படலம் 64: குஹனின் ஸ்தாபனம்...
64 வது படலத்தில் குஹனின் ஸ்தாபனம் கூறப்படுகிறது. முதலில் இலக்கண அமைப்பு மூலம் குஹனின் ஸ்தாபனத்தை கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்யப்படுகிறது. பிறகு நகரங்களில் சிவாலயம் மலை முதலிய உயரமான பிரதேசங்கள் இவைகளில் குமரனுக்கு ஆலயம் அமைப்பது தகுந்தது என கூறி அந்த ஆலயத்தை அமைக்கும் முறை கூறப்படுகிறது. அதில் திக்தேவதைகளை அமைக்கும் விஷயத்தில் பல வகைகள் கூறப்படுகின்றன. குமரன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு முகமாகவோ பரிவரா தேவதைகளுடன் கூடியதாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு பரிவார தேவர்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் முதலாவதாக யக்ஷன், இந்திரன் முதலிய எட்டு பெயர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. இவர்கள் கிழக்கு முதல் ஈசான திக்வரை பரிவாரமாக ஸ்தாபிக்க படுபவர்களாக ஆகிறார்கள். பிறகு சகுனி முதலான எட்டு பெண் தேவதைகளின் பெயரும் கூறப்படுகின்றன. பிறகு ஷண்முகர் முதலான எட்டு பெயர்களை கூறி அவர்களின் லக்ஷணம் நிரூபணம் செய்து, அவர்கள் குஹனின் மூர்த்தீஸ்வரர்கள் என கூறப்படுகிறது. இவர்களை கிழக்கு முதலான திசைகளில் சுற்றிலும் ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது இந்திரன் முதலிய எட்டு திக்பாலகர்களை மூர்த்தீஸ்வரர்களுக்காக எட்டு பீடமாகவோ ஸ்தாபிக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு வினாயகர், பைரவர், சூர்யன், மஹாபீடம், பலிபீடம் இவைகளையும் குஹாலயத்தில் ஸ்தாபிக்கவும். ஈஸ்வரனுக்கு சொல்லப்பட்ட பரிவாரங்களையோ ஸ்தாபிக்கலாம் என்று வேறுவிதமாக கூறப்படுகிறது. பலி பீடங்களில் இந்திராதிகளையும், மத்தியில் நவக்கிரஹாதிகளையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு, ஜயன், விஜயன், என்ற இரண்டு துவார பாலகர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது.
ஈசான பாகத்தில் சாகல்யன் என்ற பெயர் உடைய ஸ்கந்த சண்டரை ஸ்தாபித்து அந்த சண்டரின் லக்ஷணம் நன்கு கூறப்படுகிறது. பிறகு கருங்கல் முதலியதான திரவ்யங்களால் பிரதிமாலக்ஷணத்தில் கூறி உள்ளபடி கர்பக்கிரஹ அளவாலோ வாசல்படி அளவாலோ, தூண்களின் அளவாலோ, ஸ்கந்தரை அமைக்கவும் பிறகு அந்த ஸ்கந்தர், 5 விதமாக இருப்பதாகவும் அவர்களின் லக்ஷணமும் கூறப்படுகிறது. பின்பு இரண்டு கை, இரண்டு கண், வலது கையில் தாமரை புஷ்பம், தொங்குகின்ற இடது கை பால ரூபன். இப்பேற்பட்டஸ்கந்தரை கிராமம் அபிவிருத்தி அடைவதற்கு ஸ்தாபிக்கவும் என்று முதலாவதான ஸ்கந்தர் நிரூபிக்கிறார். பின்பு இரண்டுகை, சிகை பூணல், தண்டத்தை தரித்த வலக்கை இருப்பில் வைத்து கொண்ட இடதுகை கவுபீனம் தரித்தவர் ஞானத்தை கொடுக்கக் கூடிய வருமான ஸ்கந்தர் மலைகள், வனங்கள் இவைகளில் ஸ்தாபிக்கப்படுபவர் என்று இரண்டாவது ஸ்கந்தர் விளக்கப்படுகிறது. பிறகு நான்கு கைமுக்கண், ஜபமாலை, சக்தி ஆயுதம், வரதம், அபயம் இவைகளுடன் கூடிய நான்கு கைகளும் இரண்டு சக்தியோடு கூடியதாகவோ அல்லது ஒரு சக்தியோடு கூடியதாகவோ நகரங்களில் பிரதிஷ்டை செய்ய கூறப்படுகிறார். இங்குகஜா, கஜவல்லி, என்று சக்தியின் பெயர் கூறப்பட்டு அவைகளின் அமைப்புமுறை கூறப்படுகிறது. பிறகு ஆறுமுகம், ஆறுகை, 12கண், ஆறு கழுத்து அல்லது ஒரு கழுத்து ஆறுதலையுடன் கூடியதாகவும், சக்தி, அபயம், கத்தி, அக்ஷமாலை கோழி, கேடயம், ஆகிய ஆறு ஆயுதங்களுடன் கூடியவரும், அரசாங்கம் அபிவிருத்தி அடைவதற்கு பிரதிஷ்டை, செய்வதற்கு தகுந்தவர் என்று நான்காவது ஸ்கந்தர் நிரூபிக்கப்படுகிறது. பிறகு சிவப்பு வஸ்திரம் தரித்தவரும், இளஞ்சந்திரனை போல் பிரகாசம் உடையவரும் கரண்டமகுடம் உடையவரும், முக்கண் உடையவரும், வலது கைகளில் சக்தியாயுதம் உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளும் இடதுகையில் வஜ்ரம் வில், கேடயம், மயில், கொடி, அங்குசம், வரதம், இவைகளை தரித்தவரும் யக்ஞோபவீதம் அணிந்தவரும், மயில்மேல் அமர்ந்தவரும், இரண்டு சக்தியோடு கூடியவருமான 5வது ஸ்கந்தர் கிராமம் முதலிய இடங்களில் பிரதிஷ்டை செய்ய தகுந்தவர் என வர்ணிக்கப்படுகிறது.
இவ்வாறாக 5வித ஸ்கந்தமூர்த்தியின் அமைப்பு நிரூபிக்கப்படுகிறது. ஸ்கந்தனுடைய மூலமந்திரம் அதில் பிரம்ம, மந்திர, அங்கமந்திர, கல்பனமுறை, ஸ்கந்தகாயத்திரி மந்திரம், கஜவல்லி, கஜவல்லியின் மந்திரம், விளக்கப்படுகின்றன. பிறகு பிரதிஷ்டாவிதி கூறப்படுகிறது. பிறகு முதலில் முன்பு கூறப்பட்ட நல்ல காலத்தில் அங்குரார்பணம் செய்து குகபிம்பத்தில் பஞ்சரத்தின நியாசம் செய்யவும். தேவிக்கு தங்க தாமரையையோ சேர்க்கவும் என ரத்னநியாச விதி கூறப்படுகிறது. பிறகு நயனோன்மீலன விதி மந்திரத்துடன் கூடியதாக நிரூபிக்கப்படுகிறது. அங்கு ஸ்கந்தர் அம்பாளுடன் கூடியதாக இருந்தால் தேவிக்கும் தனியாக நயனோன்மீலனம் செய்யவும் என கூறப்படுகிறது. பின்பு முன்புபோல் பிம்பசுத்தி செய்து கிராமபிரதட்சிணம் செய்து ஜலத்தில் ஸ்கந்தரை லம்பகூர்ச்சத்துடன் அதிவாசம் செய்யவும் பிம்பத்தை சுற்றிலும் இந்திரன் முதலான எட்டுக்கலசங்களை ஸ்தாபிக்கவும் என்று ஜலாதிவாசம் வரையிலான கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு யாக மண்டபவிதி கூறப்படுகிறது. அந்த மண்டபத்தில் சில்பியை திருப்தி செய்வித்து பிராம்மண போஜனம் செய்வித்து பசுஞ்சாணம் மெழுகி புண்யாகவாசனம், வாஸ்து பூஜை, வாஸ்துஹோமம் செய்து அங்கு ஸ்தண்டிலம் அமைத்து, அதில் தோல் முதலியவைகளோ, அல்லது வஸ்திரத்தினாலோ சயனம் அமைக்கவும். பிறகு ஜலாதிவாசத்தில் இருந்து ஸ்கந்தரை ஸ்நபன மண்டபத்திற்கு அழைத்து ஸ்நானம் செய்வித்து சந்தனம், புஷ்பங்களால் பூஜைசெய்து ரக்ஷõபந்தனம் செய்வித்து ஸ்கந்தரை கிழக்கில் தலைவைத்ததாக சயனாதி வாசம் செய்விக்கவும். பிறகு வஸ்திரங்களால் மூடி சந்தனாதிகளால் முறைப்படி பூஜிக்கவும் என்று சயனாதிவாசமுறை விளக்கப்படுகிறது. பிறகு கும்பாதிவாச விதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்கந்தரின் சிரோதேசத்தில் வஸ்திரம், முதலியவைகளுடன் கூடியதான கும்பத்தை வைத்து ஸ்கந்தரை பூஜிக்கவும். ஸ்கந்தர் தேவியுடன் கூடியதாக இருந்தால் தனியாக வர்தனி அமைத்து அதில் தேவியை பூஜிக்கவும். சுற்றிலும் எட்டு கடங்களைஸ்தாபித்து அதில் குகவித்யேஸ்வரர்களை பூஜிக்கவும். பிறகு தத்வதத்வேஸ்வரர், மூர்த்திமூர்த்தீஸ்வரர் பூஜிக்கும் முறை கூறப்படுகிறது. அதில், க்க்ஷமா முதலியவர்கள் மூர்த்திகள் லோகபாலர்கள் மூர்த்தீஸ்வரர்கள் ஆகும் அல்லது முன்பு கூறப்பட்ட ஷண்முகர்முதலானவர்களையோ மூர்த்தீஸ்வரர்களாக பாவிக்கவும் என்று மூர்த்திமூர்த்தீஸ்வரர்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. இவ்வாறு கும்ப அதிவாச முறை நிரூபிக்கப்படுகிறது.
பிறகு ஆசார்யன் மூர்த்திபர்களுடன் கூடி ஹோமம் செய்யவும் என கூறி ஹோமமுறையும் ஹோமத்தின் திரவ்யலக்ஷணம் மந்திர லக்ஷணம் கூறப்படுகின்றன. ஹோமகாலத்தில் கிழக்கு முதலான நான்கு திக்கில் வேதபாராயணம் ஆக்னேயம் முதலிய நான்கு விதிக்குகளில் அஸ்திரமந்திர மந்திரஜபம் செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு காலையில் சுத்தி செய்து கொண்டு மூர்த்திபர்களுடன் கூடி தேவ கும்ப அக்னி இவர்களை பூஜித்து பிராயச்சித்த ஹோமம் செய்து பூர்ணாஹுதி கொடுத்து ஆலயம் நுழைந்து நல்லமுகூர்த்த லக்னத்தில் ரத்தினங்கள் தான்யங்கள் இவைகளுடன் கூடின பிரம்மசிலை ஸ்தாபித்து அதற்குமேல் மூலமந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அந்தபீடத்தின் மேல் ஷண்முகரை ஸ்தாபிக்கவும் வாசல்படியை நோக்கி ஸ்வாமிக்கு முன்பாக கும்பத்தை ஸ்தாபித்து மந்திரன்நியாசம் செய்து பூஜிக்கவும் எனகூறி மந்திரன் நியாசவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு அம்பாள் இருந்தால் அம்பாளுக்கும் வர்தனிபீஜத்தை எடுத்து அம்பாளுடன் சேர்க்கவும் என கூறப்படுகிறது. பிறகு கும்பதீர்த்தங்களால் ஸ்கந்தரை அபிஷேகம் செய்யவும் என்று கும்பாபிஷேக விதி கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டைக்குபிறகு முடிவில் ஸ்நபனமும் நைவேத்யமும் செய்யவும். சலபிம்பவிஷயத்தில் உத்ஸவம் செய்யவும். ஆசார்யனையும், மூர்திபர்களையும் வஸ்திரம் முதலியவைகளால் பூஜித்து அவர்களுக்கு தட்சிணை கொடுத்து பூஜிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு பிரதிஷ்டாவிதி நிரூபிக்கப்படுகிறது. பிரதிஷ்டை செய்வித்தவனுக்கு பலன்கள் நிரூபணம் செய்யப்படுகின்றன. பிறகு நித்யார்ச்சனா விதி கூறப்படுகிறது. இங்கு நித்ய அனுஷ்டானத்தை முடித்த ஆசார்யன் ஆலயம் நுழைந்து துவாரதேவதை துவார பாலகர் இவர்களை பூஜித்து பூதசுத்தி, அந்தர்யாகம், ஸ்தானசுத்தி, திரவ்ய சுத்தி, மந்திர சுத்தி, பிம்பசுத்தி ஆகிய இந்த கிரியைகள் நிரூபிக்கப்படுகின்றன.
பிறகு ஆசன பூஜை மூர்த்திகல்பனம் செய்வது ஆவாஹனம் முதலிய சம்ஸ்காரம் செய்வது அபிஷேகம் செய்வது சந்தன, புஷ்ப, தூப, தீப, நைவேத்ய, உபசாரங்கள் இவைகள் வர்ணிக்கப்படுகின்றன. பிறகு ஆவரண பூஜையும் நிரூபிக்கப்படுகின்றன. இங்கு கர்பாவரண, மூர்த்திபாவரண (லோகபாலாவரணி) திக்பாலாவரண ஆயுதாவரணமாகிய நான்கு ஆவரணத்தை பூஜிக்கவேண்டும் என கூறப்படுகிறது. மூன்று இரண்டு அல்லது ஒரு ஆவரணத்துடன் கூடியதாக ஸ்கந்தனை பூஜிக்க வேண்டும் என விசேஷமாக கூறப்படுகிறது. பிறகு ஆவரண பூஜை செய்தவுடன் தூப, தீப, நைவேத்ய, ஜபங்கள் செய்யவேண்டியமுறை கூறப்படுகிறது. பிறகு நித்யாக்னிகார்யம் கூறப்படுகிறது. பிறகு நாட்யமுறையும் கூறப்படுகிறது. இவ்வாறு நித்யார்ச்சனை செய்யும் முறை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு உத்ஸவம் செய்யும் முறையும் கூறப்படுகிறது. அங்கு ஒரு தினம் முதற்கொண்டு 9தினம் வரையிலான உத்ஸவமும் ஸம்வத்சரோத்ஸவமும் செய்யவேண்டும் என்று விவரிக்கப்படுகிறது. கொடியில் மயிலை வரைந்து த்வஜாரோஹணம் செய்யவேண்டும் என கூறப்படுகிறது. அங்குரார்பணம், பேரீதாடனம் த்வஜாரோகணம் முதற் கொண்டதான உத்ஸவமோ செய்யவேண்டும் என கூறப்படுகிறது. சகுனி, முதலான எட்டு ஸ்திரி தேவதைகளின் பெயர்களும் நிரூபிக்கப்படுகிறது. பிறகு அவ்வாறே சேனாபதி முதலிய 6 குமரனின் பெயரும் கூறப்படுகிறது. சகுனி முதலான குமாரன் வரை உள்ள தேவர்கள் உத்ஸவ தினங்களுக்கு அதிபர்களாக கூறப்படுகிறது. உத்ஸவத்தில் வஜ்ரரூபமான அஸ்திர தேவரை அமைக்கவும் என கூறி அஸ்திரதேவரின் அமைப்பு முறை விளக்கமாக கூறப்படுகிறது. இவ்வாறு 64வது படல கருத்து சுருக்கமாகும்.
1. குஹனுடைய லக்ஷணங்களுடன் கூட குஹஸ்தாபனத்தைச் சொல்கிறேன். நகரம் முதலானவற்றின் மத்தியிலோ தென்கிழக்கு தெற்கு அல்லது இவைகளின் மத்தியிலோ
2. தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு இவைகளிலோ இவற்றின் மத்தியிலோ சிவாலயத்திலோ
3. மற்ற தேவாலயங்களிலோ அல்லது மலை உச்சியிலோ மலையின் பக்கத்திலோ, நதி, நந்தவனங்களிலோ
4. அரச மாளிகையிலோ, புண்ய÷க்ஷத்ரங்களிலோ, வீடுகளிலோ, பிரகார மண்டபங்களிலோ புண்ய வ்ருக்ஷங்களிலோ
5. குமாரருடைய ஆலயத்தை விருப்பப்படி ஆலய லக்ஷணத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும். ஒருமுழம் முதல் 33 முழம் வரை பரப்பளவு உள்ளதாக அமைக்கலாம்.
6. த்விஜர்களே, முப்பத்தி மூன்று முழத்திற்கு மேற்பட்ட அளவு கூறப்படவில்லை. அந்த குஹாலய விமானம் ஸ்கந்த ரூபமுடையதாகவோ தனியாகவோ
7. சிவன், உமாதேவி, கணபதி இவர்களுடன் கூடியதாகவோ அன்ன பறவை அமைப்பு போன்றோ எண் கோண அமைப்பு போன்றோ, தனிப்பட்ட அமைப்பு போன்றோ முருகனின் ஆலயம் அமைக்க வேண்டும்.
8. ஒரே பூமியில் ஒன்று முதல் ஏழுதல அளவு வரை இஷ்டமான தள அளவுடன் கூடியதாகவும், சிவனுக்கு கூறப்பட்டபடி கர்ப்பக்ருஹம் ஆத்யேஷ்டிகா முதலியவற்றுடன் கூடியதாகவும்
9. அவ்வாறே மூர்த்ன்யேஷ்டகா ஸ்தூபி ஸ்தாபனம் இவைகளுடன் கூடியதாகவும் விமானத்தில் திக்குகளில் ஸ்தாபிக்கப்பட்ட தேவர்களுடனும் மத்ய கும்பமான ஸ்தூபியுடன் கூடியதாகவோ
10. முன் சொன்னபடி ஆலயஸ்தாபன முறைப்படி கூடியதாகவும், முன் சொன்னபடி பிரகாரம், மண்டபங்களோடு கூடியதாக அமைக்க வேண்டும்.
11. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு முகங்களாகவோ பரிவார தேவதைகளுடன் கூடியதாக இருக்க வேண்டுமென கூறப்படுகிறது. சந்தர்ப்பமாக அவைகள் கூறப்படுகிறது.
12. ய÷க்ஷந்திரர், ராக்ஷஸேந்திரர், பிசாசேந்தரர், பூதராஜன், கந்தர்வன், கின்னரர், அசுர நாயகர், அரக்கர் தலைவன் இவர்களை
13. கிழக்கு முதலான திசைகளிலிருந்து ஈசான திசைவரை ஸ்தாபிக்க வேண்டும். இவர்கள் நான்கு கைகளில் வரதம், அபயம், கத்தி, கேடயம் இவைகளுடன் கூடியவராகவோ
14. அல்லது கத்தி, கேடயத்துடன் கூடிய இருகைகளுடன் கூடினவர்களாக, மை போன்ற கருத்த நிறமுடையவர்களாகவும் அமைக்கவும். இவர்களை பயங்கர உருவமாகவோ, அமைதியான (சாந்த) உருவமாகவோ முடிந்த கேசத்தை உடையவராகவோ அமைக்க வேண்டும்.
15. சகுனி, ரேவதி, பூதநா, அர்த்தபூதநா இவர்களையும், வக்ரமண்டீ, சகாரீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் சக்திகள்
16. ஷண்முகர், சக்திபாணி, கார்த்திகேயர், குஹன், ஸ்கந்தன், மயூரவாஹனர், ஸேநாநீ சக்தி ஹஸ்தர்
17. இவர்கள் குஹனின் மூர்த்தீசராவார்கள். அவர்கள் அஞ்சலிஹஸ்தம், வஜ்ராயுதம், பத்மம் தரித்தவர்களாகவும், ஸ்கந்தரின் பீஜத்தை உடையவராயும்
18. நான்கு கைகள் அல்லது இரண்டு கைகளை உடையவராகவோ ஆறுமுகம் அல்லது ஒருமுகம் உடையவராகவோ, இவர்களை கிழக்கு முதலான திக்குகளில் வரிசைப்படி ஸ்தாபிக்க வேண்டியவர்கள் ஆவர்.
19. இந்திராதிகளாகவோ அல்லது எட்டு பீடவடிவங்களாகவோ வைக்கவும். மூலவருக்கு முன், மயிலையோ, யானையையோ வைக்கவும். கணபதி, ÷க்ஷத்ரபாலர், சூர்யன் இவர்களையும் மஹா பீடத்தையும் அமைக்க வேண்டும்.
20. பலிபீடத்தையும் ஈச்வரரின் பரிவாரங்களையுமோ, பலிபீடதளங்களில் இந்திரன் முதலானவர்களையும் நடுவில் கிழக்கு முதலான (ஒன்பது) திசைகளில் ஒன்பது கிரஹங்களையும் பூஜிக்க வேண்டும்.
21. வாசற்படியின் இடது வலதுபுறத்தில் வாயிற் காவலர்களை ஸ்தாபிக்க வேண்டும். முறைப்படி அவர்கள் நீலம், சிவப்பு நிறமுடனும் இரண்டு அல்லது நான்கு கைகளுடையவர்களாகவோ
22. கத்தி, கேடயம் தரித்தவராயும், ஊசியை வைத்திருக்கும் முத்ரையையும், (எச்சரிக்கை செய்யும் முத்ரையையும்) ஆச்சர்ய முத்ரைகளையுடையவராயும், கருப்பு, சிவப்பு அல்லது வெண்மை, கரும்பச்சை, நிறமுடையவராகவோ கோரரூபத்துடனுமோ
23. ஜயன், விஜயன் என்ற பெயருடையவராய் விகாரமான முகங்களை உடையவராயும் அமைக்கவும். ஈசானத்தில் ஸ்கந்த சண்டரை நான்கு கைகளுடையவராக ஸ்தாபிக்க
24. அபயம், வஜ்ரம், பத்மம், வரதம் தரித்தவராகவோ அல்லது இருகையையுடையவராகவோ சாகல்யன் என்ற பெயரை உடைய உருவ அமைப்பாகவோ அல்லது அதற்கான பீட அமைப்பாகவோ அமைக்கலாம்.
25. உத்தம பிராம்ஹணர்களே, ஸ்கந்த அமைப்பு முறையை சுருக்கமாக கேளுங்கள். கற்சிலை முதலானவைகளால் பிம்பம் (உருவம்) அமைக்கும் முறைப்படி செய்ய வேண்டும்.
26. குஹப்பெருமானின் விக்ரஹ லக்ஷணத்தில் கூறப்பட்ட அளவு விச்வம் என்ற அமைப்பை உடையதாகவே, 14 முழம் என்ற அமைப்பை உடையதாகவோ, கர்ப்ப கிருஹம், வாயில் தூண்களுடன் கூடியதாக அமைக்கலாம்.
27. இரண்டு கைகள், இரண்டு கண்கள் உடையவராய் வலது கையில் தாமரையை தரித்தவராயும் இடது கை தொங்கிய நிலையிலும் அழகிய தோற்ற முள்ளவர் சுப்ரமண்யர் ஆவார்.
28. கிராம அபிவிருத்தியின் பொருட்டு குழந்தை வடிவமாக பிரதிஷ்டை செய்யலாம். இரண்டு கைகள், பூணூல், குடுமியையுடையவராயும், மூன்று ஒட்டியானம் போல் மூன்று மடிப்பையுடையவராயும்
29. கவுபீனம் தண்டம் தரித்தவராய் வலது கையில் தண்டமும், இடது கையை இடுப்பில் வைத்தவராயும், ஞானத்தை அளிப்பவரான ஸ்கந்தர் மலைகளிலும் வனங்களிலும் பிரதிஷ்டை செய்யத்தக்கவர்.
30. நான்கு கைகள், மூன்று கண்கள் உடையவராய் காதுகளில் ஓலைத்தோடு அல்லது மகர குண்டலம் தரித்தவராயோ, அக்ஷமாலை, சக்தியை (ஆயுதம்) தரித்த இருகைகளையுடையவராய்
31. வரதம், அபயத்துடன், இருசக்திகளுடனோ ஒரு சக்தியுடன் கூடியவராகவோ, சக்தியான தேவி இல்லாமலோ இருப்பார். அந்த தேவியின் லக்ஷணம் கூறப்படுகிறது.
32. இரண்டு கண்கள், இரண்டு கைகளுடன் சாந்த வடிவமாய், தாமரையையும் நீலோத்பவத்தையுமுடைய இருகரமுடையவராய், சியாமம், சிவப்பு நிறமுடையவராய் வலது, இடது பக்கங்களில் இருப்பவராய்
33. கவுரியின் லக்ஷணத்துடன் கூட தேவியை அமைக்கவும். அழகிய முகத்துடன் அழகு வடிவான இவர்களை கஜா என்று கஜவல்லீ எனப் பெயருடையவர்கள்
34. இம்மாதிரி லக்ஷணத்துடன் கூடியவர்கள் பட்டிணத்திலோ நகரங்களிலோ ஸ்தாபிக்க வேண்டியவர்கள். ஆறுமுகமூர்த்தி, ஆறு கைகள், பன்னிரெண்டு காது, பன்னிரெண்டு கண்களுடன் கூடியவராய்
35. ஆறு கழுத்துடனோ, ஒரே கழுத்துடனோ ஆறு தலைகளுடனோ உடையவர் ஆவார். அவர், சக்தியாயுதம், அபயம், கத்தி, அக்ஷமாலை, சேவல்
36. கேடயம் உடையவராய் தலைநகரத்தின் அபிவிருத்தியின் பொருட்டு ஸ்தாபிக்கவும். சிவப்பு பட்டுடுத்தியவராய் இளம்பிறைச் சந்திரனுக்கொப்பான காந்தியை உடையவராய்
37. கரண்ட மகுடமுடையவராய் மூன்று கண்களுடன் கூடியவராய் சக்தியாயுதம், உலக்கை, கத்தி, சக்ரம், பாசம், அபயம் இவைகளை வலப்பக்கத்தில் தரித்தவராய்
38. வஜ்ரம், வில், கேடயம், மயில்கொடி, அங்குசம், வரதம் இவைகளை இடப்பக்கத்தில் தரித்தவராய்
39. பூணூல் அணிந்தவராய், மயில் மேல் இருப்பவராய், இருதேவியருடன் கூடியவருமான இவர் கிராமங்களிலும், ஆலயப் பிரகாரம் முதலானவற்றிலும் ஸித்தியின் பொருட்டு ஸ்தாபிக்கத்தக்கவர்.
40. இம்மாதிரி ஐந்து விதமாக ஸ்கந்தரின் ஸ்தான பேதங்கள் கூறப்பட்டது. த்வாபரயுகத்திலும் மற்ற யுகங்களிலும் எல்லா இடங்களிலும் பிரதிஷ்டிப்பது ஏற்புடையது.
41. இவ்வாறு அமைத்து அவரது மந்திரங்களால் பிரதிஷ்டையை ஆரம்பித்து செய்யவும். ஸ வர்க்கத்தின் மூன்றாவது எழுத்தான ஸ என்ற எழுத்துடன் ஆறாவது உயிரெழுத்துடன் கூட ஊ (ஸூ)
42. பதினான்காவது எழுத்தான அவு என்ற எழுத்துடன் புள்ளி ஒலியையும் சேர்த்து (ஸூ,சவு) ஸூப்ரமண்யரின் நான்காவது சப்தத்தையும் நம: என்பதையும் முடிவாகவும் முதலில் பிரணவத்தையும் உடையது ஸ்கந்த மூலம் ஓ, ஸூ, சவு ஸுப்ரஹ்மண்யாய நம: (ஓ, ஸூம், சவும், ஸுப்ரமண்யாய நம:)
43. இவ்வாறு மூலமந்திரம் கூறப்படுகிறது. அதில் பிரம்மாங்க மந்திரங்களுடன் ஸ கார முடிவான ஸ காரத்துடன் நீண்ட, குறைந்த ஒளியுடன் மந்திரங்களுக்கேற்றவாறு நம: என்பதை கடைசியாகவும்
44. ஈசாநம், முதலான பதங்களோடு கூட பிரம்ம, அங்க மந்திரங்களையும் கூற வேண்டும். மகாஸேனாய என்ற பதத்துடன் வித்மஹே என்ற பதத்தையும்.
45. ஷடானனாய என்பதையும் சேர்த்து தீமஹி என்ற பதத்தையும் பிறகு தந்ந: ஸ்கந்த: என்ற பதத்துடன் முடிவில் பிரசோத்யாத் என முடிவில் பிரசோதயாத் என்று (மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி தந்ந: ஸ்கந்த : ப்ரசோதயாத்)
46. இவ்வாறு காயத்ரீ பீஜமாகும். இதை தீப முன்னால் கூறவேண்டும். (பிரகாசமாக அறியவும்) இதயத்திலிருந்து உண்டான மூலமந்திரம், மூர்த்தி மந்திரம், வித்யாதேஹ மந்திரங்களையும் கூற வேண்டும்.
47. கஜா, கஜவல்லி இவர்களின் மந்திரத்தை இவ்வாறே கூற வேண்டும். பிறகு பிரதிஷ்டையை செய்ய வேண்டும். முன்போல் அங்குரார்பணம் செய்ய வேண்டும்.
48. முன்சொல்லப்பட்ட சுபமுஹூர்த்த காலத்தில் ஐந்து வகை ரத்னங்களை நியாஸம் செய்யவேண்டும். தேவிகளுக்கு ஹ்ருதய மந்திரங்களினால் ஐந்து தங்க தாமரைகளாலோ
49. பத்மத்தை நியாஸம் செய்து நயனோன்மீலனத்தை செய்யவும். தேன், நெய் இவற்றை தங்க (ஊசி)த்துடன் பாத்திரத்தில் ஸ்தாபிக்க.
50. ஹ்ருதய மந்திரத்தை கூறி தங்க நகத்தினால் நியாஸம் செய்து, தான்யம், பசு, பிராம்மணர், தர்சனத்தை செய்யவும். திரைசீலையுடன் எல்லா மக்கள் தர்சனத்தையும் ஆசார்யன் செய்யவேண்டும்.
51. ஸ்கந்தர் தேவியுடன் கூடியவராகில் தேவிக்கும் தனியாக நயோன்மீலனம், தர்சனமிவைகளை செய்விக்கவும். ஸ்கந்தகுருவுக்கு முன்போல் பிம்ப சுத்தி செய்து கிராம பிரதட்சிணம் செய்யவேண்டும்.
52. லம்ப கூர்ச்சத்துடன் கூடிய ஸ்கந்தகுரு ஹ்ருதய மந்திரத்தினால் ஜலாதி வாஸத்தைச் செய்யவேண்டும். சுற்றிலும் இந்திராதி கலசங்களை ஸ்தாபிக்க வேண்டும்.
53. (ஆலயம்) கோயிலின் நான்கு திக்குகளிலோ அல்லது அக்னி, ஈசானதிக்கிலோ மண்டபம் அமைத்து ஒன்பது, ஐந்து, ஒன்று என்ற எண்ணிக்கையில் பத்ம குண்டங்களை அமைக்க வேண்டும்.
54. கிழக்கு, வடக்கு, ஈசான திக்கிலோ ஸ்நாந வேதிகை அமைக்கவும், சிற்பியை திருப்தி செய்து அந்தணர்களுக்கு உணவளித்து பசுஞ்சாணத்தால் மெழுகிட்டு
55. புண்யாஹப்ரோக்ஷணம் செய்து வாஸ்து ஹோமம் செய்து ஸ்தண்டிலத்தில் தோல்களாலோ பட்டுகளாலோ சயனம் அமைத்து
56. ஜலத்திலிருந்து அந்த ஸ்கந்தரை எழுப்பி முன்போல் ஸ்நபனத்தைச் செய்து சந்தனம் புஷ்பங்களால் அர்ச்சித்து ஹ்ருதய மந்திரத்தால் ரக்ஷõபந்தனம் செய்யவேண்டும்.
57. கிழக்கு சிரஸாக ஸ்கந்த மூர்த்தியை சயனத்திலேற்றி படுக்க வைக்க வேண்டும். ஆஸநம், மூர்த்திகளுடன் வஸ்த்திரங்களால் அலங்கரித்து பூஜிக்க வேண்டும்.
58. அந்த மூர்த்தியின் மூலமந்திரங்களுடன் அங்க மந்திரங்களுடன் குஹனை சந்தனாதிகளால் பூஜிக்கவும். தலைபாகத்தில் நூல் சுற்றப்பட்டு வஸ்த்ரங்களுடன் கூடிய கும்பத்தை
59. வைத்து அதில் விக்ரஹம் எவ்வாறோ அவ்வாறு ஸ்கந்தரை பூஜிக்கவும். தேவியுடன் கூடியவராகில் தனியாக வர்த்தனீயை ஸ்தாபித்து தேவியை பூஜிக்க வேண்டும்.
60. சுற்றிலும் எட்டு கும்பங்களை வைத்து அவற்றில் குஹனின் வித்யேச்வரர்களைப் பூஜிக்கவும். எல்லா கும்பங்களும் நூல், வஸ்த்ரம், ஸ்வர்ணங்களுடனிருப்பது ஏற்புடையது.
61. ஆத்ம, வித்யா, சிவங்களான தத்வத் ரயத்தை முழங்கால், கழுத்து, தலை முதலிய இடங்களில் பூஜித்து மூர்த்தீச்வரர்களையும் பூஜிக்க வேண்டும்.
62. குஹனுக்கு க்ஷ்மா முதலானவர்கள் மூர்த்திகள், லோகபாலர்கள் மூர்த்தீச்வரர்களாகும். முன்பு கூறப்பட்டபடி ஈசனாதிகளையோ, பூஜித்து ஹோமத்தை செய்ய வேண்டும்.
63. ஆசார்யன் ஆதிசைவ குலத்தில் தோன்றியவராய் ஸ்நாநம் செய்து, தலைப்பாகை பட்டு உத்தரீயம் இவற்றுடன் முன்பு போல் பஞ்சாங்க பூஷணம் தரித்தவராய் இருத்தல் வேண்டும்.
64. ஆசார்யன் மூர்த்தீபர்களுடன் குண்டஸம்ஸ்காரம், அக்னி ஸம்ஸ்காரம் செய்து பிரதான குண்டத்தில் ஸ்கந்தரை ஆவாஹித்து பிரம்ம மந்திரம், அங்க மந்திரம், நேத்ர மந்திரங்களுடன்
65. தத்வத்ரயம், அதன் அதிபர்களையும், மூர்த்தி, மூர்த்தீச்வரர்களுடன் பூஜித்து கஜை என்ற பெயர் கொண்ட வள்ளியையும் கஜவல்லி என்ற பெயர் கொண்ட தேவசேனாவும் இருக்குமாகில் பிரதான குண்டத்தில் அவர்களுக்கு ஹோமம், தர்ப்பணம் செய்ய வேண்டும்.
66. ஆசார்யர், ஆயிரமோ, ஐநூறோ, நூறோ மூலமந்திரங்களால் ஹோமம் செய்து அதன் பத்தில் ஒருபாகம் பிரம்ம, அங்க மந்திரங்களாலும், மூலமந்திரத்தில் பாதி அளவு மூர்த்தி மந்திரங்களையும் ஹோமம் செய்ய வேண்டும்.
67. ஆசார்யர், திக்கு, விதிக்களில் முறையே ஈசாநாதி, ஹ்ருதயாதி மந்திரங்களினாலும் திசைகளுக்குரிய மூர்த்தி மூர்த்தீச்வரர்களை சாந்தி குடத்துடன் ஹோமம் செய்து
68. சமித்து, நெய், அன்னம், தான்யம், எள், நெல், பொறி, அரிசி இவைகளையும் புரசு, அத்தி, அரசு, ஆல் முதலியவற்றை கிழக்கு முதலான திக்குகளிலும்
69. வன்னி, நாயுருவி, வில்வம், இச்சி முதலியவற்றை தென்கிழக்கு முதலான விதிக்குகளிலும் ஹோமம் செய்யவேண்டும். புரசு ப்ரதானத்திலும் (அல்லது) புரசை எல்லாவற்றிலுமோ ஹோமம் செய்யலாம்.
70. கிழக்கு முதலான நான்கு திக்குகளில் வேத பாராயணங்களையும் தென்கிழக்கு முதலான திசைகளில் அஸ்த்ர ஜபமும் செய்யவும். சாந்தி கும்ப ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து அந்தந்த மந்திரங்களின் ஜபத்தை
71. தர்பையைத் தொடுவதினால் ஒவ்வொரு பாகமும் செய்யவும். பிறகு அதிகாலை மூர்த்திபர்களுடன் கூடி சுத்தனான ஆச்சார்யன்
72. சயனத்திலிருந்து ஷண்முகரை எழுப்பிய அதில் கும்ப, அக்னி மந்திரங்களை சேர்த்து பிராயச்சித்தமாக அகோர மந்திரத்தினால் நூற்று எட்டு ஆஹுதி செய்து
73. பூர்ணாஹுதி செய்து பிறகு ஆசார்யர் ஆலயத்தில் பிரவேசித்து முன் மண்டபத்தில் மானுஷ பதத்திலாவது தைவ பதத்திலாவது முன்போல் ஸம்ஸ்கரிக்பட்ட
74. பிரம்ம சிலையை ஹ்ருதய மந்திரத்தால் ரத்னம், தான்யம் உள்ளடங்கிய ஸ்தானமான பீடத்தில் வைத்து மூலமந்திரத்தை உச்சரித்து ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.
75. நல்ல லக்னம், சுபமுஹூர்த்தத்தில் வாயில் நோக்கியவராக பிரம்ம சிலையுடன் ஷண்முகரை ஸ்தாபிக்க வேண்டும்.
76. தெய்வத்திற்கு முன்னால் கும்பங்களை வைத்து மந்திரந்யாஸம் செய்ய வேண்டும். கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து ஷண்முகரின் ஹ்ருதயத்தில் சேர்க்க வேண்டும்.
77. தேவியோடு சேர்ந்து இருப்பின் வர்த்த னீ கும்பத்திலிருந்து பீஜத்தை எடுத்து தேவியின் ஹ்ருதயத்தில் சேர்க்கவும். மற்ற கும்பங்களின் பீஜத்தை பீடத்தை சுற்றிலும் சேர்க்க வேண்டும்.
78. அந்தந்த கும்பங்களின் ஜலத்தை அந்தந்த திசைகளில் அபிஷேகம் செய்யவேண்டும். ஆறுமுகருக்கு முன்போல் தத்வதத்வேச்வர, மூர்த்திமூர்த்தீஸ்வர நியாஸங்களை செய்யவேண்டும்.
79. இறுதியில் உற்சவ பேரத்தின், உற்சவத்திலும் ஸ்நபனத்தைச் செய்து மஹாஹவிர் நைவேத்யம் செய்து, குருவுக்கும் ரிக்விஜர்களுக்கும் வஸ்த்திரம் தட்சிணை முதலியவைகளுடன்
80. பொன் மோதிரங்கள் வழங்கி பிரதிமாஸ்தாபனத்தில் சொல்லியபடி பூஜிக்கவும். இங்கு எது சொல்லப்படவில்லையோ அதை பொதுவான பிரதிஷ்டையில் கூறியபடி செய்ய வேண்டும்.
81. பிராம்ஹண உத்தமர்களே, இவ்வாறு யார் ஷண்முக ஸ்தாபனத்தைச் செய்கிறார்களோ, அவர்கள் ஆயுளையும், புத்ரர்களையும் செல்வங்களையும், கல்வியையும், குற்றமில்லா உயர்ந்த மனைவியையும்
82. சவுபாக்யம், பெருஞ்செல்வம், நோயில்லாத்தன்மை, புகழ், சவுக்யம், சுபம் இவற்றை அடைந்து மேலும் மோக்ஷத்தையும் குஹப்ரதிஷ்டை செய்த மனிதன் அடைவான்.
83. விப்ரஸத்தமர்களே, அந்த ஷண்முகருடைய பூஜாமுறையை சுருக்கமாகக் கேளுங்கள். பிறகு காலையில் செய்ய வேண்டிய அவசியமான மல, மூத்திர விஸர்ஜனம் செய்து விதிப்படி ஸ்நானம் (குளியல்) செய்து
84. ஸந்தியாவந்தனம், உபஸ்தானம், மந்த்ரதர்ப்பணம் இவைகள் முன்போல் செய்யவேண்டும். நனைக்கப்பட்ட கை, கால்களை உடையவராய் ஆலயத்தில் நுழைந்து
85. ஆசமனம் செய்து ஸ்கந்த மந்திரத்தோடு ஈசானம், ஹ்ருதயம் முதலிய மந்திரங்களினால் சகளீகரணம் செய்து, அஸ்த்ரமந்திரத்தால் அர்க்யம் தயாரித்து எப்போதும் அந்த தண்ணீரால் (வாசற் படியை பிரோக்ஷித்து)
86. திவாரத்தை பிரோக்ஷணம் செய்து ஐயனையும், விஜயனையும் பூஜித்து ஸ்கந்த பெயரோடு ஹ என்று கீழ்ப்படியில் பூஜித்து உள்ளே புகுந்து நன்றாக அர்ச்சிக்க வேண்டும். ஹா என்று பூஜித்து உள்ளே நுழைந்து பூஜிக்க வேண்டும்.
87. வாஸ்து பிரம்மாவை பூஜித்து, வடக்கு முகமாய், மந்திரமய சரீரமாய், நல்ல ஆஸனத்தில் அமர்ந்து, தன் ஜீவனை (ஆத்மாவை) த்வாத சாந்தத்திலுள்ள குடிலா சக்தியிடம் காத்துக்க கொள்வதற்காக சேர்த்து மண் முதலானவைகளால் சம்பந்தப்பட்ட சரீர அமைப்புகளை சுத்தமாக்கி
88. க்ஷúப்த சக்தி அம்ருதத்தில் நனைக்கப்பட்டதன் பூத சரீரத்தை அஸ்த்ர மந்திரத்தினால் நன்கு சுத்திகரித்து கைகளில் சந்தனம் பூசி
89. ஈசான தத்புருஷ, அகோர, வாமதேவ, ஸத்யோஜாதிகளை கட்டை விரல் முதலாக நியஸித்து இரண்டு கைத்தலங்களில் வித்யாதேஹ நேத்ர மூலங்களுடனும் ஆவாஹித்து
90. சுண்டுவிரல் (முதல்) ஹ்ருதய, சிரஸ், சிகை, கவசம், அஸ்திர மூலமந் மந்திரங்களினால் நியாஸம் செய்து மறுபடியும் கரதலங்களில் மூலமந்திரத்துடன் நியஸித்து
91. அங்க நியாஸத்தையோ, மாலா மந்திரம், பிரம்ம மந்திரங்களுடனோ செய்து முப்பத்தியொரு கலாநியாஸம் மந்திர நியாஸத்துடனோ இல்லாமலோ முன்போல் செய்து
92. அர்க்ய ஜலத்தால் சரீரத்தை சுத்தி செய்து சரீரத்தை குஹ மூர்த்தியை போன்று பாவித்து நாபி குண்டத்தில் குஹனை ஆவாஹித்து ஹோமம் செய்து ஹ்ருதய மந்திரத்தினால்
93. மூலமந்திரத்தால் சரீரத்தை குஹமயமாக்கி குஹனைப் பூஜிக்கவும், அவகுண்டன திக்பந்தனங்களால் ஸ்தான சோதனமான (ஸ்தான சுத்தியை) செய்ய வேண்டும்.
94. விசேஷார்க்யத்தைச் செய்து சந்தனம், புஷ்பம் அக்ஷதைகளால் ஹ்ருதய மந்திரத்தாலோ அர்ச்சனாங்கத்தில் சொன்னபடி பூஜித்து பின், பாத்யம், ஆசமனம் இவைகளையோ
95. அர்க்யம் மாத்திரமோ செய்து அர்க்யத்தால் திரவியங்களின் பொருட்சேர்க்கையை பிரோக்ஷித்து ஹ்ருதய மந்திரத்தால் அபிமந்திரித்து நிறைவான சக்தியின் பொருட்டு மந்திரங்களை உச்சரித்து
96. நிர்மால்ய பூஜையை செய்து காயத்ரியினால் சிரஸில் அர்க்யத்தையும் கொடுத்து ஹ்ருதய மந்திரத்தினால் புஷ்பங்களை நிர்மால்யதாரியின் பொருட்டு கொடுக்க வேண்டும்.
97. நிர்மால்ய பூஜையை செய்து விட்டு பின் முன் சொன்ன வழியில் விக்ரஹ சுத்தியைச் செய்யவும் அல்லது வெளியில் நிர்மால்யத்தை விட்டு பேரசுத்தியை முன்சொன்னபடி செய்யவேண்டும். உலோக விக்ரஹமானால் ஒவ்வொரு பவுர்ணமி, அமாவாசை முதலான பர்வங்களில் அபிஷேகம் செய்யவேண்டும்.
98. சித்ரம் முதலியவைகளானால் கர்மார்ச்சைப்படி சுத்தி செய்வது ஏற்புடையது. இவ்வாறு பாவனையாக அர்ச்சனா விதிப்படி சுத்தி செய்வதால் சுத்தி ஆகிறது. தன் சரீரம், ஆத்மா, பூமி, திரவ்யம், மந்த்மரம், பிம்பம் இவைகளின் சுத்தி கூறப்பட்டது.
99. குஹனுக்கு பிரணவம் முதலானவர்களால் ஆஸநம் செய்து கல்பித்து பிரணவத்தின் நடுவில் தர்ம, அதர்மாதிகளை பூஜிக்கவும், மறுபடியும்
100. அதச்சதநம், ஊர்த்வச்சதம், பத்மகர்ணிகையின் முடிவில் குஹாஸநத்தைக் கற்பித்து ஆஸநம், மூர்த்தி இவைகளை ஆவாஹித்து ஹ்ருதயாதி மந்திரங்களால் அதில் அர்ச்சித்து
101. ஈசான முதலிய மந்திர நியாஸம் செய்து மாலாமந்திரங்கள் பஞ்சபிரும்ம, வர்ணநியாஸம் செய்து வித்யாதேஹத்தை கற்பித்து அந்த மூலமந்திரத்தால் ஷண்முகப் பெருமானை
102. இருதயத்துக்கு நேரே புஷ்பங்கள் நிரம்பிய கைகளால் ஆவாஹித்து அந்த பிந்துவிலிருந்து எடுத்து ஹ்ருதய மந்திரத்தால் அந்த பிம்பத்தில் ஸ்தாபனம் செய்ய வேண்டும்.
103. முதலில் நிஷ்டுர முத்ரையை ஹ்ருதய மந்திரத்தால் ஸன்னிதானம், அவகுண்டனமும் செய்து 1 ஆவாஹனம், 2 ஸ்தாபனம், 3 சன்னிதானம், 4 ஸந்நிரோதனம், 5 அவ குண்டனம், 6 திக்பந்தனம் இவ்வாறில் முன்பு 1 ஆவாஹனம் 2 ஸ்தாபனம் சொல்லப்பட்டன. இங்கு ஸந்நிதானம் ஸன்னி ரோகனம் அவகுண்டனம் சொல்லப்பட்டன. ஹ்ருதயம் முதல் நேத்ரம் முடிய மந்திரன்யாசத்தால் அவகுண்டனம் செய்ய வேண்டும்.
104. மஹாமுத்ரையையும், தேனு முத்ரையையும் மூலத்தால் செய்யவேண்டும். ஹ்ருதய மந்திரத்தால் பாத்யத்தை பாதத்திலும், ஆசமனத்தை முகத்திலும், சிரஸில் அர்க்யத்தையும்
105. நம ஸ்வாஹா ஸ்வதா வவுஷட் என குஹபேதமான பெயர்களின் முடிவில் சேர்ந்ததாக கொடுக்கவும். சந்தனம், புஷ்பம், தூபத்தையும் கொடுத்து பஞ்சாமிர்தங்களாலும்
106. விபூதி, மாவு, நெல்லிக்கனி இவற்றுடன் அபிஷேகித்து வஸ்த்ரத்தால் துடைத்து குஹனுடைய முகத்தில் ஆசமனத்தைக் கொடுத்து.
107. சந்தனம், அகில், பச்சை கற்பூரம், கோரைகிழங்கு முதலியவைகளால் முன் கூறிய அளவில் பொடி செய்து ஹ்ருதய மந்திரத்தால் குஹனுக்கு சாத்தி அல்லது சந்தனத்தை மட்டுமோ சாத்தி
108. காரகிலால் செய்யப்பட்ட தூபத்தை ஹ்ருதய மந்திரத்தால் கொடுக்கவேண்டும். கீழாநெல்லி, சந்தனம், சாம்பிராணித்தூளுடன் கூடியதாகவோ தூபம் கொடுக்க வேண்டும்.
109. கோரோசனை, கஸ்தூரி, புனுகு, ஜவ்வாது இவற்றையும் அன்றே மலர்ந்த வாசனையுள்ள பூக்களை முன் சொல்லியபடி அர்ப்பணம் செய்ய வேண்டும்.
110. ஹ்ருதய மந்திரத்தினால் எண்ணை முதலியவைகளினால் தயார் செய்த தீபங்களை கொடுக்கவும், மூலமந்திரத்தால் அபிமந்திரிக்கப்பட்ட ஹவிஸை (அன்னம்) கொடுத்தோ இல்லாமலோ செய்ய வேண்டும்.
111. மேற்கு வாயில் பூஜை முறையில் கூறப்பட்ட அளவே சந்தனம் முதலியவைகளின் அளவாகும். தூப தீபங்களை கொடுத்த பிறகு ஆவரண பூஜையை செய்ய வேண்டும்.
112. அக்னி, நிர்ருதி, வாயு, ஈசானம் முதலிய கிழக்கு திக்குகளில் ஹ்ருதயாதி மந்திர மூலங்களையும் வெளியில் வஸுக்களையும், மூர்த்திகளையும் அதற்கு வெளியில் இந்திராதி தேவதைகளையும்
113. பிறகு தசாயுதங்களையும் பூஜிக்கவும். மூன்று ஆவரணங்களாலோ அல்லது இரண்டு, ஒன்று ஆவரணங்களாலோ குஹனைப் பூஜித்து மறுபடியும் தூபதீபத்தைக் கொடுக்கவும்.
114. பாட்டு, மந்திரகீதங்களை இசைத்து ஜபத்தைச் செய்து ஸமர்பிக்கவும். நைவேத்யம், பலி, இவற்றை கொடுத்து குண்டத்தில் சிவாக்னியில் குஹனான முருகனை
115. ஆவாஹித்து, ஸாங்கம் பூஜித்து பூஜைக்கு அங்கமான உபசாரங்களால் பூஜித்து சருவிற்கு (ஸ்தாலீபாகம்) அக்னி எடுப்பது வரையிலாக பூஜித்து, புரசு, சமித்து, நெய்யுடன் மூலமந்திரத்தால் நூறு, ஐம்பது, இருபத்தைந்து
என்ற எண்ணிக்கையில்
116. ஹோமம் செய்யவேண்டும், அதன் பத்தில் ஓர் பங்கு என்ற எண்ணிக்கையில் ஷடங்க மந்திரங்களை ஹோமம் செய்யவேண்டும். பிறகு பூர்ணாஹுதியை நித்யோத் ஸவத்தைச் செய்ய வேண்டும்.
117. முன் சொன்னது போல் அதன் முடிவில் நாட்டியத்தை செய்யவும். ஒருநாள் முதல் ஒன்பது நாள் வரை வருடாந்திர உற்சவத்தையும் செய்ய வேண்டும்.
118. கொடியில் மயிலை எழுதி கொடி ஏற்றம் செய்யவும். அது முதல் மூன்று நாளிலோ இரண்டு நாளிலோ, அதே நாளிலோ
119. அங்குரார்ப்பண பூர்வமாகவோ, பேரீதாடன பூர்வமாகவோ, த்வஜாரோஹண பூர்வமாகவோ, ஆசார்யர் உத்ஸவத்தைச் செய்ய வேண்டும்.
120. சகுனீ, ரேவதீ, பூதநா, மண்ட பூதநா, வக்த்ரமண்டீ, நிசாந்தா, மேஷதேவதா இவர்கள் குஹனின் தேவதைகள்.
121. ஹே ப்ராம்மணர்களே சகாரீ முதலானவர்கள் சுப்ரமண்யரின் பணியாட்களாவர். ஆறு குமரர்களின் பெயர்களாவன
122. ஹேநாபதி, சுரேசர், ஹரஸூநு, ஸுராக்ரஜர், ஸூப்ரமண்யர், குமாரர் என ஆறு திருக்குமாரர்கள் ஆவர்.
123. குண்டம் ஆறு கோணமாகவோ, விருப்பமானதாகவோ, ஈசானத்திலோ, அக்னி திசையிலோ அமைக்கவும். புஷ்பத்திலோ, அரிசியிலோ வஜ்ரரூபமான அஸ்த்ரத்தை பூஜிக்க வேண்டும்.
124. இருகண்கள், இரு கைகளுடன் உக்ரரூபமாய் கோடி ஜ்வாலா கேசமுடையவராய் கூர்மையான வஜ்ரத்தை வலது கையில் தரித்தும் இடது கையில் மயிலையோ (படத்தையோ) வைத்திருப்பவர் குஹாஸ்த்ரர். சகுனீ முதல் குமாரர்கள் வரையானவர்கள் உத்ஸவ நாட்களுக்கு அதிபராக இருப்பது ஏற்புடையது.
இவ்வாறு உத்தரகாமிகத்தில் குஹ ஸ்தாபன விதியாகிற அறுபத்தி நான்காவது படலமாகும்.
JAYA JAYA SANKARA JAYENDRA SANKARA SRUTI SMRUTI PURANANAM ALAYAM KARUNALAYAM NAMAMI BAGAWATPADA SHANKARAM LOKA SHANKARAM
வெள்ளி, 11 அக்டோபர், 2024
படலம் 64: குஹனின் ஸ்தாபனம்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக