் - பீடத்தின் மீது மான் தோல் பொருத்தப்பட்டு அதன்மேல் வில்லும், கமண்டலமும் இருக்கும்படியான ஒரு சித்திரத்தை சின்னமாக வைத்திருந்தார். கிருபாச்சார்யர் எருதுக்கொடியும், அஸ்வத்தாமன் சிங்கவால் கொடியும் வைத்திருந்தனர். கர்ணன் தனது கொடியில் யானைச் சங்கிலி சின்னம் பொறித்திருந்தான். ஜெயத்ரதன் கரடியையும், சல்லியன் கலப்பையையும் கொடியில் கொண்டிருந்தனர். பீஷ்மரை எதிர்த்து பாண்டவர் தரப்பில் போரிட்டவன் சிகண்டி. ஒரு காலத்தில் பெண்ணாக இருந்தது மட்டுமல்லாமல், அவனது கொடியில் அமங்கலமான ஒரு சின்னத்தை பொறித்து வைத்திருந்ததாலும் அவனுடன் போர் புரிய மறுத்துவிட்டாராம் பீஷ்மர்.

கருத்துகள் இல்லை: